நெஞ்சுக்குள் சுழன்ற நெருப்புப் பந்து – கமலாலயன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தங்கள் நாட்டை உருவாக்க ஒன்றரைக் கோடி ஆப்பிரிக்கர்களை அடித்து,  சங்கிலியால் பூட்டி அடிமைகள் ஆக்கி, அமெரிக்கா கொண்டு வருவதற்கு அதை விடவும் பல மடங்கு ஆப்பிரிக்கர்களைக் கொன்றனர் அமெரிக்க வெள்ளையர்.                             இப்போது நாம் பார்க்கும் அமெரிக்காவைக் கட்டி எழுப்பியவர்கள் உண்மையில் கறுப்பின மக்கள்தாம். ( பிறகு வெள்ளைச் சிந்தனையை தலைக்குள் ஏற்றிக் கொண்ட கறுப்பினத்தார் வெள்ளையர் களுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்கப் பூர்வ குடிகளைக் கொன்று அழித்தது தனிக்கதை. )   மனிதர்களைச் சந்தையில் விற்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு எழுபது, எண்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் கறுப்பினத்தாரின் மீதான இன ஒடுக்குமுறையும், பாகுபாடும் குறையாமல்தான் இருந்தன. இன வெறிக்கு எதிராக எத்தனையோ பேர் மோதி மோதி ஓய்ந்தாலும் அந்தச் சாம்பலுக்குள் நெருப்பு கனன்று கொண்டுதான் இருந்தது.

புத்தகம் ஒன்று, ஒரு பெண்ணுடன் அவளது வாழ்க்கை நெடுகப் பேசிக் கொண்டே இருக்கிறது. அந்தப் புத்தகம் அவள் சிறுமியாக இருந்த போது அவளிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம். தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அவளுக்குள் எழுப்பிய கேள்விகளுக்கு தன் வாழ்வையே பதிலாக மாற்றி வைத்திருந்தாள். அந்தப் பெண் மேரி மெக்லியோட் பெத்யூன். சாம்பலுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்புத் துண்டுகள் மேரியும் ஒருவர்.

பள்ளிகளில், மருத்துவமனைகளில், பொது இடங்களில், பேருந்துகளில் என எல்லா இடங்களிலும் நிறைந்திருந்த இன ஒடுக்கு முறைகளுக்கும், பாகுபாடு களுக்கும் எதிராக பிரெடரிக் டக்ளஸ் முதல் ரோஸா பார்க்ஸ் வரை உறுதி மிக்க மனிதர்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். மருத்துவ உதவியின்றி,  மருத்துவமனைக்குள்ளேயே எலிகள் கடித்து இறந்து போன குழந்தையைக் கண்டு பல நாள்கள் தூங்காமல் இருந்ததாக மால்கம் எக்ஸ் தன் சுயசரிதையில் எழுதி இருக்கிறார். பொது இடங்களில் தமக்கான உரிமையைப் பெறப் போராடும் அதே வேளையில் பள்ளிகளிலும், மருத்துவ மனைகளிலும் கறுப்பினத்தவருக்கான இடம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப் பட்டு, மறுக்கப்பட்ட போது, “வேறு வழி இல்லை, நமக்கான இடங்களை நாமேதான் உருவாக்கியாக வேண்டும் !” என்று துணிந்து சிலர் காரியத்தில் இறங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் மேரி மெக்லியோட் பெத்யூன்.

“அந்தப் புத்தகத்தைத் தொடாதே. உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற வார்த்தைளால் தன் நெஞ்சில் வாங்கிய அடி அவளை விட்டு அகலாது இருந்தது. அந்த வார்த்தைகள் ஒரு நெருப்புப் பந்து  போலவே அவளது நெஞ்சுக்குள்  சுழன்றபடியே இருந்ததால் கறுப்பினக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியை உருவாக்கியே தீருவது என்ற கனவுடன் நடந்தார் மேரி பெத்யூன். கனவுகள் முக்கியமானவை. ஆனால், கனவுகளை விடவும் அவற்றை செயலாக்குவதில் அவை கோரும் உழைப்பு அசாத்தியமானது. ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தனது பள்ளியை உருவாக்கிய மேரி சமையல் செய்தும், தோட்டம் போட்டும், குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டு பொது இடங்களில் பாட்டுப் பாடியும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் தான் அந்தப் பள்ளியை வளர்க்கிறார். உலகெங்கும் மூலை முடுக்குகளில் உள்ள எத்தனையோ ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரல் மேரியினுடையது. காற்றில் அலையும் தீபத்தைக் கைகளால் அணையிட்டுக் காப்பதைப் போலவே, எதிர்க் காற்றில் துவளும் தன் பள்ளியைப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் ஒரு கறுப்பினப் பெண்ணின் கதை இது. ஒரு பள்ளியை உருவாக்க எடுத்து வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன எட்டுக்காகவும் போராடும் ஒரு பெண்ணின்  இந்தக் கதை கறுப்பினத்தோரின் கதையாகவும்  விரிகிறது…

நன்றி : உனக்குப் படிக்கத் தெரியாது நூலின் பதிப்புரை

புத்தகம் : உனக்குப் படிக்கத் தெரியாது
நூலாசிரியர் : கமலாலயன்
வெளியீடு : வாசல் பதிப்பகம்

Leave a comment