தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் தனித்த இடம் பிடித்தவர் கு.அழகிரிசாமி. எளிய மொழிநடையில் வாழ்வின் துயரத்தை, வலியை அரிதாகத் தென்படும் மகிழ்ச்சியை மிக நெருக்கமாகப் படைத்த படைப்பாளி அழகிரிசாமி. சாகித்ய அகாடமி விருது பெற்ற பெருமைக்கு உரியவர்.
குழந்தைகள் மீது அளவற்ற பேரன்பு கொண்டவர் கு.அழகிரிசாமி. அவரின் ’ராஜா வந்திருக்கிறார்’ எனும் சிறுகதை இன்றளவும் அவரின் ஆகச்சிறந்த கதையாக மேற்கொள்ளப்படுகிறது. அந்தக் கதை சொல்லப்படும் உத்தி வித்தியாசமானது. அக்கதையை சிறார், பதின், பெரியவர், முதியவர் என எந்த வயதுள்ளோர் படித்தாலும் தனித்தனி அடுக்குகள் வெளிப்படும். ‘அன்பளிப்பு’ எனும் கதையும் மிக முக்கியான ஒன்று. அதில் குழந்தைகள் மீதான தம் நேசத்தை துளியும் பூச்சின்றி பகிர்ந்திருப்பார்.
“ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவே இந்த உலகத்தில் பிறந்த நண்பன் என்று என்னை நினைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மகத்தான நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆறுதலாக, ஒரு நல்ல வழிகாட்டியாக என்னைக் கருதியது. எந்த விதத்திலும் தனக்குச் சமதையான ஜீவன் என்று என்னைக் கருதியது. குழந்தைகள் என்னைப் பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல், நட்பு முறையில் கைகோத்துக் கொள்ள வந்தார்கள். இவர்கள் என்னோடு விளையாடினார்கள்; என்னோடு சண்டை போட்டார்கள்; என்னை அடித்தார்கள்; என்னைக் கண்டித்தார்கள்; என்னை மன்னித்தார்கள்; என்னை நேசித்தார்கள்.
உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்”என்று குறிப்பிட்டிருப்பார். அந்தளவு குழந்தைகளின் மனவுலகை மிகத் துல்லியமாக அல்லது மிக நெருக்கமாக உணர்ந்திருந்தார். களங்கம் என்றொன்றை அறிய அந்த மனங்களிடையே புழங்குவதை அவர் பெரிதும் விரும்பினார். அவர்களின் உலகிற்குள் செல்ல பிரயாசை கொண்டார் என்றே சொல்லலாம்.
கு.அழகிரிசாமியின் நூற்பட்டியலில் சிறுவர் இலக்கியம் என்று பிரிக்கப்பட்டு ‘காளிவரம் மற்றும் மூன்று பிள்ளைகள்’ நூற்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அவை இப்போது அச்சில் இல்லை. பல இடங்களில், நூலகங்களில் தேடியும் கிடைக்க வில்லை. கு.அழகிரிசாமியின் மொத்த கதைகள் வெளியிட்டுள்ள பதிப்பகங்களும் இதைக் கணக்கில் கொள்ள வில்லை.
