நண்பர்களின் பார்வையில் பஞ்சு மிட்டாய் 100வது நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

புத்துணர்ச்சி தழும்பிய பொழுதுகள் – கணேஷ் பாலவெங்கட்ராம்

பஞ்சுமிட்டாய் நூறாவது சிறார் நிகழ்வு, இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று நாடகத்தில் பங்கேற்கும் சிறார்களுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வகுப்பு என்றும் மறுநாள் நாடக அரங்கேற்றம் என்றும் அமைந்திருந்தது. நாடக பயிற்சிக்காக உதிரி நாடக நிலம் விஜயகுமார் தஞ்சாவூரில் இருந்து வந்திருந்தார். அவர் சனிக்கிழமை முழுவதும் சிறார்களுடன் நாடகப் பயிற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 25 குழந்தைகள் கலந்து கொண்டார்கள். அதில் பாதிக்கு மேல் புதியவர்கள், அவர்களுடன் கலந்துரையாடி ஒரு புரிதலுக்கு வந்தபின் நாடக ஒத்திகையை நடந்தது.

ஞாயிறு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறார்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வெளி வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள், பெற்றோர்களாகிய நாங்களும் மிகவும் உற்சாகத்தில் இருந்தோம்.

குழந்தைகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தின் பெயரைக் (புலி, சிங்கம், யானை, எறும்பு.பூ, கிளி)கொண்டு அன்பாக அழைத்துக்கொண்டார்கள் தங்கள் கதாபாத்திரத்தை பற்றி மிகவும் ஆவலுடனும் புதிய நண்பர்கள் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இன்றைய பொழுது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் விதமாகவும், தினசரி வேலை பளுவில் இருந்து விடுவித்துக் கொள்ளும் விதமாகவும். ஒருநாள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது போன்ற புத்துணர்ச்சி தரும் உணர்வுடன் இருந்தது. பல புதிய நட்புகளையும் பெற முடிந்தது. எனது பழைய அலுவலகத்தில் வேலை செய்த நண்பரை பார்த்து, 13 வருட நட்பை புதுப்பித்து, மிகவும் நெகிழ்ச்சியான தருணம். இத்தனை புதிய அனுபவங்களை எங்களுக்குக் அளித்த பஞ்சுமிட்டாய் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

நாடகப் பட்டறையின் அசத்தல் நிகழ்வுகள்…. (முதல் நாள் நிகழ்வு குறித்து) – ராம்பிரியா

திருவிழாவிற்கு முந்தைய நாள் உற்சாகம் திருவிழாவின் கொண்டாட்டத்தையே விஞ்சி விடும். ஆம் அப்படி ஒரு நாளாக தான் இருந்தது நாடக பயிற்சிக்காக நாங்கள் கூடிய அந்த நாள். குழந்தைகளுக்கான நாடகப்பட்டறை அவர்களை துள்ள வைத்து விட்டது. “நான் புலி, நான் யானை, சிங்கம்” என மாலையில் குழந்தைகள் துள்ளியது அழகு. பெற்றோர்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்று ஆட, பாட, விளையாட வைத்த ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு அவர்கள், அருண் அவர்கள், ஜெயக்குமார் மற்றும் குழுவினருக்கு நன்றிகள் 🙏

“விஜயகுமார்” “தஞ்சை உதிரி நாடக நிலம்” குழந்தைகளுக்கு அளித்த நாடக பயிற்சி.
“நரேஷ் ” மற்றும் “சர்மிளா” குழுவின் பறை இசை மற்றும் நாட்டுப்புற பாடல்கள்.
பிரபு அவர்களின் குழு விளையாட்டுகள், பாரம்பரிய விளையாட்டுகளை நமக்கு நாமே அறிமுகம் செய்தல், கும்பகோணம் தீ விபத்து குறித்த ஆவணப்படம் ” நம்மை சிந்திக்க தூண்டிய நிகழ்வுகள்…
ராஜேஷ் அவர்களின் சிறுவர் பாடல்கள் கவிதைகள் அருமை…

அனைத்திற்கும் சிகரமாக “இனியன் ” அவர்களின் இன்றைய கல்விச் சூழல் பற்றிய மாற்றுக்கோணத்தில் சிந்திக்க மற்றும் கேள்விகள் கேட்க தூண்டியது அருமை. குழந்தைகள் விரும்பி உண்ணும் படி உணவு, தேநீர் மற்றும் பழங்கள் ஏற்பாடு செய்திந்தது மகிழ்வு. காலை10. 15 க்கு ஆரம்பித்த உற்சாகம் மாலை 5 வரை குறையாமல் கொண்டு சென்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு வணக்கங்கள்.

உண்மையில் பெரும் முயற்சிதான் – இனியன்

தாய் மொழியா, வாழும் ஊரின் மொழியா, உலக மொழியா என்னும் பெருங்குழப்பம் இடம் பெயர்ந்து வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இருக்கிற பெரும் சிக்கல்.

அப்படியான சூழலில் மொழிகள் சிக்கல் உள்ள மாநிலத்தில் தாய்மொழியை மையபுள்ளியாக வைத்து மக்களை குழந்தைகள் சார்ந்து குழந்தைகளுக்காக ஒன்றிணைப்பு செய்வது மட்டுமல்லாது வெறும் 4 மணிநேர உழைப்பு மற்றும் ரிகசலில் குழந்தைகளையே கதை ஒன்றை உருவாக்க வைத்து, அதனை நாடகமாக மேடையில் அரங்கேற்றுவது என்பது பெரும் முயற்சி.

வாழ்நாளில் முதல்முறையாக “எல்லாரும் சமம்” நாடகத்தின் வாயிலாக மேடையேறிய அனைத்து செல்லங்களுக்கும் வாழ்த்துகள்.

அவர்களை தயார் செய்த தஞ்சை உதிரி நாடக நிலம் அண்ணன் விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இம்மாதிரியான முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் பிரபு மற்றும் பஞ்சுமிட்டாய் குழுவினருக்கு வாழ்த்துகள்…

Leave a comment