பஞ்சு மிட்டாயின் இணைய வழி செயல்பாடுகள் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சு மிட்டாய் சிறார் குழு வாரந்தோறும் சிறார்களை இணைய வழியே சந்தித்து வருகிறது. அதிலும் வாரம் ஒரு செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில்  சிறார் உலகில் ஆர்வத்துடன் இயங்கி வரும் வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்களையும்  நிகழ்வின் வழியே அறிமுகம் செய்து வருகிறது. இணையம் என்ற வழியே நிறைய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அவர்கள் ஊடே சிறுவர்களையும் சுலபமாக இணைக்க முடிகிறது அதுவும் கொரோனா பேரிடர் காலத்தில் அது அனைவருக்குமான தேவையாகவும் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி இதுவரை(மே 31 வரை) தொடர்ந்து வாரந்தோறும் நிகழ்வுகளை வெற்றிக்கரமாக நடத்தி இருக்கிறோம். இது அல்லாமல் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து வேறு சில நிகழ்விகளிலும் (நேர்காணல்) பங்கெடுத்துள்ளோம்.

கதை சொல்லல், சூழலியல் அறிமுகங்கள், நாடக கலை, அறிவியல் விளையாட்டுகள், மாய குரல் கலை, Socks puppet வழியே குழந்தைகளை கலையினுள் பழகுதல் என வெவேறு துறை சார்ந்த நண்பர்களுடன் பயணம் அழகாக செல்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் ஆர்வத்துடன் 50+ மேலான குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் தொடர்ச்சியாக இணைகிறார்கள். குழந்தைகள் அவர்களுக்கே உரிய ஆர்வத்துடன் ஒவ்வொரு கலை வடிவத்தையும் மிகவும் நேர்த்தியாக உள்வாங்கி கொள்வதை கவனிக்க முடிகிறது. பஞ்சு மிட்டாயுடன் இணைந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தப் பதிவில் ஒவ்வொரு நிகழ்வை பற்றியும் சிறியதாக ஓர் குறிப்பு.

பேய் பிசாசு இருக்கா – சிறப்பு விருந்தினர் உதயசங்கர்:

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் தொடர்ந்து குழந்தை உளவியலில் அதிகம் தொடாத சில விசயங்களை மிகவும் மென்மையாக எடுத்து உரைப்பவர். மூட நம்பிக்கைகள், பேய் பிசாசு பற்றி பேசுவது, கடவுள் பற்றிய உரையாடல் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மிகவும் எளிதாக முடக்கப்படும் குழந்தைகளின் கேள்விகளுக்கு முன்னுரிமை தருபவர். சிறார் நாவல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என அவரது படைப்புகள் பலவித தளங்களில் பயணிக்கிறது. அதில் இந்த நிகழ்வில் அவரது புத்தகமான “பேய் பிசாசு இருக்கா” என்பதை கொண்டு ஒரு பூதம் (நீதிமணி அவர்களின் பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி கதை)  கதை, ஒரு குழந்தைகள் பார்க்க கூடிய நல்ல பேய் திரைப்பட அறிமுகம்(Spirit away – ஜப்பானிய திரைப்படம்) அதன் வழியே குழந்தைகளுடன் உரையாடல் என திட்டமிட்டிருந்தோம், முந்தைய நாளே குழந்தைகளிடமிருந்து கேள்விகளை தொகுத்து அதைக் கொண்டு உரையாடினோம். குழந்தைகள் அனைவரும் பேய் இல்லை என்று தங்களுக்கு தெரியும் இருந்தாலும் அதை நினைச்சா பயமா இருக்கே? என்று அதிகம் சொன்னது அவர்கள் உலகில் உள்ள எதார்த்தத்தை எங்கள் முன்னே நிறுத்தியது. குழந்தைகளின் கேள்விகளை தனியாக தொகுத்துள்ளோம். இங்கு வாசிக்கவும்.

ஒரு ஊர்ல.. – சிறப்பு விருந்தினர் வனிதாமணி  அருள்வேல்: 

ஈரோட்டை சேர்ந்த வனிதாமணி தொடர்ந்து “கதைக்களம்” என்ற பெயரில் சிறார் நிகழ்வுகளை நடத்தி வருகிறார் கூடவே “பட்டாம்பூச்சி” என்ற பெயரில் நூலகத்தையும் நடத்தி வருகிறார். நிகழ்வுகள் & நூலகம் வழியே தொடர்ந்து சிறார்களுடன் புத்தகங்களை கொண்டு சேர்த்தும் வருகிறார். பெற்றோர் & ஆசிரியர்களிடமும் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு, வாசிப்பு, கதைகளின் அவசியம் குறித்தும் உரையாடி வருபவர். வனிதா மணி பெற்றோர்களுக்கும் சிறார்களுக்கு கதைகளின் அவசியம் பற்றிய சிறு அறிமுகத்துடன் துவங்கினார். கதை சொல்லல் துவங்குவதற்கு முன்பு அவர்களுக்காக அழகான பாடல் பாடினர். பாடலுக்கு சிறார்களின் செய்கையை நடனமாக மாற்றி அவர்களையும் பாடலுக்குள் எளிமையாக கொண்டு வந்தார். அதன் பின்னர்   “பறவை டாக்டர்” (ஆதி வள்ளியப்பன் அவர்களின் புத்தகம்) என்ற கதையை அவரது தனித்துவமான நடையில் சொல்லி இறுதியில் அந்தப் புத்தகத்தையும் கூடவே கதையிலுள்ள பறவைகளையின் படங்களையும் அறிமுகம் செய்தார். இறுதியாக பாடலும் நிகழ்வு அழகாக முடிந்தது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் கொ.மா.கோ இளங்கோ அவர்களும் கலந்துகொண்டு அழகிய கதை ஒன்றை குழந்தைகளுக்கு சொன்னார்.

