குழந்தைகளுக்கு ஏதோ ஒரு விசயத்தின் மீதோ அல்லது யாரோ ஒருவர் மீது பயம் இருப்பது அவசியம் என்று பலர் நம்புகின்றனர். வீட்டிலும் பள்ளியிலும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஒத்தை கண்ணன், பூச்சாண்டி, பேய், பிசாசு, ஊசி, டாக்டர், போலீஸ், வாட்ச் மேன், இருட்டு என வெவ்வேறு விதமான அச்ச உணர்வுகள் விதைக்கப்படுகிறது. அவை உண்மையிலே அவசியமா? இதற்கு விடைத் தேடி சிறார் உலகம் பற்றி உரையாடும் நண்பர்களிடம் கேட்டோம். அவர்களின் விடைகளை பதிவாக இங்கு கொண்டு வருகிறோம். முதல் பதிவாக வீட்டுச் சூழலைப் பற்றி….[அடுத்தப் பதிவு பள்ளிச் சூழலைப் பற்றி பேச இருக்கிறது].
நேர்மறை தூண்டுதலும் – எதிர்மறை தூண்டுதலும்
மரு.வனிதாசுந்தரம்,
இளநிலைஉள்ளுறை மருத்துவர்[மனநல மருத்துவ துறை]
பொதுவாக இந்தப் பயமுறுத்தும் வழக்கம் பல தலைமுறையாகவே நமது சமூகத்தில் தொடர்ந்து வரும் விசயம். எல்லோரும் இதை செய்வதாலும், பல தலைமுறையாக தொடர்வதாலும் இது சரி என்று ஆகிவிடாது. உளவியலைப் பொறுத்த வரை இரண்டே இரண்டு அடிப்படை உணர்வுகள்தான். ஒன்று அன்பு மற்றது பயம் [Love and fear]. மீதி எல்லா உணர்வுகளும் இதன் கிளை உணர்வுகள்தான். இதில் அன்பு positive stimulus (நேர்மறை தூண்டுதல்), பயம் எதிர்மறை தூண்டுதல். நேர்மறை தூண்டுதல் தான் ஓரளவு நிரந்தரமான மாற்றம் தரும். நேர்மறை தூண்டுதல் இருந்தால்தான் desired action இருக்கும், அது மட்டுமல்லாமல் கற்பனைக்கும் உண்மைக்கும் வித்தியாசம் ஏழு வயதிற்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிய ஆரம்பித்துவிடும்.
பெரும்பாலான பெற்றோர்கள் அதிகப்பட்சமாக மூன்று விசயங்களுக்காக பயத்தினை விதைக்கிறார்கள், 1.சாப்பிட வைப்பதற்காக 2.வீட்டுப்பாடம் செய்வதுக்காக 3.சேட்டைகளை குறைத்துக் கொண்டு சமத்தாக இருப்பதற்காக[unwanted behavior].
1. சாப்பாடு : சிறுவர்களுக்கு ஒரே வகையான உணவுகள் சற்றே சலிப்பை கொடுக்கிறது. புதுவிதமாகவும் அவர்களுக்கு எது பிடித்தமானது என்பதை தெரிந்துக்கொண்டும் சமைத்துக் கொடுக்கலாம். அதே நேரம் தொலைகாட்சியோ, வேறு கைபேசி வழியாக வீடியோக்களோ பார்த்துக்கொண்டே சாப்பிட அனுமதிக்க கூடாது. நன்றாக விளையாடும் [உடல் ரீதியாக உழைக்கும் வகையில்] சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். அது அவர்களுக்கு நல்ல பசியை தூண்டும். குழந்தைகள் உணவு வேண்டாமென்றால் திணிக்காமல் விட்டுவிட வேண்டும். அப்படி விடும் பட்சத்தில் அடுத்த வேளையில் அவர்களுக்கு பசி எடுத்து அவர்களே உணவை தேடி வருவார்கள்.
அப்படியும் சாப்பிடாத சிறுவர்களுக்கு ஒரு technique இருக்கிறது. அதன் பெயர் “அட்சய பாத்திரம்”. அதாவது, ஆரோக்கியமான வீட்டில் செய்த நொறுக்கு தீணிகளையோ, பழங்களையோ வீட்டில் நடு கூடத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி பார்வையில் படும் விதத்திலும், எட்டும் உயரத்திலும் வைக்க வேண்டும் கூடவே தண்ணியையும் வைத்துவிட வேண்டும். அவர்களது பார்வையில் அது படும் போதெல்லாம் மூளை தூண்டப்பட்டு சாப்பிடத் தோன்றும்.
