இந்தக் கதையின் நீதி – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்”….என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு கலையையும் ஒரு வடிவத்தினுள் அடைத்து அதனை பாடத் திட்டத்தோடு சேர்த்து ஒரு pacakge யாக மாற்றிவிடுகிறோம். அப்படித் தான் இந்தக் கதைகளும் மாறி வருகிறது.

ஒரு முறை ரயில் நிலையத்தில் 4 வயது சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில் “உனக்கு ஏதாச்சும் கதை தெரியுமா?” என்றேன். தெரியும் ஆனால் ஆங்கிலத்தில் தான் சொல்லத் தெரியும் என்றாள். “அய்யோ எனக்கு தமிழ் மட்டும் தானே தெரியும்” என்றதும் அவள் முகம் வாடிவிட்டது. “சரி பராவாயில்லை சொல்லு” என்றதும் பழக்கமான கதை ஒன்றை முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை திக்காமல் திணறாமல் அழகான ஆங்கில உச்சரிப்புடன் ஒப்புவித்தாள். “Moral of the story is” என்ற வாக்கியத்துடன் கதையினை கடகடவென சொல்லி முடித்தாள். விசாரித்ததில் பள்ளியில் (எல்.கே.ஜி) கதை வகுப்பில் சொல்லிக்கொடுத்தார்கள் என்றாள். இதில் கவனிக்க வேண்டிய விசயம் யாதெனில்..அந்தக் கதையை சிறுமி உள் வாங்கவேயில்லை,அதை தெளிவாக மனப்பாடம் மட்டும் செய்திருக்கிறாள். அழகான மழலை தமிழில் உரையாட தெரிந்த அவளுக்கு இந்தக் கதையை தமிழில் தனக்கு சொல்லத் தெரியாது என்றே நம்புகிறாள்.

பஞ்சுமிட்டாயின் துவக்க காலத்திலும் இதேப் போன்ற சிக்கலை கவனிக்க முடிந்தது. கதை சொல்ல பெற்றோர்களை அழைத்தப் போது “நீதிப் போதனைகளை” முன்னிறுத்தியை கதைகள் சொன்னார்கள். குழந்தைகளுக்கு கதைகளின் வழியாகவும் இதை செய்யாதே,அதை செய்யாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தனர். 10 வயது சிறுவர்களை மற்ற சிறுவர்களுக்கு கதை சொல்ல அழைத்தப் போது,அவர்களும் நீதி போதனையை வைத்தே கதைகளை சொன்னார்கள். அவர்கள் தங்களது பெற்றோர்களிடமும்,பள்ளியிலும் இதுப் போன்று கதைகளை கேட்டதாக் இந்தப் பாதிப்பு என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. சிறுவர்கள் கதை சொல்லும் போது அவர்களிம் மொத்த ஆர்வமும் “Moral of the story is” என்று சொல்லி தங்களது கதைகளை முடிப்பதிலே இருந்தது தவிர கதை சொல்வதில் துளியும் இல்லை. கதை கேட்பவருக்கும் கதையில் எந்த ஆர்வமும் இல்லாமலே இருந்தது.

இந்தச் சிக்கலில் இருந்து வெளிவர நினைத்தோம். ஆகையால் கொஞ்ச காலத்திற்கு நீதிப் போதனைகளை முன்னிறுத்தாத வகையில் கதைகளை சொல்லத் துவங்கினோம். மற்ற பெற்றோர்களையும் , சுட்டிகளையும் கதைகள் சொல்ல அனுமதிக்காமல் தவிர்த்தோம். 4-5 மாதங்கள் இப்படியே பயணித்தோம். இந்தப் பயணம் சிறுவர்கள் மத்தியில் நல்ல பாதிப்பை கொடுத்தது. கதைகளை மெல்ல மெல்ல அவர்களே உருவாக்குவதை கவனிக்க முடிந்தது. “யாராச்சும் கதை சொல்றீங்களா” என்றதும் பழக்கப்பட்ட கதையின் மேல் நினைவுகளை ஓட்டாமல்,சொந்தமாக கதைகளை உருவாக்கவே அனைவரும் முயற்சித்தனர். “Moral of the story is”,”இந்தக் கதையில் என்ன சொல்ல வராங்கன்னா” போன்ற வாங்கியங்கள் மெல்ல மெல்ல மறைய துவங்கியது. 10 வயதிற்கு கீழுள்ள சிறுவர்கள் இதனை எளிமையாக ஏற்றுக்கொண்டனர்,ஆனால் 10 வயதிற்கு மேலுள்ள சிறுவர்கள் அவ்வப்போது பள்ளியின் தாக்கத்தால் மீண்டும் நீதிப் போதனையின் பக்கம் செல்வதை கவனிக்க முடிகிறது.

