பட்டறை – பஞ்சுமிட்டாய் 100வது நிகழ்வு முதல் நாள்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டதே மனதிற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்தது. நிகழ்வு முடிந்து அனைவரது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் , அடுத்த நிகழ்வு பற்றிய விசாரிப்புகளும், புத்தகங்கள் மற்றும் கலைகள்
பற்றிய உரையாடல்களும் தொடர்ந்து குழந்தைகள் சார்ந்து ஒரு குழுவாக இயங்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிமுகமான நண்பர்களுக்கு இணையாக புதிய நண்பர்களும் வந்தனர். பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்து நிறைய நண்பர்கள் விசாரித்தனர். இவை அனைத்துமே மனதிற்கு நிறைவாக இருந்தது.

2015 நவம்பரில் பஞ்சு மிட்டாயின் முதல் நிகழ்வு 5-6 குழந்தைகள் கொண்டு ஒரு கதை சொல்லல் நிகழ்வாக நடந்தது. பின்னர் வாரம்தோறும் கதை சொல்லல் நிகழ்வை தொடர்ந்தோம். கதை என்றால் என்ன ? அது எப்படியெல்லாம் இருக்கலாம்? வெறும் நீதிக்கதைகள் தான் கதைகளா? நீதி போதனைகள் இல்லாத கதைகள் குழந்தைக்கு அறிமுகம் ஆகின்றனதா ? போன்ற கேள்விகள் தான் பஞ்சு மிட்டாய் நிகழ்வை வடிவமைத்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு நிகழ்விலும் குழந்தைக்கு கற்று தருகிறோம் என்ற மனநிலையில் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதிலே கவனம் செலுத்தி வந்தோம். தொடர்ந்து குழந்தைகளுடன் பயணித்ததில் கதைகள் மட்டுமில்லாமல் விளையாட்டு, பாடல், உரையாடல் என்று எங்களது பயணம் ஓர் புதிய திசையை நோக்கி சென்றது. அதன் வழியே குழந்தைகளின் கற்பனை உலகத்தை காண நேர்ந்தது. அதுவே இதழ் வடிவமாக மாறியது. மெல்ல மெல்ல பஞ்சு மிட்டாய் சிறார் குழுவும் வெவ்வேறு ஊர்களில் உள்ள சிறுவர்களையும் பெரியோர்களையும் சந்திக்க பயணம் செய்தது. பெங்களூரு மட்டுமல்லாது சென்னை , தஞ்சாவூர் , கோவை , திருப்பூர், ஈரோடு, ஒரத்தநாடு, காயல்பட்டினம், திருவாரூர் , மன்னார்குடி , ஓசூர் , ஆத்தூர், திண்டுக்கல் என பல்வேறு ஊர்களில் நிகழ்வுகளை நடத்தியுள்ளது . அப்படி ஓடி ஆடி விளையாடிய பஞ்சு மிட்டாய்  பெங்களூரில் தங்களது 100வது நிகழ்வை நடத்தியது.

பெங்களூரில் தொடர்ந்து வாரம்தோறும் சிறு நிகழ்வுகளும் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை பெரிய நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அந்தப் பெரிய நிகழ்வுகளில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், குழந்தைகள் செயற்பாட்டாளர்களை அழைத்து வெவ்வெறு கலை வடிவங்களை பெங்களூர் தமிழ் சிறார்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை எழுத்தாளர்கள் பாவண்ணன் , சொக்கன் , வா.மணிகண்டன் , செயற்பாட்டாளர்கள் பல்லாங்குழி அமைப்பு இனியன், கதை சொல்லி சதீஸ், கிருத்திகா, ஓரிகாமி தியாக சேகர் வந்துள்ளனர் மற்றும் கி.ரா குழம்பு நாடகத்தினையும் அரங்கேற்றி உள்ளோம்.

