நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக். கூலிகள். அவர்கள் ஆண்டை – நிலமுடையோர்- வயலில் அதிகாலையில் இருத்து வேலை செய்துவிட்டு, நடுப்பகல் உணவுக்காகத் தத்தம் ஓலைப் பட்டைகளைக் தரையில் வைத்துவிட்டு எட்டி நிற்பார்கள்.
ஒவ்வொரு பட்டையிலும் பண்ணையார் கட்டளைப்படி சோறோ, கூழோ போட்டு நிரப்புவார்கள். அப்போது பட்டைக்கு உரிய ஆதிதிராவிடர் அருகில் இருந்தால் தீட்டாகிவிடும்.
எது தீட்டாகிவிடும் ?
கஞ்சி ஊற்றும் சாதியாரான இந்து தீட்டாகிவிடுவார்.
ஆதிதிராவிடர் பட்டையை ஏந்தி நின்றால்கூட, அவருடைய ‘தீண்டாமை’ பட்டை வழிப்பாய்ந்து, அதிலிருந்து தாவி, இடைவெளியைக் கடந்து, பரிமாறும் ஆளை பிடித்துக்கொள்ளுமாம்.
இப்படியொரு நம்பிக்கையா என்று நகைக்காதீர்கள்.
//
ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருப்பது, வேட்டியை முழங்காலுக்குக் கீழே தொங்கும்படி கட்டிக்கொண்டு நடமாடக் கூடாது, பெண்கள் இரவிக்கை அணியக்கூடாது.செருப்பு போட்டுக் கொண்டு நடக்கக்கூடாது,மற்றவர்களோடு கலந்து உட்காரக் கூடாது,குருதிகொட்டக் கொட்ட அடிப்பார்கள், மனைவியை விட்டு கணவரை செருப்பால் அடிக்கச் செய்வது , சாணிப்பால் ஊற்றுவது என விவரமாக இந்தக்கொடுமைகளை விளக்குகிறார் நெ.து.சுந்தரவடிவேலு. அதை சுருக்கி இருக்கிறோம்.
//
தமிழ்ப் பண்பாட்டின் அழுகிய பகுதி இந்து மக்களைப் பிற சமயங்களுக்குப் பிடித்துத் தள்ளிய கொடுமை. இக்காட்டுமிராண்டி நடவடிக்கை பெரும் அளவு குறைந்துவிட்டது. அடியோடு தொலைந்து விட்டதா? இல்லை.
நாம் மக்கள் நிலைக்கு உயர்ந்துவிட்டோம் என்று இன்றும் சொல்ல முடியவில்லையே.
இழிவையும் கொடுமையையும் நூறு தலைமுறைகளாகத் துய்த்து விட்டதால், ஆதிதிராவிடர்கள் இக்கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பக்குவப்பட்டுவிட்டார்களோ என்னவோ? இவற்றை எதிர்த்துக் குரல் எழுப்பவும் திராணி அற்றுக் கிடந்தார்கள்.
எல்லோரும் மக்களே. எல்லோரும் அன்புக்கு உரியவர்களே. எல்லோரும் பாதுகாப்பிற்கு உரியவர்களே.
எல்லோரும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். எல்லோரும் நல்வாழ்வு வாழ உரிமை உடையவர்கள். இத்தகைய கருத்துகள் அவர்கள் காதுகளில் வீழ்ந்தால் போதும். நவீன தானியங்கிக் கதவுகளையொப்ப அவர்கள் சிந்தனை மூடிக் கொள்ளும்.
அது அது அவனவன் செய்த வினை; அவன் எழுதியனுப்பியபடியே எல்லாம் நடக்கும்; அன்று எழுதியவன், இன்று அழித்துவிடவா போகிறான்?
‘ஆறு நிறைய வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கவேண்டும்: இப்படி இமைப்பொழுதில் கொடுமைக்கு ஆளான ஆதிதிராவிடர்களே ஆறுதல் கூறுவார்கள்.
தாங்கள் நாய்கள் அல்ல – நக்கிக் குடிக்க! தாங்கள் மக்களாக இருப்பதால் அள்ளிக் குடிக்கவும், மொண்டு குடிக்கவும், வைத்திருந்து குடிக்கவும் இயலும், என்னும் எண்ணக்கிற்கே இடம் கொடுக்கவே மறுத்து இருந்தவர்கள். பொதுத் தெருவே நடப்பதற்கோ, பிற மக்கள் அருகில் நிற்பதற்கோ, உரிமை கொண்டாடவும் முடியாத ஆதிதிராவிடர்களுக்கு, ஆதிதிராவிடர் ஊற்றிக் கொடுத்த காப்பியை நான் அருந்தியது அதிர்ச்சியைத் தந்தது.
