உரையாடல் எனும் கலை – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

90களில் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்பு நாம் மறந்துப் போன கலைகளில் முக்கியமானது இந்த உரையாடல் எனும் கலை. ஆம் அன்றாடம் என் கண் முன்னே நடந்தேறிய கலை இன்று மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. 90களில் நான் சிறுவனாக தெருக்களில் ஓடித் திருந்தப் பொழுது எனது சுற்றத்தில் உரையாடல் கலை செழித்திருந்தது. நித்தம் தெருவினுள் யாரேனும் ஒருவர் வீட்டில் கூடி பெண்கள் பேசுவார்கள். தினம் பேச அவர்களிடம் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தது.பெண்களைப் போலவே ஆண்களும் தங்கெளுக்கென நேரம் ஒதுக்கி உரையாடிக்கொள்வார்கள். அலுவலகம்,தோட்டம்,மரம் வளர்ப்பு,உள்ளூர் பிரச்சனை,அரசியல் என ஆண்களுக்கும் ஏகப்பட்ட விஷய‌ங்கள் இருந்தது. பெரியவர்கள் பேசிக்கொள்ளும் போது அதனருகில் கூட்டமாக விளையாடுவதற்கு கூடுதல் நேரம் கிடைப்பது சிறுவயதில் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். சிறுவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு இழுத்து வருவதைப் போல் அன்றையைப் பொழுதுகளில் சிறார்கள் தங்களது அன்னைகளை வீட்டிற்கு வழுக்கட்டாயமாக இழுத்து வந்தப் பொழுதுகள் இன்றும் நினைவுகளில் உண்டு. அவை அந்த உரையாடலில் பெரியோர்கள் எவ்வளவு ஈடுபாடுடன் இருந்தார்கள் என்பதையே காட்டுகிறது.

இந்த உரையாடல்கள் பெரியோர்களுக்கு ஒரு பொழுதுப்போக்காக மட்டுமல்லாமல் மனதளவில் நல்ல பலமாகவும் அமைந்திருந்தது. குழந்தை வளர்ப்பிலும் இந்த உரையாடலுக்கு பல முக்கியத்துவம் இருந்தது.

முக்கியமாக “கை வைத்தியம்” சார்ந்து நிறைய விஷயங்களை அந்த உரையாடல்களில் கவனித்திருக்கிறேன். சுளுக்கு,முள் எடுத்தல்,அம்மை போடுதல்,உண்ணும் போது மீன் முள் தொண்டையில் மாட்டுதல் என அந்தப் பட்டியல் நீள்கிறது. குழந்தைகள் குறித்த பல சந்தேகங்களுக்கு விடை தேடும் முதல் இடமாகவும் இந்த உரையாடல் இருந்தது. ஆனால் இந்த உரையாடல்களில் குழந்தைகளை ஒப்பீட்டு பார்க்கும் முறையும் ஒரு குறையாக இருந்ததை மறுப்பதர்க்கல்ல‌.

தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நேரம் அதிகமாக அதிகமாக‌ உரையாடல்களுக்கான நேரம் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. அதன் பிறகு தொலைக்காட்சிகளின் பிம்பங்களோடு உரையாடி வாழ துவங்கிவிட்டோம் என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு தொலைக்காட்சி (யூட்யூப் பிம்பங்களையும் சேர்த்துக்கொள்ளவும்) பிம்பங்களை காட்டி சோறு ஊட்டுகிறோம். தொலைக்காட்சியில் வரும் பாடல்,ஆடல் போட்டியும் கலைகளாகவும் திறமையாகவும் பார்க்கிறோம். இந்தச் சூழலில் உண்மையான ஆக்கப்பூர்வமாண உரையாடல் கலையை மீண்டும் துவங்கிட நினைத்தோம். அதன் சிறு முயற்சியாக‌ “குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு” தொடர்ந்து மாதந்தோறும் கோவையில் நடைப்பெற்று வருகிறது.

குழந்தைகள் உலகம் குறித்து அக்கறை கொண்ட வெவ்வேறுத் துறை சார்ந்த நண்பர்கள் ஒன்று கூடி பல‌ தலைப்புகளில் உரையாடி வருகிறோம். ஜான் ஹோல்ட்டின் “குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்”,பெ.தூரனின் “குழந்தை உள்ளம்”,ஆண்டரசன் கதைகள் என புத்தகங்களின் துணையோடு பயணிக்கிறோம். இயற்கையாக கற்கும் ஆர்வம்,நஞ்சில்லாத உணவு,காற்றோடமான வெளிச்சமான வீட்டு சூழல், குழந்தைகளின் உரிமைகள்,கதை சொல்லுதல்,கிறுக்கல்கள்,ஓவியங்கள்,விளையாட்டுக்கள்,நாடகம்,பள்ளி சூழலியல்,மாண்டசரி கல்வி முறை,ஜனநாயக கல்வி முறை போன்ற‌ பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தொலைக்காட்சி குறித்து இந்த நிகழ்வில் உரையாட உள்ளோம்.

நிகழ்வில் பங்குப்பெற்ற தோழி ஒருவர் குறிப்பிட்ட ஒரு விசயம்..

“வீட்டை விட்டு வெளியே செல்லும் இடங்களில் கைப்பேசி இருந்தால் தான் சிறார்களை சமாளிக்க முடியும் என்று நம்பி இருந்தோம் ஆனால் பெரியவர்களின் நிகழ்வு என்ற போதும் எந்த ஒரு சுட்டிகளும் கைப்பேசிய தேடாமல் இருந்தது ஆச்சரியத்தை கொடுத்தது” என்றார். இதான் இதுப் போன்ற உரையாடல்களின் அடையாளம் என்று நம்புகிறோம். தொடர்ந்து இதுப் போன்ற நிகழ்வு பல இடங்களில் நடந்திட வேண்டும். அதன் தொடக்கப் புள்ளியாக இந்த நிகழ்வு இருக்கிறது.

கோவையில் நடக்கும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக பெங்களூரிலும் நடத்திட யோசித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் அதற்கானத் தகவல்கள் அறிவிக்கப்படும். இந்த நிகழ்வின் மற்றொரு பரிமாணம் தான் இந்த இணையதளம். சிறார் உலகினைப் பற்றி சிந்திக்கும் அனைத்து நண்பர்களையும் இணைத்திடவே இணையதளத்தினை துவங்கியுள்ளோம். தொடர்ந்து வெவ்வேறு தளங்களில் உரையாடுவோம். உரையாடல் எனும் கலையை மீட்டெடுப்போம்.

Leave a comment