ஒருவழியாக, சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ‘மூன்று பிள்ளைகள்’ நூலைக் கண்டுபிடித்து விட்டேன். அந்த நூலகத்திற்குச் சென்றிருப்பவர்கள் அங்குள்ள வழக்கத்தை அறிவார்கள். நூலகத்திற்குள் நாம் செல்ல முடியாது. இணையம் வழியே நூல் இருக்கிறதா என்று சோதித்துவிட்டு, அதன் எண்ணை அங்கு பணிபுரிபவர்களிடம் எழுதிக்கொடுத்தால் கொண்டு வந்து தருவார்கள். அங்கேயே படிக்க வேண்டும். வீட்டிற்கு எடுத்து வர முடியாது. அப்படி நான் சென்று ‘மூன்று பிள்ளைகள்’ நூலின் எண்ணை எழுதிக்கொடுத்தேன். அந்தப் பணியாளர் நூலைக் கொண்டு வரை ஒருவித தவிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஏனெனில், சிலவை எண்கள் இருக்கும் நூல்கள் அங்கிருக்காது என்று சிலர் சொல்லிக்கேள்விப்பட்டேன். சில நிமிடங்களில் ‘மூன்று பிள்ளைகள்’ நூல் என் கை வந்து சேர்ந்தது. உடனே அங்கேயே வாசித்தேன். இனி அந்நூல் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் புத்தகாலயம் பதிப்பகத்தின் 1961 ஆம் ஆண்டில் முதல் பதிப்பில் ‘மூன்று பிள்ளைகள்’ நூல் வெளியிட்டுள்ளது. இரண்டாம் பதிப்பு நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது. இதில் மூன்று பிள்ளைகள் கதையைச் சேர்த்து மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மூன்று பிள்ளைகள் சற்று நீளமான கதை. ‘பயந்தாங் கொள்ளி’ மற்றும் ஏழை கமலா கதைகள் அளவில் சிறியவை.
மூன்று பிள்ளைகள்: மகாலிங்கம் செட்டியாரைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. மிக ஏழ்மையான குடும்ப பின்னணியில் மகாலிங்கம் பிறப்பதில் தொடங்குவதைப் படிக்கையில் அவரின் பால பருவத்தில் கதை நடக்கும் என யூகித்த்தால், மாறாக அவரின் பிள்ளைகள் காலத்திற்கு வேகமாக கதை சென்று விடுகிறது.
நான்காம் வகுப்புக்கு மேல், வாய்ப்பும் பண வசதியும் இல்லாத சூழலில் கடும் உழைப்பையும் மிகுந்த சிக்கனத்தையும் மேற்கொண்டு முன்னூறு ரூபாய் சேர்க்கிறார். அவரின் நண்பர் பழனிவேல் பிள்ளையின் வற்புறுத்தலில் திருணம் செய்துகொள்கிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கின்றன. அதற்குள் ஊரின் பெரிய பணக்காரராக உயர்ந்துவிடுகிறார் மகாலிங்கம்.
தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். தம் சொத்தை மூவருக்கும் பிரித்து கொடுக்கிறார். நண்பர் பழனிவேலோ ‘நீ இறக்குவரை சொத்து பிரித்தால், சோறு கிடைக்காது’ என்று எச்சரிக்கிறார். அதைப் புறக்கணிக்கும் மகாலிங்கத்துக்கு நண்பரின் வாக்கே பலிக்கிறது. ஆறு மாதங்களில் மகாலிங்கத்தின் மனைவி இறந்ததும், அவரை பிள்ளைகள் துரத்தி விடுகின்றனர்.
இந்த இடத்தில் பழனிவேல் சின்ன தந்திரம் செய்கிறார். ஒரு பையில் செல்லா காசுகளைப் போட்டு, அதில் தங்கக்காசுகள் இருப்பதாகப் பிள்ளைகளிடம் கூறச் செய்கிறார். ‘யார் என்னை இறுதிவரை கவனித்துக்கொள்கிறார்களோ, அவருக்கே இந்தத் தங்கக் காசுகள்’ என்றதும் மூன்று பிள்ளகளும் போட்டிப்போட்டுக்கொண்டு கவனித்துக்கொள்ள, அவர் இறந்ததும் ஏமாந்து போகின்றனர். பிள்ளைகள் தம் தவற்றை உணர்வதாகக் கதையை முடிக்கிறார் அழகிரிசாமி.
