சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை. தன்னார்வ ஆசிரியர்களுக்கான பயிற்சி. தொழில்நுட்ப ஜாம்பவான் என்று பலரும் நெக்குருகி வாழ்த்துபவர்களுள் ஒருவர் அங்கு சிறப்புப் பேச்சாளர். தொழில் நுட்பத்தின் இன்றைய அவசியம் குறித்துப் பேசத்தொடங்கினார். சிறிது நேரம் QR scanner மூலம் எப்படியெல்லாம் இணைப்புகளுக்குள் செல்லலாம் என்று எடுத்துக்கூறினார்.இங்கிலாந்தில் 7D அமெரிக்காவில் 9D அளவில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இங்கு எத்தனை D ஐ வளத்திருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்.
அது என்னாடி? என்று சின்ன சலசலப்பு. அவர் சுற்றிப் பார்த்து சிரித்துக் கொண்டார். நாம் பல ஆண்டுகளுக்கு முன் கண்ணாடி போட்டுக்கொண்டு 3D படம் பார்த்தோமே நினைவிருக்கா? என்றார். ஆகா புரிந்தது என அனைவரும் மகிழ்ந்தோம். இப்போ இங்கே 4D வந்துடுச்சு. அதை உங்களுக்குக் காட்டுகிறேன் என்று பேச்சாளர் கூறியபடியே திரையில் ஒரு குரங்கு படத்தைக் காட்டினார். அதைத் தன்னுடைய செல்பேசியில் இருந்த செயலியின் வழியே காட்டினார்.
குரங்கு அப்படியே அசையத்தொடங்கியது. அருகிலிருந்த வாழைப்பழப் படத்திலிருந்து தோன்றிய வாழைத்தாரில் ஒரு பழத்தைப் பிய்த்துத் தின்றது. இது போல எல்லா வில்ங்குகளையும் வேண்டிய அளவு பெரியதாக உருவாக்கிக் காட்ட முடியும். இதற்கான படங்களை இணையத்தில் எடுத்து வைத்துக்கொண்டால் போதும். செயலியையும் தரவிறக்கம் செய்தால் போதும். என்று கூறினார். இதுப் போன்று விலங்குகளை உருவாக்கும் காணொளிகளை முகநூலெங்கும் பார்த்தது பலரின் நினைவிற்கு வந்திருக்கும்.
இதன் மூலம் விலங்குகள் குறித்தும் அவற்றின் சத்தம் குறித்தும் குழந்தைகள் கற்கலாம். மாயத்தோற்ற விலங்குகள் அவர்களுடன் உயிர்பெற்றது போன்ற தோற்றத்தில் இருப்பதை செல்பேசித் திரை வழியே காணமுடியும். நம்மிடம் செல்பேசி இருக்கிறது. என்றாலும் அதிக மாணவர் இருக்கும் வகுப்பறைக்கு ஏற்ற உபகரணங்கள் தேவை.
கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் ஒரு காணொளி வந்தது. அரசுப்பள்ளி மைதானம். உயிரெழுத்துகள் வரிசையாகக் கீழே எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு எழுத்தை உச்சரித்தபின் அடுத்த எழுத்துக்குத் தாவி அதை உச்சரிக்கிறது ஒரு குழந்தை. அப்படியே ஒவ்வொரு எழுத்தாகத் தாவிக் கொண்டே குழந்தை உச்சரிக்க, மற்றவர்களும் கூறுகிறார்கள். இந்த விளையாட்டை எல்லோரும் விளையாடி முடித்ததும் அனைத்து எழுத்துகளின் உச்சரிப்பும் வடிவமும் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்.
இந்த இரு செயல்பாடுகளும் அற்புதமானவை. இதிலிருந்து சில செய்திகளை நாம் கற்கலாம். தொழில்நுட்பம் கல்வியில் பயன்படும். மாணவர் பங்கேற்பு அதிலும் உண்டு. விலங்குகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட முடியும். நேரில் செல்ல முடியாத இடங்களைக் காணொளியாகக் காணலாம். ஆனாலும் அவை மாயத்தோற்றம். அதில் தொடக்கத்தில் இருப்பது போன்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இருக்காது. குழந்தைகளின் பங்கேற்பு குறைவு. கருவிகளுக்கு அடிமையாக்கும்.
விளையாட்டாக எழுத்துக்களைக் கற்பதில் குழந்தைகளின் பங்கேற்பு முழுமையாக இருக்கும். நவீனக் கருவிகளில் சலிப்பு ஏற்படும். விளையாட்டுகள் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வூட்டும். புதிய செயல்பாடுகளை உருவாக்கும். தொழில்நுட்பத்திற்குச் செலவு அதிகம். பராமரிப்புச் செலவும் உண்டு. அனைவரும் உடனே பயன்படுத்துவது சிரமம். விளையாட்டிற்குச் செலவு மிகக்குறைவு. அனைவரும் எளிதில் பின்பற்றலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அதுவே கல்வியைக் காக்கும் கடவுள் என்று பேசுவது ஆபத்தானது. அதன் பின் மிகப்பெரிய வணிக அரசியல் இருக்கிறது.
சென்ற கோடை விடுமுறையில் கல்வி குறித்த பல்வேறு ஆவணப்படங்களைப் பார்த்தேன். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கற்பித்தல் கருவிகளில் சிலேட்டு முக்கிய இடம் பெற்றிருந்தது. ஆசிரியர் ஒவ்வோரு குழந்தையிடமும் சென்று எழுதிக்காட்டிக் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஆசிரியருக்கு யோசனையொன்று தோன்றியது. சிலேட்டுகளைச் சுவற்றில் அருகருகே மாட்டினார். பெரிய செவ்வகம் கிடைத்தது. பெரியதாக ஒருமுறை எழுதிக்காட்டினார். அனைவருக்கும் தெரிந்தது. இப்படியாகத்தான் கரும்பலகை கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அது உலகின் அனைத்து வகுப்பறைகளிலும் கரும்பலகை இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இதுதான் உண்மையில் தொழில்நுட்பம். குறைந்த செலவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாவதே உண்மையான தொழில்நுட்பம். பல்வேறு பள்ளிகளின் மைதானத்திலும் வகுப்பறைக்குள்ளும் உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகளின் அருகே குழந்தைகள் தாவியும் நொண்டியடித்தும் விளையாடியபடியே கற்கும் காணொளிகளை முகநூலெங்கும் காணமுடிகிறது. இது இன்னும் பல்வேறு வடிவங்களை எடுக்கும். குழந்தைகள் உதவியுடன் புதிய விளையாட்டுகளையும் உருவாக்குவார்கள்.
இதுதான் தொழில்நுட்பம். நமது பள்ளிகளுக்கானது.
4 Comments
Vazhga Valamudan
உயிரோட்டம் உள்ள முறையே எதிலும் சிறப்பானது
உண்மை , என்னுடைய மன ஆதங்கத்தை உங்கள் வரிகளில் காணும் போது மகிழ்ந்தேன் . மாற்றுவோம்.
அருமை !