ஒரு கதையென்றால் அதில் நீதி போதனை அவசியமா? பெற்றோர்களும்-பள்ளிகளும் ஏன் இந்த வடிவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். பள்ளிப் புத்தகங்களில் உள்ள கதைகள் ஏன் தனியாக நீதியை எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் சிறுவர்கள் ரசிப்பது என்ன? இந்தக் கேள்விகள் அனைத்தும் எப்பொழுதும் என்னுள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நீதி போதனைகள் அவசியம் தேவை,அவை தான் நல்ல உலகத்தை கட்டமைப் போகிறது என்பதே அனைவரின் நம்பிக்கை. அது உண்மையும் கூட. ஆனால் நாம் தேர்ந்தெடுத்திற்கும் இந்த வடிவம் அதற்கு உகந்ததா என்பதே கேள்வி. இந்த வடிவத்தின் மூலம் நன்கருத்துகளை சிறுவர்களின் மனதில் விதைத்திட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. கதை என்பது சிறகுகள் விரித்து பறந்து திரியும் ஒரு பறவை. அதனை கூண்டுக்குள் அடைத்து வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை தான் நாம் இப்பொழுது செய்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு பதிலாக கதைகளை சுதந்திரமாக நம்மிடையே உலாவ அனுமதிப்போம். நமது பிள்ளைக்கு எது பிடிக்கிறது எதை ரசிக்கிறார்கள் என்பதை கூடவே நின்று கவனிப்போம். முதலில் நமது சிறார்களுடன் எந்தவித திணிப்பும் எதிர்பார்ப்பும் இன்றி கதை பேச பழகுவோம். கதைகளை சிறுவர்கள் மகிழும் வண்ணம் அவர்களுக்கு எடுத்துச் செல்வோம். கதைகளை சிறுவர்கள் ரசிக்கிறார்களா , கதை கேட்க தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார்களா என்பதையெல்லாம் தொடர்ந்து அவர்களிடம் பழகும் போது கவனித்தால் அதுவே போதுமானது.

இவ்வாறு கதைகளுடன் பயணிக்கும் போது கதைகளுக்குள் சிறுவர்களும்,சிறுவர்களுக்குள் கதைகளும் முழு சுதந்திரத்துடன் சுற்றித் திரிவதை கவனிக்க முடியும். அதுவே கதை பேசுதலின் வெற்றியென சொல்வேன். கதைக்கு தேவைப்படும் போது நீதிப் போதனைகள் அதனுள் இருக்கட்டும்,அதன் எதார்த்தத்தில் அமையும் போது சிறுவர்கள் அதனை புரிந்துக்கொள்வார்கள்.

இப்படி எங்கள் குழுவில் நீதி போதனைகள் தவிர்த்து கதைகள் சொல்லிவந்ததால் , சுட்டிகள் உருவாக்கிய கதைகளில் நடந்த மாற்றங்களை உங்களுடன் அவர்களது கதைகளின் வழியாகவே பகிர்கிறோம்.

கொசு கடிச்சிடிச்சு – தன்யஸ்ரீ (வயது 4)

தன்யாவை கொசு ஒன்னு கடிச்சிடிச்சு , இரத்தம் வேற வந்திடிச்சு.சிங்கமும் புலியும் வந்து “நாங்க கடிக்கல தன்யா.கொசு தான் கடிச்சிடிச்சு” அப்படின்னு சொன்னிச்சு.உடனே கொசுக்கு ஃபோன் பண்ணி “ஏன் தன்யாவை கடிச்ச?இனிமே கடிக்கக் கூடாது” என்று சொன்னாங்.அழுவாதே தன்யஸ்ரீ,உனக்கு ஒன்னுமில்லைன்னு டாக்டர்ஸ்லாம் சொன்னாங்க.அப்புறம் சரியாடிச்சு.

மஞ்சள் பூ – அனுமித்ரா (வயது-4)

ஒரு நாள் அனுமித்ரா ஒரு மஞ்சள் பூவை பார்த்தாளாம். அது ரொம்ப அழகா இருந்திச்சாம். ஆனால் அந்த பூவுல வாசனையே வரலையாம். ஏன் வசனை வரலைன்னு அவளும் யோசிச்சு யோசிச்சு யோசிச்சு யோசிச்சு பார்த்தாளாம். ஏன் தெரியுமா ? அவள் ரொம்ப பேசுவாளாம்,அதான் வாசனையே வரலையாம்.

படகு – நிரஞ்சன் (வயது-4)

ஒரு நாள் நான் படகுல போயிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு முதலை வந்திச்சு. நான் பேலன்ஸ் பண்ணிட்டு அப்படியே போயிட்டேன். அப்புறம் நான் வந்து தண்ணிக்குள்ள இறங்கிட்டேன். படகு என்னை விட்டு போயிடுச்சு. நான் அப்படியே வந்துட்டு இருந்தேன். அங்க ஒரு மரம் இருந்திச்சு. அதுலேந்து நான் ஒரு இலையை பரிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

நன்றி : குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்விற்காக எழுதியது.

Leave a comment