இந்தக் கதை அக்காலக்கட்டத்தில் சொல்லப்படும் நாட்டார் கதைகளை ஒத்ததாகவே இருக்கிறது. 12+ வயது குழந்தைகள் சரளமாக வாசிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கான கதை என்பதால் மிக நேரடியான மொழியில் எழுதியிருக்கிறார். அழகிரிசாமி மற்ற கதைகளும் நேரடி மொழி நடை என்றாலும், அதில் பல அடுக்குகள் இருக்கும். ஒரு வரி அக்கதையை வேறொரு தன்மையைக் கொடுத்து விடும். உதாரணமாக, ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் பணக்காரச் சிறுவனான ராமசாமியின் வீடு மேலத்தெருவில் இருப்பதாகச் சொல்லப்படும் இடம், செல்லையாவின் வர்க்கச் சூழலை மட்டும்மல்ல வர்ணநிலையையும் சொல்லிவிடுவார். அதுபோல இக்கதையில் ஏதுமில்லை. அதனால், நெகிழ்ச்சியான கதை கடத்தல் சாத்தியப்பட வில்லை.
அழகிரிசாமியின் பெரியவர்களுக்கான கதைகளில் கதாபாத்திரங்களின் பெயரோடு சாதிப்பெயர் இணைத்திருப்பது அபூர்வமாகவே இருக்கும். ஆனால், மூன்று பிள்ளைகள் கதையில் மகாலிங்கம் என்று பெயர் வரும் சுமார் ஐம்பது இடங்களில் மகாலிங்கம் செட்டியார் என்றே வருகிறது. அதுவும், அவர் பிறப்பதாகச் சொல்லப்படுவதே மகாலிங்கம் செட்டியாராகத்தான். அதேபோல அவரின் நண்பரின் பெயரும் பழனிவேல் பிள்ளையும் கதை நெடுக சாதிப் பெயரோடே குறிப்பிடப்படுகிறது.
நூலில் மற்ற கதைகளான ஏழை கமலா மற்றும் பயந்தாங் கொள்ளி சற்று மாறுபட்டவை.
ஏழை கமலா: சிறுவயதிலேயே சிக்கமான சுட்டிப் பெண் கமலா. சிறுக சிறுக காசு சேர்த்து 100 ரூபாய் சேர்த்துவிடுகிறாள். (கதை நடப்பது 1950-60 காலங்களில் என்பதை நினைவில் கொள்க) அந்த ஊருக்கு வந்த ஒருவன் தான் ஏழை என்றும், நூறு ரூபாய் கடன் கட்ட முடியாமல் மறைந்து வாழ்வதாகவும் சொன்னதால் தன்னிடமிருந்த 100 ரூபாயைக் கொடுக்கிறாள். அடுத்த வருடம் நிச்சயம் திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஆனால், அவன் ஒரு மோசடிக்காரன். கமலாவை ஏமாற்றி விடுகிறான். ஓராண்டு முடிந்து பத்து கடிதங்கள் அவனுக்கு எழுதியும் பணம் வந்தபாடில்லை. கமலாவே நேரில் செல்ல முடிவெடுக்கிறாள். காட்டு வழியே செல்கையில் இவளின் கதையைக் கேட்டு, ஒரு நரி, ஒரு புலி, ஒரு நதி மூன்றும் இவளோடு சேர்ந்துகொள்கிறது. அந்த மோசடிக்காரன் கமலாவை கோழிக்கூண்டில் அடைக்க, நரி கோழிகளைக் கொல்கிறது. ஆட்டு மந்தைக்குள் அடைக்க, ஆடுகளைப் புலி தின்று விடுகிறது. குடிசைக்குள் வைத்து தீ வைக்க நதி காப்பாற்றுகிறது. இறுதியில் மோசடிக்காரன் இறக்க அவனின் சொத்தே கமலா வசமாகிறது.
