காகித மடிப்புக் கலையின் கதை – காத்தவராயன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டி, ஒரே நாளில் ஆயுள் முடிவடையும் செய்தித்தாள் போன்ற, ‘பயன்படாது’ என்ற நிலையை அடையும் காகிதங்களை உயிருள்ள உருவங்களாக உருவாக்கும் கலையைத் தனது முழு நேரப் பணியாகச் செய்து வரும் கலைஞர் தியாக சேகர். மாணவர்களுக்கான தோழமை என்பவற்றுள் பொம்மைகள் முதன்மையானவை. அவர்கள் பொம்மைகளை அதிகமாக நேசிக்கிறார்கள். அதிலும் அவர்களின் கைகளால் உருவாக்கப்பட்டவை அல்லது வடிவமைக்கப்பட்டவை என்றால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடைவார்கள். நாம் பொம்மைகளை வாங்கித் தருவதைவிட பொம்மைகள் செய்யும் கலையை அவர்களுக்குக் கற்றுத் தந்து அதன் வழியே மாணவர்களின் இயல்பான கற்றலுக்கு வழிவகுக்க, படைப்பாற்றல் திறனை வளர்த்து எடுக்க, கற்றலின் மகிழ்ச்சியைக் கூட்ட இந்த காகித மடிப்புக்கலை கண்டிப்பாகக் கை கொடுக்கும் என்பதில் வலுவான நம்பிக்கை உடையவர் தியாக சேகர்.

காகித மடிப்புக் கலையை வழக்கமான தளங்களில் கொண்டு செல்வதோடு மலைக்கிராமங்களின் குழந்தைகள், மலைக்கிராம மூதாட்டிகள், முதியோர் இல்லங்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைத்துத் தளங்களிலும் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார் தியாக சேகர். அதோடு இந்தப் புத்தகத்தின் மூலமாக ஓரிகாமி தொடர்பான தோற்றம், வளர்ச்சி நிலைகளையும் ஆவணப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் காகித மடிப்புக் கலை பற்றி வெளிவந்துள்ள நூல்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. ஓரிகாமி கலையின் மூலம் உருவங்கள் செய்யப்படும் முறைகளை விளக்குகின்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன; ஆனால் ஓரிகாமியின் தோற்றம், வளர்ச்சி, பரவல்முறை, பயன்பாட்டுமுறை, வடிவங்களின் வகைகள், ஜப்பானில் வேரூன்றிய விதம், அது அடைந்து இருக்கின்ற புதிய பரிமாணங்கள் ஆகியவற்றை எட்டுத் தலைப்புகளில் அவருக்கே உரிய முறையில் கொண்டு செல்வது சிறப்பாக உள்ளது.

ஓரிகாமியின் அவசியத்தைக் கூறும்போது பெருவெடிப்புக் கொள்கையில் துவங்கி பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் ஏற்படும் மன அழுத்தம், வாழ்வியல் முறைகளில் ஏற்படும் கோபம், வெறுமை, பதட்டம் போன்ற மனித உணர்வுகளில் இருந்து பாதுகாக்கவும்; இத்தகைய இன்னல்களில் இருந்து அவர்களை மீட்டுருவாக்கம் செய்து இயல்பான நிலைக்குக் கொண்டு வருவதற்கும் தேவையான ஆற்றல் கலை இலக்கியத்திற்குத் தான் உண்டு என்று கூறுவதன் மூலம் தன் நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கிறார்.

பாரம்பரியப் பெருமை மிக்க கலையாக தமிழகத்தின் வீர விளையாட்டாகத் திகழும் சிலம்பம் மீண்டும் புத்துயிர் பெற்று பரவலாகி வரும் வேளையில் மத்திய அரசின் கேலோ இந்தியத் திட்டத்தின்கீழ் சிலம்பத்தை அங்கீகரித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஜப்பானின் காகித மடிப்புக் கலையை மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் முன்னெடுத்துச் செல்லும் இந்நூலின் ஆசிரியர் தமிழகத்தில் மரபுக் கலையான பனை ஓலைப் பின்னலையும்  பாதுகாப்பதோடு, அது சார்ந்து இயங்கும் மூத்த கலைஞர்களிடமிருந்து அனுபவரீதியிலான தொழில்நுட்பங்களை இளைஞர்களிடம் கை மாற்ற வேண்டிய கட்டாயத்தை இந்நூலின்வழி வெளிப்படுத்துகிறார்.

ஓரிகாமி என்றாலே கொக்கு வடிவம் முக்கியத்துவம் பெறும். கொக்கு என்றாலே சடகோ சசாகி சிறுமி நினைவுக்கு வருவாள். தியாக சேகர் இரண்டாம் உலகப் போரில் ஆரம்பித்து ஜப்பான் நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரிகாமியின் கொக்கு சார்பான பாடம் அமைத்திருப்பது வரையிலான வரலாற்று நிகழ்வுகளை அழகாக வரிசைப் படுத்தி இருக்கிறார். இந்த நூல் ஒரு படைப்பாளியின் எண்ணம், கனவு, லட்சியங்களைக் கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார்.

மாணவச் செல்வங்கள் இந்நூலின் மூலம் காகித மடிப்புக்கலையின் வரலாற்றை அறிந்து, மேலும் மகிழ்வுடன் உங்கள் காகித பொம்மைகளை இவ்வுலகிற்குப் பரிசளியுங்கள்.

நன்றி,
காத்தவராயன்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

அமேசான் கிண்டிலில்: https://www.amazon.in/dp/B09GTPTDDX

குறிப்பு:
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது. நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட்டம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் கொண்டுவருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிட்டுவருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் எனப் பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கிவருகிறது.

தொடர்புக்கு: editor.oongilkootam@gmail.com

வெளியீடுகள்: https://amzn.to/3vfOvqX

Leave a comment