நான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

விடுமுறைக்காக நாங்கள் தென்கரோலினாவுக்குச் செல்லும்போது, அது எனக்கு இரண்டு நிகழ்வுகளை நினைவூட்டியது. முதலாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முழு சூரிய கிரகணத்தைக்(total solar eclipse) காண தென் கரோலினாவுக்குச் சென்ற நினைவுகள், இரண்டாவது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடிக்குச் சென்று வளை கிரகணத்தைப்(annular solar eclipse) பார்த்தது. இந்த நினைவுகள் மனதிற்குள் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் போது தான் தற்செயலாக டிசம்பர் 26ஆம் தேதி தமிழ்நாட்டில் தெரியவிருக்கும் மற்றொரு வளை கிரகணம் நிகழ்கிறது என்ற செய்தியை கவனித்தேன். இம்முறை அதை பார்க்க தவறவிட்டாலும் என் நினைவுகள் அனைத்தும் அங்குதான் இருக்கிறது.

புவியியல் மற்றும் வானியல் ஆகியவற்றில் எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. கிரகணங்கள் என்பது ஒரு வசீகரமான நிகழ்வு. நவீன அறிவியலால் துல்லியமாக கணிக்க கூடிய நிகழ்வு. இந்தக் கிரகணங்களை ஒட்டி வரலாற்றிலும் பல முக்கியமான விசயங்கள் நடந்துள்ளது.

பூமிக்கு தொடர்புடைய இரண்டு முக்கியமான கோள்களின் (celestial bodies, சூரியன் & நிலவு) கிரகணங்களில், சூரிய கிரகணங்கள் மிகவும் அரிதானவை. சூரிய கிரகணங்களின் வகைகளில், முழு சூரிய கிரகணம் & வளை கிரகணம் முக்கியமானவை. என் வாழ்வில் இதுவரை, முழு சூரிய கிரகணத்தை அதன் பயண பாதைக்கு சென்று முழுமையாகவும் வளை கிரகணத்தையும் நேரடியாக பார்த்ததையும் பெருமையாக உணர்கிறேன் .

“The Ring of Fire” எனும் வளைய கிரகணம்:

நான் முதன்முதலாக பார்த்தது வளைய கிரகணம் தான், இதனை பொதுவாக “The Ring of Fire” eclipse என்று அழைப்பார்கள். சனவரி 2010: வழக்கத்தை விட சுவாரஸ்யமான நாட்கள் அது. அதிகபட்ச கிரகணத்தின் பாதை (maximum eclipse) இந்தியாவில் தனுஷ்கோடியை ஒட்டி உள்ள சிறிய நிலப்பகுதியை மட்டும் தொடுவதை
அறிந்து நண்பர்களுடன் பயணத்தை திட்டமிட்டேன். திட்டமிட்டது என்னவோ நன்பர்களுடன், ஆனால் கடைசி நேரத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணம் சொல்ல இறுதியில் பெற்றோர்களுடன் சென்றேன்.

கிரகணத்திற்கு முந்தைய நாள் – பொங்கல் நாளில் நாங்கள் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தீவுக்குச் (அங்கு தான் தனுஷ்கோடி உள்ளது) கிரகணத்தை காண ஆவலுடன் புறப்பட்டோம். இந்த பயணத்திற்கு “Ring of Fire” என்று பெயரிட்டேன். எங்களால் அந்த நேரத்தில் கிரகணக் கண்ணாடிகளை பெற முடியவில்லை, ஆனால் என் அப்பா அந்த கடைசி நேரத்திலும் அவரது தொடர்புகள் வழியே சில வெல்டரின் கண்ணாடியை ஏற்பாடு செய்தார். அதேப் போல் அப்பாவால் இராமேஸ்வரத்தில் தங்குமிடத்தையும் பெற முடிந்தது.

இராமேஸ்வரம் என்பதாலும், அதுவும் இந்த வளைய கிரகணம் அமாவாசை நாட்களில் மட்டுமே நிகழ்கின்றது என்பதாலும் அங்கு மத சடங்குகள் நிறைய நடந்தது. இன்றைக்கு உள்ளது போன்று அன்று போதிய சாலை வசதிகள் இல்லாததால் எங்களால் முகுந்தராயாச்சத்திரம் (எம்.ஆர்.சத்திரம்) வரை மட்டுமே செல்ல முடிந்தது.
அந்தச் சாலை கடற்படை சோதனைச் சாவடி ஒன்றில் முடிந்தது, அதன் பிறகு அங்கிருக்கும் வாகனங்கள் வழியாக தான் செல்ல முடியும். அந்த வாகனங்கள் மாற்றப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், அவை தான் அரிச்சல்முனைக்கு (நிலம் முடிவடையும் இடம்) அழைத்துச் செல்லும் வாகனம். வாகனத்தை பார்த்ததும் பெரியவர்கள் எம்.ஆர்.சத்திரத்திலே தங்க முடிவெடுத்தார்கள்.

