திருப்பூரில் குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு

வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்

குழந்தைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற விருப்பம் யாவருக்கும் இருக்கக் கூடும் . சம காலத்தில் அதிகமாகக் குழந்தைகள் மீதான அக்கறைகள் அவர்களை மூச்சுத் திணற வைக்கின்றன . யாவ‌ரும் குழந்தைகள் பற்றி மிக எளிமையாகப் பேசிவிட முடிகிறது.எவரும் குழந்தைகள் பற்றி மிக அதிகமாக எழுதிவிட முடிகின்றது. சந்தைக்கடை இரைச்சல் போல குழந்தைகளுக்கான ஆலோசனைகளும் அக்கறைகளும் சமூகம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. எந்த வேலையும் செய்யாமல் குழந்தைகள் மீது அதிகாரம் செய்யும் அக்கறையாளர்களால் குழந்தை சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது .யாரிடம் பேசுவது என்றுகூட தெரிந்து கொள்ள முடியாத குழந்தைகளைப் பற்றி வண்ண வண்ணமாக , வித விதமாகப் பேசியும் எழுதியும் என்ன செய்யப் போகிறோம் ? குழந்தைகளின் நிஜம் பற்றி நமக்கொன்றும் தெரிவதில்லை .

குழந்தைகளைப் பணம் சம்பாதிக்கும் பணியாள் போல மாற்றி விடுவதில் இந்த சமூகம் முழுவதிற்கும் ஒரே மாதிரியான வேகமே இருக்கின்றது. குழந்தைகளை விசாரிப்பவர்களின் அக்கறை அவர்கள் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவோ , ஒரு அதிகாரியாகவோ ஆகி விடுவாரா என்று பரிசோதிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறு அல்லது அவ்வாறு உருவாகிவிட வேண்டுமென்ற நம் கற்பனையைக் குழந்தைகள் எப்படிப் பார்க்கின்றனர் ? அவர்கள் எப்படிப் பார்த்தால் என்ன ?அவர்களுக்கு இப்போது ஒன்றும் தெரியாதுதானே என்கிற முடிவுகள் நமக்குள்! இவ்வாறாகக் குழந்தைகளின் அகவுலகம் நமது எண்ண எல்லைக்குள் எல்லைக்கு அப்பாற்பட்டே இருக்கின்றது. நம் சொந்த வாழ்க்கையில் சக மனிதனின் குறியீடுகளையும், மொழி சத்தங்களையும் புரிந்து கொள்ள முடியாத நம்மால் , குழந்தைகளின் அழுகையையும் அழுகைகளையும் சேட்டைகளையும் ஒடுக்கத்தான் முடியும். குழந்தைகளைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஆகச் சிறந்த செயல்பாடு சும்மா இருப்பதுதான். குழந்தைகள் மத்தியில் எவ்வாறெல்லாம் சும்மா இருக்க முடியும் என்று உரையாடிப் பார்க்க￶ அழைக்கிறது

நாள்: ஆகஸ்ட் 26, ஞாயிறு
இடம்: தேவாங்கபுரம் நடுநிலைப் பள்ளி, திருப்பூர்.
நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி.

விபரங்கள்: 98422 02730, 98658 25225

நன்றி:

சிலேட்டு – குட்டி ஆகாயம்.

குறிப்பு : கோவையில் கடந்த ஒரு வருடமாக நடந்துக்கொண்டிருக்கிற “குழந்தைகள் குறித்த உரையாடல்” நிகழ்வு தற்போது வெவ்வேறு ஊர்களில் நடந்திட உள்ளது. அதன் முதல் முயற்சியாக திருப்பூரில் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது. விரைவில் சென்னை, பெங்களூர் போன்ற ஊர்களிலும் நடக்கவுள்ளது.

Leave a comment