டோட்டோ சானும் ஷின் சானும் : சிறார் உலகம் சில புரிதல்கள் – விஷ்ணுபுரம் சரவணன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“ஏற்கெனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாகவே அவர்களை வளர விடுங்கள். அவர்களின் ஆவல்களை அடக்காதீர்கள். கற்பனைகளை நொறுக்காதீர்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவையை விடப் பெரியவையாகக்கூட இருக்கலாம் “

ஜப்பானிய கல்வியாளர் சோசாகு கோபயாஷி

சிறார் உலகை மிக நெருக்கமாகப் பெரியவர்களால் உணர வைத்த நூல்களில் குட்டி இளவரசனுக்கும் டோட்டோ சானுக்கு முக்கிய இடமுண்டு. இந்த இருநூல்களிலும் பல்வேறு அடுக்குகள் இழையோடும். அவைதாம் பலமுறை வாசித்தாலும் புதிய திறப்புகளை அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன.

சமீபத்தில் யதேட்சையாக டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி நூலைப் படிக்க நேர்ந்தது. முதன்முறை வாசிக்கையில் ஏற்படும் ஈர்ப்பும் புரிதலையும் அளித்தது. இத்தனைக்கு கடந்த பத்தாண்டுகளில் ஏழெட்டு முறையாவது இந்நூலை வாசித்துள்ளேன். ஒருமுறை டோட்டோ சானை பின்தொடர்ந்தும், இன்னொரு முறை தலைமை ஆசிரியர் கோபயாஷி பின்தொடர்ந்தும், மற்றொருமுறை டோட்டோ சானின் அம்மாவின் பார்வையிலுமாக படித்திருக்கிறேன்.

இந்த முறை என்னை வெகுவாக ஈர்த்தது யூரித்மிக்ஸ் எனும் பயிற்சி முறை. இசைக்கும் குழந்தைகளின் பழகுமுறைக்கும் உள்ள உறவை மிகத் துல்லியமாகக் கணித்து, உருவாக்கப்பட்ட முறையே யூரித்மிக்ஸ். ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞரும் ஆசிரியருமான எமிலி ஜாக்குவஸ் டால்குரோஸ்’ உருவாக்கிய தாளப்படிப்பே யூரித்மிக்ஸ். குழந்தைகள் ஆடுவதையும் ஓடுவதையும் மிக நெருக்கமாக கவனித்தே டால்குரோஸ் இம்முறையை உருவாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. டால்குரோஸ் சொல்வதாக வரும் சில வரிகள் மிக நுணுக்கமானவை.

“குழந்தைகளுக்கு எப்படி காதுகளினால் மட்டுமே அல்லாமல் மனதினால் இசையைக் கேட்பது, உணர்வது என்பதைப் பயிற்றுவிப்பது; குழந்தைகளை எப்படி இசை என்பது சுவாரஸியமற்ற, உயிரற்ற விஷயம் என்பதற்கு பதிலாக அது ஓர் இயக்கம் என்பதை உணரவைப்பது; குழந்தைகளின் நுண்ணுணர்வுகளை எப்படித் தட்டியெழுப்புவது” என்பது குறித்து டால்குரோஸ் நிறைய காலம் ஆராய்ந்தார். என்பதே அந்த வரிகள்.

1900களில் தொடக்கத்தில் இம்முறையின் சிறப்பு ஐரோப்பிய நாடுகளில் உணரப்பட்டது.  டால்குரோஸ் யூரித்மிக்ஸ் பாடத்திட்டத்தை உருவாக்கியிருந்தார். ஐந்து தொகுதிகளைக் கொண்டிருந்தது அது. கல்விக்கூடங்களில் சான்றிதழ் படிப்பாகவும் அது இருந்தது. கிராமி விருது பெற்ற டேவ் ஸ்டூவர்ட் தனது இசைக்குழுவுக்கு யூரித்மிக்ஸ் என்றே பெயர் வைத்திருந்தார். இணையத்தளத்தில் இது தொடர்பான வீடியோக்கள் ஏராளம் காணக்கிடைக்கின்றன. ஜப்பானில் டோமாயி பள்ளியைத் தொடங்குவதற்கு முன் ஓராண்டு ஐரோப்பிய நாட்டுக்குச் சென்று இம்முறையைப் பயில்கிறார் கோபயாஷி. டால்குரோஸிடம் கற்றதை கோபயாஷி தம் பள்ளியில் நடைமுறைப்படுத்தவும் செய்கிறார். இசையை மிக நெருக்கமாக உணர வைக்க யூரித்மிக்ஸ் பயன்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான காலத்தில்தான் யூரித்மிக்ஸ் முறையை பிரிட்டிஷ் பள்ளிகளில் பயிற்சியாக மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால், கோபயாஷி இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே தம் பள்ளியில் அதை செயல்படுத்தியிருந்தார்.