அதன் பிறகு நானும் என் தம்பியும் மட்டும் பயணத்தை தொடர்ந்தோம். உண்மையில் அந்த வேன் பயணம் ஒரு சாகச பயணம் என்று தான் சொல்ல வேண்டும்.வேன்களின் பின்புறத்தில் தொங்கிக்கொண்டும், சில நேரம் வேனில் மேல் பகுதியில் அமர்ந்து கீழே விழாமல் இருக்க கயிறுகளை பிடித்துக்கொண்டும் பயணித்தோம். அந்த வாகனம் கடல் நீரிலும் மணலிலும் மிதந்து செல்வது போல சென்றது. ஆனால், நாங்கள் சென்றடையும் முன்பே கிரகணம் துவங்கிவிட்டது.

எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அதிகபட்ச கிரகணத்தின் பாதையை சென்றடைந்தும் முக்கியமான தருணத்தில் மேக மூட்டம் ஆகிவிட்டது, கிரகணத்தை எங்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்த நடுப் பகலில் திடீரென இருள் வந்ததால் எங்கள் முதுகெலும்புகள் சில்லென ஆனதை உணர்ந்தோம். உண்மையில் அது ஒரு அலாதியான அனுபவம். புயல் ஆட்கொண்ட தனுஷ்கோடியில் உள்ள அந்த இடிந்த கட்டிடங்களுக்குள் அந்த திடீர் இருளில் நுழைவது என்பதை அப்போது நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்தது.

தீவின் முனையான (land’s end) அரிச்சல்முனையில் நாங்கள் இருந்த அந்தப் பொழுது அழகானது. அங்கிருந்து அதே வேனில் திரும்பி வந்தோம் – நீண்ட நேரத்திற்கு ஒரு அடிக்கும் குறைவான தண்ணீரில் தான் அந்த வாகனம் வந்தது. சென்னை திரும்புவதற்கு முன்பு மண்டபம், முயல் தீவு (சிறப்பு அனுமதி), மதுரை மற்றும் கொடைக்கானல் ஆகியவற்றைப் பார்வையிட்டோம். இந்தப் பயணத்தின் சிறப்பம்சம் சூரிய கிரகணம் தான் , அதுவே கிரகணங்களில் மீதான என் ஆர்வத்தை அதிகரித்தது.

மேக மூட்டத்தின் காரணமாக சற்றே ஏமாற்றமடைந்த ஜனவரி 15, 2010 கிரகணத்திற்குப் பிறகு அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சூரிய கிரகணங்கள் நிலையான இடைவெளியில் நடக்காது, அவை நிகழும்போது அது மிகச் சிறிய பகுதியிலிருந்தே தெரியும் – மேலும் சில சந்தர்ப்பங்களில் மிகக் குறைந்த அல்லது மக்கள் தொகை இல்லாத பகுதிகளில் (பெருங்கடல்கள், அண்டார்டிகா போன்றவை) நிகழக்கூடும். ஆகையால் வாய்ப்புகள் கிடைக்கும் போது வானில் நடக்கும் அதிசயத்தை தவற விட மனம் விரும்புவதில்லை.

The Great American Eclipse:

எனது அடுத்த வாய்ப்பு August 2017யில் கிடைத்தது. அதற்காக, ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே பயணத்தை திட்டமிட்டேன். அந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் வசித்து வந்தேன், கிரகணத்தின் பாதை அமெரிக்காவை கடந்து செல்ல இருந்தது. அந்தக் கிரகணம் செல்லும் பாதையின் அருகாமையில் இல்லாமல் போனாலும்,இந்த வாய்ப்பை விட்டுவிட வேண்டாம் என்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.

21 ஆகஸ்ட் 2017 முழு சூரிய கிரகணம் “The Great American Eclipse” என்று அழைக்கப்பட்டது – இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து அதன் கிழக்கு கடற்கரைக்கு – ஓரேகன் முதல் தென் கரோலினா வரை ஒரு பாதையை வெட்டியது. நான் வாஷிங்டன் டி.சிக்கு அருகிலுள்ள கிழக்கு கடற்கரையில் வாழ்ந்தேன்.
மீண்டும் கிரகணம் என்னை ஒரு கவர்ச்சியான பயணத்திற்கு தயார் செய்தது. யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா(Yellowstone National park) – ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி (Caldera volcano – with its Geysers that spewed hot steam from below) நோக்கிய பயணம் அது. இவ்வுலகில் இதைவிட ஒரு அழகான இடம் வேறென்ன இருக்கப்போகிறது.

