“பேய் இருக்கா?” பஞ்சு மிட்டாய் சிறார் நிகழ்வு குறித்த பதிவு – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேற்றைய நிகழ்வு மனதிற்கு மிகவும் நிறைவாக அமைந்தது. நீண்ட நாட்களின் யோசனைக்குப் பிறகு இணையம் வழியே  ஏற்பாடு செயப்பபட்ட பஞ்சு மிட்டாயின் 108 நிகழ்வு , 85+ சிறார்களுடன் மிகவும் அழகாக அமைந்தது. இணைய வழியே நிகழ்வு என்பதால் கதையுடன் சற்று சிறார் உலகில் இருக்கும் விஷயங்களையும் உரையாடி பார்க்கலாம் என்று திட்டமிட்டோம். அதன்படி “பேய் இருக்கா?” என்ற தலைப்பில் நிகழ்வு அமைந்தது. கதை சொல்லல், சிறார்களின் கேள்விகள் மற்றும் நம்பிக்கைகளின் வழியே உரையாடல் , திரைப்பட அறிமுகம் என நிகழ்வு சென்றது.

எழுத்தாளர் உதயசங்கர் மொழிப்பெயர்ப்பு, சிறுகதைகள், நாவல், பாடல்,     சமகால அரசியல், முக்கியமாக மூட நம்பிககைகள் குறித்து பேசுவது என சிறார் இலக்கியத்தில் பல்வேறு தளங்களில் பணியாற்றி வருபவர்(பெரியவர்களுக்கும் எழுதி வருபவர்). ஏற்கனவே அவரது “பேய்-பிசாசு இருக்கா” என்ற கட்டுரை தொகுப்பு வானம் பதிப்பகம் வழியாக வந்துள்ளது. ஆகையால் இந்தத் தலைப்பிற்கு சிறப்பு விருந்தினராக அவர் கலந்துக்கொண்டார்.

நேற்றைய தினமே பெற்றோர்களிடம் குழந்தைகளின் கேள்விகள்- நம்பிக்கைகள் என பேய்கள் குறித்து அவர்கள் எண்ணுவதை கேட்க சொல்லியிருந்தோம். கேட்டப்படியே ஒரு பட்டியல் எங்களுக்கும் கிடைத்தது. அதை தற்போது இங்கு பகிர்கிறோம்.

பேய் என்பது இந்த உலகத்தில் உள்ளதா? அப்படி இருந்தால் அது பார்க்க எப்படி இருக்கும்?
– இளநிலா ஈரோடு வயது: 9

பிசாசு உண்மையில் இருக்கிறதா ? யார் வீட்டுக்காவது வந்திருக்கா ? எத்தனை வகை பிசாசு இருக்கு ? பிசாசு நம்ம கண்ணுக்கு தெரியுமா ? அதுக்கு கண்ணு , காது , மூக்கு , வாய் இருக்கா ? முதல்ல அதுக்கு மூஞ்சு இருக்கா ?
– அனுமித்ரா வயது 7

பேய் இல்லனு சொல்றோம் ஆனா சில நேரங்களில் பயம் வருதே ஏன்?
– ரமணி வயது 12

பேய் கருப்பா சிகப்பா கலர் இருக்கா?
– லிங்கேஷ் வயது 8

இரவில்தான் வருமா பகலில் வராதா பேய் கெடுதல் செய்யுமா ?
– மணிஷ் வயது 12

பேய் காட்டிலும் மரங்களிலும் தான் இருக்கும் , அது நாம் (மனிதர்கள்) இல்லாத போது தான் வெளியே வரும் . நாம் அதை எதையாவது செய்துவிடுமோ என்ற பயம். நாம விளையாடி வீட்டுக்கு போன பிறகுதான் பேய்கள் எல்லாம் விளையாட வரும். பேய்கள் இலைகளை தான் சாப்பிடும். இட்லி தோசை எல்லாம் சாப்பிடாது.அதுக்கு ரொம்ப நீளமா முடி இருக்கும் மூஞ்செல்லாம் மறைச்ச்சு இருக்கும். சின்னதாவும் இருக்கும் பெரிசாகவும் இருக்கும்
– வருணிகா வயது 4

என் ஸ்கூல்ல பேய் இருக்குன்னு சொல்வாங்க , ராத்திரி பேய் பெயரை மூணுதடவை சொன்னா பேய் கண்ணாடியில் வரும் அப்படின்னு சொன்னாங்க … பேய் ஏன் ராத்திரி 12 மணிக்கே வருது ? இது வரைக்கும் யாராவது பேயை பாத்திருக்காங்களா ?
– சர்வேஷ் வயது 9