அடுத்த கணம் அச்சமூட்டியது. இந்த விபரீதத்தால், தங்களுக்குப் பெருந்தீங்கு விளையுமோ என்று அஞ்சினார்கள்.
அதை என் ஊழியர் அரங்கராஜுவிடம் தெரிவித்தார்கள். அவர் என்ன செய்வார்? ‘கிறுக்கு’ ஆய்வாளருக்கு அறிவுரை கூற முடியுமா?
ஊராருடன் உரையாடல்
என் புரட்சியை வேடிக்கை பார்த்தவர்கள், இமைப்பொழுதில் அச்சத்தை விட்டார்கள். என்பால் அன்பு கொண்டார்கள்; பரிவு கொண்டார்கள்.
பலரையும் கூட்டி வந்து விட்டார்கள். அப்படிக் கூடியவர்களில் மூன்று நான்கு பேர்களே கிழவர்கள். மற்றவர்கள் எல்லாம் கிழவிகள்.
அனைவரையும் பள்ளிக்குள் அழைத்தேன். தயங்கினார்கள். இரண்டு மூன்று முறை அழைத்த பிறகே உள்ளே வந்தார்கள். அவர்களோடு கலந்து உரையாடினேன். அதுவும் புதுமை. அதன் சுருக்கம் இதோ.
‘பாட்டிங்களே! உங்கள் வீடுகளில் படிக்கும் வயது பிள்ளைகள் இல்லையா?!
“ஏஞ்சாமி, ஆண்டவன் அதற்கு ஒன்றும் குறை வைக்கவில்லை, சாமி.”
அய்ந்து வயதுக்கு மேற்பட்ட எல்லாப் பையன்களும் பெண்களும் வேலைக்குப் போகிறார்களா?
ஆற்றிலே தண்ணீர் விடும்போது, சிறிசும் பெருசுமா பலருக்கும் வேலை இருக்கும். மற்றப்போது – நெடுநாள் வேலையிராது.
வேலையில்லாத சிறுவர் சிறுமியர் என்ன செய்வார்கள்?!
“கண்டபடி, திரிந்து கொண்டிருப்பார்கள். பசி வேளைக்குக் கஞ்சி தேடி வருவார்கள். இருக்கிறதைக் குடித்துவிட்டு மறுபடியும் ஊர் சுற்றப்போய் விடுவார்கள். அத்தனையும் வீட்டில் அடைந்து கிடந்தால்
குடிசையில் குந்தவும் இடம் இருக்காது சாமி” என்றார்கள் பாட்டிகள்.
நீங்கள் எம்.சி.ராஜா என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ‘
”தெரியவில்லைசாமி!
“சகசானந்தசாமி என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“இல்லைங்க சாமி?
என். சிவராஜ் என்ற பேராவது தெரியுமா? ‘!
“’கேள்விப்பட்டதில்லை எசமான். ”
“இவர்கள் உங்களவர்கள். உங்களுக்காகப் பாடுபடுபவர்கள். படித்தவர்கள்; அவர்களில் சிவராஜ் என்பர், சட்டம் படித்துப் பட்டம் பெற்றவர்.
“உங்கள் பிள்ளைகளையும் படிக்க வைத்தால், அவர்களைப் போல, சிலவேளை, அவர்களைவிடப் பெரியவர்களாக வரலாம், அது உங்களுக்கு நல்லதுதானே!
“சும்மாத் திரிகிற பையன்களையும் பெண்களையும் ஆகிலும் பள்ளிக்கு அனுப்பி வையுங்களேன்” ‘ என்றேன்.
ஆண்டிக்கு என் சாமி இலைக்கணக்கு? பிள்ளைகள் முன்னுக்கு வருகிறார்களோ இல்லையோ! அது அது அவர்கள் தலை எழுத்து. நீங்கள் கண்கண்ட தெய்வம் போல வந்திருக்கிறீர்கள். எங்களை மதித்துப் பேசுகிறீர்கள். எட்டி நில் என்று சொன்னதையே இதுவரைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்படி, கிட்ட நின்று பார்ப்பது இதுதான் முதல்முறை. எங்களை மதிக்கிற உங்கள் எண்ணம்தான் என்ன? ” என்று ஒரு பாட்டி கேட்டார்.