இந்தக் கதை ஒருவகையில் நீதிக்கதை போலத்தான் என்றாலும், சிறுவர்கள் சுவாரஸ்யமாகப் படிக்கும் விதத்திலான மாயப்புனைவு முறையில் எழுதியிருக்கிறார். கமலாவின் சேமிப்பை திருடிச்செல்கிறான். இவள் கடிதம் எழுதுகிறாள் என்பது வரை சோர்வாகச் செல்லும் கதை நரியும், புலியும், நதியும் சேர்ந்துகொள்ள சுவை கூடுகிறது. இக்கதையும் அக்காலத்தில் சொல்லப்படும் வட்டாரக் கதைகளின் சாயல் இருக்கவே செய்கிறது. நிஜமும் மாயப்புனைவும் ஒருசேர சிறாரை முழுக்கதையை வாசிக்க வைத்திருக்கும்.
பயந்தாங் கொள்ளி: இக்கதை இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலக்கட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. நடராஜன் எனும் பயந்தாங் கொள்ளி, பட்டாளத்தில் சேர்ந்துவிடுகிறான். போர் நடக்கும் இடங்களில் சிக்கிக்கொள்வதும், அங்கிருந்து பிரிட்டிஷ், ஜப்பானிய படைகளின் கண்களில் படாமல் தப்பித்து தம் சொந்த ஊருக்கே வந்து சேர்கிறான். ஆனால், ஊரில் தான் பட்டாளத்தில் ஒரே குண்டில் ஏழாயிரம் பேரைக் கொன்றதாகப் பெருமை பேசித் திரிகிறான். பிரிட்டிஷ் ராஜா தன்னை விருந்து அழைத்தும் தான் செல்ல மறுத்து விட்டதாக என்கிற அளவு பீலா நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வர, பட்டாளத்திற்கு தர தர வென்ற இழுத்துச் செல்லப்படுகின்றான்.
இந்தக் கதை மற்ற இரண்டையும் விட வேறுபட்டது. உலகப்போர் குறித்து லேசகாகச் சொல்லப்படுகிறது. போருக்கு வீரர்களை ஒவ்வொரு நாடும் சேர்க்கும் விதம் குறித்து பகடி செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் வீட்டில் கோவித்துக்கொண்டால் சேரும் இடம் பட்டாளம்தான் என்பதைச் சொல்கிறது. அதிலும் நடராஜன் பாத்திரம் செய்யும் சேட்டைகளை சிரித்துக்கொண்டே படிக்க வைக்கிறது. குறிப்பாக, அம்மாவுக்கு கடன் கொடுத்த கடன்காரனை மிரட்டி கடிதம் எழுதும் பகுதியைச் சொல்லலாம். ஆம், அவரை மிரட்டி எழுதிய கடிதத்தின் முகவரியில் ’கடன்காரர், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி’ எழுதுவதும், அது 15 நாட்களில் நடராஜனிடமே திரும்பி வருகிறது. அதைப் பார்த்த நண்பன் கடன்காரர் என்று ஏன் எழுதினாய் கடன் கொடுத்தவர் என்று எழுது என்றதும், அப்படியே எழுதி அனுப்ப… நடராஜனின் வெகுளித்தன்மை வாசர்களை ஈர்த்திருக்கும்.
மூன்று கதைகளில் வட்டார கதை அமைப்பிலிருந்து மாறுப்பட்டு புதிய கதை சொல்வது எனும் வகையில் பந்தாங் கொள்ளி கதை நம்மை ஈர்க்கிறது. கூடுதலாக, பகடியும் போர் குறித்த சில சித்திரங்களும் பட்டாளத்தில் நடக்கும் சம்பவங்களும் சுவை கூட்டுகின்றன.
கு.அழகிரி சாமியின் ராஜா வந்திருக்கிறார் போன்ற சில சிறுகதைகளே சிறுவர்கள் படிக்கும் வகையில் இருப்பதால், அவர் நேரடியாக சிறார்க்கு எழுதிய கதை என வெகு ஆவலோடு படித்தால் முழு நிறைவு கிடைக்க வில்லை. அதேநேரம் ஏமாற்றவும் இல்லை.
நன்றி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், அழியாச் சுடர் இணையத்தளம்.