காலத்தின் கட்டாயம் மரப்பாச்சி சொன்ன ரகசியம் – இனியன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நல்லிரவைக் கடந்த நேரம். தேவையின் பொருட்டு தொடர் சிறார் இலக்கியங்கள் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதால் முதல் புத்தகமாகக் கையில் எடுத்தேன். சரியாக 40 நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை.

நீண்ட நாட்களாக சிறார் படைப்புலக நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பது தான் தமிழ் சூழலில் பெரும்பாலும் சிறார் தளங்களில் மட்டுமே புத்தகங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் சார் புத்தகங்கள் வயதின் அடிப்படையில் பிரிக்கப்படும் படைப்புகளில் நாம் இன்னும் ஒரு புள்ளியைக் கூடத் தொட்டுவிடவில்லை.

அதேபோல் படைக்கப்படுகின்ற சிறார் புத்தகங்களிலும் அதீதக் கற்பனைகளை மட்டுமே உள்ளே புகுதிக் கொண்டிருக்கிறோம். எதார்த்தக் கதைகளும், சமூகக் கதைகளும் மிகச் சொற்பமான அளவிலேயே படைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இதுவும் ஒரு சிறார் புத்தகமாக இருந்தாலும் குழந்தைகள் மற்றும் சிறார்கள் சார்ந்த சமூகப் பிரச்னைகளை தாங்கியே வந்திருக்கிறது.

6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். எப்போதும் நண்பர்கள் சூழத்தான் பேருந்து பயணங்கள் அமையும் பள்ளிக்கு. அவர்களில்லா பேருந்து பயணம் என்பது மிகச் சொற்பம் தான் என்றாலும், அப்படிப்பட்டச் சொற்பமான பயணநாள் ஒன்றில் அருகில் அமர்ந்திருந்த நபரின் கை மெதுவாக டவுசர்குள் நுழைவதை உணர்ந்து தடுத்தாலும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுத் தொந்தரவு கொடுத்துக் கொடுத்திருந்த அந்தாளின் இடுப்பில் ஓங்கி குத்த விட்டு பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவே எழுந்து நின்றுகொண்டே வீடு வந்தப் பொழுது ஏனோ நினைவுக்கு வந்து சென்றது. அதேபோல் எட்டாம் வகுப்பில் ஓர் சம்பவமும் இருக்கிறது.

இதுபோல் உலகளவில் அதிகளவு பாலியல் சீண்டல்களுக்கு பாலினப் பாகுபாடில்லாமல் ஆளாவது குழந்தைகளும் வளரிளம் பருவத்தின் முதல் நிலைச் சிறார்களுமே. அதனைக் கருத்தில் கொண்டுதான் good touch, bad touch என்றப் பாகுப்பாய்வு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.

இருந்தும் கூட நம்மூரில் இன்னும் போதுமான அளவிற்கு இவ்வகையான விழிப்புணர்வுகளில் தனிமனித அளவிலோ, பள்ளிகள் அளவிலோ, படைப்புகள் அளவிலோ இன்னும் தீவிரத் தன்மையை அடையவேயில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.

அந்தவகையில் அந்தப் புள்ளியைத் தொட்டுப் பேசியிருக்கும் முதல் சிறார் நாவல் இதுதான் என்பது எனது சிற்றறிவின் நிலைப்பாடு. அதனாலையே இப்புத்தகத்தையும் இதனைப் படைப்பாக்கிய அண்ணன் பாலபாரதியையும் கொண்டாடுகிறேன்.

மேலும் சில நுட்பமான விஷயங்களையும், நிலப்பரப்புக்கான பயணக் கொண்டாட்டதையும், கதையின் நாயகி மரப்பாச்சி பற்றிப் பேசுகிற போதும் சின்னச் சின்னப் பெட்டிச் செய்திகளையும் தகவல்களையும் சொல்லிச் செல்லும் போக்கும் மிக நேர்த்தியான ஒன்று.

அதேநேரம் தனது முந்தைய சிறார் நாவலின் கதாப்பாத்திரங்களையும் உள்ளே நுழைத்து “மரப்பாச்சி சொன்ன ரகசியம்”த்தை முதலில் வாசிப்பவர்களை “சுண்டைக்காய் இளவரசன்” புத்தகத்தையும் கட்டாயம் வாசிக்கத் தூண்டும் பாங்கு குழந்தைகளுக்கான செல்ல விளையாட்டு சூழ்ச்சி. இதுவும் நன்மைக்குத்தான்.

இவற்றையெல்லாம் முக்கியமான விசையமாக நான் கருதுவது good touch, bad touch என்பதின் நேரடித் தமிழாக்கமாகிய நல்ல தொடுதல், கெட்டத் தொடுதல் என்பதனை மாற்றி பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்றத் தொடுதல் என மாற்றியிருப்பது வரவேற்கப் படவேண்டிய ஒன்று.

குழந்தைகள் பாலியல் சிக்கல்கள் மற்றும் சீண்டல்கள் பற்றியப் புரிதல்களை ஏற்படுத்தும் புத்தகங்கள் தொடர்ந்து தமிழில் அதிகளவு சிறார் இலக்கியங்களில் வர வேண்டும். ஏனென்றால் நம்மில் பெரும்பான்மையினர் அவ்வயத்தில் ஏதோவொரு வகையில் ஒருமுறையாவது அவ்வகையானச் சீண்டல்களைக் கடந்து வந்துதான் தற்போது பேசிக்கொண்டிருக்கிறோம். நமது குழந்தைகள் நிச்சயம் அதிலிருந்தெல்லாம் காக்கப் படவேண்டும்.

அதனால் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” காலத்தின் தேவையின் பால் வெளிவந்து காலங்கடந்து நிற்கவேண்டியப் புத்தகம். இருப்பினும் இதனை மிஞ்சும் புத்தகங்கள் வரவேண்டியப் பெருந்தேவையும் இங்கிருக்கிறது.

புத்தகம்: மரப்பாச்சி சொன்ன ரகசியம், எழுத்தாளர்: யெஸ்.பாலபாரதி, வெளியீடு: வானம் பதிப்பகம், விலை: ரூ.60, குறிப்பு: சிறப்பு டைரி போன்ற வடிவமைப்பிலும் புத்தகம் கிடைக்கிறது (விலை ரூ.120)

1 Comment

Leave a comment