சிறார் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சங்க இலக்கியத்தில் குழந்தை இலக்கியம் என்பது இல்லை. ஆனால் குழந்தைகளை பற்றிய பாடல்கள் தான் உள்ளது. பாரதத்தில் வாய் வழியாக தான் குழந்தை இலக்கியம் பரவி வந்திருக்கிறது.
கைவீசம்மா கைவீசு, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு போன்ற பாடல்களை தாய் வழியாக, பாட்டி வழியாகவே கேட்டு பாடி வந்திருக்கிறோம். தனியாக குழந்தை இலக்கியம் படைக்கும் போக்கு சங்ககாலத்தில் இல்லை. தொல்காப்பியத்தில் பிசி என்பதைப் பற்றிய குறிப்பு உள்ளது, அது ஒரு விடுகதை. விடுகதை என்பதும் கதை மாதிரி தான். குழந்தைகளுக்கு பிடித்தமான இலக்கிய வடிவம் விடுகதை.
முதன்முதலாக 1908 ஆம் ஆண்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களே குழந்தைகளுக்காக பாடல்கள் எழுதினார். ஏறத்தாழ அறுபது பாடல்கள் எழுதி ‘குழந்தைச் செல்வம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இப்புத்தகம் மத்திய அரசின் பரிசையும் பெற்றது. ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு, துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். இன்று வரையும் நம் வீட்டுக் குழந்தைகள் உற்சாகத்தோடு பாடி மகிழும் பாடல்.
கவிமணிக்கு பிறகு பாரதியார் தன் மகள் சகுந்தலாவுக்காக ‘ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்திருக்கலாகாது பாப்பா’ என்ற பாடலை எழுதினார். இந்த நான்கு வரிகளிலேயே ஓடி விளையாடச் சொன்ன பாரதி மற்றவர்களுடன் கூடி விளையாடி அன்பு பாராட்டும்படியும் பாடி இருக்கிறார். இந்த பாடலின் 20 வரிகளிலே குழந்தைப் பாடலுக்கான பாடு பொருள் அனைத்தையும் சொல்லி குழந்தை இலக்கியத்தின் மொத்த வடிவத்தையும் பாரதியார் வரைந்து காட்டி இருக்கிறார். இவருக்கு பின் பாரதிதாசன் 150 பாடல்கள் எழுதியிருக்கிறார். சிறுவர்களுக்காக மட்டுமே ஆன சிறுவர் கலைக்களஞ்சியம் தொகுத்து வரலாற்றில் இடம்பெற்றவர் ஸ.தூதன் .இவர் எழுதிய பாடல்கள் மிகவும் சிறப்பானவை. மழலைப்பாடல்கள் என்று சொல்லத்தக்க இவரது பாடல்கள் மூன்று வயது முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றவை. இவரது இந்த படைப்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய படைப்பு.
இவர் காலத்திலேயே குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பாவும் குழந்தைப்பாடல்கள் எழுத தொடங்கினார். இவரது பாடல்கள்தான் குழந்தை இலக்கியத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. புதிய போக்கை உருவாக்கினார். புதிய சுவையை புகுத்தினார். உதாரணத்திற்கு ஒரு பாடல்,
‘மாமரத்தில் ஏறலாம்
மாங்காயைப் பறிக்கலாம்
தென்னை மரத்தில் ஏறலாம்
தேங்காயைப் பறிக்கலாம்
புளிய மரத்தில் ஏறலாம்
புளியங் காயைப் பறிக்கலாம்
நெல்லி மரத்தில் ஏறலாம்
நெல்லிக் காயைப் பறிக்கலாம்
வாழை மரத்தில் ஏறலாம்
வழுக்கி வழுக்கி விழுகலாம்’
நெல்லி மரத்தில் ஏறலாம் நெல்லிக்காயைப் பறிக்கலாம் என்று பாடி அடுத்து வாழை மரத்தில் ஏறலாம் என்றதும் வாழக் காயை பறிக்கலாம் என்று இருக்குமென நாம் நினைப்போம், ஆனால் வழுக்கி வழுக்கி விழுகலாம் என வள்ளியப்பா எழுதி படிக்கும் குழந்தையை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பார். நகைச்சுவை உணர்வுமிக்க வள்ளியப்பா அவரது பாடல்களில் சிரிக்க வைக்கும் செய்திகளை நிறைய எழுதி இருப்பார். தான் எழுதிய பெருவாரியான பாடல்கள் குழந்தைகளிடமிருந்து பெற்றவைதான். தாமே சிந்தித்து எழுதியவை மிகக் குறைவு என்பாார்.