2.வீட்டுப் பாடம்: வீட்டுப்பாடம் எழுதும் போது தலையீடு இல்லாமல் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்பதை அறிந்து செயல்படலாம். முதுகில் தட்டி கொடுத்தல், கட்டி அணைத்தல், முத்தமிடுதல் போன்ற positive emotions தரலாம். மனதார பாராட்ட வேண்டும். Rewards(பரிசுகள்) அப்பப்போ தரலாம், ஆனால் அது materialistic ஆகவும், உணவு வகையாகவும் இல்லாமல் இருந்தால் நல்லது. அதேப் போல் ஒரு வித பழக்கம் ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3.unwanted behavior: இதுப் போல் நேரங்களில் சரியான நேரம் அறிந்து தனியாக கூப்பிட்டு தவறை சொல்ல வேண்டும். இந்த மாதிரி பண்ணதால் எப்படி மற்றவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்பதை விளக்க வேண்டும். அடம் பிடிக்காமல் வேறென்ன செய்திருக்கலாம் என்பதை சொல்லலாம். குற்ற உணர்ச்சியை அவர்கள் உணரும் வகையில் நிதானமான மனநிலையில் இருக்கும் போது எடுத்துச் சொல்ல வேண்டும். கண்டிக்கும் சூழல் வரும் வேலையில், வீட்டில் ஒருத்தர் கண்டிக்கும் போது மற்றவர் கொஞ்சிடக் கூடாது, குழந்தைகளை ஆதரவு தரும் மாதிரி நியாயப்படுத்தி பேசிடவும் கூடாது. கோபப்படாமல் மனதில் பதியும் மாதிரி பேசிட வேண்டும்.
இதுப் போல் முயற்சிக்காமல், பயத்தினால் எல்லா வேலைகளையும் செய்ய வைத்தால் படிப்பு, உணவு மேல் அவர்களுக்கு வெறுப்பு வளரவே வாய்ப்புகள் அதிகம். நமது மூளை association ங்கற விஷயத்தை பண்ண ஆரம்பித்துவிடும். சோகமான கஷ்டமான சமயத்துல கேட்ட பாடலை மறுபடியும் கேட்டால் அதே அளவு சோகம் வருகிறது போல தான் படிப்பு-வெறுப்பு இரண்டும் associate ஆயிடும். முடிஞ்ச அளவிற்கு அன்பின் மூலமாக முயற்சி பண்ண வேண்டும். முடியவில்லை என்றால் இன்னும் அன்பை செலுத்த வேண்டும். முக்கியமாக காத்திருக்க வேண்டும்.
அப்போழுது தான் நீடித்த நிலையான மாற்றம் நீங்கள் இல்லாத போதும் மாற்றம் இருக்க வாய்ப்பு அதிகம்.
உண்மையைச் சொல்லிக்கொடுங்கள். சில சமயங்களில் கொஞ்சம் பொய்யையும் சொல்லுங்கள்.
யெஸ். பாலபாரதி
எழுத்தாளர்
என்னைப் பொருத்தவரையில் குழந்தைகளை ’பயப்படுத்த’ வேண்டிய தேவை இல்லை என்றே எண்ணுகிறேன். பொதுவாக 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் எதையும் எளிமையாக நம்பிவிடும் மனநிலையில் இருப்பர். அதனால் நாம் சொல்லும் வார்த்தைகள் செய்யும் செயல்களைக் கூர்ந்து கவனித்து அதைப் பிரதி எடுப்பதை அவர்கள் விரும்புவர். நிறைய வீடுகளில் பெரியவர்களைக் குழந்தைகள் அப்படியே நகலெடுத்து நடிப்பதை நாம் காணலாம். அவர்களின் வயது என்ன என்று பார்த்தால் மேற்சொன்ன வயதாகவே பெரும்பாலும் இருக்கும். அப்படியெனில் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழும்.
