சமீபத்திய பதிவுகள்
எங்களைப் பற்றி
பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழுவாகிய நாங்கள் 2015 நவம்பர் முதல் எங்களது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்ல துவங்கினோம். கதைகள் என்றதும் வழக்கமான நீதி போதனை கதைகளை தேர்வு செய்யாமல் சிறார்களை மகிழ்விக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். கதையுடன் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள்,ஓவியங்கள் என தேவைக்கேற்ப நிகழ்வை வடிவமைத்தோம். வாரந்தோறும் பெரியோர்களும் சிறார்களும் குடும்பமாக ஒன்றுக் கூடி கதைகள் பேசி விளையாடி வருகின்றோம். பெங்களூர்,சென்னை,தஞ்சாவூர் என வெவ்வேறு ஊர்களில் இதுவரை 50க்கும் மேலான சிறார் நிகழ்வுகள் நடத்தியிருக்கிறோம்.
நிகழ்வுகள் மூலம் சிறார்களுக்கு தமிழ் சார்ந்த வாழ்வியல் முறையையும் அவர்களது கற்பனை திறன்களை வெளிப்படுத்த ஏதுவான தளத்தினை அமைத்து தருவதே எங்களது நோக்கம்.
சிறார் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடனே பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. சிறார்களின் படைப்பும் முழு சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றோம். சிறார்கள் சொல்லும் கதைகள் அவர்களது மொழியிலே பதிவு செய்யப்படுகிறது,ஓவியங்களிலும் கூட பெரியோர்களின் தலையீடு இல்லாமல் தான் இருக்கிறது. இதழுக்கான படைப்புகளும் நிகழ்வுகள் மூலம் எதார்த்தமான சூழலில் எடுக்கப்படுகிறது. வாசிக்கும் பழக்கத்தை சிறார்களுக்கு விதைக்கும் வகையில் இதழ் வடிவமைக்கப்படுகிறது.
குழந்தை வளர்ப்பு,கல்வி,கலைகள்,விளையாட்டுகள்,நிகழ்வுகள்,இலக்கியம்,தற்கால சிறார் இதழ்கள்,உளவியல்,உணவு,மருத்துவம் என சிறார் உலகினைப் பற்றி தமிழில் உரையாடுவதற்கான தளமாக இந்த இணையத்தளம் இருக்கும். எழுத்தாளர்கள்,பெற்றோர்கள்,கலை நிபுணர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் இணையும் ஒரு புள்ளியாக அமையும் என்ற நோக்கத்துடன் இனிதே பயணத்தை துவங்கியிருக்கிறோம்.