மாலை நேரத்தில் தம் வீட்டில் வள்ளியப்பா குழந்தைகளை அழைத்து கதை சொல்லுவார், பாட்டு சொல்லுவார். அப்படி கூடும் பொழுது ஒரு நாள் ஒரு பையன் புது சட்டை அணிந்து வருகிறான். என்னடா புது சட்டையெல்லாம் பிரமாதமாக இருக்கிறது என்கிறான் ஒருவன். அதற்கு அவன் இன்று என் பிறந்தநாள் என்கிறான். ஓ! நீ ஞாயிற்றுக்கிழமை பிறந்தவனா?” என்கிறான் மற்றவன். இதை கேட்டுக் கொண்டிருந்த வள்ளியப்பா மனதில் பாடல் உருவாகி வருகிறது.
ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.
திங்கட் கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்.
செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்.
புதன் கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொற்படி நடந்திடுமாம்.
வியாழக் கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்.
வெள்ளிக் கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்.
சனிக் கிழமை பிறந்த பிள்ளை
சாந்தமாக இருந்திடுமாம்.
இந்தக் கிழமை ஏழுக்குள்
எந்தக் கிழமை நீ பிறந்தாய் ?
இந்தக் கிழமை ஏழுக்குள் எந்த கிழமை நீ பிறந்தாய் என்று கேட்டால் திங்கட்கிழமை நான் பிறந்தேன் தினமும் உண்மை பேசிடுவேன் என்று குழந்தை பதில் சொல்கிறது. அதில் பண்பாடு உருவாகிறது. தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டுமென்று அந்த குழந்தை நினைக்கும் விதத்தில் இந்த பாடல் வெற்றி பெற்றிருப்பதை நாம் உணரலாம்.
வள்ளியப்பாவின் பாடல்களை குழந்தை எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் படித்தால் குழந்தை பாடலின் இலக்கணத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். குழந்தைகள் மிகவும் உயர்ந்தவர்கள் அவர்கள் மிகச் சிறந்த நிலைக்கு வர வேண்டியவர்கள் என்று வள்ளியப்பா கூறுவார். அவர்களுக்கு உயர்ந்த இடத்தை தர வேண்டும் என்பார். வள்ளியப்பாவின் இன்னொரு பாடல்..
“ஏடு தூக்கி பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார் “
வள்ளியப்பா மணி விழாவை ஒட்டி மேற்கண்ட பாடலை பெரிதாக உலோகத்தில் அச்சிட்டு 400 பள்ளிகளில் நாங்கள் பதிக்க செய்தோம். வள்ளியப்பா மேற்கண்ட பாடலை இவ்வாறுதான்
எழுதினார்.
“ஏடு தூக்கி பள்ளியில்
இன்று பயிலும் சிறுவனே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறான்”
இப்படி இவர் பாடல் வெளியான பின்பு ஒரு நிகழ்ச்சிக்காக பெண்கள் பள்ளிக்கு போயிருந்தார் வள்ளியப்பா. அங்கு மேற்கண்ட பாடலை பள்ளிச் சிறுமிகள் இவ்வாறு பாடினர்.
‘ஏடு தூக்கி பள்ளியில்
இன்று பயிலும் சிறுமியே
நாடு காக்கும் தலைவியாய்
நாளை விளங்கப் போகிறாள்’
ஏன் சிறுவன் மட்டும் தான் நாடு காக்க முடியுமா, சிறுமியாலும் முடியும் என்பதற்க்காக தான் பாடலை இவ்வாறு மாற்றிப் பாடினோம் என்றார்கள். அவர்கள் உணர்வை புரிந்து கொண்ட வள்ளியப்பா அந்தப் பாடலை இவ்வாறு மாற்றி ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருபாலரையும் சமமாக ஓரிடத்தில் நிலை நிறுத்தினார்.
“ஏடு தூக்கி பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார் ”
என்று இருபாலருக்கும் பொதுவான சிறுவர் என்ற வார்த்தையை போட்டு இருபாலரும் மகிழ்ச்சி அடையும்படி செய்தார்.
வள்ளியப்பா எழுதிய பாடலை படிக்கும் சிறுவர்கள் அவரைபோலவே எழுதிய நிகழ்ச்சியுமுண்டு.
நில், நில், நில்.
நில்லா விட்டால், உடனே ஒடிச்
செல், செல், செல்.
கல், கல், கல்.
கல்லடி பட்ட நாயின் சத்தம்
லொள், லொள், லொள்.
புல், புல், புல்.
புல்லைப் பிடுங்கிப் வயலில் நட்டால்,
நெல், நெல், நெல்.
வெல், வெல், வெல்.
வென்றது ராமர் கையில் உள்ள
வில், வில், வில். சொல்,
சொல், சொல். சொல்.
