சிறார் எழுத்தாளர், கலைஞர் சங்கம் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா காலத்திலும் எதிர்காலத் தலைமுறையினருக்கான இது போன்ற உரையாடல்கள் முக்கியமானவை. சிறார் இலக்கியம் பற்றிப் பேசும்போது ஆசிரியர்கள், புத்தகங்கள் சார்ந்து பெருமளவில் விவாதிக்கப்படுகிறது. தமிழ் சிறார் இலக்கியம் என்று கூறியவுடனேயே சட்டென சொல்லக்கூடிய புத்தகங்களும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய காலச் சூழல், இன்றைய குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் கதைகளும் புத்தகங்களின் தேவையும் உள்ளன.
சிறார் இலக்கியமும் சூழலியலும் என்கிற தலைப்பு, நான் பேச ஆர்வமாக உள்ள தலைப்பு. இது முக்கியமான தலைப்பு. முதல் கூட்டத்தில் விஷ்ணுபுரம் சரவணன் பேசியபோது ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். சமீப காலத்தில் தமிழ் இலக்கியத்தில் சூழலியல், பெண்ணியம், தலித்தியம் சார்ந்து வளர்ந்தவர்களுகென்று நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன, அந்த தன்மைகளை பிரதிபலிப்பதுபோல் சிறார் இலக்கியத்திலும் படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன என்கிற கருத்தை முன்வைத்தார்.
சிறார்களுக்கான சூழலியல் புத்தகங்களை எடுத்துக்கொண்டால் தமிழில் சில முக்கியமான புத்தகங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, எஸ். பாலபாரதி எழுதிய ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, கொ.மா.கோ இளங்கோ எழுதிய ‘மந்திர கைக்குட்டை’ சிறுகதை தொகுப்பில் சில கதைகள் சூழலியல் சார்ந்து இருக்கின்றன. அதேபோல் சரவணன் பார்த்தசாரதி எழுதிய ‘காட்டிலிருந்து வீட்டிற்கு’, ‘விஞ்ஞானி வீராசாமி எழுதிய கதைகள்’ ஆகிய தொகுப்புகளில் சூழலியல் – இயற்கை சார்ந்த பல கட்டுரைகள் உள்ளன.
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச்சிறிய தவளை’ (ஒரு ஏரியை பாதுகாக்க ஒரு தவளை போராடக்கூடிய கதை), நீலவால் குருவி பதிப்பகத்தில் வெளியான ‘வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?’ – இது போன்ற புத்தகங்கள் சமீப காலத்தில் எழுதப்பட்ட சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க புத்தகங்கள். சூழலியல் சார்ந்து சிறார் இலக்கிய புத்தகங்கள் எழுதப்பட்டாலும், எண்ணிக்கை அளவில் சூழலியல் புத்தகங்கள் குறைவாகவே உள்ளன.
அறிவியல் – சூழலியல் சார்ந்து எழுதும்பொழுது அந்த புத்தகம் அடிப்படை உண்மைகளை பிரதிபலிக்கக்கூடியதாக, அடிப்படை கருத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளதா, முழுவதும் அறிவியல் பின்னணியோடு செயல்பட்டுள்ளதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அறிவியலில் முழுவதும் கால்பதித்து எழுதக்கூடிய கதைகளாக எல்லா புத்தகங்களும் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். அறிவியலை எழுதினாலும் சரி, சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்து எழுதினாலும் சரி, அது அடிப்படை உண்மைகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அது புனைவு சார்ந்த கதையாக இருந்தாலும், அடிப்படை உண்மைகளை மாற்றுவது சரியானதாக இருக்காது. அறிவியல் அம்சங்களுமே கதையின் போக்கில் சொல்லப்பட்டவையாக இருக்க வேண்டும், தனியாக ஒட்டவைத்ததுபோல் இருந்தால் எதிர்பார்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சமீபகாலத்தில் எழுதப்படக்கூடிய சூழலியல் சிறார் புத்தகங்கள் இந்த அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக சிறார் இலக்கியத்தில் இரண்டு அம்சங்கள் கூடுதலான கவனம் பெறாமலே போய்விடுகின்றன. ஒன்று மொழிபெயர்ப்பு. வேறு மொழியிலிருந்து ஒரு புத்தகமோ, படைப்போ, கருத்தாக்கமோ பெறப்படுகிறதென்றால், போதுமான அளவுக்கு நம் மொழியில் அது விவாதிக்கப்படவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த தேவையை நிரப்புவதற்குதான் மற்ற மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பு செய்கிறோம். மொழிபெயர்ப்பை பொறுத்ததவரையில் உலக மொழியானாலும் சரி, இந்திய மொழியானாலும் சரி அந்த மொழிகளிலிருந்து வரக்கூடிய படைப்புகள் தமிழில் வரும்பொழுதும் போதுமான அளவு கவனம் பெறுவதில்லை, குறிப்பாக சிறார் இலக்கியத்தில்.
