குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்வு மாதத்திற்கு ஒரு முறை கோவையில் உள்ள தாமஸ் கிளப் அரங்கில் நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் குழந்தைகள் சார்ந்த ஒரு புத்தகத்தை மையமாக வைத்து கலந்துரையாடல் நிகழ்வு இங்கு நடக்கிறது. இந்த முறை நிகழ்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட புத்தகம் “ஆண்டர்சன் கதைகள்”.
அட்டைப்படம் எவ்வாறு இருக்கும் என்று கூட எங்களுக்கு தெரியாது. புத்தகத்தை வாசித்தவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்வதற்காவே பயணித்தோம் பெங்களூரிலிருந்து கோவைக்கு கொளுத்தும் உச்சி வெயிலில். ஒரு நாள் முன்னதாகவே சென்று விட்டோம்.
ஏப்ரல் 1, ஞாயிறு காலை தாமஸ் அரங்கத்திற்குள் நுழைந்தோம். ஒன்றிரெண்டு புதிய முகங்களை தவிர மற்றவர்கள் எல்லாருமே நிகழ்விற்கு பழக்கமானவர்கள். கிட்டத்தட்ட குடும்பமாகவே அனைவரும் மாறி குசலம் விசாரித்த பிறகு நிகழ்விற்குள் சென்றோம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெங்கட் அவர்கள், கதைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை தன்னுடைய அனுபவங்களின் வாயிலாக துவக்க ஆரம்பித்ததும் நிகழ்ச்சிக்குள் சென்றோம் அனைவரும்.
குழந்தைகள் எவ்வாறு கதை சொல்லுகிறார்கள், அவர்களின் கற்பனை எவ்வளவு விரிந்திருக்கிறது என்பதை அவர் சந்தித்த பள்ளி குழந்தைகள் கூறிய கதைகளின் மூலம் மெல்ல தொடங்கினார். நிகழ்வு முழுவதும் விளையாட்டை மையப்படுத்தி செல்லும், வெறும் உரையாடலாக மட்டுமே இருக்காது என்றதும் உற்சாகம் பிறந்தது அனைவருக்கும்.
நாம் ஏறக்குறைய மறந்தே விட்ட “ஒரு ஊருல ஒரு நரி அதோட சரி” போன்ற கதைகளை கேட்க துவங்கிய போது பாட்டி கதைகள் சில நியாபகத்திற்குள் வந்து சென்றது.
முதல் விளையாட்டு. வார்த்தை ஓன்று அட்டையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். அதை வைத்து கதை ஒன்றை உருவாக்க வேண்டும். மிகவும் எளிமையான வார்த்தைகள் தான். ஆனால் ஒரு சில வரிகளுக்குள் மேல் கற்பனையை செலுத்த முடியாமல் திணறும் போது தான், பெரியவர்களின் கற்பனைகள் , குழந்தைகளுக்கு முன்னால் எவ்வளவு வறண்டு போய் இருக்கிறது என்று உறைத்தது.
குழந்தைகளின் கதைகள் , கற்பனைகள் சூழ் உலகு. அது மிகவும் பரந்து விரிந்தது என்பது அவர்களது கதைகளின் மூலம் வெளிப்படும். ஆண்டர்சன் கதைகள் , குழந்தைகளின் கற்பனைகளை போன்றது . எந்த வரையறையும் அற்றது என்ற சிறு குறிப்புடன் ஆண்டர்சன் கதைகளுக்குள் பயணம் செய்ய தயாரானோம் .
ஆண்டர்சன் கதைகளை வாசித்த நண்பர்கள் சிலர், கதைகளைப் பற்றி கூற ஆரம்பித்தனர். ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது சில வார்த்தைகளை மட்டுமே நம் மனம் உள்வாங்கும். அதை நாம் மற்றவர்களிடம் பகிரும் போது வெகு சில வார்த்தைகள் மட்டுமே வெளியில் வந்து சுருங்கி விடும். ஆனால் கதைகளை கூறியவர்கள் அனைவரும் அந்த கற்பனைகளை எடுத்துக் கூறிய விதத்தில் இருந்தே இந்தப் புத்தகத்தை எப்படியேனும் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர். கதைகளில் கற்பனையா, இல்லை கற்பனைக் கதைகளா என்று வியக்க வைக்கும் அளவிற்கு கற்பனைகள் வழிந்தோடியது கதைகளில். கேட்கக் கேட்க அளவில்லா ஆனந்தம். கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது என்றால் வாசிக்கும் போது கட்டாயம் நமது சிறகுகள் விரியும்.