சொல்லித் தந்த பாட்டிக் கெங்கே
பல், பல், பல்
என்ற பாடலை எழுதிய வள்ளியப்பா ஒருமுறை கொத்தமங்கலம் சுப்புவை பார்க்கப் போயிருந்தார். வா அய்யா வா அய்யா வள்ளியப்பா என்று வரவேற்று பேசிக்கொண்டிருந்தவர், நீ மட்டும்தானா குழந்தைக் கவிஞர் எங்கள் வீட்டிலும் ஒரு குழந்தைக் கவிஞன் இருக்கிறான் பார்க்கிறாயா என்று சொல்லி அவர் வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து நீ எழுதிய பாடலை இவருக்கும் பாடி காட்டு என்றார்.
“பாட்டி பாட்டி பாட்டி
பாட்டி சேலையை ரெண்டா கிழிச்சா
வேட்டி வேட்டி வேட்டி”
என்று கணிரென்று பாடியதை கேட்டு வள்ளியப்பா அசந்து போய்விட்டார்.
வள்ளியப்பா இன்னொரு பாடல் நேருவை பற்றி எழுதியிருக்கிறார்…
‘அருமை நேரு பிறந்தது
அலகாபாத்து நகரிலே.
இளைஞர் நேரு படித்தது
இங்கிலாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே,’
என்று முத்தான வரிகளால் பாடலை முடித்திருப்பார். அவர் பாடலில் வரும் இறுதி வரிகள் எவரும் எதிர்பார்க்காத இனிய அதிர்ச்சியாக இருக்கும். படிப்பவர் மனதை பற்றிக் கொள்ளும்.
அவர் நிறைய எழுதினாலும் அவர் குறிக்கோளும் ஆசையும் நிறைய பேரை குழந்தை இலக்கிய படைப்பாளியாக உருவாக்க பெரும்பாடு பட்டார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி குழந்தை எழுத்தாளர்களை அங்கீகரித்து பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார். இத்தகைய உற்சாகத்தினால் பலர் குழந்தை எழுத்தாளர்களாக உருவானது மட்டுமல்ல குழந்தை இலக்கியமும் வளர்ந்தது. வள்ளியப்பாவால் உருவாக்கப்பட்டு குழந்தை இலக்கியத்தில் கால் பதித்தவன் என்கிற பெருமிதம் எனக்குண்டு.
“ஆடி களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்கு சொல்லித் தா
பாடிக் களிக்கும் குயிலேவா
பாட்டு பாட சொல்லித் தா
தாவும் மானே அருகே வா
தாவிக் குதித்திட சொல்லித்தா.
கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திட சொல்லித் தா”
என்பது தான் நான் எழுதிய முதல் பாடல். 1960ல் எழுதினேன். எனக்கும் கூட வள்ளியப்பா போலவே பாடல் எழுத சில நிகழ்வுகள் அமைந்தன. முடிந்தது. ஒரு முறை நான் வீட்டில் இருந்த போது என் மகன் அம்மாவிடம் ரொட்டி தா என்று கேட்க ரொட்டி குடுவையில் உள்ளது எடுத்துக்கொள் என்று சொன்னாள். குடுவையை திறந்து பார்த்த அவன் ரொட்டி சூம்பிப் போயிருக்கிறது என்றான். இதில் தோய்ந்து போன என் மனதிலும் ஒரு பாடல் உருவாகியது.
“சூம்பிக் கிடக்கும் ரொட்டித் துண்டுகள்
சாப்பிட உதவாது
சோம்பிக் கிடக்கும் மனிதர் களாலே
காரியம் நடக்காது
போர்த்து கொண்டு தூங்குவ தாலே
கடுங்குளிர் விலகாது
வேர்க்க நடந்தால் மார்கழி மாத
குளிரும் தெரியாது
படுத்துக் கிடக்கும் மாடுகள் ஊரின்
பாதை அறியாது
பந்தயக் குதிரை வண்டியில் பூட்டத்
தூரம் தெரியாது
பிறக்கும் பிள்ளையில் பெரியவன் சிறியவன்
பேதம் கிடையாது
உறக்கம் குறைந்தவன் உழைப்பதில் மிகுந்தவன்
உயர்வது தவறாது”
கவிஞர் மா.கண்ணப்பன் மிகச்சிறந்த பேச்சாளர். அவர் குரல் வளம் எந்த செய்தியையும் மிகச் சிறந்ததாக மாற்றிவிடும். அவருடைய மணி விழாவில் இந்த பாடலைப் பாடி என்னை பெருமைப் படுத்தினார்.
