நடந்து கொண்டிருக்கும் பள்ளியின் அங்கோரத்தை ரத்து செய்வதற்கு முன், விளக்கம் கேட்டு ஒரு திங்கள் முன் அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்பது கல்வித் துறையின் விதியாகும். அதையொட்டி முன் அறிவிப்புக் கொடுத்து, அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை என் எடுத்துவிடக்கூடாது என்ற ஆதிதிராவிட நலத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அத்துறை அலுவலர், அதைப் பள்ளியின் ஆசிரியருக்கு அனுப்பினார். அவருடைய விளக்கம் என்ன?
“இவ்வூர் ஆதிதிராவிடர்கள்; கல்வி பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள். இவர்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் எவரும் இல்லை. “தற்குறித் தன்மையில் மூழ்கியிருப்பதைப் போன்றே, வறுமையிலும் ஆழ்ந்துள்ளார்கள். அன்றாடக் கஞ்சிக்கே அல்லல்படும் இவர்கள் எத்தனை முறை சொன்னாலும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆடு மாடு மேய்த்தால் அரை வயிறு கஞ்சியாவது கடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில், வருகையைப் பெருக்க வாய்ப்பில்லை ” என்று விளக்கினார்.
அதை ஆதிதிராவிட நலத்துறை அப்படியே கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டது. ‘அப்பள்ளியை உடனே மூடு ‘ என்று ஆணையிட வேண்டிய நிலையை எட்டியாயிற்று. தஞ்சையில் என் முதற்பணி, மூடும் பணி என்பது எனக்குக் கசப்பாயிருந்தது. மூடாமல் எப்படிச் சமாளிப்பது என்று எழுத்தரைக் கேட்டேன்
“நலத்துறையே எதிர்ப்புச் சொல்லாதபோது, நீங்கள் என்ன செய்ய முடியும் 2 மூடவேண்டிய பள்ளியை மூடாமல், காலம் கடத்தினால், ஆசிரியர் சம்பளம் வாங்கிக்கொண்டே இருப்பார்; நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அரசின் நிதியைப் பாழாக்கின குற்றத்திற்கு நீங்கள் பதில் சொல்ல நேரிடும்” என்று எழுத்தர் எச்சரித்தார்.
“பதினைந்து ரூபாய்தானே மாதச் சம்பளம் ‘” என்றேன்.
“ஒரு ரூபாய் ஆனாலும் வீண் செலவுதானே. அதற்கு மேலிடத்தில் நடவடிக்கை எடுப்பார்களே!’ ‘ என்று மிரட்டினார். கடைசியாக. பிடிக்காத ஊருக்கு எந்த ஆசிரியரையாகிலும் போட்டால், அவர் இப்படித்தான் பள்ளியை மூடிவிட வழிசெய்துவிட்டு, மாறுதல் பெற்றுக் கொள்வார்!” என்று என் காதைக் கடித்து விட்டுப் போய்விட்டார் எழுத்தர்.
அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் காப்பாற்ற விழித்திருக்கும் தாயைப் போன்று விழித்திருந்தேன். என்ன செய்தால், அப்பள்ளியை மூடாமல் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்பதே என் ஏக்கம்.
வழி பிறந்தது
இரண்டுநாள் ஏக்கத்திற்குப் பிறகு, வழி மின்னிற்று. அதைப் பின்பற்ற முடிவு செய்தேன். அதைப் பற்றி எவரோடும் கலந்து ஆலோசிக்க வில்லை; எவர் இடமும் மூச்சு விடவில்லை. ஒரு நாள் காலை, என் ஊழியர் ரங்கராசுவை அதிகாலையில் வரும்படி கட்டளையிட்டேன். அப்படி வந்ததும் ஒரு சூடுக்குடுவை (பிளாஸ்க்) நிறையக் காப்பியை வாங்கிவரச் சொன்னேன். வாங்கி வந்ததும், என்னோடு வரும்படி கூறிவிட்டு, தஞ்சைப் புகைவண்டி நிலையத்திற்குச் சென்றேன்.
திருச்சிக்குச் செல்லும் பயணிகள் வண்டி காத்திருந்தது. ஆலக்குடிக்கு இரு பயணச்சீட்டுகள் வாங்கிவரச் சொன்னேன். அவற்றைப் பெற்றுக்கொண்டு, அந்த ரயிலில் பயணமானோம். ஆலக்குடியில் இறங்கியதும், கல்விராயன்பட்டிக்கு அழைத்துப் போகச் சொன்னேன். ரங்கராசு வழிகாட்ட அங்குப் போய்ச் சேர்ந்தேன்.
கல்விராயன்பட்டி நலப் பள்ளியை நெருங்கும்வேளை, பள்ளி திறந்திருக்கக் கண்டேன். விரைந்து பள்ளிக்குள் நுழைந்தேன். அங்குப் பிள்ளைகள் பத்துப் பேர்கள் கூட இல்லை. ‘பில்லை’ போட்ட என் ஊழியரைக் கண்டதும் ஆசிரியர் என்னைக் கல்வித்துறை ஆய்வாளர்களில் ஒருவர் என்று அடையாளங்கண்டு கொண்டார்.
நாற்காவியைவிட்டு எழுந்திருந்து வணங்கி, விலகி நின்றார். நான் நாற்காலியில் அமர்ந்தேன். அப்பொழுது நான் கல்வித்துறை இளந்துணை ஆய்வாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். பிறகு, ஆசிரியரைப் பார்த்து, ”உம்மிடம் குவளை யிருக்கிறதா? ‘ என்றேன்.
“எசமான்! கண்ணாடிக் குவளை இருக்கிறது” என்றார்.
“அதை எடுத்துப் போய் கழுவிக் கொண்டு வாரும்” என்றேன்.
ஆசிரியர் பதைத்துப் போனார்.”எசமான்! நான் ஆதிதிராவிடக் கிறுத்தவன். என் குவளையை எசமானிடம் கொடுக்கலாமா?” என்று நடுங்கினார்.
“சொல்லுகிறபடி செய்யும்” என்றேன்.
மரப்பெட்டிக்குள் வைத்திருந்த கண்ணாடிக் குவளையை எடுத்தார். அருகில் இருந்த வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில் கழுவிச் கொண்டுவந்தார். என் கட்டளைப்படி குவளையை மேசைமேல் வைத்தார்.
சூடுகுடுவையின் மூடியைக் கழற்றினேன். பிறகு?
“இதற்குள் இருக்கும் காப்பியைக் குவளையில் ஊற்றும்” என்றேன்.
நான் பள்ளிக்குள் நுழைவதைக் கண்டதும் குடியிருப்பிலிருந்து சில பையன்களும் பெண்களும் ஓடி வந்தார்கள். வயது முதிர்ந்த ஆண்களும் பெண்களும் பள்ளியைச்சுற்றி நின்றபடி வேடிக்கை பார்த்தார்கள். ஆசிரியர் காப்பியைத் தொட அஞ்சினார்.
“நீரும் மனிதர்தான்; காப்பியை ஊற்றிக்கொடும்” என்று உறுதியாக ஆணையிட்டேன்.
வேதனையோடு, ஆசிரியர் கீழ்படிந்தார். நான் காப்பியைச் சிறுகச் சிறுகக் குடித்து முடித்தேன்.வந்திருந்தோர், வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆய்வாளர், ஆதிதிராவிடர் கையால் காப்பி வாங்கிக் குடித்ததை அவர்கள் கண்டதே இல்லை. இதைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியாமல் எல்லாரும் திருதிருவென விழித்தார்கள்.
குறிப்பு : 1940களில் நடந்தது
(தொடரும் …)