ஆண்டர்சன் கதை ஓன்று . “மன்னரின் புத்தாடைகள்”. தன்னுடைய வேலைக்குத் தகுதியானவர்கள் கண்ணுக்கு மட்டுமே புலப்படக் கூடிய ஆடை நெய்யும் வல்லுநர்கள் , மன்னனுக்காக ஆடை நெய்ய வருகின்றனர். மிகவும் மெல்லிய, அழகிய வேலைப்பாடுடைய , விலை மதிப்பில்லாத துணியை நெய்ய மன்னரும் விரும்புகிறார். ஆடை வல்லுனர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். மேலும் தகுதி இல்லாத முட்டாள்கள் கண்களுக்கு தாங்கள் நெய்யும் ஆடை கண்ணுக்கு தெரியாது என்றும் கூறி விடுகிறார்கள்.
இல்லாத ஒரு துணியை நெய்யத் தொடங்க ஆரம்பித்து , அந்த இல்லாத துணியை பார்க்க வரும் ஒவ்வொருவரும் அந்த துணியின் வேலைப்பாடுகளை பார்த்து சிலாகித்து அதன் அருமை பெருமைகளை மற்றவர்களிடம் எடுத்து உரைக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் பயம். துணி இல்லை என்று கூறினால் எங்கே நம்மை தகுதி இல்லாதவர்கள் என்று கூறி விடுவார்களோ என்று. ஒரு நல்ல நாளில் மன்னரும் ஆடையை பார்க்கின்றார் , அவரும் ஆச்சரியப்பட்டு சிலாகிக்கின்றார். அந்த உடையையும் உடுத்தி வீதி உலா வருகின்றார். இல்லாத உடையை இரண்டு பேர் கீழே விழுந்து விடாமல் இருக்க பிடித்து வருகின்றனர். ஒரு சிறுவன் மட்டும் ஏன் மன்னர் ஆடையின்றி நடக்கின்றார் என்று கேட்கும் போதுதான் அனைவருக்கும் உரைக்கின்றது. இருந்தும் ஊர்வலத்தை நிறைவு செய்ய வேண்டுமே என்று மன்னரும் நடக்கின்றார் , அவரது மேலங்கியை பிடித்துக் கொண்டு வேலையாட்களும் நடக்கின்றனர். கேட்கும் போது மிகவும் குது கலத்தைக் கொடுத்த கதை இது. தற்போதைய நாட்டு நிலைமை மிகவும் சரியாக பொருந்தக் கூடிய ஓன்று.
ஆண்டர்சன் கதை இரண்டு . “இளவரசியும் பயறு மணியும்” . இந்த கதையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மென்மையானவள் எந்த அளவிற்கு நுட்பமானவள் என்பதை அதீத கற்பனையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஒரு சிறு பயறு மணியை பல அடுக்கு பஞ்சு மெத்தைகளின் அடியில் வைத்திருந்த போதும் அவளால் அதை துல்லியமாக உணர முடிந்து தனது உறக்கத்திற்கு இடையூறாக இருந்தது வெகு அருமையான கற்பனை.