முன்பு பொன்னி இதழ் பாரதிதாசன் பரம்பரை என்று நிறைய கவிஞர்களை அறிமுகப்படுத்தினார். அதில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான் நாரா.நாச்சியப்பன், ஈரோடு தமிழன்பன், முடியரசன், வாணிதாசன் போன்றவர்கள். இதுபோல் வள்ளியப்பாவால் உருவாக்கப்பட்ட பலர் வள்ளியப்பா பரம்பரை என அழைக்கப்பட்டனர்.
குழந்தைகள் படிக்க நிறைய புத்தகங்கள் வரவேண்டுமென விரும்பினார் வள்ளியப்பா. அதற்க்காக பெரிதும் மெனக்கெட்டார் உழைத்தார். எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் சந்திக்க வைப்பார். ஒருமுறை வள்ளியப்பா தன் வீட்டில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்து பதிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் அழைத்திருந்தார். எழுத்தாளர்களை அவர்களிடமுள்ள கையெழுத்துப் பிரதி படைப்புகளை கொண்டு வரும்படி சொல்லியிருந்தார். தேநீர் விருந்து முடிந்ததும் பதிப்பாளர்களிடம் வள்ளியப்பா எழுத்தாளர்களின் படைப்புகளை கொடுத்து இதில் உங்களுக்கு பிடித்தவற்றை புத்தகமாக கொண்டு வாருங்கள். நிறைய புத்தகங்களை வெளிப்படுத்தங்கள் என்று வேண்டினார். பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் தேர்வு செய்து வெளியிட்ட புத்தகங்களே. ஆர்.வஜ்ரேஸ்வரி எழுதிய ‘கௌதமபுத்தர்’, டாக்டர் பூவண்ணன் எழுதிய ‘கரும்பூதம்’. கரும்பூதம் என்ற தலைப்பை காவேரியின் அன்பு என்று மாற்றி வெளியிட்டனர். அந்த ஆண்டு இந்த இரண்டு புத்தகங்களுமே மத்திய அரசு பரிசை வென்றன என்பது வள்ளியப்பாவின் பெரிய முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி. இதுமட்டுமன்றி எல்லா குழந்தை எழுத்தாளர்களும் எழுத வேண்டும் பரிசு பெற வேண்டும் என்ற பரந்த நோக்குடன் வாழ்ந்த பண்பாளர் தான் வள்ளியப்பா அவர்கள். இதைப் பதிவு செய்ய காரணமுண்டு. இடையில் குழந்தை இலக்கியப் படைப்புகள் குறைந்து போனதும் உண்டு.
நான் எழுதிய ” ஆடிப் பாடுவோம்” புத்தகத்திற்கு சாவி இதழில் வெளிவந்த விமர்சனம் இப்படி, நாஞ்சில் நாட்டு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, குழந்தை கவிஞர் அழவள்ளியப்பா போன்றவர்கள் தொடங்கி தொடர்ந்த கவிமரபு இடையில் தொய்ந்து போனது உண்மை. மீண்டும் அதை உயிர்பித்திருக்கிறது இக்குழந்தை கவிதை நூல்.
முன்பெல்லாம் சிறுவர் இதழ்கள் நிறைய வெளி வந்தன. பாலர் மலர், சங்கு, டமாரம், அம்புலிமாமா, பூஞ்சோலை என்று எண்ணிலடங்கா பத்திரிக்கைகள் வந்தன. தற்போது சிறுவர் இதழ்களே இல்லை என்ற நிலை, சிறுவர் இலக்கியம் தொடர்ந்து வளர பஞ்சுமிட்டாய் பிரபு, கொ.மா.கோ. இளங்கோ, கன்னிக்கோயில் ராஜா, விழியன் போன்ற இளைய தலைமுறையினர் தங்களின் மிகுந்த பங்களிப்பை வழங்கவேண்டும். சிறுவர் சங்கங்கள் அமைத்து கதை சொல்லுதல் பாடல் பாடுதல் போன்ற நிகழ்வுகளை தொடர வேண்டும். சிறுவர்களுக்கு கையெழுத்துப் பிரதிகளாக பத்திரிகை வெளியிடும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். நிறைய பேரை குழந்தை இலக்கிய படைப்பாளிகளாக உருவாக்க ஆர்வத்தையும் முடிந்த எளிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் அப்படி செய்வதன் மூலம் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடலாம் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.
காணொலி பதிவு :
குறிப்பு:
சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறார் கலை இலக்கியச் சந்திப்பு இணைய வழியே நடைப்பெற்றது. மொத்தம் 10 அமர்வுகள், 20க்கும் மேலான சிறப்புரைகள் என மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் உரைகளை இங்கு பஞ்சுமிட்டாய் இனையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.
வீடியோ பதிவுகளாக காண: Click here.
கட்டுரைகளுக்கு : Click here.
எழுத்தாக்கம் உதவி : உதயலட்சுமி, நிவேதா.