அச்சம் என்பது மடமையா? பகுதி-2 பள்ளிச் சூழலில்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

குழந்தைகளுக்கு ஆசிரியர் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமா? 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஆசிரியர்கள் மீது அச்ச உணர்வு இல்லெயென்றால் அவர்களை எப்படி சமாளிப்பது?

[வீட்டுச் சூழலில் இருக்கும் அச்ச உணர்வைத் தொடர்ந்து பள்ளியில் நிலவும் அச்ச உணர்வு சார்ந்து நண்பர்கள் சிலரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தோம். அவர்களின் பதில்கள் பதிவாக… இதோ இங்கே.]

கல்வியா? ஒழுக்கமா? – விஷ்ணுபுரம் சரவணன், எழுத்தாளர்

“மிக முக்கியமான கேள்வி. கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களே இக்கேள்விக்கேற்ற பதில் அளிக்கவியலும். ஆயினும், என்னளவில் நான் கவனித்த, வாசித்ததன் அடிப்படையில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். ஆசிரியர் மீதான அச்ச உணர்வுதான் பிள்ளைகளை ஒழுங்கு படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும், பலரின் இடைநிற்றலுக்கும் கல்வியை மகிழ்ச்சியுடன் கற்பதற்கு இடையூறாகவும் நிற்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். எங்கள் கிராமத்தில் எதிர்வீட்டிலிருக்கும் சக வயது நண்பன் ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டான். காரணம்,. இரண்டு, மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எடுத்ததற்கு என்ன காரணம் சொல்வது, அந்தக் காரணத்தை ஆசிரியர் நம்புவாரா என்ற குழப்பம் கலந்த அச்சம் அவனின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இப்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது, பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் கற்பிக்க வேண்டியது கல்வியையா…. ஒழுக்கத்தையா? இரண்டையும் விட கற்றலின் மீதான ஈர்ப்பையே என்று நான் நினைக்கிறேன். அதை ஒருபோதும் அச்சவுணர்வு சாத்தியப்படுத்தாது.

ஒரு மாணவர் ஆசிரியர் சொல்வதைக் கேட்காமல் நடந்துகொள்வதற்கு ஆசிரியரை அலட்சியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருப்பதாகப் பல ஆசிரியர்கள் நினைப்பதாக அறிகிறேன். ஆனால், நடைமுறையில் பல காரணிகள் இருக்கின்றன. காலை உணவு எடுக்காமல் பள்ளிக்கு வரும் குழந்தைகள் ஏராளம், வயிற்றில் பசியோடு இருப்பவள்/னுக்கு சொற்களை விடச் சில பருக்கைகளே தேவை. அவள்/ன் அடிக்கடி தண்ணீர் குடிக்கச் செல்வாள்/ன். அதனால், சிறுநீர் கழிக்கவும் செல்வாள்/ன். அதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும். இதே போல, குடும்ப உறவுச் சிக்கல்களின் பாதிப்பிலும் மாணவர் பாதிக்கப்பட்டு அதை மறைக்க வீம்புக்காரி/ரனாய் தன்னை வெளிக்காட்டிக்கொண்டிருக்கலாம். எல்லாம் சரி. ஒவ்வொரு மாணவரின் சிக்கல்களையும் ஆசிரியர் புரிந்துகொள்வது சாத்தியமா? முயன்றால் சாத்தியமே! வகுப்பறையில் பலரால் நிர்ணயித்திருக்கும் ஒழுங்கை மீறுவது நாற்பது பேரில் இருபது பேர் இருக்கலாம். அந்த இருபது பேரில் பேசி எளிதாக அவர்களைச் சரிசெய்யக்கூடியவர்கள் பத்து பேராக இருக்கலாம். ஆக, பிரச்னை அதிகம் உள்ளவர்கள் வெறும் பத்துப் பேர்தான் அவர்களின் சிக்கல்களின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, கவுன்சிலிங் தருவது, மாணவரின் வீட்டுக்குச் சென்று பேசும் சூழல் இருப்பின் அதையும் செய்வது என சில முயற்சிகளை எடுக்கலாம். என்னுடைய நெருக்கமான நண்பர், 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ்ப் பாடம் எடுக்கும் ஆசிரியர். பொதுத்தேர்வுக்கு ஆறு மாதங்களுக்கு முன், படிப்பில் சற்று தொய்வோடிருக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு சொம்பு நீர் வாங்கிக் குடித்துவிட்டு வந்தார். பொதுவான நலம் விசாரிப்புகளுக்குப் பின், அறிவுரையாக ஏதும் கூறவில்லை. பின், நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்தப் பக்கம் வந்தேன் என மாணவர்கள் சிலரின் வீடுகளுக்குச் சென்று நலம் மட்டுமே விசாரித்து வந்தார். அதன் பலன் தேர்வில் மிக நன்றாகத் தெரிந்தது. இதுபோல முயலலாம். ஆசிரியர் தம் மீது பேரதிக கவனமும் அக்கறையும் கொள்கிறார் என மாணவரை நினைக்க வைப்பதை விடவும் அச்சவுணர்வு சாதித்துவிடாது.

