பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் திருவிழா – புலியூர் முருகேசன் & பிரபு

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’ போட்டித் தேர்வு மையத்தை அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தி வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், தமிழறிஞர் திரு.அ.த.பன்னீர் செல்வம் ஐயா ஆவார். தலைமையுரையில் முத்தாய்ப்பாக ‘இனி வருங்கால
தமிழ்ப்பிள்ளைகள் தாய்மொழிக் கல்வி கற்க இருக்கும் ஒரே வழி அரசுப் பள்ளிகள் மட்டுமே! பெற்றோரும், பொதுமக்களும் இதை உணர்ந்து தாய்மொழிக் கல்வியைப் போற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும்’ எனக் கூறினார்.

மாணவர்களுக்கு அறிவுத் திறன் கூர்பட ‘ஓரிகாமி’ எனும் ‘தாள் மடிப்புக் கலை’யைக் கற்றுத் தர தோழர் தியாக சேகர் வந்திருந்தார். காலையில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தவர், மாலையில் ஆண்டு விழா மேடையிலேயே அதைச் சிறப்பாகச் செய்து பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். குழந்தைகளுக்கான ‘பஞ்சு மிட்டாய்’ எனும் இதழை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு பள்ளிதோறும் சென்று மாணவர்களுடன் கலந்து விளையாடி, பாட்டுப் பாடி அவர்களை மகிழ்வித்து வரும் தோழர் பிரபு ராஜேந்திரன் விழாவிற்கு வந்திருந்தது குழந்தைகளை உற்சாகம் கொள்ளச் செய்தது. ஒட்டு மொத்த பள்ளி மாணவர்களையும் மேடையிலேற்றி, அவர்களுக்குத் திகட்டத் திகட்ட பாடல் பாடி களிப்புறச் செய்தார். ‘உதிரி நாடக நிலம்’ எனும் நவீன நாடகக் குழுவை நடத்தி வரும் தோழர் விஜயகுமார், பள்ளியின் அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வண்ணம் ஒரு நாடகத்தை வடிவமைத்து, எல்லோரையும் நடிக்க வைத்து மாணவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்தார். இந்த நாடகத்திற்காக இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது முக்கியமானது. பள்ளியின் மாணவர்கள் அனைவருமே கதை சொல்லல், திருக்குறள் ஒப்புவித்தல், ஆங்கிலத்தில் பேசுதல், கவிதை சொல்லுதல், பாடல் பாடுதல் எனப் பன்முகத் திறமையை மேடையில் வெளிப்படுத்தினர்.

சோழகன் குடிக்காட்டில் இருக்கும் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 1960களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி ஆகும். இப்பள்ளியில் படித்தோர் பலர் அரசின் பல்வேறு உயர்பதவிகளில் இருக்கின்றனர். அத்தகைய பாரம்பரியத்தை உடைய பள்ளி இது. வேறு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற ஒன்று இல்லாத சூழலில், இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இதற்குக் காரணம் இதன் தலைவராக இருக்கும் தோழர் விஜயன்தான் என்றால் அது மிகையில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு 9 மாணவர்கள் மட்டும் இருந்த காரணத்தால் பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்தது. அப்போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரான விஜயன் ஊரில் உள்ள மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு பொதுமக்கள் மத்தில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி 15 மாணவர்களை புதிதாகச் சேர்க்கச் செய்தார். அடுத்த வருடம் இதேபோல் மக்கள் மத்தியிலே செல்ல, இன்னும் 20 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். இப்போது பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கை 40 ஆக இருக்கிறது. வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஊர் இளைஞர்கள் மற்றும் உள்ளூரின் நல்லோர் என அவர்கள் வழங்கிய நன்கொடை ரூபாய் இரண்டரை லட்சம் ஆகும். அவ்வளவும் பள்ளியின் உள்கட்டமைப்பிற்கு முறைப்படி செலவு செய்ததால், பள்ளியின் தோற்றமும், வசதியும் தனியார் பள்ளியை விஞ்சும் அளவிற்கு உள்ளது. மிகச் சிறப்பாக நடைபெற்ற பள்ளியின் ஆண்டு விழாவைக் கண்டு களிக்க மட்டுமல்லாமல், இப்பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பள்ளியையும் மேம்படுத்த அருகில் உள்ள திப்பையக்குடி, கிலாமங்கலம் தலைமை ஆசிரியர்கள் வந்திருந்தது எல்லோருக்கும் மிகுந்த மகிழ்வைத் தந்தது. மனதிற்கு மிக நிறைவாக இருந்தது ஆண்டு விழா நிகழ்ச்சி.