சகியும் சகாவும்  – சிறப்பு விருந்தினர் ப்ரியசகி: 

சகாவின் (மாய குரல் பொம்மை) சேட்டைகளை நிகழ்வு முடிந்து பல நாட்கள் ஓடியும் இன்னும் சிறார்கள் நினைவு கூறுகிறார்கள். சகா தங்களுடன் பேசியதையும், அது சொன்ன “முட்டை பள்ளியையும்” சிறார்கள் நினைத்து நினைத்து சிரிக்கிறார்கள்.  அதன் ஒவ்வொரு அசைவையும் சிறார்கள் ரசித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் ப்ரியசகி(ஆசிரியர், எழுத்தாளர், மாயக்குரல் கலைஞர்) அவர்கள் நிகழ்வின் துவக்கத்திலேயே இரண்டு குரலும் தன்னுடையது தான் என்று சொல்லியிருந்தாலும் அந்த உண்மையுடனே சகாவை தங்கள் நண்பனாகவே அவர்கள் பார்த்தார்கள். சகி “குட்டிப்பாப்பா பார்த்த குட்டிப்பாம்பு_ (எழுத்தாளர் உதயசங்கரின் கதை) கதைகள் சொல்ல சொல்ல சகா நடுவே எடக்கு மடக்கான கேள்விகளை கேட்பதை சிறார்கள் ரசித்து மகிழ்ந்தனர். மீண்டும் சகா எப்போது வரும் என்ற கேள்விகள் இன்னும் நிகழ்வில் வந்த வண்ணம் இருக்கிறது.

“ஆடலாம்! பாடலாம்! சிறகடித்து பறக்கலாம்!” – சிறப்பு விருந்தினர்  உதிரி நாடக நிலம் விஜயகுமார்

“ஆடலாம்! பாடலாம்! சிறகடித்து பறக்கலாம்!” நிகழ்வு முடிந்தும் கேட்டுக் கொண்டிருந்த பாடல் இது. இணைய வழியே ஒரு நாடக பயிற்சி என்ற முயற்சி மிகவும் நேர்த்தியாக நேற்று நடந்தது. விஜயகுமார் அவர்கள் சிறுவர்களுக்கு சின்ன சின்ன சப்தங்கள் வழியே துவங்கி அதனுடன் இசையையும் சேர்த்து அதன் பின்னர் அழகான கதையை சொல்லி அந்தக் கதைக்கு நாடக வடிவம் கொடுத்து அதனை குழந்தைகள் கொண்டு நடிக்கவும் வைத்தார்.

“பழக்கப்படுத்துதல்” என்பது கலைக்கு முக்கியமானது என்று அடிக்கடி விஜயகுமார் சொல்வார். அதன்படியே நேற்று குழந்தைகளுக்கு நாடக கலையை அவர்களது வயதிற்கு ஏற்றார் போல் அறிமுகம் செய்து அதில் குழந்தைகளை உலாவ செய்தார். பங்கெடுத்த அத்தனை குழந்தைகளும் தங்களை பெரிய காடாகவோ, சிட்டுக்குருவியாகவோ அல்லது குருவியின் குஞ்சாகவோ சிறிது நேரம் தங்களை உணர்ந்தனர். அப்படி உணர்ந்ததோடு அல்லாமல் அவர்கள் ஆடியும் பாடியும் சிறகடித்து ஓடியும் நேற்றைய பஞ்சு மிட்டாய் நிகழ்வை அழகாக்கினர்.

நிகழ்வை அழகாக எடுத்துச் சென்ற உதிரி நாடக நிலம் விஜயகுமார் அவர்களுக்கு பஞ்சு மிட்டாயின் அன்புகள்.

சிறார்களுக்கான சூழலியல் கதைகள் – சிறப்பு விருந்தினர்  கோவை சதாசிவம்

“சிறுமியிடம் தோற்றுப்போன கடவுள்” என்ற கதை சிலந்தியைப் பற்றி பேசியது. எறும்பின் கதை தொடர் சங்கிலியாக வந்தது. ஒரு நாள் வாழ்வு தான் ஈசலுக்கு என்பது உண்மையா? சாணி உருட்டும் வண்டு ஏன் சாணியை உருட்டிக்கொண்டே இருக்கிறது? யானை இழந்த சிறகுகள் அதுவும் அதனிடமிருந்த நான்கு சிறகுகள், கரையான்கள் பற்றியும் , குள்ளாம் பூச்சி கதையையும் சொல்லி நாம் அதிகம் கேட்டிடாத அதே நேரம் நாம் அன்றாடம் பார்த்திட கூடிய பூச்சிகளை அறிமுகம் செய்தார் சூழலிய எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்கள். கூடுவது அவர்களது புத்தகங்களையும் அறிமுகம் செய்தோம். கதை பேசி முடிந்ததும் சிறார்களை போலவே நிறைய பெற்றோர்களும் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டனர். ஓர் மன நிறைவான நிகழ்வாக அமைந்தது.