இரண்டாவது, புனைவற்ற எழுத்து. அறிவியல் சுற்றுச்சூழலில் புனைவு சார்ந்து எழுதப்பட வேண்டும், புனைவு சாராமலும் எழுதப்பட வேண்டும். ஐரோப்பிய மொழியோ, மற்ற இந்திய மொழிகளையோ எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கான இலக்கியமாகவே இருந்தாலும்கூட புனைவு எழுத்து, புனைவற்ற எழுத்து என்று அங்கே பிரித்துப் பார்க்கப்படுவதில்லை. இரண்டுக்கும் காத தூர இடைவெளியோ, கவனிப்பாரற்ற தன்மையோ இல்லை. ஆனால், தமிழில் பெரும்பாலும் கதைகள்தாம் பேசப்படுகின்றன. புனைவற்ற எழுத்து பெருமளவில் பேசப்படுவது இல்லை. இந்த இரண்டு அம்சங்களும் மாற்றத்தை காண வேண்டும்.
புனைவு எழுத்து, புனைவற்ற எழுத்து, மொழிபெயர்ப்பு – இந்த மூன்று தன்னைமையிலான புத்தகங்கள் சூழலியல் சிறார் இலக்கியத்தில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த மூன்று அம்சங்களின் பின்னணியில் நாம் வேறு சிலவற்றை கவனிக்க வேண்டியுள்ளது.
முதலாவதாக குழந்தைகளுக்குக் கதை சொல்ல விலங்குகளை கதாபாத்திரமாக்குவதை எடுத்துக்கொள்வோம், இந்த வழக்கம் ஈசாப் கதைகளிலிருந்தே தொடர்கிறது. ஈசாப் பாணியில் எழுதப்படும் கதைகளில் பிரச்சினை என்னவென்றால், அந்தக் கதைகள் பெரும்பாலும் நீதி சொல்லும், அதன் பிறகு கறுப்பு -வெள்ளையாக ஒரு நாயகன், ஒரு வில்லனை அந்த கதைகள் உருவாக்கியிருக்கும்.
நம்முடைய ஊர்களில் நரி, குள்ள நரி, வெளிநாடுகளில் ஓநாய் இந்த விலங்குகள் பெரும்பாலான கதைகளில் வில்லனாகவே சித்தரிக்கப்படுகின்றன. எந்தக் காலத்திலும் இவை நல்ல கதாபாத்திரமாக சித்தரிக்கப்படவில்லை. அதேபோல் சிங்கம், புலி போன்ற வேட்டை உயிரினங்களை குறிப்பிடும்போது அந்த உயிரினங்கள் கடித்து சாப்பிடகூடியவையாக, தேவைக்கு அதிகமான பேராசை கொண்டவையாக, பயங்கரமானதாக இருக்கும் என்று பெரும்பான்மையான கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஒரு நல்ல புலி, ஒரு நல்ல சிங்கம் என எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டதே இல்லை. பிரச்சினை என்னவென்றால் சிறு குழந்தைகள் தங்களையும் மற்ற உயிர்களையும் பிரித்து பார்ப்பதில்லை, அவர்கள் இந்த உலகத்தில் உள்ள உயிரினக் கூட்டத்தில் தாங்களும் ஓர் உயிர் என்றே நினைத்துக்கொள்கின்றனர். சிறு வயதிலிருந்தே எந்த உயிரினத்தையும் எதிரியாக நினைக்காத குழந்தையின் மனத்தில், செயற்கையான எதிரிகளாக விலங்குகளை நாம் சித்தரிக்கிறோம். குழந்தைகளிடத்தில் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும். அது ஓர் உயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதாக இருந்தாலும் சரி, பொருள்களை தெரிந்துகொள்வதாக இருந்தாலும் சரி, அது சார்ந்த ஆர்வம் இயல்பாகவே குழந்தைகளுக்கு இருக்கிறது. ஆனால் கதைகள், படங்கள், காணொலிகள் மூலமாக ஒரு வித்தியாசமான அல்லது இயற்கை அல்லாத உலகத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறோம்.