நன்றி,
புலியூர் முருகேசன்

இன்று சத்துணவு திட்டம் என்பது தமிழகம் மட்டுமல்லாது வெவ்வேறு மாநிலங்களிலும் உள்ள திட்டம். கல்வியை சமத்துவம் நோக்கி நகர்த்திய திட்டங்களில் சத்துணவுத் திட்டத்திற்கு மிகப்பெரிய பங்குண்டு என சொல்லலாம். அவ்வளவு பெரிய திட்டம் எப்படி தோன்றியது? எப்படி சாத்தியமானது ? என்பதை வரலாற்றில் தேடிப்பார்த்தால் அதன் துவக்கப்புள்ளி எங்கோ ஒரு கிராமத்தில் பெற்றோர்-ஆசிரியர் ஆகியோரின் கூட்டு முயற்சியாக இருக்கிறது. ஆம், நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது இதுபற்றின தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு கிராமத்தில் பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து கூட்டாக உணவிற்கான பொருட்களை பொது இடத்தில் சேமித்து பின்னர் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு தினம் ஒருவராக உணவை சமைத்துள்ளனர். இதுவே பின்னாளில் சத்துணவு திட்டமாக வடிவம் பெறுகிறது.

இது தான் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் பலம் என்று சொல்வேன். அப்படி ஒரு பலம் வாய்ந்த பெற்றோர்-ஆசிரியர் கழகம் தான் இங்கு சோழகன்குடிகாட்டில் ஒரு பள்ளியை மீட்டெடுத்திருக்கிறது. ஆம், அரசு குறைந்த அளவு மாணவர்களே இருப்பதால் பள்ளியின் மூடுவிழாவிற்கு தயாராகி கொண்டிருந்த நிலையில் நண்பர் விஜயன் தனது சுற்றாருடன் சேர்ந்து தங்களது பிள்ளைகளை அந்தப் பள்ளியில் சேர்த்து பள்ளியை மீட்டெடுத்துள்ளனர். அதோடு பெற்றோர்-ஆசிரியர் கழகம் பள்ளிக்கு தேவையானவற்றை செய்தும் வருகிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகம் உயிர்ப்புடன் இருப்பதை பள்ளி ஆண்டு விழாவில் நன்கு உணர முடிந்தது.

பள்ளி ஆண்டு விழாவில் வழக்கமான நிகழ்வுடன் உதிரி நாடக நிலத்தின் நாடகமும், தியாக சேகர் அவர்களின் ஓரிகாமி அறிமுகமும், பஞ்சுமிட்டாய் கதை சொல்லல் நிகழ்வும் இடம் பெற்றிருந்தது. இதற்கெல்லாம் மக்களிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்ற பயம் எனக்கு லேசாக மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. உண்மையான கலையை அவர்கள் எவ்வளவு ரசிக்கிறார்கள் என்பதை தியாக சேகர் அவர்களின் “பறக்கும் கொக்கு” ஓரிகாமி வடிவத்திலேயே செய்து முடித்ததும் அங்கு ஒலித்த கைத்தட்டல்களே புரியவைத்தது.  ஓரிகாமி என்ற வார்த்தை மக்களுக்கு அறிமுகம் ஆகாத நிலையிலும் காகித மடிப்பை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்க தேவையில்லை என்பதை தியாக சேகர் தனது பறக்கும் கொக்கின் மூலம் உணரச் செய்தார்.

அடுத்து உதிரி நாடக நிலத்தின் “ராசா என்கின்ற குதிரை” நாடகம் அந்தப் பள்ளி சிறுவர்களால் நடத்தப்பட்டது. சுமார் 20க்கும் மேலான சிறார்கள் நாடகத்தை அழகாக அரங்கேற்றம் செய்தனர். நண்பர் விஜயகுமார் இரண்டு நாட்களில் சிறுவர்களை நாடகத்திற்கு தயார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களுக்கு அந்த நாடகம் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருந்ததை அவர்களின் நீண்ட நேரம் கைத்தட்டலிருந்து புரிந்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாக இந்த நாடகத்தில் எந்த குழந்தையும் தங்களுக்கான வசனங்களை மனனம் செய்யவில்லை மாறாக அவர்கள் அனைவரும் நாடகத்தினுள் பயணம் செய்தனர் என்பதை அங்குள்ள பார்வையாளர் அனைவருமே அறிந்திருந்தோம்.

இறுதியில் பஞ்சுமிட்டாய் சார்பாக அனைத்து குழந்தைகளையும் மேடையில் ஏற்றி அவர்களுக்கான சிறார் பாடல்களை பாடி அவர்களுடன் ஆடி மகிழும் வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் ஒன்றாக ஆடிப் பாடி மகிழ்வதை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். 10க்கும் மேலான பாடல்களை பாடி மகிழ்ந்தோம்.

பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் ஒரு திருவிழாகவே நான் அந்த ஆண்டுவிழாவை உணர்ந்தேன். அதிலும் கல்விக்கான தேவைகளை, மாற்று சிந்தனைகளை, கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான நகர்தலை முன்னெடுக்கும் விஜயன் மற்றும் நண்பர்களை பார்க்கும் போது மனம் உற்சாகம் அடைகிறது. சோழகன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல்வேறு முயற்சிகளை அடுத்த கல்வியாண்டில் எடுக்க வாழ்த்துக்கள்.

நன்றி,
பஞ்சுமிட்டாய் பிரபு

Leave a comment