ரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தொடக்கப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பில் சேர உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது, எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் ராமசாமி. அருமையான மனிதர். மொழிப்பாடங்கள் தவிர, மற்ற எல்லாப் பாடங்களையும் அவர் எடுப்பார். எங்களுக்கு அவருடைய வகுப்பில் பாடம் கேட்க மிகவும் பிடிக்கும். 
ஒவ்வொரு பாடத்தையும் நடத்தும்போது, அதற்குத் தொடர்புடையதாக ஏராளமான துணைக்கதைகள் சொல்வது அவர் வழக்கம். ஒருமுறை நீராவி எஞ்சின் பற்றிய பாடத்தை நடத்தும்போது எங்களுக்கு அவர் அதைக் கண்டுபிடித்த அறிவியலாளரான ஜேம்ஸ் வாட் என்பவரைப்பற்றி ஒரு கதை சொன்னார்.

ஒருநாள் ஜேம்ஸ் வாட் வீட்டில் தனியாக இருந்தார். தேநீர் தயாரிப்பதற்காக சமையலறைக்குச் சென்றார். கெட்டிலில் நீர் நிரப்பி அடுப்பிலேற்றி கொதிக்கவைத்தார். கொதிநிலையில் கெட்டிலிலிருந்து வெளியேறும் நீராவி வெள்ளைநிறத்தில் சுருண்டு சுருண்டு ஒரு பூச்சி பறப்பதுபோலச் செல்வதைப் பார்க்க அவருக்கு வேடிக்கையாக இருந்தது. அதனால் அதையே ஆர்வத்துடன் தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் நீராவியின் வெப்பம் அதிகரித்தபோது, கெட்டில் மூடி தானாகவே எழுவதும் படிவதுமாக இருந்தது. அது ஒரு நடனக்காட்சி போல அவருக்கு விசித்திரமாகத் தோன்றியது. ஏதோ விளையாட்டாக அந்த மூடியை ஒரு கணம் அவர் அழுத்திப் பிடித்தார். உடனே கெட்டிலின் மூக்கு வழியே நீராவியும் சூடான நீரும் சீறிக்கொண்டு வெளியே செல்வதைக் கவனித்தார். ஒரு விளையாட்டுபோல இதையே மீண்டும் மீண்டும் செய்து பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், நீராவியை ஒரு சக்தியாகப் பயன்படுத்தி ஓர் எஞ்சினை இயக்கமுடியும் என்ற எண்ணத்தை வந்தடைந்தார். அதன் விளைவாகவே அவர் நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார். அந்த அடிப்படையிலேயே நீராவி எஞ்சினால் இயங்கும் ரயிலும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராமசாமி ஐயா சொன்ன கதை அப்படியே என் மனசில் பதிந்துவிட்டது. விளையாட்டிலிருந்து பிறக்கும் அறிவியல் தத்துவத்தை விசித்திரமாக நினைத்துக்கொண்டேன். தடக்தடக் என்று மூடி எழுந்து தாழும் காட்சி என் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. எங்கள் வீட்டில் கெட்டில் இல்லை. அதனால் வாட் செய்து பார்த்த சோதனையை வீட்டில் எப்படி செய்துபார்ப்பது என்று புரியவில்லை. அப்போதுதான் எங்கள் அம்மா அடுப்படியில் சோறாக்கிக்கொண்டிருந்தார். நான் விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அம்மா என்னைப் பார்த்து ”பெரியனே, அடுப்புல சோறு வேகுது. ஒரு கொதி வந்ததும் இந்தப் பெரிய வெறக மட்டும் வெளிய இழுத்துடு. சின்ன வெறகு மட்டும் எரியட்டும். தெரியுதா? தோ கடைக்குப் போய் ரெண்டு காய் வாங்கிவந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியே சென்றார். அடுப்பில் ஒரு கண்ணும் பாடத்தில் ஒரு கண்ணுமாக இருந்தேன் நான். சிறிது நேரத்தில் தளக்புளக்கென்று சோறு கொதிக்கும் சத்தம் கேட்டது.