இயற்கை சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்தும் குழந்தைகளிடம் பேசும்போது மனித உணர்வுகளை எந்த விலங்குகளுக்கும் புகுத்தக் கூடாது, இது மிகவும் சிக்கலான அம்சம். விலங்குகளுக்கு உணர்வுகள் கிடையாது, பகுத்தறியும் திறன் கிடையாது, மனிதனுக்கு மட்டுமே உணர்வுகள் உண்டு. இயற்கையாகவே ஓர் உயிரினம் எப்படிப் படைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த விஷயத்தை மட்டும் செய்யக்கூடியவையாகதான் விலங்குகளை சித்தரிக்க வேண்டும். நம்மைபோல் அழுகை, சந்தோஷம், வஞ்சகம் போன்ற எந்த மாதிரியான உணர்வுகளும் விலங்குகளுக்கு கிடையாது. ஆனால் நாம் பெரும்பாலும் அவற்றை எதிரியாகத்தான் சித்தரிக்கிறோம்.
அப்படியென்றால் விலங்குக் கதாபாத்திரங்களே கதையில் இருக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம்? விலங்குக் கதாபாத்திரங்கள் கதையில் இருக்கலாம். ஆனால் எதிர்மறை தன்மைகள், மனிதர்களிடம் இருக்கக்கூடிய வஞ்சகம், சூழ்ச்சி போன்ற எந்த தன்மையும் விலங்குகளின் மீது புகுத்தி சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல் ‘நரியார் வந்துவிட்டார்’, ‘முயலார் போய்விட்டார்’ என விலங்குகளை மனிதர்களாக மாற்றிக் கூறக் கூடாது. இது போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். விலங்குகளிடம் இயல்பாக காணக்கூடிய உணர்வுகளை வைத்தே சொல்லலாம். உயிரினங்கள் என்ன மாதிரியான தன்மைகளில் உள்ளன, என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கின்றன, அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடிக்கும் வழிகள் என்ன – இதுபோன்ற கதைகள் சொல்லலாம்.
பிற மொழிகளில் விலங்குகளை எதிர்மறையாக சித்தரிப்பது தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை, தமிழில் மட்டும்தான் இன்னும் இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆங்கிலத்தில் தற்காலத்தில் எழுதப்படக்கூடிய கதைகள் பெரும்பாலும் விலங்குகளை எதிர்மறையாக சித்தரிப்பது இல்லை. அதற்கு மாறாக குழந்தைகளுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய வகையில், குழந்தைகள் தங்களை தாங்களே அதில் பார்த்துக்கொள்ளக்கூடிய வகையிலும் அந்த கதைகள் இருக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு, ரோல் தால் (Roald dahl) எழுதிய கதைகள், டாக்டர் சூஸ் (Dr. Seuss) எழுதிய கதைகள், வின்னி த பூ (Winne the pooh) போன்ற மிகப் பிரபலமான கதைகள் உயிர்களை எதிர்மறையாக சித்தரிப்பதில்லை. மாறாக உயிர்களுக்கென்று தனி உலகத்தைப் படைக்கிறார்கள். உயிரினங்கள் தாழ்வாகக் கருதப்படுவது இல்லை என்பதுதான் மிக முக்கியமானது. அந்த கதைகளில் வருகிற உயிரினங்கள் மனிதர்களைப் போலவோ மனிதர்களுக்குத் தாழ்வாகவோ படைக்கப்படுவதில்லை.