இன்னும் விரிவாகப் பேச வேண்டிய விஷயம் இது. அதற்கான தகுதி எனக்கிருப்பதாக நினைக்கவில்லை. முன்பே சொன்னதைப் போல, கல்வியாளர்கள் இதன் தீவிரத்தைப் பேச வேண்டும். என்னைப் பொருத்தவரை, ஆசிரியர் மீதான அச்சவுணர்வு தற்காலிக ஒழுங்கைக் கொண்டுவரலாம். ஆனால், கற்றலின் மீது ஈர்ப்பையோ ஆசிரியர் மீதான அன்பையோ உருவாக்காது என்றே நினைக்கிறேன்.

அமைதியான வகுப்பறை – கலகலவகுப்பறை சிவா, ஆசிரியர்

அமைதியான வகுப்பறையே சிறந்தது என்று எல்லோரும் நம்புகிறோம். ஆசிரியர் மையமான கற்பித்தலுக்கு அமைதியான வகுப்பறை வேண்டும். அங்கே செய்திகள் திணிக்கப்படும். கல்வி என்பது வெறும் தகவலறிவல்ல. கலந்துரையாடல். அறிவுத் தேடல்.

அதிகமான குழந்தைகள் இருந்தால் சத்தம் வரும். எவ்வாறு சமாளிப்பது? வழமையான கற்பித்தல் முறைகளை விட்டுவிட வேண்டும். வகுப்பறை செயல்பாடுகளின் களமாக மாறவேண்டும். ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலே போதும். தேடலின் கதவுகளைத் திறப்பதாக இருக்கும் வகுப்பறையே உயிர்ப்பானது. ஏனெனில் அது உயிர்களால் நிரம்பியது.

மிஸ்கிட்ட சொல்லிடுவேன் – பார்வதி, ஆசிரியர்

பெரும்பாலும் அம்மாக்கள் இடுப்பில் வைத்துக் குழந்தைகளுக்குச் சோறூட்டும் போதே டீச்சர்கிட்ட சொல்லிடுவேன் எனவும், பள்ளி செல்லும் குழந்தைகளை எதற்கெடுத்தாலும் உங்க மிஸ்கிட்ட சொல்லிடுவேன் என பூச்சாண்டியாக்கித்தான் வைத்திருக்கிறார்கள். அது போதாதா? அதை வகுப்பறையிலும் காட்டி நிரூபிக்கத்தான் வேண்டுமா?

குழந்தைகளுக்கு அச்ச உணர்வு ஏற்படுத்தாமல் வகுப்பு நடத்துவது சாத்தியமே. முதலில் மாணவர்களுக்கு எதனால் அச்ச உணர்வு ஏற்படுத்த வேண்டும்?.

மாணவர்கள் வகுப்பறையில் சத்தமிடுதல், எழுந்து அங்குமிங்கும் ஓடுதல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என்றே நாம் அச்சுறுத்துகிறோம். இது ஒழுங்கீனம் அதை நெறிப்படுத்தும் நெறியாளர்கள் நாம் என்பது சிலரின் வாதம்.

இது மாணவர்களிடம் ஒரு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வகுப்பறை நன்கு திட்டமிட்ட ஒரு விளையாட்டுக் களமாக இருக்கும்போதே அங்கு கற்றல் நன்கு நடைபெறும். மரங்களின் இலைகள் அணைத்துக்கும் பச்சை நிறம்தான் ஆனால் அதன் மலர்களில்தான் எத்தனை வண்ணங்கள்? ஒவ்வொரு மரத்திலும் வெவ்வேறு வண்ணங்கள். அப்படித்தான் இந்தக் குழந்தைகளும். அவர்களின் தேவைக்கேற்ப தனித்தனியான முறையில் கற்பிக்காமல் அனைவரிடத்தும் ஒரே மாதிரியான கற்றல் விளைவுகளை வெளிக்கொணரவேண்டும் என்பது மட்டும் எப்படிச் சாத்தியம்?