அவர் ஒரு பியோனா இசைக்கலைஞர் என்பதால், அவர் பியோனாவை இசைக்க, அதன் தாளக்கட்டில் மாணவர்களை நடக்க வைக்கிறார். அதைவிடவும் சுவாரஸ்யம், தாளக்கட்டுகளுக்கு மாற்றி ஆட வைப்பது. தாளம் மூன்று இசைக்கையில் மாணவர்கள் தாளம் இரண்டுக்கு ஆட வேண்டும். இதை மாணவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை அப்பள்ளி மாணவி டெட்சுகோ குரோநாகி எழுதியிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

யூத்ரிமிக்ஸ் என்பது இசையை உள்ளுணர்ந்துகொள்வதாக, ஒரு விளையாட்டாக, ஒரு பயிற்சியாக மாற்றி அமைத்திருக்கிறார் கோபயாஷி. பாடசாலையில் இது எதற்காக எனும் கேள்வி எழலாம். எந்தவொன்றையும் உணர்வுபூர்வமாக அணுகுவதற்கான பெரும் வெளியை அவர் மாணவர்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறார். ஏனெனில், அந்தப் பள்ளியே அப்படியானதுதான்.

பள்ளியின் வாசற்கதவே இளம்தளிர்களால், செடிகளால் ஆனதே. டோட்டோ சான் அந்தப் பள்ளியில் முதன்முறையாக நுழையும்போது இது “இந்தக் கேட் வளார்ந்துகொண்டே இருக்கும்”என்ற குதூகலத்தோடு வருவாள். இந்த நூலைப் பற்றிய நிறைய பேர் தமிழில்கூட எழுதியிருக்கிறார்கள். அதனால், விரிவாகச் செல்லாமல் ஒரு சில விஷயங்களைத் தொட்டுச் செல்லலாம்.

பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையே 50தான். ஒவ்வொரு வகுப்பிலும் 10 மாணவர்களே இருப்பார்கள். வகுப்பறை என்பது ரயில் பெட்டிகள்தாம். இதற்காக கோபயாஷி, பழைய ரயில் பெட்டிகளை வாங்கி வைத்திருப்பார். இன்றைக்கு எந்த வரிசையில் எந்தப் பாடத்தை நடத்துவது என்பதை மாணவர்களே முடிவெடுப்பார்கள். அதாவது காலையில் முதல் வகுப்பு கணக்கு என்றால், ஆசிரியர் கணக்குப் பாடம் நடத்துவார்.

மதிய உணவு பகுதிதான் பிரமாதம். மாணவர்கள் மதிய உணவில் கடல் உணவும், நிலத்தில் கிடைக்கும் உணவும் கட்டாயம் இருக்க வேண்டும். அதை ‘கடலிலிருந்து கொஞ்சம்; மலையிலிலிருந்து கொஞ்சம்’ என்று சொல்லப்படும். யாரேனும் இரண்டு உணவுகளில் ஒன்றை எடுத்து வராவிட்டால் அவருக்கு பள்ளியில் தலைமை ஆசிரியரே அவ்வுணவை வழங்குவார்.

வகுப்பில் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது சோர்வு அளித்தால் அருகில் இருக்கும் ஏதேனும் இடத்திற்கு நடந்து செல்வார்கள். அங்கே பார்க்கும் பறவைகள், மரங்கள், பூச்சிகள் பற்றி ஆசிரியர் பாடமாக இல்லாமல் அனுபவமாக விளக்கி வருவார்.