விறகை இழுக்கச் சென்ற நேரத்தில் ராமசாமி ஐயா சொன்ன கெட்டில் கதை நினைவுக்கு வந்துவிட்டது. விறகை இழுக்காமல் ஒருகணம் சோற்றுத்தவலை மூடியையே கவனிக்கத் தொடங்கினேன். தளக்புளக் சத்தம் பெருகிக்கொண்டே போனது. ஒரு ரயில் போகும் சத்தத்தைப்போலவே அது இருந்தது. கண்களை அசைக்காமல் தவலை மூடியையே நான் கவனித்தேன். ஒரு படகுபோல அது இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக எழுந்து எழுந்து படிந்தது. ஒவ்வொருமுறை எழுந்திருக்கும்போதும் நீராவி சீறிக்கொண்டு வெளியேறியது. மெய்மறந்து அதையே பார்த்தபடி இருந்தபோது என் முதுகில் அடி விழுந்தது. அவசரமாக திரும்பினேன். அம்மா நின்றிருந்தார். “நான் சொன்னது என்ன, நீ செய்றது என்னடா? அடுப்புல என்ன கூத்தா நடக்குது? சூடு தாங்காம தவல கவுந்திடுச்சின்னா ராத்திரி எல்லாரும் கொலபட்டினிதான் கெடக்கணும் தெரியுதா?. சரியான மாங்கா மடையனா இருக்கியே” என்று திட்டிக்கொண்டே ஆவேசத்தோடு எல்லா விறகுகளையும் வெளியே எழுத்துவிட்டார்.

புகைபோல பரவிப்போகும் நீராவியைக்கொண்டு ஒரு ரயிலை வடிவமைக்க முடிந்திருப்பதை உண்மையாகவே நான் உலக அதிசயமாகவே நினைத்தேன். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ரயில்வே ஸ்டேஷனிருந்தது. சிறுவர்களெல்லாரும் அங்குதான் விளையாடிக்கொண்டிருப்போம். அப்போது ரயில் வந்து நிற்கும்போதெல்லாம் அதன் எஞ்சினையும் சக்கரங்களையும் முன்னும் பின்னும் அசையும் பிஸ்டன்களையும் ஆசையோடு பார்த்துக்கொண்டு நிற்பேன். வானத்தை நோக்கியபடி திறந்திருக்கும் வாய்வழியாக நீராவி சுருண்டு போவதைப் பார்க்கும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து நானும் பறந்துபோவதுபோல நினைத்துக்கொள்வேன்.

ஒரு விடுமுறை நாளில் நூலகத்துக்குச் சென்றிருந்தபோது வழக்கம்போல சித்திரராமாயணத்தை எடுத்துப் படித்தேன். கதையில் மூழ்கிவிட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. “என்னடா, பசிக்கலையா? மணி ஒன்னாயிடுச்சி. சாத்தலாமா?” என்று நூலகர் அண்ணன் கேட்டபோதுதான் எனக்கு சுயநினைவு வந்தது. ”போகலாம்ண்ணா” என்றபடி புத்தகத்தை அவருடைய மேசையில் வைக்கச் சென்றேன். தற்செயலாக அவர் மேசை மீதிருந்த ஒரு புத்தகத்தின் மீது என் பார்வை படிந்தது. ரயிலின் கதை. அந்தத் தலைப்பைப் பார்த்ததுமே இப்படி ஒரு புத்தகத்தைத்தானே தேடிக் கொண்டிருந்தோம் என்று தோன்றியது. அண்ணன் பக்கம் திரும்பி “அண்ணா, இந்தப் புத்தகத்தைப் படிக்கட்டுமாண்ணா?” என்று கேட்டார். “அது கதைப் புத்தகம் இல்லடா, அறிவியல்” என்றார் அவர். அவர் கண்கள் என்னை சந்தேகத்துடன் பார்த்தன. “தெரியும்ண்ணா. எங்க ராமசாமி சார் சொல்லியிருக்காரு. ரயில் ஓடறதுக்கே நீராவி எஞ்சின்தான் மூலகாரணம்ன்னு சொல்லிக் கொடுத்திருக்காருண்ணா” என்றேன். அவர் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. “சரி எடுத்து வைக்கறேன். சாயங்காலமா வந்து படி” என்றார்.