ஆனால், கிரகணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே யெல்லோஸ்டோன் பூங்காவைச் சுற்றியுள்ள விடுதிகள் தங்கள் கட்டணங்களை வானளவுக்கு உயர்த்தி இருந்தது. நான் வேறு இடத்தினை பார்க்கத் தொடங்கினேன். தென் கரோலினாவில் அட்லாண்டிக் கடலின் கரையில் ஒரு சிறிய பூங்கா இருந்தது, கிரகணம் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இடம் தான் அது.

கிரகணத்தின் நாளில் வானிலை முன்னறிவிப்பு “மேகமூட்டமாக” இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தோம். நான் மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தேன். ஆம் அந்த மாற்று மலைகள் இருக்கும் பகுதி. கிளெம்சனில்(Clemson, SC) உள்ள கிளெம்சன் பல்கலைக்கழக வளாகங்களுக்கு செல்ல முடிவு செய்தோம். எஸ்சி.கொலம்பியாவும் க்ளெம்சனும் ஒரே மாநிலத்தில் இருந்தபோதிலும், 2 மணி நேர பயணத்திற்கும் மேலானது. போக்குவரத்தும் அதிகமாக இருக்கும், நீண்ட பயணத்திற்கு பிறகு அந்த இடத்தை அடைந்தோம். அலை கடலென மக்கள் இருந்தனர். அந்த இடம் சூடாக இருந்தது. கிரகணம் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தொடங்கப்பட இருந்தது. மடிக்கணினி, GoPro மற்றும் டி.எஸ்.எல்.ஆர் கேமரா (சோலார் வடிகட்டியுடன்) ஆகியவற்றைக் கொண்டு ஒரு மரத்தின் கீழ் ஒரு கடையையே அமைத்துவிட்டு ஆவலுடன் காத்திருந்தோம்.

நேரம் நெருங்க நெருங்க, சூரியனின் குறுக்கே சந்திரன் மெதுவாக வந்தது, அதன் நிழலும் நம்மீது விழ துவங்கியது. மெல்ல இருளும் படர்ந்தது. இதற்கிடையில் அங்கு சூழும் மேக கூட்டத்தையும் கவனித்தவாறு இருந்தோம். எங்களது நல்ல நேரம் அவை எங்களை தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்தால் அவர்களும் சூரியக் கண்ணாடிகள் வழங்கினார்கள், அதனுடன் கிரகணத்தைக் கவனிக்க சில சுவாரஸ்யமான வழிகளையும் முறைகளையும் அறிய முடிந்தது. ஒரு பின்ஹோல் கேமரா – இரண்டு சிறிய பெட்டிகள் மற்றும் சில கருப்பு தாள்கள் கொண்டு சூரியனை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் கவனிக்க அவர்கள் உதவினர். கடைசியாக – நாங்கள் இவ்வுளவு தூரம் பயணித்து காத்துக்கிடந்த தருணம் வந்தது.சந்திரன் சூரியனை முழுவதுமாக கைப்பற்றியது. இருள் எங்களை முழுவதுமாக சூழ்ந்ததது. நான் மகிழ்ச்சியடைந்தேன், உணர்ச்சி மிகுதியால் உரக்க கத்தினேன்.

Solar flares, Bailey’s beads ஆகியவற்றை கவனிக்க முடிந்தது. கிரகணம் மெல்ல மெல்ல கடக்கும் போது பெரும் அமைதி அங்கு நிலவியது. மொத்த கிரகணமும் 2 நிமிடங்கள் 40 வினாடிகள் நீடித்தது, எங்களுக்கு மீண்டும் ஒளி கிடைத்தது. அந்த குறுகிய காலத்திற்குள் பல விஷயங்கள் நடப்பதாக நான் உணர்ந்தேன். அந்த காலம் இன்னும் நீடித்து இருக்க விரும்பினேன். கிரகணம் முடியும் போது தரையில் பாம்பு போன்ற நிழல்கள் விழுவதையும் கவனித்தோம்.சிலர் நிஜ பாம்பின் நிழல் என்று கூட நினைத்தனர். பின்பு தான் நாங்கள் புரிந்துக்கொன்டோம் அது அறிவியலால் இன்றும் விளக்கம் தர முடியாத “shadow bands” என்ற இயற்கை நிகழ்வு என்று.

ஆக, எனது இந்த இரண்டாவது அனுபவம் கிரகணத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. 2024 அமெரிக்காவில் அல்லது Chile – Dec 2020 வரவிருக்கும் கிரகணத்தை காண காத்திருக்கிறேன். உங்களுக்கு அருகில் ஒரு கிரகணம் ஏற்பட்டால் – அது சூரிய அல்லது சந்திர கிரகணமாக எதுவாக இருந்தாலும் மூட நம்பிக்கையில் வீட்டினுள் முடங்கி கிடக்காமல் தக்க ஏற்பாடுகளுடன் வெளியே சென்று அதை காணுங்கள் இயற்கையின் அற்புதத்தை, வானில் நடக்கும் அதிசயத்தை அனுபவியுங்கள்.

4 Comments

Leave a comment