ஆண்டர்சன் கதை மூன்று. மச்சக்கன்னி . இந்த கதையை கேட்கத் துவங்கியபோது கடலுக்குள் உள்ள பாதாள அழகிய உலகத்திற்கு சென்று அங்குள்ள அழகிய அரண்மனையின் அழகிய இளவரசிகளின் தங்கையான பேரழகி மச்சக்கன்னி அவளுடைய விலை உயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான சந்தோஷமான வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் விவரிக்கும் போது நமது கற்பனைகளும் விரிந்தது. நாட்டு இளவரசனின் மீது ஆசை கொள்ளும் மச்சக்கன்னி , இளவரசனை திருமணம் செய்வதற்காக சாபங்களை வாங்கி கொண்டு, கால்களை பெற்று இளவரசனுடன் புறப்படுகிறாள். ஆனால் அவனோ இவளை அந்தப் புறத்தில் ஒரு பெண்ணாக மட்டுமே வைத்துக்கொண்டு , மற்றோரு பெண்ணை திருமணம் செய்து விடுகிறான். இவன் வேறு ஒரு திருமணம் செய்ததால் சூரியன் உதிக்கும் போது மச்சக் கன்னியின் தலை வெடித்து விடும் சாபம் இருக்கிறது.
மச்சக் கன்னியை காப்பாற்ற மற்ற சகோதரிகள் தாங்கள் சாபங்களை பெற்று , ஒரு வரம் இவளுக்காக பெற்றுக் கொண்டு வந்தாலும், அந்த வரம் இளவரசனை கொன்றால் மட்டுமே இவள் காப்பாற்றப் படுவாள் என்று தெரிய வரும் போது , தனக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து சூரிய உதயத்தில் வெடித்து சிதறி விடுவாள் என்று கதையை முடித்தார். கேட்ட அனைவருக்கும், கதையின் தாக்கம் நெடுநேரம் இருந்தது. கதையை வாசித்தவர், கதையை வாசித்து முடித்ததும் தன்னால் உறங்கவே முடியவில்லை என்று கூறியது கதையை எந்த அளவிற்கு உள் வாங்கியிருக்கிறார் என்பதை உணர முடிந்தது.
வெறும் கதையை மட்டும் கூறாமல், அதை சொல்பவர்கள் மற்றும் கேட்பவர்களின் நேர்மறை எதிர்மறை விமர்சனங்களை பகிரும் தளமாகவே இருந்தது நிகழ்வு.
அடுத்து மீண்டும் ஒரு கதை விளையாட்டு. இருவர் வேண்டும். ஒரு காகிதத்தில் இலக்கில்லாமல் படம் ஒருவர் வரைய வரைய, மற்றொருவர் தன்னுடைய எண்ண ஓட்டத்தின் படி கதைகளை கொண்டு சொல்ல வேண்டும். மிகவும் அற்புதமாக இருந்தது. புள்ளி, கோடு , வட்டம், வளைவு என இலக்கில்லாமல் வரைய வரைய கதைகள் ஒவ்வொரு கிறுக்கல்களுக்கும் அழகாக வந்து சேர்ந்தது. திருப்பு முனையாக, நீங்கள் வரைந்ததை வைத்து கதையை உருவாக்குங்கள் என்று வரைந்தவர்களையே கதை சொல்ல வைத்து விட்டார் அண்ணன் வெங்கட். குட்டி சிறுவன் ஒருவன் முதல் முறையாக நிகழ்விற்கு வந்திருந்தான் தனது அம்மா மற்றும் தங்கையுடன். கையில் எழுதுகோலை வாங்கி எறும்பு, குருவி, வேடன் கதையை சுவரில் ஒட்டப்பட்ட காகிதத்தில் அற்புதமாக வரைந்து அனைவரையும் எளிதாக ஊகிக்க வைத்தான்.
கதைகளை உருவாக்குவதில் எந்த வரைமுறையும் இல்லை. கற்பனை குதிரையை மட்டும் தட்டி விடுங்கள் என்று நிகழ்வில் நடைபெற்ற கதை விளையாட்டுகள் உறுதி செய்தது. ஒரு வார்த்தையை மட்டும் வைத்து கதை சொல்லல், ஒருவர் கிறுக்குவதை பார்த்து மற்றொருவர் கதை சொல்லல், எந்த ஒரு இலக்குமில்லாமல் தான் கிறுக்கியதை வைத்து தானே கதையாக சொல்லல், கதைகளை படங்களின் மூலம் விளக்க முற்படுதல் என அடுத்தடுத்து நிகழ்ந்த விளையாட்டுகளின் மூலமாக அனைவருமே ஒரு சிறு கதை சொல்லியாக மாறி விட்டோம் . கதைகள் பற்றிய இறுக்கங்களும் , பார்வையாளர்கள் குறித்த அச்சங்களும் சுக்கு நூறாகி போய் விட்ட தருணம் இது .
