குழந்தைகளிடம் கதை சொல்லுவதென்பது மிகவும் எளிதான காரியமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் கள நிலவரம் அதுவல்ல. நமக்கு எவ்வளதுதான் பரிட்சயமான எளிதான கதையாக இருந்தாலும், குழந்தைகள் முன் கதை சொல்ல நிற்கும் பொழுதுதான் நமக்குள் ஒரு இனம் புரியாத நடுக்கமும் பல குழப்பங்களும் வரும். முதலில் குழந்தைகளை நம் வசப்படுத்துவதென்பது சாதாரண காரியம் அல்ல. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குணாதியசத்தை கொண்டிருக்கும். ஒரு குழந்தை சிரித்துக்கொண்டே இருந்தால் இன்னொன்று அழுது கொண்டே இருக்கும். ஒரு குழந்தை அமைதியாகவே இருக்கும் மற்றொன்று பேசிக்கொண்டே இருக்கும். ஆனால் எல்லாக் குழந்தைகளையும் ஒரு புள்ளியில் நாம் இணைத்துவிடலாம். அது அந்த குழந்தைத்தன்மை. அந்த புள்ளியைக் கண்டு பிடிப்பதில்தான் கதை சொல்லியின் திறமை ஒளிந்திருக்கிறது. அதுவே அவர்களுக்கான மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது. அந்தத் திறமை எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை. வாய்த்தவர்கள் சிறந்த கதை சொல்லிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கதையைச் சொல்லும் விதத்தில் தான் குழந்தைகளை நாம் நம் பக்கம் ஈர்க்க முடியும். ஒரு கதை சொல்லியானவர் கதைகளில் வரும் அனைத்து கதாபாத்திரமாகவே மாறவேண்டிய கட்டாயம் இங்கு உள்ளது. குழந்தைகள் கேட்பதை விடவும் பார்ப்பதை விரும்புபவர்களாக உள்ளனர். ஆகவே கதையில் வரும் பூனை எப்படி கத்தும், நடந்து கொள்ளும் என்பதை சொல்லுவதை விட, அந்த பூனையாகவே நாம் மாறினால் தான் நம் கதை குழந்தைகளை சென்றடையும். சிங்கம் கர்ஜிக்கும் என்பதை விடவும் கர்ஜிக்கும் சிங்கமாக தோன்றினால் தான் குழந்தைகளிடம் செல்லுபடியாகும்.
இன்னொரு விஷயம் குழந்தைகள் நிஜங்களுக்கும், உண்மைக்கும் அப்பாற்பட்டவர்களாக உள்ளனர். நாம் அவர்களுக்கு சொல்லும் கதைகளில் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி லாஜிக் இல்லாமல் கதையை சொன்னால் அதை ஆராய்ந்து பார்ப்பவர்களாக குழந்தைகள் பெரும்பாலும் இருக்கப்போவதில்லை. கதையில் எறும்பும், யானையும் பேசிக்கொள்ளுமானால் , அது அவர்களை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை. மாறாக அவர்கள் வளர வளர அவைகள் மிருகங்கள், அவைகள் மனிதர்கள் மாதிரி பேசமாட்டார்கள் என்று தெரிந்து கொள்வார்கள். அந்த விஷயத்தை அவர்களிடம் நாம் இப்பொழுதே திணிக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
இன்னொரு புறம், கதைகளை நிஜங்களின், நாம் பார்க்கும் சம்பவங்களின் கூடே பொருத்தி பார்க்கும் மனோபாவமும் குழந்தைகளிடத்தில் இருக்கிறது. கதையில் கேட்ட விஷயத்தை பொதுவெளியில் பொருத்தி பார்ப்பார்கள். உதாரணத்திற்கு, நம் கதையில் ஒரு ரயில் வண்டியை ஒரு கதாப்பாத்திரமாக கொண்டு வந்தால், எப்போதாவது ரயில் நிலையத்திற்கு போகும் பொழுது அந்த ரயில் வண்டியா இது என்று கேட்டுக் கொள்வார்கள்.
கதைகள் நம் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறது. அதனூடே அவர்களை நாம் வார்த்தெடுக்கிறோம். நாம் கண்ட, கேட்ட கதைகளை அவர்களுக்கேற்ற வகையில் நாம் கூறலாம். கதைகளினூடே அத்தனை உலகையும், உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தின் வாழ்க்கையையும் குழந்தைகளுக்கு நம்மால் எளிதில் வாழ்ந்து காட்ட முடியும். கதைகளினூடே நவரசங்களை அவர்களுக்கு பரிட்சையாக்க முடியும். அவர்களின் கற்பனைகளை கட்டுப்பாடில்லாமல் காட்சி படுத்த முடியும்.
கதைகள் கதைப்போம் – கதை சொல்லிகள் ஆவோம்