ஒரு குழந்தை அச்சமடையும்போது அதன் கவனம் சிதறுகிறது. தன்னம்பிக்கை போய் இயலாமை வருகிறது. தன்னால் முடியாதோ நாம் தகுதியானவர்கள் இல்லையோ என்ற தாழ்வுணர்ச்சி வருகிறது. இது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால் பொய் கூறுதல், பதற்றம், சத்தமாகப் பேசுதல் ( சிலர்) ஆசிரியர் அழைக்கும் போதே அழுகை, வகுப்பறையில் சிறுநீர்க்கழித்தல் போன்றவை நிகழ்கின்றன.

எப்பொழுது மாணவர்கள் சத்தமிடுவார்கள்.?

அவர்களின் கவனம் சிதறும்போதும், கற்றல் சலிப்பேற்படுத்தும்போதும், அவர்கள் அதிக மகிழ்ச்சியடையும் போதும் வகுப்பில் சத்தமிட்டே வெளிப்படுத்துவார்கள் குறைந்தபட்சம் தனது சக நன்பருடன் பேசுவதாகக் கூட அது இருக்கலாம். ஒரு ஆசிரியரின் திட்டமிடலில் இது நிகாழவாறு என்ன செயல்பாடுகள் கொடுக்கலாம் என்ற திட்டம் கட்டாயம் இருக்க வேண்டும்… இயந்திரத்தனமாய் வாய்மொழியாக பாடத்தைப்படித்துக்காட்டியோ, கரும்பலகையில் எழுதிப்போட்டு எழுது என்றாலோ கட்டாயம் அங்கு 20/% கற்றல் நடக்கக்கூட வாய்ப்பில்லை. மாறாக சின்னச்சின்ன விளையாட்டுகள் மூலம் அல்லது செயல்பாடுகள் மூலம் அனைத்து மாணவர்களும் பங்குபெறும் கற்றலைத் திட்டமிட வேண்டும். சத்தமும் விளையாட்டும் ஒழுங்கீனம் என நாம் நினைப்பதுதான் தவறு. மாறாக நம் வகுப்பறையை ஆரவாரத்துடன் உயிரோட்டமாக அதே நேரம் அடுத்தவகுப்பறையை பாதிக்காமல் ஓர் ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபடுதல், வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனைப்பற்றியும் தனித்தனியே புரிந்து அவருக்கேற்பப் பழகுதல், அவர்களோடு மனதளவிலும் நெருக்கமாய் இருத்தல், முக்கியமாய் கடுஞ்சொல் எதையும் பயன்படுத்தாமலிருத்தல் (இது கூடத் தெரியலையா என்பது கூட ஓர் அச்ச உணர்வுதான். ) ஆகியவற்றால் வகுப்பறையை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.

எழுதுதல், படித்தல் என ஒரே மாதிரியான வேலைகளைத் தராமல் சிறு விளையாட்டுகள், வரைதல் வண்ணமிடுதல், படங்களை வகைப்படுத்துதல், அடையாளம் காணுதல், புதிர் விளையாட்டுகள் இதுபோன்ற மாணவர்கள் விரும்பும் வண்ணம் நம் கற்றலைத் திட்டமிடலாம்.

எல்லாவற்றையும் விட நாம் என்னதான் மெத்தப்படித்து மேதையாய் இருப்பினும் நம் வகுப்பு மாணவர்களின் வயதொத்து நாம் இறங்கி அவர்களோடு கலந்திருந்தால் அவ்வகுப்பு அச்சமின்மை என்பது இல்லாமல் எளிமையாய் நம் வசப்படும்.
பல்வேறு போராட்டங்களுடனும் மனக்குழப்பங்களுடனும் வகுப்புக்கு வரும் குழந்தைக்குத் தேவை ஒரு விளையாட்டுத் தோழமைதான். ஆசிரியர் அல்ல.

தொடரும்…

முந்தைய பதிவு : வீட்டுச் சூழலில் அச்ச உணர்வு

3 Comments

 • கனகா says:

  உங்கள் அனைவரின் கருத்துகளும் சரிதான் . கல்வியா ஒழுக்கமா எனும்கேள்விதான் எனக்கு குழப்பமாக இருக்கிறது . காரணம் இல்லாமல் சரவணன் இவ்வினாவை வைக்க மாட்டார் . சிவா பார்வதி கருத்துகள் சரி . வகுப்றையில் எவ்வாறு உணர்கிறீர்கள் . உடல் உளம் ஆன்மாவ ஒருங்ணைப்பது தான் கல்வி . இதன் அடிப்டை என்ன?

 • Arumugam says:

  இதனை ஓர் ஆசிரியர் சொன்னால்தான் நன்றாக இருக்கும்

  • admin says:

   இரண்டு ஆசிரியர்கன் தான் இந்தப் பதிலை சொல்லியிருக்கிறார்கள்..

Leave a comment