வீட்டுக்கொரு பிள்ளையை அனுப்புங்கள்
வந்திருக்கிற ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பிள்ளையையாவது பள்ளியில் சேர்க்கணும். ஒழுங்காக வரும்படி பார்த்துக் கொள்ளணும்.
“நடவு அறுவடை காலத்தில் பள்ளிக்கு விடுமுறை விடச் சொல்கிறேன். அப்போது வயல் வேலைக்கு இட்டுக் கொள்ளலாம். அதுவரை ஊர் சுற்றுவதற்குப் பதில், ஒழுங்காகப் பள்ளியில் வந்து படிக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும்” என்றேன்.
மூதாட்டிகள் தங்களுக்குள் ஆலோசனை செய்தார்கள். பிறகு அப்படியே “ஆகட்டும் சாமி!” என்றார்கள்.
“வாத்தியார் அய்யா! கேட்டுக் கொள்ளுங்கள். காலையில் பள்ளி நேரத்துக்கு முன்பு, குடியிருப்புக்குள் போய் வாருங்கள். இப்பாட்டிகள் இங்கும் அங்கும் இருப்பார்கள். பிள்ளைகளை அனுப்பும்படி நினைவுபடுத்துங்கள். ஒரு திங்கள் இப்படிச் செய்த பின் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்” என்று ஆசிரியருக்கு ஆணையிட்டேன்.
ஆசிரியர் நாள்தோறும் ஊருக்குள் சென்று, பெரியோர் துணையை நாடி, வருகையைக் கூட்ட இசைந்தார்.
வழக்கமான பார்வைக் குறிப்பை எழுதினேன். பொதுமக்கள் வாக்குறுதியைப் பற்றி எழுதினேன். வருவோர் எண்ணிக்கையை வளர்க்க ஒரு திங்கள் நீடிப்புத் தவணை கொடுக்கலாம் எனக் குறித்தேன். அதைக் கூடியிருந்தவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.
பிறகு, தஞ்சைக்குத் திரும்பினேன். உரிய அலுவலகக் கோப்பில், நடந்தவற்றை எழுதி, மேலும் ஒரு திங்கள் தவணை கொடுக்கும்படி பரிந்துரைத்துக் குறிப்பு எழுதினேன்.
“கொடுக்க முடியாது” என்று பதில் வருவதற்குள் ஒரு திங்கள் ஆகிவிடுமென்பது என் மதிப்பிடு.
மறுப்பு ஆணையோரடு, எனக்கு ஒரு குட்டுக் கொடுத்தால் என்ன செய்வது என்று சிந்தனை மின்னிற்று. ஏழைகளின் ஏற்றத்திற்காக, அந்த அடியைப் பொறுத்துக் கொள்வோம் என்று, துணிவை ஊட்டிக் கொண்டேன்.
முயற்சியில் வெற்றி
பதில் வரக் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கு முன் கல்விராயன் பட்டியிலிருந்து விரிவான கடிதம் வந்தது.
“வருகை வளர்ந்துவிட்டது. அது அப்படியே இருந்தால் இரண்டாவது ஆசிரியர் தேவைப்படுவார். மேலுமொரு திங்கள் கவனித்துவிட்டு, பிறகு கோரிக்கையை அனுப்புவேன்” இது கடிதத்தின் சருக்கம்.
மீண்டும் அப்பள்ளியைத் திடீரெனப் பார்வையிட்டேன். வருகை உயர்ந்து இருந்ததை நேரில் கண்டேன். பள்ளியை எடுக்கத் தேவையில்லை என்று மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தொடர் கடிதம் எழுதினேன்.
பள்ளியின் வருகை குறையவே இல்லை. மேலும் ஓரளவு கூடிற்று. இரண்டாவது ஆசிரியருக்குப் பரிந்து உரைத்தேன். சற்றுக் காலதாமதமானாலும் இரண்டாவது பதவி கொடுக்கப்பட்டது. மூடுவிழாவை நெருங்கிய ஒரு அரிஜன நலப் பள்ளியைக் காப்பாற்றிய மகிழச்சியில் குளித்தேன்.
அது இன்றும் இயங்குகிறது. மூன்று ஆசிரியர்கள் பள்ளியாக.
குறிப்பு : 1940களில் நடந்தது
முந்தைய பதிவு : தொடக்கமே மூடுவிழா
(தொடரும் …)