குழந்தைகள் எப்படி சிந்திப்பார்களோ அந்த கற்பனைக்கு ஈடுகொடுக்கும் வகையில் கதைகள், மற்ற மொழிகளில் வெளியாகின்றன. இதை உள்வாங்கிகொண்டு நம்மிடம் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். விலங்குகளை வைத்துக் கதை சொல்லலாம், ஆனால் எதிர்மறையான கருத்துக்களை, அறிவியல்பூர்வமற்ற கருத்துகளை விலங்குகளை வைத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான மேற்கத்திய, ஐரோப்பிய மொழிகளில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் திணிக்கப்படுவதில்லை. அறிவியல் உண்மைகளை கதைகளில் எழுதுகிறார்கள். இந்தத் தன்மை சார்ந்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சூழலியல் சிறார் இலக்கியம் சார்ந்து வாசித்துவருவதால் எனக்கு மிகவும் பிடித்த மூன்று வகையான புத்தகங்களை பற்றிக் கூற விருப்பப்படுகிறேன். முதலாவதாக ரஷ்யப் புத்தகங்கள், இரண்டாவதாக ரஸ்கின் பாண்ட்டின் (Ruskin Bond) புத்தகங்கள், மூன்றாவதாக கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவதாஸின் புத்ததகங்கள். இந்த மூன்று வகையான கதைகளை முக்கியமானதாகவும், ஆதர்சமாகவும் கருதுகிறேன்…
ரஷ்ய சிறார் புத்தகங்களை பற்றி பேச வேண்டுமென்றால் ரஷ்யர்கள் எழுதிய கதைகளிலும் நாவல்களிலும், விலங்கினங்களையும் உயிரினங்களையும் இயல்பாக சித்தரித்துப் பேசக்கூடியவையாக இருக்கும். இயற்கைக் காட்சி – உயிரினங்களைப் பற்றிய இயல்பான, விரிவான வர்ணனை மிகுந்த சித்தரிப்புகளை அந்த சிறார் இலக்கியப் புத்தகங்கள் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, யூரி நகீபின் (Yuri Nagibin) எழுதிய ‘அவளது ரகசியம்’ கதை. ஒரு மாணவன் தினசரி பள்ளிக்குத் தாமதமாக வருவான், அவனது ஆசிரியை அவனைக் கண்டிப்பார். உன் வீட்டுக்குத் தகவல் சொல்ல வேண்டும், உன் வீட்டுக்கு எனக்கு வழி தெரியாது, கூட்டிக்கொண்டு போ என்று மாணவனிடம் சொல்வார். அந்த மாணவன் ஊருக்கு கூட்டி போகிற வழியானது பெரிய காட்டுப்பாதை. அங்கிருக்கும் ஒவ்வொரு இயற்கை அம்சத்தையும் தன்னுடைய ஆசிரியைக்கு விவரித்துக்கொண்டே செல்கிறான் மாணவன். அவர்கள் வீட்டை சென்று சேரும்போது ஆசிரியரால் ஆச்சரியத்தை தாங்கிக்கொள்ள முடியாது. இந்தக் குழந்தைக்கு இயற்கை சார்ந்து எவ்வளவு அறிவு இருக்கிறது, இவ்வளவு நாள் தாமதமாக வந்ததற்கு இதுதான் காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய பள்ளி – ஆசிரியரான நாம் கிடையாது; இயற்கைதான் மிகப்பெரிய ஆசிரியர் என்று அந்த ஆசிரியை உணர்ந்துகொள்வார்.
‘இயற்கை விஞ்ஞானியின் கதை’ மன்தேய்பெல் (Manteufel) என்கிறவர் எழுதிய நூல், இயற்கை வரலாற்றை சிறப்பாக விவரிக்கும் புத்தகம். நிக்கோலாய் நோசவ் மிக முக்கியமான ரஷ்ய எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று கோல்யா ‘சின்சினிட்சின்னின் நாட்குறிப்புகள்’, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாசல் பதிப்பகம் வெளியிட்டது. புத்தகத்தின் பின்னணி – சில மாணவர்கள் தேனீப் பெட்டியை வைத்து தேனி வளர்க்க ஆசைப்படுகிறார்கள். ஒரு இடத்திலிருந்து தேனீ பெட்டியும், தேனீயும் வாங்கிவந்து தங்களுடைய ஊரில் வளர்த்து தேன் எடுத்துக் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமே சேர்ந்து தேனீப் பெட்டியும் தேனீயும் வாங்கிவருகிறார்கள். இதில் பெரிதாக என்ன சொல்லிவிட முடியும் எனத் தோன்றலாம். ஆனால், கதை அவ்வளவு சுவாரஸ்யமாக பள்ளி வாழ்க்கை, காடு, தேனீயை வளர்ப்பதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், வெற்றிகரமாகத் தேனீ வளர்ப்பது போன்ற விஷயங்களைப் பற்றி விரிவான நாவலாக எழுதப்பட்டுள்ளது.