இம்முறை உதிரி நாடக நிலம் தஞ்சாவூர் விஜயகுமார், எழுத்தாளர் பாவண்ணன், கோமாளியாக வேல்முருகன், கதை சொல்லிகள் அனிதா & ராம்பிரியா , வானம் பதிப்பகம் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்தனர். நிகழ்வில் சிறுவர்களை வைத்தே சிறார் நாடகம் ஒன்றினை நடத்த திட்டமிட்டிருந்ததோம்.  நாடகத்திற்காக பயிற்சி பட்டறை ஒன்றினை சனி (ஆகஸ்ட் 3)அன்று நடத்தினோம். நெருங்கிய நண்பர் வட்டத்தில் 26 குழந்தைகளை இணைத்து ஒரு முழு நாள் நாடகப் பட்டறையை விஜயகுமார் அவர்கள் நடத்தினார். குழந்தைகள் பயிற்சியில் இருக்கும் வேளையில் பெரியவர்களுக்காக விளையாட்டு, கலந்துரையாடல், பறை வரலாறு, ஆவணத் திரைப்படம் அதனுடன் குழந்தைகள் உரிமைகள் & கல்வி குறித்த உரையாடல் என பெற்றோர்களுக்கான நிகழ்வையும் ஏற்பாடு செய்தோம்.

உதிரி நாடக நிலம் பற்றிய சிறிய அறிமுகம், விளையாட்டு, அனைவரது அறிமுகத்துடன் நாடகப் பட்டறை துவங்கியது. சிறுவர்களுடன் விஜயகுமார் தனது பயிற்சியை துவங்க, இன்னொரு அறையில் பெற்றோர்கள் நாங்கள் பம்பரம்,கோலி,பல்லாங்குழி என விளையாட துவங்கினோம். விளையாட்டு பொருட்களுடன் ஆங்காங்கே புத்தகங்களும் வைத்திருந்தோம். பின்னர் அக்னி கலைக் குழு சார்பாக பறை பற்றின ஓர் வரலாறு சார்ந்த அறிமுகமும் அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை வடிவங்களுக்கு மேடையை அமைத்து தர வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சிறு உரையாடல் நடந்தது. பின்னர் சிறுவர்களுடன் சேர்ந்து பறை இசைக்கு அனைவரும் ஆடி மகிழ்ந்தோம். மீண்டும் சிறுவர்கள் பயிற்சிக்கு செல்ல நாங்கள் விளையாட்டு , கவிதை வாசித்தல் அதன் வழியே சிறார் பாடல்கள் அறிமுகம் , விளையாட்டுப் பற்றிய உரையாடல் என மதிய இடைவேளை வரை பெற்றோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறார் உலகைப் பற்றி உரையாடி மகிழ்ந்தோம்.

உணவிற்கு பிந்தைய பொழுது கொஞ்சம் தீவிரமாக ஒரு விசயத்தை எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தோம். “என்று தணியும்? ” கும்பகோணம் தீ விபத்து பற்றிய ஆவணப் படத்தை பார்க்கலாம் என்று சொன்னதும். நண்பர்கள் சற்றே தயங்கினர். காலையிலிருந்து இருந்த கொண்டாட்ட மனநிலையிலிருந்து வெளி வர வேண்டுமா ? என்ற கேள்வி எழுந்தது. இந்தப் படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதை நினைத்து அனைவரும் அச்சம் கொண்டனர். தனியாக பாத்துக்கலாமே என்ற கேள்விகளும் வந்தது. ஆனால், இதை நாம் ஏன் பார்க்க வேண்டும் அதன் அவசியம் என்ன , இன்றைய தினம் ஏன் சரியானது என்ற புரிதலை நண்பர்களுடன் பகிர்ந்துவிட்டு திரைப்படத்தை பார்த்தோம்.