டோட்டோசானின் அத்தை புதுவித ரிப்பன் ஒன்றைத் தந்திருப்பார். அதை பள்ளிக்கு அணிந்துவருவாள் டோட்டோ சான். அதைப் பார்த்த இன்னொரு சிறுமி தனக்கும் அதுபோல வேண்டும் என தலைமை ஆசிரியர் கோபயாஷியிடம் அடம்பிடிப்பாள். அவளுக்காக கோபயாஷி அந்த நகரத்தில் கடைகளில் ஏறி இறங்கி தேடுவார். அந்த ரிப்பன் கிடைக்காது. அதனால், டோட்டா சானிடம் நிலைமையை விளக்கி, இனி அந்த ரிப்பன் அணிந்து வராதே என்று வேண்டு கோள் வைப்பார். அப்போது டோட்டோ சான் மனதில் “அவரது முகம் தலைமையாசிரியர் என்பதைவிட தனது மகளால் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தந்தையின் முகம்போல இருந்தது” என்று தோன்றும்.

ஒரு விவசாயி தன் வயலுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று நாற்று நடுவது முதல் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார். அவரை விவசாய ஆசிரியர் என்று மாணவர்கள் அழைப்பார்கள். தம் நிலத்தில் கொஞ்சம் இடத்தில் பள்ளி மாணவர்கள் விவசாயம் செய்ய அனுமதி தருவார். அந்தக் கல்வி ஆண்டுமுழுவதும் அந்த விவசாயியின் வழிகாட்டல் தொடரும். அதேபோலச் சமையல் எப்படிச் செய்வது என்றுகூட வகுப்புகள் நடக்கும்.

சமீப ஆண்டுகளாக நான் தொலைக்காட்சி தொடரான ஷின்சான் பார்த்துவருகிறேன். இதுவும் ஜப்பானில் நடைபெறும் கதையம்சம் கொண்ட ஒரு தொடர்தான்.

டோட்டோ சானைப் போலவே தொடக்க வகுப்புகளில் படிக்கும் மாணவன் ஷின் சான். ஷின் சான் வீட்டில் அப்பா ஹாரி, அம்மா மிட்ஷி, தங்கை ஹிமாவாரி, செல்ல நாய் ஷிரோ. ஷின் சானின் நன்பர்கள் கஸாமோ, நேனி, மசாவோ உள்ளிட்டோர்கள். இவர்கள் ஃபுட்பா கிண்டர்கார்டன் பள்ளியில் படிப்பார்கள். இப்பள்ளியின் சன்ஃப்ளவர் வகுப்பறை இவர்களுடையது.

ஷின் சானின் குறும்பு சேட்டைகளால் அந்தத் தொடர் மாபெரும் வெற்றிபெற்றது. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் இந்தத் தொடரால் ஈர்க்கப்பட்டனர். ஷின் சான் கதாபாத்திரம் குறித்த வதந்திகள் பரவும் அளவுக்கு புகழ்பெற்றது. அதாவது ஷின் சான் நிஜமான கேரக்டர் என்றும் அவனின் தங்கையை விபத்திலிருந்து காப்பாற்றச் சென்று இறந்துவிட்டான் என்றும் வதந்திகள் உருவாகின.

இப்போது நாம் ஷின்சான் தொடரிலிருந்து எடுத்துக்கொள்ளவிருக்கும் அம்சம் அவன் படிக்கும் பள்ளியைப் பற்றி. டோட்டோ சானில் வரும் டோமாயி பள்ளியில் சிறப்புகள் ஷின்சான் படிக்கும் ஃபுட்பா கிண்டர்கார்டனில் இடம்பெறும். டோட்டோ சான் பள்ளியைப் போலவே ஷின்சான் பள்ளியிலும் விவசாய நிலத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பாடம் நடத்துவார்கள்; கூடாரம் அமைக்கக் கற்றுத்தருவார்கள்; புழுக்களையும் விலங்குகளையும் நேரடியாகக் கொண்டுவந்து கற்பிப்பார்கள்; பள்ளியில் நடவும் பரமாரிக்கவும் பழக்குவார்கள்; மதிய உணவைப் பரிமாறிக்கொள்ளவும், அங்கே சமைக்கவும் பழக்குவார்கள்; ஆசிரியர்களிடம் தயக்கமின்றி பேசுவார்கள்; மலையேறப் பயிற்சி வழங்குவார்கள்; நீச்சல் பயிற்சி அளிப்பார்கள்.