அதேபோல் முஸ்தாய் கரீம் எழுதிய ‘எங்கள் தங்கமான ஊர்’. ரஷ்யாவின் ஒருபகுதியில் ஒரு ஏரியில் மீன்கள் அதிகமாகவும், இன்னொரு ஏரியில் மீன்கள் இல்லாமலும் இருக்கிறது. குழந்தைகள் இரண்டு ஏரிக்கும் போகிறார்கள். ஒரு ஏரியில் மட்டும் ஏன் மீன்கள் இல்லை என யோசிக்கிறார்கள். மீன் இருக்கிற ஏரியில் இருந்து மீன் கொண்டுவந்து மீனில்லாத ஏரியில் விட்டு வளர்க்க நினைக்கிறார்கள். அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. நிறைய தடங்கல், சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி மீன் வளர்ந்ததா இல்லையா என்கிற விரிவான சிறார் நாவல் இது.
ரஷ்யப் புத்தங்களில் நீச்சல் பயிற்சி, விளையாட்டுப் பிள்ளைகள் என பல கதைகள் இருக்கின்றன. எல்லா கதைகளிலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் இயற்கை, சுற்றுச்சூழல் இடம்பெற்றிருக்கிறது. எப்படி அறிவியலை சுவாரஸ்யமாக ரஷ்ய சிறார் இலக்கியத்தில் சொல்கிறார்கள், சித்தரிக்கிறார்கள் என்பதை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) இந்திய ஆங்கில எழுத்தாளர், 16 வயதிலிருந்தே கதை, நாவல், சூழலியல் பாடல்களை எழுதிவருகிறார். இவரின் எழுத்து பெரும்பாலும் சிறார் இலக்கியத்தை மையப்படுத்தியது. ரஸ்கின் பாண்ட் செய்யக்கூடிய ரசவாதம் என்னவென்றால் அவருடைய வாழ்க்கையை கதைபோலவும், கதையை நிஜமாக நடந்ததுபோலவும் எழுதுவார். உயிரினங்களை நேசிக்க வேண்டுமென்றால் ரஸ்கின் பாண்ட் எழுத்துக்களை படித்தாலே போதும். மனித வாழ்க்கையில் காட்டு விலங்கானாலும் சரி, வீட்டு விலங்கானாலும் சரி சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் சொல்லக்கூடிய கதைகளை ரஸ்கின் பாண்ட் நிறைய எழுதியிருக்கிறார். தமிழில் கொ.மா.கோ இளங்கோ மொழிபெயர்ப்பில் ‘மறக்கமுடியாத விலங்குகள்’, ஆனந்தம் சீனிவாசன் மொழிபெயர்ப்பில் ‘மரங்களோடு வளர்ந்தவள்’ ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்கின் பாண்டின் இன்னொரு புத்தகம் ‘விலங்கு காட்சிசாலையில்’ – உயிர்காட்சி சாலையில் உள்ள உயிரினங்களை பற்றிய விரிவான புத்தகம், அனைத்தும் நேஷனல் புக் ட்ரஸ்ட் (National Book Trust) வெளியீடு.
ரஸ்கின் பாண்டின் குறிப்பிடத்தக்கக் கதை-வீட்டிலிருக்கும் புலி. ஒரு வனத்துறை அலுவலர், ஆதரவற்று கைவிடப்பட்ட புலிக்குட்டியை வீட்டுக்கு எடுத்துவருகிறார். வீட்டில் வைத்தே வளர்க்கிறார், வளரவளர புலி வேட்டையாடும் தன்மைகளை வெளிப்படுத்துகிறது. குட்டியாக இருந்தவரைக்கும் பிரச்சினையில்லை. பெரிதாகும்போது சின்ன சின்ன உயிர்களை வேட்டையாடுகிறது. இதற்கு மேலே வீட்டில் வளர்க்க முடியாது என்று உயிர்க் காட்சிசாலையில் விடுகிறார். பல மாதங்கள் கழித்து உயிர்காட்சி சாலைக்கு அவர் சென்றிருந்தபொழுது, ஒரு புலிக்கூண்டில் உள்ள புலியை தடவி கொடுத்துகொண்டே இருக்கிறார். அப்போது உயிர்காட்சி சாலையில் வேலைபார்ப்பவர் வேகமாக ஓடிவந்து ஏன் இந்த புலியை தடவிக் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்பார். இந்த புலிக்குட்டியை நான் வளர்த்திருக்கிறேன், நான்தான் இங்கே கொடுத்தேன் என்பார். அதற்கு ஊழியர், நீங்கள் கொடுத்த புலிக்குட்டி நோய்வாய்ப்பட்டு பல மாதங்களுக்கு முன்னரே இறந்துவிட்டது, இது வேறு ஒரு புலி என்பார். அதை கேட்ட பிறகும் வனத்துறை அதிகாரி புலியை தடவிகொடுப்பதை நிறுத்தமாட்டார். அந்த புலியும் சாதுவாக அவர் தடவிக்கொடுப்பதற்கு ஏற்ப இயல்பாக இருக்கும். அந்த நிலையில் கதை முடியும். இதை நம்ப முடியாததென நினைக்கலாம், ஆனால் ரஸ்கின் பாண்டின் எழுத்துக்களை படிக்கும்போது நம்பித்தான் ஆக வேண்டும். கதைகளை நிஜம் போலவே சொல்லிவிடுவார்.