1.15 மணி நேர திரைப்படம், வெறும் அமைதி மட்டுமே அங்கு நிலவியது. கை குழந்தைகளின் சத்தம் தவிர அந்த இடத்தில் வேறு எந்தச் சத்தமும் அங்கில்லை. இது ஒரு விபத்தா? குழந்தைகள் மீது இந்த சமூகத்திற்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா? கல்வி நிலையங்கள் மட்டும் தான் காரணமா? குழந்தைகளின் உரிமைகள் சார்ந்து நமது புரிதல்கள் என்ன? விபத்திற்கு பிறகு கல்வியில் நடந்த மாற்றங்கள் என்ன? அவை எதை உணர்த்துகிறது ? என எண்ணற்ற கேள்விகள் அங்குள்ள அனைவரின் மனதில் எழுந்திருக்கும் என்று நம்புகிறோம். திரைப்படத்தினை தொடர்ந்து அந்த விபத்த்தின் போது கும்பகோண பகுதியில் இருந்த நண்பர் இனியன் அவர்கள் அனைவரிடமும் கலந்துரையாடினார். மறக்க வேண்டிய விசயமாக தான் நினைப்பதாக இருந்தாலும் தொடர்ந்து இது சார்ந்து பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்தி தொடர்ந்து குழந்தைகளின் உரிமைகள், கல்வி, குழந்தைகள் பற்றிய புரிதல்கள், அதற்கான தேடல்களின் அவசியம் குறித்து விளக்கமாக பேசினார்.

உரையாடல் முடிந்ததும் சிறுவர்களும் எங்களுடன் சேர்ந்தனர். நாடகத் தயாரிப்பு பற்றி விஜயகுமார் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். சிறுவர்கள் அவர்களாகவே நாடகம் குறித்து பேசுவார்கள் என்றும் அதை மட்டும் ரசியுங்கள் வேறு எதையும் செய்துக்காட்ட சொல்லாதீர்கள் என பெரியவர்களுக்கு அன்பு கட்டளையும் இட்டார். அத்துடன் எங்களது பட்டறை இனிதே முடிந்தது. அன்று இரவு ஒவ்வொரு வீட்டிலும் நாடகம் குறித்து சிறார்கள் பேசியும் பாட்டுப் பாட்டியும் சத்தம் இட்டும் , நான் எறும்பு,நான் புலி , யானை , பூ என விதவிதமாக பேச்சுக்கள் நடந்தது. அதுவே மறுநாள் நிகழ்விற்கான எங்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியது.

ஒரு முழு நாள் சிறார்கள் & பெற்றோர் என மன மகிழ்வுடன் சென்றது. பெரியவர்களுக்கான நிகழ்வு பெரிய திட்டமிடல் ஏதும் இல்லாமல் எதேச்சையாக நிகழ்ந்தது. மிகவும் நிதானமான ஓர் உரையாடல் எங்களுக்குள் நடந்தது. அன்று எங்களுடன் இருந்த 26 குடும்பங்களுக்கும் மிகப் பெரிய நன்றிகளை பஞ்சு மிட்டாய் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றிகள் : பட்டறை நிகழ்வு

1. உதிரி நாடக நிலம் விஜயகுமார்
2. என்று தணியும்? – கும்பகோணம் தீ விபத்து குறித்த ஆவணத் திரைப்படத்தை அனுப்பிய நண்பர் புதுகை செல்வா
3. விளையாட்டு பொருட்கள் – ஜெகதீஸ்
4. சோளிகள் – இப்ராஹிம்
5. அக்னி கலைக் குழு நண்பர்கள்(சர்மிளா , நரேஷ் )
6. இனியன் (பல்லாங்குழி அமைப்பு)
7. பஞ்சு மிட்டாய் சிறார் குழு நண்பர்கள் (அருண்,ஜெயக்குமார்,ராஜேஸ்,சர்மிளா,பிரவீன்,சந்தியா,ஸ்ரீதேவி,புனிதா ,திவ்யா & பிரபு)

இன்னும் விரிவாக நிகழ்வு குறித்த அடுத்த பதிவுகளில் சிந்திப்போம்!

நன்றி,
பிரபு
பஞ்சு மிட்டாய் சிறார் குழு

Leave a comment