குழந்தைச் சித்திரம் – பெ.தூரன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம் போடத் தொடங்கி விடுவார்கள். சுவரெல்லாம் கெட்டு விடுகிறதே என்று தாய்க்குக் கோபங்கூட வரும்.

பிறவியிலேயே ஒவ்வொரு குழந்தையும் ஓர் ஓவியன் தான்; ஆனால் பதின்மூன்று பதினான்கு வயதாகும் போது எல்லாக் குழந்தைகளும் ஓவியர்களாக இருப்பதில்லை. அப்பொழுது அவர்களில் ஒரு சிலரே உலகம் ஏற்றுக் கொள்ளுகிற முறையில்  ஓவியர்களாக இருக்கமுடியும்.

ஓவியக் கலையில் பிற்காலத்தில் சிறந்தோங்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைக்குச் சித்திரம் எழுதச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் மென்பதில்லை. சின்னக்குழந்தையின் மனத்திலே எத்தையோ உணர்ச்சிகள், எண்ணங்கள் எழுகின்றன. அவற்றையெல்லாம் பேச்சிலே வெளிப்படுத்த அதற்குத் தெரியாது. சின்னக் குழந்தைக்கு நன்றாகப் பேச வராது. இருந்தாலும் அதக்குத் தனது உணர்க்கிகளை வெளியிட ஆசை. அந்த நிலைமையிலே அது தன் உணர்கச்சிகளை வெளியிட ஆசை. அந்த நிலைமையிலே அது தன் உணர்ச்சிகளைப் படங்களாக எழுதிக்காட்ட முயன்றால் அது நல்லதுதானே? சித்திரமே அதற்கு அப்பொழுது உணர்ச்சிகளை வெளியிடும் பாஷை. பேசும் திறமை வளர வளரச் சித்திரம் வரையும் திறமை குறைந்து கொண்டே போகிறது. அதனால் தான், “மொழியானது முதலில் சித்திரத்தைக் கெடுத்தது; பிறகு ஒரே அடியாக அதை விழுங்கிவிட்டது” என்று ஒரு மனத்தத்துவர் கூறுகிறார்.

பேசும் மொழி வளராத ஆதிக் காலத்தில் மனிதன் தனது உணர்ச்சிகளைச் சித்திரங்களின் மூலமாகவே வெளியிட்டான். கண்டு பிடிக்கப்பட்டுள்ள குகைச் சித்திரங்கள் இதற்குச் சான்றாக உள்ளன. அந்த ஆதி மனிதனுடைய நிலையில் குழந்தை இருக்கிறது.

மூன்று வயதுக் குழந்தையிடம் ஒரு சுண்ணாம்புக் கட்டியைக் கொடுத்து விட்டால் அது உடனே என்னவோ வரைய ஆரம்பித்து விடுகிறது. ஐந்து வயது, எட்டு வயது, பத்து வயதுச் சிறுவர் சிறுமிகளுக்கு நல்ல வர்ணங்கள் கிடைத்து விட்டால் ஒரே உற்சாகந்தான்.

நான்கு ஐந்து வயதான பிறகும் குழந்தை தன் உணர்ச்சிகளைப் படங்களின் மூலமாகத்தான் நன்றாக வெளிப்படுத்துகிறது. அதன் கற்பனை சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அவர்கள் வரையும் படங்கள் மூலமாகத்தான் நன்கு அறிந்து கொள்ள முடியும். ஆனால் குழந்தைச் சித்திரமே ஒரு தனிப்பட்ட பாஷை. அதைப் புரிந்து கொள்ளுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும்.