மூன்றாவதாக, பேராசிரியர் சிவதாஸ் எழுதி மலையாளம் வழியாகத் தமிழுக்கு வந்த பிரபலமான புத்தகம் ‘வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்’ – தொடர்ந்து பல பதிப்புகள் கண்ட புத்தகம். இயற்கை, சூழலியலை எப்படி குழந்தைகளிடம் அறிமுகப்படுத்த வேண்டும், எப்படிப்பட்ட ஆர்வக்கிளர்ச்சியை தூண்ட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அந்த அளவிற்கு எளிமையாக, சுவாரஸ்யமாக இயற்கை அறிவியலைக் கற்றுத்தரும் விதமாக சிவதாஸ் எழுதியிருப்பார்.
தமிழில் அதிகம் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு’ அவர் எழுதிய புத்தகமே. வயல்வெளியில் பல ஆண்டுகளாக உழைத்து வயதாகிவிட்ட ஒரு மண்புழு, தனக்கு ஓய்வூதியம் தரச் சொல்லி வழக்கு கொடுக்கிறது. ஓய்வூதியம் தர வேண்டும் என்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை மண்புழுவே வாதாடுகிறது. இந்த அடிப்படையில் உழவு, வேளாண்மையில் மண்புழுவின் பங்கையும், எப்படி நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம் என்பதை சிறப்பாக சிவதாஸ் சொல்லியிருப்பார். யூமா வாசுகி மொழிபெயர்ப்பு. ‘இயற்கையின் அற்புத உலகில்’, ’பாரு குட்டியும் நண்பர்களும்’ உதயசங்கர் மொழிபெயர்த்த புத்தகங்களும் சிவதாஸினுடையவை.
தமிழ் சிறார் சூழலியல் இலக்கியத்தை பிற மொழிகளோடு ஒப்பிடும்போது நாம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். இன்னும் சிறிது காலத்தில் காலநிலை பிரச்சினைகள் தீவிரமடையும் சூழல் உள்ளது. இயற்கையைக் கட்டுமீறி எல்லா பக்கங்களிலும் அழித்துவருகிறோம். இந்தப் பின்னனியில் குழந்தைகளுக்கு சூழலியல், இயற்கை சார்ந்த அறிவை முன்வைத்து பேசப்படவேண்டிய தேவை இருக்கிறது. சில புத்தகங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
யூமா வாசுகி கிட்டத்தட்ட ஐம்பதிலிருந்து நூறு மொழிபெயர்ப்பு நூல்களை குழந்தைகளுக்காக செய்திருக்கிறார். அதில் பல புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘ஆசாவின் மண் எழுத்து‘ கதை இயற்கை சூழலியலை பேசக்கூடிய புத்தகம். மலையாளத்திலிருந்து உதயசங்கர் மொழிபெயர்ப்பில் ‘புத்தக பூங்கொத்து, ‘புத்தக பரிசு பெட்டி’ இரண்டு தொகுதிகளாக 25+15 என 40 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு தொகுதிகளிலும் இயற்கை, சுற்றுசூழல் சார்ந்த பல புத்தகங்கள் உள்ளன. யானை, எறும்பு, தேனீ என நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினம் பற்றியும் அழகான படங்களோடு, அறிவியல் கருத்துக்களுடன் சுவாரஸ்யமான புத்தகங்கள் இருக்கின்றன.