உண்மையைச் சொல்லிக்கொடுங்கள். சில சமயங்களில் கொஞ்சம் பொய்யையும் சொல்லுங்கள். குழப்புவதாக நினைக்கவேண்டாம். குழந்தைகளைப் பயம்கொள்ளச்செய்வதைவிட, விளைவுகள் பற்றியும் ஆபத்து பற்றியும் சொல்லிக்கொடுப்பது அவசியம். உதாரணமாக: நிறையே சாக்லேட் சாப்பிடுவதால் பற்கள் சொத்தையாகிவிடும் என்று சொல்லுங்கள். பாடங்கள் எழுத மறுத்தால் நீ பெரிய ஆளாகவே மாட்டாய். இப்படி இருந்துவிடுவாய் என்று சொல்லலாம். டிவி மொபைல் அதிகம் பார்ப்பவர் எனில் கண்பார்வைக் குறையும், பார்க்க முடியாமல் போகும். எல்லாம் இருட்டாகத்தான் தெரியும் என்று சொல்லி, கண்ணைக் கட்டி இருட்டு எப்படி இருக்கும் என்பதை உணர்வையுங்கள்.
ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற வயது என்றால் அது 5 வயது வரைதான். ஆபத்துத் தெரியாததினால் அவர்கள் அதுமாதிரி இருப்பார்கள். நாம் அவர்களுக்கு ஆபத்தையும், விளைவுகளையும் பொய் கலந்து புனைவாகக் கதையாகச்சொல்லிப் புரியவைக்கவேண்டும். அதைவிட்டு, தேவையற்றதைக்கூறிப் பிள்ளைகளைப் பயம் காட்டுவது தவறு.
சாமி கண்ணை குத்திடும்
காயத்ரி விவேக்
குழந்தைகளை பயப்படுத்தி அவர்களை கட்டுப்படுத்துவது பெரிய அளவில் குழந்தைகளின் ஆளுமையை பெரிய அளவில் பாதிக்கிறது. எனது அக்கா மகளை சிறு பிள்ளையாக இருக்கும் போது, சாப்பிட வைப்பதற்காக “ஒத்த கண் பேய் கிட்ட புடிச்சு குடுப்பேன்” என்று பயம் காட்டி தான் சாப்பிட வைப்பார்கள். அந்தப் பயம் அவள் மனதில் ஆழ பதிந்து போனது. சிறு வயதில் ஏற்பட்ட பயம் 18 வயது ஆகிய பிறகும் அவளுக்கு பேய் பயத்தின் காரணமாக தனியே இரவில் கழிவறைக்கு செல்வது கூட கடினமாக இருந்தது. வெளி ஊரில் கல்லூரி சேரவும் பயம், மகளிர் விடுதியில் தங்கி படிக்க வேண்டி வந்தால் தனியே இருக்க வேண்டும் என்ற பயம் அவளது வாழ்க்கையை பெரும் அளவில் பாதிதத்து.
சிறுவர்களுக்கு, பேய் பயம் போலவே போலீஸ் மாமா கிட்ட பிடிச்சு குடுப்பேன் என்று பயம் காட்டுவதும் உண்டு. இந்தப் பயத்தின் மூலமாக சிறு வயதிலேயே அதிகாரத்தை கண்டு பயப்பட கற்று தருகிறோம், அதிகாரத்தை கேள்வி கேட்கவோ தேவையான போது அவர்களை அணுக கூட தயக்கத்தை தருகிறது. இன்றும் நம் எல்லோருக்கும் மனதில் போலீஸ் என்றாலே ஒரு பயம் வர காரணம் குழந்தைகளாக நாம் இருக்கும் போது நமக்கு ஏற்படுத்திய பயம் தான்.
சாமி கண்ணை குத்தும் போன்ற பயங்கள் பின் நாட்களில் அவர்களை எளிதில் மத சம்பந்த மூட நம்பிக்கைக்கு ஆட்படுத்துகிறது. எனது தோழிக்கு பள்ளியில் மதிப்பெண் குறைந்தால் போதும் உடனே கவலையால் காய்ச்சல் வந்துவிடும். தன்னை கடவுள் தண்டித்து விட்டதாக சொல்லி அழுவாள் அது அவளது தன்னம்பிக்கையை மிகவும் பாதித்ததாக உணர்கிறேன்.
சிறிய விஷயங்களை கூட நாம் பொறுமையாக குழந்தைகளுக்கு சொல்ல நாம் மெனக்கெடுவது இல்லை. உடனடி தீர்வைத் தான் தேடுகிறோம். அதற்காக பிள்ளைகளை எதாவது சொல்லி பயப்படுத்தி அவர்களை அடக்க நினைக்கிறோம். பயம் காட்டி செய்யும் வேலை எல்லாமே நாம் குழந்தைகள் மேல காட்டும் அடக்குமுறை அன்றி வேறு ஏதுமில்லை.