சாயங்காலம் மறுபடியும் நூலகத்துக்குச் சென்றேன். நூலகர் அண்ணன் விசித்திரமாகவே என்னைப் பார்த்தபடி ‘ரயிலின் கதை’ புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். நான் ஒரு மூலையில் உட்கார்ந்து வேகவேகமாகப் படிக்கத் தொடங்கினேன். நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தது ரயிலுக்காக அல்ல என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அப்போதெல்லாம் சுரங்கம் வெட்டி நிலக்கரியை தோண்டி எடுப்பதுதான் முக்கியமான தொழில். சுரங்கத்தில் நிரம்பிவிடும் நீரை உடனுக்குடன் வேகமாக வெளியேற்றுவதற்காகவே முதன்முதல் எஞ்சின் என்கிற இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் அமைக்கப்பட்டது. நீராவியால் கண்டுபிடிக்கப்பட்ட எஞ்சின் என்பது அதில் ஒருவகை. பயன்படுத்துவதற்கு அது மிகவும் எளிதாக இருந்ததால், அதுவே பிற்காலத்தில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு நிலைத்துவிட்டது. நாலைந்து ஞாயிறுகள் தொடர்ந்து சென்றுதான் அந்தப் புத்தகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துமுடித்தேன். அதில் நிறைய படங்கள் இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் கதைபோலவே இருந்தது. எஞ்சினை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்கு வசதியாக அதற்கு ஒரு வண்டி தேவைப்பட்டது.

மூன்று சக்கரவண்டியில் ஏற்றப்பட்ட எஞ்சின் எல்லா இடங்களுக்கும் போய்வந்தது. அடுத்து நீராவிக்காக ஒரு நிரந்தர கொதிகலனும் வண்டியில் இடம்பெற்றது. அதற்குப் பிறகு கொதிகலனைச் சூடேற்ற ஒரு ஸ்பிரிட் விளக்கும் இடம்பெற்றது. ஆளரவமற்ற ஓர் இரவில் கொதிகலனிலிருந்து எழும் நீராவியின் அழுத்தத்தால் வண்டி தானாகவே நிலத்தில் ஊர்ந்துபோனது. தாறுமாறாகச் செல்வதைக் கட்டுப்படுத்தி ஒரு திசையை நோக்கி நேராகச் செல்லும்படி கட்டைகளால் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. நீராவியால் ஓடும் வண்டி முதலில் உருவானது. பிறகு வார்ப்பிரும்பினால் ஆன தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன. தண்டவாளங்களில் வண்டி ஓடும் என்பதை உறுதிப்படுத்தியதும் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. மெல்ல மெல்ல அந்தப் பயன்பாடு வளர்ந்து ரயிலாக நீண்டது. தொடர்ச்சியாக இருபது முப்பதாண்டுகள் அறிவியலாளர்கள் நிகழ்த்திய உழைப்புக்குப் பிறகே இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.

இங்கிலாந்தில்தான் முதல் ரயில் ஓடியது. அதன்பின் நூறு ஆண்டுகள் கழித்தே இந்தியாவுக்கு வந்தது. அறிவியல் சார்ந்த செய்திகள் ஒரு கதையைப்போல அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்தன. அந்த விவரிப்புமொழியின் ஈர்ப்பின் காரணமாகவே நான் இரண்டுமுறை அந்தப் புத்தகத்தைப் படித்தேன்.

ஒருநாள் ராமசாமி ஐயாவிடம் வகுப்பில் அந்தப் புத்தகத்தைப்பற்றிச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எனக்குப் பக்கத்தில் வந்து செல்லமாகத் தட்டிக்கொடுத்தார் அவர். பிறகு ”அப்புஸ்வாமி புத்தகமா?” என்று புன்னகைத்துக்கொண்டே கேட்டார். “ஆமாம் சார்” என்று பதில் சொல்லிக்கொண்டே ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன்.

4 Comments

  • Nagarajkumar Narayanan says:

    Arumayaana padhivu
    Kuzhandhaigal manadhil ari iyal karrka thoonda paduvar

  • பிரியசகி says:

    குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

  • s.jayashri says:

    பாவண்ணன் தான் ஒரு குழந்தையாய் மாறி குழந்தைகளுக்கான புத்தகம் பற்றிச் சொல்லும் விதம் அருமை

  • அக்களூர் ரவி says:

    குழந்தைகள் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டுபவரே ஆசிரியர். ஆர்வம் குழந்தையை மேலும் படிக்கத் தூண்டுகிறது. ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை அழகாக பாவண்ணன் சொல்லியிருக்கிறார். அருமை.

Leave a comment