அடுத்த பக்கத்தித்திலே பூஞ்செடியின் படம் ஒன்று இருக்கிறது. ஏழு வயதுள்ள சிறுவன் வரைந்தது அது. “செடியை விடப் பூப் பெரிதாக இருக்கிறதே?” என்று கேட்டு நீங்கள் சிரிக்கலாம். ஆனால் பூவைப் பெரிதாக வரைந்திருப்பதன் பொருள் வேற. அந்தச் செடியில் நிறையப் பூக்கள் இருக்கின்றனவாம். பூம‌யாகச் செடி விளங்குவதைக் கண்டு அந்தப் பூவையே பிரதானமாகக் காட்டிச் சிறுவன் படம் தீட்டியிருக்கிறான். ஒரு மரத்திலே பல குருவிகள் அமர்ந்திருப்பதைக் குறிப்பிட வேண்டு வேண்டுமானால் குழந்தை சாதாரணமாக ஒன்றிரண்டு குருவிகளை மிகப் பெரியதாக மரத்தின் மேலே வரைந்து காண்பிக்கிறது.

 

இரண்டு வயதுக் குழந்தையிடம் ஒரு சிவப்பு வர்ணச்சுண்ணாம்பு கோலைக் கொடுத்தேன். அது என்னவோ கோடுகள் மேலிருந்து கீழே தரையில் வரைய ஆரம்பித்தது. கிறுக்குவது போல‌த்தான் முதலில் தோன்றியது. இதுதான் குழந்தையின் முதற் சித்திரம். வரைய வரையக் குழந்தை அதற்கு ஒரு பொருள் கண்டு பிடிக்கத் தொடங்குகிறது.

இவ்வாறு கிறுக்குவதற்குக் குழந்தைக்குத் தாராளமாக வசதி அளிக்கவேண்டும். ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரை குழந்தைகள் இவ்வாறு கிறுக்கி மகிழ்கின்றன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இது உதவுகின்றது.

கிறுக்கல் சித்திரத்திலிருந்து  அடுத்தபடியாக ஒரு வகை ஒழுங்குக்குட்பட்ட சித்திரம் தோன்றுகிறது. ஒழுங்கு என்றால் தேர்ந்த ஓவியர்களின் படத்திலுள்ள ஒழுங்கல்ல. குழந்தைச் சித்திரத்திர்கே இயல்பாயுள்ள ஒரு ஒழுங்கு. இந்த ஒழுங்கைச் சந்தம் என்று கூறலாம். கவிதையிலும் பாட்டிலும் ஏதாவது ஒரு சந்தம் திரும்பித் திரும்பி வரும். கோடுகள், வளைவுகள் முதலியவை உள்ள சித்திரங்களையே சந்தம் உள்ளவை என்றுகுறிப்பிடுகிறேன்.

பகலும் இரவும் மாறி மாறி வருகிறது. அதில் ஒரு சந்தம் உயிர் நாடி. இது போன்ற சந்தம் குழந்தையின் சித்திரங்களிலே வெளிப்படுகிறது. பசுமாட்டிற்குக் குழந்தை சில சமயங்களிலே எட்டுக் கால்கள் போடும். திரும்பத் திரும்பக் கால்களை வரைவதிலே அதற்கு ஒரு தனிப்பட்ட இன்பம்! இதை உணராது அந்தப் பசுவைப் பார்த்து நாம் சிரிப்பது சரியல்ல.

ஒரு நான்கு வயதுச் சிறுவன் கறுப்பு வர்ணத்தையே உபயோகித்து ஒரு படம் தீட்டிக்கொண்டிருந்தான். அது இன்னதென்று எனக்குப் புரியவே இல்லை. ஒரே கறுப்புப் பூச்சாக எனக்குத் தோன்றியது. ஆனால் நான் அதைப் பற்றி ஒன்றும் கூறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறுவனே அதற்கு விளக்கம் கூறத் தொடங்கினாள்.”இதோ பார்த்தியா – வீடு தீயிலே எரிஞ்சு போச்சு” என்று அவன் கூறினேன். பெற்றோர்களிடம் விசாரிக்கும்போது சமீபத்திலே அந்த வீதியின் ஒரு முனையில் சில குடிசைகள் தீப்பிடித்து வெந்து போனதைப் பற்றியும், தீயணைக்கும் இய‌ந்திரங்கள் வந்து நெருப்பை அணைத்த விவரத்தையும், வேலைக்காரனோடு சென்று அதை அந்தச் சிறுவன் கண்டு வந்த செய்தியையும் எனக்கு எடுத்துச் சொன்னார்கள். எரிந்து போன குடிசைகளின் தோற்றம் அச்சிறுவனின் உள்ளத்திலே பதிந்திருக்கிறது. அது படமாக உருவெடுத்து விட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகு அவன் வரைந்த படத்தை நஙு புரிந்து கொள்ள முடிந்தது. சந்தச் சித்திரத்தைத் தொடர்ந்து குறியிட்டுச் சித்திரம் தோன்றுகிறது. குழந்தை பலவகையான சின்னங்களால் தனது எண்ணங்களைக் காட்ட முயல்கிறது.