நிகழ்வின் வீடியோ பதிவு இங்கே உள்ளது.

சுட்டிகளுக்கு குட்டி குட்டி அறிவியல் விளையாட்டுகள் –  சிறப்பு விருந்தினர் அறிவரசன்        

நண்பர் அறிவரசன் … தொடர்ந்து அறிவியலை எளிமையாக சிறுவர்களுடன் உரையாடி வருபவர். சிறுவர்களுடன் கதைகள் பேசி, பாடல்கள் பாடி, விளையாடி அதன் ஊடே அழகாக அறிவியல் சோதனைகள் செய்து விளையாட்டாக அறிவியலை சிறார்களிடையே கொண்டு செல்பவர். பள்ளிகள் , சிறார் நிகழ்வுகள் என தொடர்ந்து சிறார்களுடன் செயலாற்றி வருபவர். நமது நிகழ்வில் 6 அறிவியல் சோதனைகளை செய்தார். அவரது செயல்முறை பாணி என்பது வெறும் அறிவியல் சோதனைகளை செய்வதோடு அல்லாமல் அதன் பின்னால் இருக்கும் பயன்பாடுகளையும் அதன் காரணங்களையும், வேறுபாடுகளையும் குழந்தைகளுக்கு தகுந்தாற்போல் விளக்குவதும் என நேர்த்தியாக இருந்தது.

இந்த நிகழ்வின் மிக முக்கியமான தருணம் என்பது குழந்தைகளின் கேள்விகளும் அதனை கையாண்ட விதமும். ஏனென்றால் ஒவ்வொரு சிறார்களின் அனைத்து கேள்விகளையும் அனுமதித்து அதற்கு பொறுமையுடன் பதில் சொல்லினோம். இது பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. நிகழ்வு முடிந்ததும் பல பெற்றோர்கள் அழைத்து பாராட்டினர். கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு நின்றுவிடாமல் குழந்தைகளின் கேள்விகளுக்கு செயல்பாடுகளின் வழியேவும் பதில் தந்தது அனைத்து சிறார்களை நிகழ்வுடன் மிகவும் இணைத்தது. இந்தக் கேள்விகளையெல்லாம் தனியாக தொகுத்து எழுத வேண்டும்.

நிகழ்வின் வீடியோ பதிவு இங்கே உள்ளது.

“Socks Puppet” செய்யலாம் வாங்க –  சிறப்பு விருந்தினர் தாமஸ்

நண்பர் ப்ரியசகி மூலம் தாமஸ் அவர்கள் அறிமுகமானார். நிகழ்வை திட்டமிடும் போது, நேரடியாக குழந்தைகளே மாய குரல் கலையை அனுபவிக்கும் வகையில் திட்டமிடலாம் என்றார். கலையை நேரடியாக அனுபவிக்கும் வகை என்பது மிகவும் முக்கியமானது. விஜயகுமார் அவர்களின் நாடக நிகழ்வும் அதே வகையில் தான் செய்திருந்தோம். இந்த நிகழ்வும் அதே போல் அமைந்தது. ஒவ்வொரு சிறுவரும் பொம்மை தங்கள் கையில் உருமாறியதும் அதற்கு எந்தவித தூண்டுதலும் இல்லாமலே உயிர் கொடுக்க துவங்கி இருந்தனர். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குரலை விடுத்து புதிய குரலில் தங்கள் கையில் உள்ள பொம்மை வழியாக அங்கு உரையாட துவங்கினர். அவர்கள் முகத்தில் அந்த ஆனந்தத்துடன் அதை அனுபவித்து செய்தது நமது நிகழ்வின் முயற்சிக்கு பெரிய பாராட்டுகளாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“Socks Puppet” என்பதை நண்பர் மாயக்குரல் கலைஞர் தாமஸ் அவர்கள் அழகாக குழந்தைகளுக்கு அழகாக செய்துகாட்டி கூடவே டூடுவையும்(மாய குரல் பொம்மை)  குழந்தைகளோடு அறிமுகம் செய்து உரையாட வைத்தார். அதுமட்டுமில்லாமல் இறுதியில் “ஒரு விரல் மறு விரல்” பாட்டு பாடி ஆடி மகிழ்வித்தார்.

நிகழ்வின் வீடியோ பதிவு இங்கே உள்ளது.

குறிப்பு : வாரந்தோறும் இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த திட்டமிடுகிறோம். நண்பர் அனைவரும் பங்குபெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி பற்றிய விபரங்களுக்கு எங்களது முகநூல் பக்கத்தை பின்தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a comment