வாழ்க்கையின் கலைடாஸ்கோப் – உதயசங்கர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

வாழ்க்கை விசித்திரமானது. நாம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத அனுபவங்களின் பேராறு. மனிதர்களே அந்த அனுபவங்களை உருவாக்குபவர்களாகவும் அந்த அனுபவங்களினால் மகிழ்ச்சியடைபவர்களாகவும், வருந்துபவர்களாகவும், இருக்கிறார்கள். அந்த அனுபவங்களின் வரலாற்றையே இலக்கியமும் வரலாறும் தங்களுடைய மொழியில் சொல்கின்றன. எனவே தான் வாழ்க்கையைப் போலவே இலக்கியமும், வரலாறும் கூட விசித்திரமான வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. நேற்றும் இன்றும் நாளையும் வெவ்வேறு சிறகுகளை விரித்து இலக்கியத்தின் கிளையில் அமர்ந்து தங்கள் சிறகுகளைக் கோதிக்கொள்கின்றன. எப்படிப்பட்ட காலமாக இருந்தாலும் அங்கே மனிதன் தான் நாயகனாக இருக்கிறான். யேசுவாக, புத்தனாக, மார்க்ஸாக, காந்தியாக, அம்பேத்கராக, பெரியாராக, ஏன் ஹிட்லராக, முசோலினியாகக்கூட இருக்கிறான். வரலாற்றில் பதியப்படாத மனிதர்கள், வரலாறு பதிய மறுத்த மனிதர்கள், வரலாறு பதிய மறந்த மனிதர்கள், என்று எல்லா மனிதர்களுமே அந்த பேராற்றின் கரைகளில் கால்களை நனைத்துக் கொண்டு தலைசீவி அழகு பார்க்கிறார்கள்.

ஓடும் நீர் அவர்களை மட்டுமல்ல இதுவரை அந்த ஆற்றில் குளித்த அத்தனை பேரின் முகங்களையும் காட்டுகிறது. எல்லாமுகங்களிலும் தன் முகத்தையும் தன் முகத்தில் எல்லா முகங்களையும் பார்க்கிறான். இலக்கியம் இந்த முகங்களின் பின்னாலிருக்கும் மானுட உணர்வையே மையமாகக் கொண்டிருக்கிறது. அன்பும், குரூரமும், பொய்யும் புரட்டும், சத்தியமும், காதலும் கயமையும் எப்படி ஒரே மானிடனிடமிருந்து வருகிறது. அவன் தான் வாழ்க்கையின் பேராற்றிலிருந்து முத்துகளையும் வெறும் சிப்பிகளையும் சில சமயம் சகதியையும் அள்ளிக்கொண்டு வந்து நம்முன்னால் கொட்டுகிறான். அவன் தான் ஊனை உருக்கும் அன்பினால் நெகிழவைக்கிறான். அவன் தான் கொலைக்கருவியால் சன்னஞ்சன்னமாக சித்திரவதையும் செய்கிறான். இலக்கியம் அந்த மனதினைப் புரிந்து கொள்ளவே முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. அதற்கான காரணங்களை வியாக்கியானம் செய்து கொண்டேயிருக்கிறது.

எப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. சோசோ அப்படியான முயற்சி தான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நாம் இருக்கலாம். இன்னமும் கூட சோசோவுக்கு பன்முகங்களும் இருக்கலாம்.

நமக்குள் இருக்கும் சோசோவை நாம் கண்டறியும் முயற்சி. சோசோ அந்த முயற்சிக்குத் துணை செய்வான்.

சோசோவைச் சந்தியுங்கள்! எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள்!

நன்றி.

உதயசங்கர்

ஓங்கில் கூட்டத்தின் இளையோருக்கான(12+ வயது) 9வது புத்தகம், எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் எழுதிய “சோசோவின் விசித்திர வாழ்க்கை” தற்போது அமேசான் கிண்டிலில் கட்டணமின்றி கிடைக்கிறது. நண்பர்கள் அவசியம் உங்கள் பகுதி இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
அமேசான் சுட்டி : https://www.amazon.in/dp/B09KWZMJV8

குறிப்பு:
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் கொண்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிட்டுவருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.

தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com

வெளியீடுகள்: https://amzn.to/3vfOvqX

Leave a comment