இப்படி பல ஒற்றுமைகள் டோட்டோ சான் பள்ளிக்கும் ஷின்சான் பள்ளிக்கும் இடையே உண்டு. ஒருவேளை ஜப்பானிய பள்ளிகளில் இவைபோல இருக்கக்கூடும்.

டோட்டோ சானில் அந்தப் பள்ளியைப் பற்றிப் படிக்கையில் வாழ்வில் ஒருமுறையாவது அதுபோன்ற பள்ளியைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. ஆனால், ஷின்சான் தொடர் ஒருபோதும் அதைத் தரவே இல்லை. காரணம், அந்தப் பள்ளியின் சிறப்புகளை ஷின்சான் தன் குறும்புகளால் சிதறடித்துவிடுவதே. உதாரணமாக, விவசாய நிலத்திற்கு கற்கச் செல்லும்போது அங்கே அவன் அடிக்கும் லூட்டியால் அக்கற்றல் நிகழவே இல்லை. இப்படி ஒவ்வோர் இடத்தையும் சொல்லலாம். ஷின்சான் கதாசிரியரின் நோக்கமும் டோட்டாசான் கதாசிரியர் டென்சுகோ குரோயாநாகியும் நோக்கமும் ஒன்றல்ல என்பது வெளிப்படை. ஆனால், டோட்டோ சான் பள்ளியின் சில கூறுகள் ஷின்சான் தொடரில் தென்படுகின்றன என்பதைச் சுட்டவே இந்த ஒப்பீடு. ஷின்சான் – டோட்டோ சான் இரண்டும் வேறுவேறானவை. டோட்டோ சான் உணர்வுபூர்வமாக படிப்பவர் மனத்தில் பதிபவை. ஷின்சான் கேளிக்கையாக நேரங்கடத்தவே பயன்படுபவை.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா குண்டுமழை பொழிகிறது. அதில் டோட்டோ சானின் டோமாயி பள்ளி எரிந்து நாசமாகிறது. தன் கனவுப்பள்ளி எரிவதை கண்சிமிட்டாது பார்க்கிறார் கோபயாஷி. அப்போதும் தம் மகனிடன் பேசுகிறார் அடுத்து எப்படிப் பள்ளியை உருவாக்குவது என்பதைப் பற்றியே.

டோட்டோ சான் என்பதே இந்நுலை எழுதிய டெட்சுகோ குரோநாகி. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவருக்கு இப்போது வயது 87. இவரிடம் டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி நூலின் கதையைச் சினிமாவாக எடுக்க அனுமதிக் கேட்டு பலரும் சென்றிருக்கிறார்கள். இவர் மறுத்துவிட்டாராம். ஏன் தெரியுமா… கதையாகப் படிக்கும்போது ஒவ்வொரு மனதிலும் விதவிதமான டோமாயி பள்ளி உருவாகும். அதை நான் தடுக்க விரும்ப வில்லை என்று சொல்லிவிட்டார். இந்நுலை தமிழுக்கு மொழியாக்கம் செய்த சு.வள்ளிநாயகம் மற்றும் சொ.பிரபாகரன் இருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்.

சிறார் இலக்கியம், சிறார் செயல்பாடு என எத்துறையில் ஈடுபடுவர்களும் ஒருமுறையேனும் டோட்டோ சான் நூலை வாசித்துவிடுவது அவசியம். அதன்பின் அவர்களின் இயக்கத்தில் நிச்சயம் புதிய ஆரோக்கியமான மாறுதல் தென்படும்.

பரிந்துரை: யூரித்மிக்ஸ் முறையை தமிழக பள்ளிகளில் பயன்படுத்த முடியுமா என்று பரிசோதிக்கலாம். அதற்கு முன்மாதிரியாக ஆசிரியர்கள் முன்வந்தால் முதல் அடியை எடுத்து வைத்தாற்போல இருக்கும். கோபயாஷி மாதிரி பியோனா வாசிக்க வேண்டும் என்பதல்ல, சின்ன டோலக் இருந்தால் போதும். முக்கியமாக யூரித்மிக்ஸ் முறையைப் பற்றியும்,  குறைந்த பட்ச இசைத் தாளத்தை அந்த ஆசிரியர் கற்றிருக்க வேண்டியது அவசியம்.

விஷ்ணுபுரம் சரவணன்.

Leave a comment