இடையிடையே கலந்து கொண்டவர்களுக்காக சுக்கு மல்லி காப்பி, வடை, மதிய உணவு எல்லாம் சேர்ந்து கொண்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு உள்ளே வந்தார் அண்ணன் ராம்ராஜ் அவர்கள். தயக்கங்களையும் வெட்கங்களையும் கூச்சங்களையும் மூட்டைகட்டி ஒதுக்கி வைத்து விட்டு அனைவரையும் வந்து நிற்க சொன்னார். ஒரு இரண்டு மணி நேரங்கள். நாங்கள் நாங்களாகவே இல்லை. கதை ஆரம்பித்தது கூட தெரியாமல் கதையின் ஊடே நாங்கள் பயணம் செய்தோம். பிறந்த கொக்குகளானோம், பேசப் பழகினோம், நடக்கப் பழகினோம், பாடப் பழகினோம், பறக்கத் தொடங்கினோம். எல்லைகள் எதுவுமில்லை இப்போது எங்களுக்கு இங்கு. அனைவருமே கொக்குகள் . சிறகடித்து வானில் பறக்க ஆரம்பித்தோம். பறந்தோம் பறந்தோம் பறந்து கொண்டே இருந்தோம் . கதையின் மற்றொரு வடிவத்தை எளிமையாக அனைவருக்குள்ளும் கொண்டு வந்துவிட்டார். பறந்து களைத்து அனைவரும் அமரும் போது, அப்படி ஒரு கால்வலி. ஆனால் இந்த வலி மிகவும் பிடித்திருந்தது.
ஒரு நாற்காலி தங்களுக்குள் முன்னால் இருக்கும் போது அதை எவ்வாறெல்லாம் உருவகப் படுத்துவார்கள் என்ற கதை நாடக விளையாட்டு. நகைச்சுவை , கேலி , கோவம் , பாசம் , பரிவு என ஒவ்வொரு விதமான கற்பனைகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் வர ஆரம்பித்தன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்துவமான கற்பனைகள் தானாகவே வந்து நிறையத் தொடங்கியது நாற்காலியை சுற்றி .
நிகழ்வின் இறுதியில் குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கதை சொல்லல் குறித்த சிறு நூல் ஓன்று வெளியிடப் பட்டது. இந்த நிகழ்வு உரையாடல் என்ற வார்த்தையை தாண்டி கதை சொல்வதற்கான ஒரு பயிற்சி பட்டறையாகவே மாறி விட்டது.
இது பெரியவர்களுக்கான நிகழ்வுகள் , குழந்தைகளுக்கு இங்கு வேலையில்லை, பெரியவர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களாக குழந்தைகள் இருப்பார்கள் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் வரையறையும் குழந்தைகளுக்கு இங்கு இல்லை. ஒரு சிறு கடின் சொல்லை கூட எவரும் குழந்தைகளின் மீது பிரயோகிப்பதில்லை. பெரியோர்களும் உரையாடுவார்கள், குழந்தைகளும் உரையாடுவார்கள். சத்தம் எழுப்புவார்கள், கவனத்தை திசை திரும்புவார்கள். எல்லாமே செய்வார்கள். எல்லாவற்றையும் ஒரு சிரிப்புடன் பங்கு பெறுகிறவர்கள் கடந்து செல்வது நாம் தலைப்பிற்கு பொறுத்தமான மிகச் சரியான இடத்தினில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறது . இங்கு வந்தால் மட்டும் போதும். மற்றவை எல்லாம் தாமாகவே நடக்கும்
“நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெங்கட் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்”
மிகுந்த மன நிறைவுடன் நிகழ்வை அசை போட்டுக் கொண்டே மீண்டும் பெங்களூருவை நோக்கி பயணத்தை தொடங்கினோம்.