குழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்குள் உருவாகும் சிக்கல்களை புரிந்துகொள்வது இன்றையத் தேவையாக இருக்கிறது. குழந்தைகளின் உணவுகளைப் பற்றிய கவனமும் கேள்விகளும் இருப்பதைப் போலவே நமக்கு அவர்களின் நுண்ணுணர்வுகள் மற்றும் கற்றல் பற்றிய அணுகுமுறையும் தேவையாக இருக்கிறது.
குழந்தைகளுக்காக பொருள்களைப் பாதுகாப்பதைத் தவிர்த்து அவர்களது மனதின் செழுமையை பாதுகாப்பதும் வளப்படுத்துவதும் இன்றைக்கு நம்முன் இருக்கும் நெருக்கடி. குழந்தைகளுக்கு உறுதியான எதிர்காலத்தை வழங்க இருப்பது அவர்களது நம்பிக்கையும் படைப்பாற்றல் தன்மையும்தான். மதிப்பெண்ணும் தொழிலும் அல்ல. இதற்கு குழந்தைகளின் சுயமான கற்றல் குறித்த உணர்வுகளும் புரிதலும் நமக்குத் தேவையாக இருக்கின்றன. மேலும் ஒரு குழந்தையால் எவ்வாறெல்லாம் பரிணமிக்க முடியும் என்ற தேடலையும் இதுவரை நாம் பெரிய அளவில் நிகழ்த்திப் பார்க்கவில்லை. சில அபூர்வமான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் வழியாக நாம் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தொழில் பொருளாதாரம் என்ற குறுகிய நுகர்வு வெளியிலிருந்து விடுபட்டு குழந்தைகளின் முழுமையான மலர்ச்சியை அறிவதற்கான தேடல்தான் குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு. குழந்தைகளுக்கான படைப்புவெளி. மருத்துவம். உளவியல். கற்றல் முறை பற்றிய புரிதலை நோக்கி பெரியவர்கள் மேற்கொள்ளும் ஒரு சிறிய பயணம். குழந்தைகளின் அகவுலகை நோக்கிய நகர்வாக குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு தொடர்ந்து கோயம்புத்துரில் நடைபெற்று வருகிறது. நிகழ்வு கதை சொல்லல், திரையிடல், மரபு விளையாட்டுகள், வனப் பயணம், காகிதக்கலை, நாடகங்கள், புத்தக அறிமுகம் என பல வடிவங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு நடைபெறும் இந்நிகழ்விற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களை கனிவுடன் வரவேற்கிறோம்.
தொடர்புக்கு : 98434 72092 / 95001 25125
நிகழ்வு நடைபெறும் இடம் : கோவை
நிகழ்வு ஒருங்கிணைப்பு :
குட்டி ஆகாயம் சிறார் இதழ்
பஞ்சுமிட்டாய் சிறார் இதழ்
இயல்வாகை சூழலியல் இயக்கம்
