பேய் இல்லை ஆனால் பேய் படம் பாத்தா ரொம்ப பயமா இருக்கு ..? ஏன் படத்துல மட்டும் மேக்கப் போட்டு பேயை காட்டி பயமூட்றாங்க ? எனக்கு அதை பாத்துட்டு தூங்குனா கனவுல வரும் ரொம்ப பயமா இருக்கும்
– தன்யஸ்ரீ வயது 8

பேய் இல்லை குழந்தைகளை மிரட்டுவதுக்காக தான் அப்படி சொல்றாங்க
– 5 வயது சிறுமி

பேய் நம்மால் பார்க்க முடியுமா? முடியாதா? பேய் பார்க்க எப்படி இருக்கும்.
– கீர்த்தனா நான்காம் வகுப்பு

பேய் ஏன் தனிமையில் இருக்கும் போது மட்டும் தாக்கவோ பயமுறுத்தவோ செய்கிறது. குழுவாக இருக்கும் போது தோன்றுவதில்லை. பேய் மனிதர்களை எவ்வாறு தேர்வு செய்கிறது? தன் ஒத்த வயதுடையவர்களையா? ஏதாவது தெரிவிப்பதற்காக சொந்த பந்தங்களை தேர்வு செய்யுமா? நிறைவேறாத ஆசையை பேய் எப்படி நிறைவேற்றிக் கொள்ளும்.

– கார்த்திகா.

பேயை பிடிக்காது ஆனால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம்…பேய் நைட் மட்டும் தான் வருமா.? பேய் சாப்பிடுமா?கைகள்,கால்கள் உண்டா? படத்தில் பேய் எல்லாரையும் கொல்கிறதே? ஏன்?

– தீ. தீக்சிகா. ஐந்தாம் வகுப்பு &  ஹர்சன் 4 வயது.

இப்படி பல்வேறு விதமான விசயங்கள் வந்தது. இதையெல்லாம் தொகுத்து எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் உரையாடல் அமைந்தது. நம்மை விட்டு பிரிந்தவர்களின் நினைவுகள் குறித்தும் அதன் வழியே வரும்  கனவுகள் பற்றியும் உரையாடல் துவங்கியது. இந்தக் கனவுகள் எப்படி நம்பிக்கைகளாக மாறியது? என்றும் விரிவாக பேசினார். மகிழ்ச்சி, கோபம் போன்றதே அச்ச உணர்வும் என்று பயம் குறித்தும் பேசினார். கதைகளில், திரைப்படங்களில் ஏன் பேய்கள் பிசாசுகள் அதிகம் வருகிறது என்பது குறித்தும் உரையாடினார்.  மனிதர்கள் எதற்காக அப்படி செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் சிறார்களுக்கு ஏற்றப்பட்டி உதயசங்கர் அவர்கள் பேசினார்கள்.

இந்த உரையாடலுக்கு முன்பு “பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி” என்ற கதையை நான் சிறார்களுக்கு சொன்னேன். கூடவே இந்தக் கதை இடம்பெற்ற புத்தகத்தையும் அறிமுகம் செய்தேன். உதயசங்கர் அவர்களின் உரையாடலுக்கு பிறகு, “Spirited Away” என்ற ஜப்பானிய திரைப்படத்தையும் அறிமுகம் செய்தேன். இதுவும் ஒரு பேய் படம் தான், ஆனால் திகிலூட்டி நமக்கு அச்சம் தராத பேய் படம். அதுவும் பேய்களின் உலகில் தனது அன்பினை கொண்டு அவ்வுலகில் இருந்து வெளியே வரும் ஒரு 10 வயது சிறுமியின் கதை. அதன் அறிமுகத்துடன் நிகழ்வு இனிதாக முடிந்தது.

இந்த நிகழ்விற்கு கிடைத்த ஆதரவுகளை பார்க்கும் போது, தொடர்ந்து இணையத்தின் வழியே நிகழ்வுகளை நடத்தலாம் என்ற உற்சாகமும் பிறந்துள்ளது. ஆதரவு தந்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றிகள்.

பஞ்சு மிட்டாய் பற்றி தகவல்களை பெற முகப்புத்தகத்திலும் எங்களது வாட்ஸ் ஆப் குழுவிலும் இணையும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாட்ஸ் ஆப் குழுவில் இணைய / இதர தகவலுக்கு: 9731736363 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் வழியே தொடர்புக் கொள்ளவும்.

முகப்புத்தகத்தில் : https://www.facebook.com/panchumittaisiraarkuzhu/

நன்றிகள்,

‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

Leave a comment