சின்னக்குழந்தை ஆரம்பத்தில் இவ்வாறு கற்பனையாகவே சித்திரம் வரைகிறது. வயது ஆக ஆகத்தான் காணும் இயற்கைப் பொருள்களையும், உயிர்ப் பிராணிகளையும் வரைவதில் கவனம் செலுத்துகிறது. அப்பொழுது நாய், பூனை முதலிய பறவைகளையும் மனித இருவங்களையும் எழுதிக்காட்டக் குழந்தை ஆசைப்படுகிறது.

குழந்தைகளுக்குத் தொடக்கத்திலேயே நியம்படி சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க முயல்வது தவறாகும். வர்ணக்குச்சிகளை அல்லது பலவகை வர்ணங்களைக்கறைத்து வைத்துளள்ள கிண்ணங்களையும் ஒரு தூரிகையையும் அதனிடம் கொடுத்து விடவேண்டும். சாதாரணமான பூச்சு வர்ணங்களை நீரில் கரைத்துக் கொடுத்தால் அதுவே போதும். பெரிய அளவில் ஒரு காகிதத்தையும் கொடுத்து விட்டு நாம் விலகி விடவேண்டும். குழந்தை தன் உள்ளக் கிளர்ச்சிகளைச் சித்திரித்துக் காண்பிக்கப் போகிறது. அதிலே நாம் குறுக்கிடக் கூடாது.

முறைப்படி பயின்ற ஓவியர்களின் சித்திரங்களோடு குழந்தையின் சித்திரத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவறு. இரண்டும் வெவ்வேறென  இலக்கண விதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. குழந்தைச் சித்திரத்திற்கு நாம் வியாக்கியானம் செய்ய முயல்வதைவிடக் குழந்தையிடமிருந்தே அதைக் கேட்டுப் புரிந்து கொள்ளுவது நல்லது.

இதோ இந்தப் படத்திலே பாருங்கள். பறவையும் பாம்பும் பேசிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடைய கற்பனையின்படி பறவைகளும் மற்ற உயிர்ப்பிராணிகளும் பேசும். பாம்புக்கு கால்கள் எது என்று நீங்கள் கேட்பீர்கள். குழந்தையின் கற்பனையிலே அதற்கு நூற்றுக் கணக்கான கால்கள் உண்டு. காலில்லாமல் எப்படி அது நடக்க முடியும் என்பது குழந்தையின் கேள்வி!

சுருக்கமாகக் கூறினால் சித்திரம் என்பது குழந்தைகளுக்குத் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த சாதனம். அது குழந்தையின் உள்ளத்தில் எழும் உணர்ச்சியின் வடிவம். சித்திரத்தின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் குழந்தைக்கு வசதி யளிப்பது நல்லது. அதன் கற்ப‌ணைத் திறன் விரிவடைவ‌தோடு உள்ளத்திலே அமைதியை ஏற்படுத்தவும், கலைத்திறமை இயல்பாகவே அமைந்திருக்குமானால் அதை செய்யவும்  குழந்தைச் சித்திரம் உதவிசெய்யும்.

குறிப்பு: இந்தக் கட்டுரை பெ.தூரன் அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வாசிக்க இங்கே சுடக்கவும். அச்சில் : குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் வெளியீடு : இயல்வாகை, விலை: 75/- குழந்தை உளவியலும் மனித மனமும் (உளவியல் நூல்களின் தொகுப்பு), பெ. தூரன், சந்தியா பதிப்பகம். விலை: 250/-

1 Comment

Leave a comment