கொ.ம.கோ இளங்கோவின் மொழிபெயர்ப்பில் ‘உயிர் தரும் மரம்’, ‘ நீங்கள் என் அம்மாவா‘ – ஒரு பறவை தவறவிட்ட தாயை தேடி போக கூடிய கதை. அம்பிகா நடராஜன் மொழிபெயர்த்த மலையாளப் புத்தகம் ‘உயிரினங்களின் அற்புத உலகில்’, சாலை செல்வம் மொழிபெயர்த்த சீன புத்தகமான ‘பறவைகளின் வீடுகள்’ – இது போன்ற பல புத்தகங்கள் மொழிபெயர்ப்பு வழியாகவும், புனைவற்ற புத்தகங்கள் வழியாகவும் சூழலியல் சார்ந்து வெளியாகியுள்ளன. தாவரங்கள் குறித்து ஏற்காடு இளங்கோ எழுதிய சில புத்தகங்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ளது.
சூழலியல் இலக்கியம் சார்ந்து துளிர் இதழில் நாராயணி சுப்பிரமணியன், கணேஷ்வர் போன்ற இளைஞர்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். சிறார் சூழலியல் இலக்கியத்தில் துளிர் இதழின் பங்களிப்பும் முக்கியமானது.
நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust) தமிழில் வெளியிட்ட புத்தகங்களில் நூற்றுக்கணக்கானவை சூழலியல் சார்ந்த புத்தகங்கள். ‘பிரதம்’ (Pratham) நிறுவனத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான சூழலியல் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. எடுத்துக்காட்டாக, தனிமனிதராக வடகிழக்கு மாநிலங்களில் காட்டை உருவாக்கிய ஜாதவ் பயேங் (Jadav Payeng) பற்றிய புத்தகம், ஹைதராபாத்தில் இருக்கும் ‘டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி‘ (Deccan Development Society) என்கிற இயற்கை வேளாண்மைக்கான அமைப்பு சார்ந்து மரபு விதைகள் சேமிப்பு குறித்த புத்தகம், தாவரங்களையும் விதைகளையும் அறிமுகப்படுத்தக்கூடிய, குழந்தைகளே புரிந்துகொள்ளக்கூடிய புத்தகம், ‘உணவு அறிவியல் சார்ந்த புத்தக வரிசை‘ – எடுத்துக்காட்டாக மிளகாய் பற்றிய தனி புத்தகம். மிளகாய் தென்னமெரிக்காவில் இருந்து எப்படி வந்தது, அதற்கு ஏன் மிளகாய் என்று பெயர் வந்தது என்று கூறுகிறது. இது போன்ற புத்ததகங்கள் நிறைய உள்ளன. ரோஹன் சக்கரவர்த்தி (Rohan Chakravarthy) இந்தியாவின் முன்னணி சூழலியல் ஓவியர். அவருடைய பல புத்தகங்களை பிரதம் வெளியிட்டுள்ளது.
தூலிகா நிறுவனத்தின் ‘ஒரே உலகம்‘ தொகுப்பு புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய சூழலியல் புத்தகம். தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. தூலிகா வெளியீடாக காஞ்சா அய்லய்யா எழுதிய ‘பானை செய்வோம் பயிர் செய்வோம்’ உழைப்பு தொடர்பான, இந்தியத் தொழில்கள் தொடர்பான, அறிவியல் – சூழலியல் சார்ந்த ஒரு புத்தகம், அருணா ரத்னம் மொழிபெயர்த்திருக்கிறார். துளிர், குட்டி ஆகாயம், தும்பி போன்ற இதழ்களில் சூழலியல், இயற்கை சார்ந்து எழுத்து வெளியாகி வருகிறது.
சிறார் இலக்கியமானாலும் சரி, சூழலியல் சிறார் இலக்கியமானாலும் சரி இன்றைய காலத்தில் அவசியமான ஒரு தேவை இருக்கிறது. தமிழில் கதைகளும் புத்தகங்களும் வரும்பொழுது அறிவியல்பூர்வமாகவும், நீண்ட நெடிய மரபை வெளிப்படுத்தக்கூடியவையாகவும், சூழலியலை குழந்தைகள் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும். இதை முன்னிட்டு சிறார் எழுத்தாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
காணொலி பதிவு :
குறிப்பு:
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.
வீடியோ பதிவுகளாக காண: Click here.
கட்டுரைகளுக்கு : Click here.
எழுத்தாக்கம் : நிவேதா.