இரண்டு நாவலும் குழந்தைகள் உலகமும் – சம்பத் குமார்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நான் இரண்டு தினங்களாக காட்டிற்குள்ளாகவே அலைந்து திரிகிறேன். முதலில் தெலுங்கு தேசத்தில் உள்ள காட்டில் வயதான முதியவரோடு தாய் பன்றியையும், அதன் குட்டிகளையும் பாதுகாத்துக் கொண்டிருந்தேன். அதன் அலுப்பு தீரும்முன்னே இன்று அல்பேனிய நாட்டிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் அந்தக்கால கம்யூனிஸ்ட்களால் உருவாக்கப்பட்ட கூட்டுப்பண்ணை வயல்களில் இளம் சிறார்களுடன் சுற்றித் திரிந்தேன். சாத்தியமில்லாததாகத் தோன்றும் இவையனைத்தும் கடந்த இரண்டு நாட்களாக நான் வாசித்த நாவல்களால் எனக்கு சாத்தியமானவை. முதல் நாவல் “அவன் காட்டை வென்றான்” என்பதும் இரண்டாவது “பெனி எனும் சிறுவன்” என்கிற அல்பேனிய நாவலும் ஆகும்.

நிச்சயமாகச் சொல்வேன், புத்தகங்களை வாசிக்கும்போது மட்டும்தான் நமக்கும் அழகிய இறக்கைகள் முளைத்து விடுகின்றன. இதன் வழியே பயணப்படும்போது நமக்குள்ளேயே எத்தனையோ காட்சிகளை கண்டுவிடுகிறோம். நாம் இதுவரை அனுபவித்திராத எண்ணங்களால் அலைகழிக்கப்படுகிறோம். அந்தப் புத்தகத்தை வாசித்து, பின் மூடிவைக்கும்போது நிதானம் என்பது கைகூடுவதோடு நம்மையே கூண்டிலேற்றி விசாரித்துக் கொள்ளவும் நமது ஆளுமை நெகிழ்ந்துவிடுகிறது.


இரண்டு நாவல்களையும் அடுத்தடுத்து வாசிக்கத் தேர்வு செய்தது தற்செயலானது. இயற்கையோடும் விலங்குகளோடும் பின்னப்பட்டுள்ள இக்கதையின் சூழல் குழந்தைகளோடு நெருக்கமாக அமைகிறது. ‘அவன் காட்டை வென்றான்’ நாவலில் வயதான கிழவன் தன் வீட்டிலிருந்து காணாமல்போன பிரசவிக்கும் தருணத்திலிருக்கும் தாய்பன்றியை தேடி காட்டுக்குள் செல்கிறான். இளம்பிராயத்திலிருந்து பரிட்சையமானதாக இருந்தாலும் இப்போதும் புதிதாகவே அக்காடு அவனுக்குத் தோன்றுகிறது. அக்காட்டிற்குள் ஓர் இரவு முழுவதும் தனித்திருந்து தாய்பன்றியையும் பிரசவித்த அதன் குட்டிகளையும் பிற விலங்களிடமிருந்து போராடிக் காப்பாற்ற முனையும் அக்கிழவனின் வைராக்கியம் வாசிப்போரை கிளர்த்துகிறது. ஒற்றை மனிதனாக கதை முழுவதும் வரும் அக்கிழவனின் வழியே அக்காட்டின் வனப்பும் சூழலும் மிரட்சியோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது நாவலில்.


இரண்டாவது நாவலான “பெனி எனும் சிறுவன்” அல்பேனிய நாவல். பெரிய வனாந்திரத்தின் நடுவே உள்ள கிராமத்தின் சூழலோடு நகரும் இக்கதை இயற்கையோடு நெருங்கி உறவாடும் சிறார்களின் உளப்பூர்வமான விருப்பத்தையும் குழந்தைகளைக் கற்றுணரா பெற்றோர்களின் சிக்கல்களையும் மிகத் தீவிரமாக பேசுகிறது.


கல்வியையும் இயந்திரமயமான நவீன தொழிலையும் அடித்தளமாகக் கொண்டு மேலெழுந்து வரும் நகரமயமாதலின் போக்கில் பெரியவர்களுக்கு புதிது புதிதாக முளைத்துவரும் நாகரீகச் சிந்தனையில் குழந்தைகளின் இயல்பான அகஉலகம் பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகிறது. வீசும் காற்றும், பெய்யும் மழையும் வெளியுலக நட்பும் ஆகாதென்று வீட்டிலேயே அடைத்து வைக்கப்படும் குழந்தையின் மனதில் வீனாக வெறுப்பு மட்டுமே வளர்ந்து வருகிறது. அவனால் விருப்பமான எந்தவொன்றையும் அவனது அம்மாவின் அனுமதியோடு வாங்க முடிவதில்லை. அப்படி வாங்கிய ஓரேயொரு பந்தையும் ஆசைதீர ஒருமுறைகூட உதைத்துப் பார்க்க முடிவதில்லை. அது அப்படியே புதிதுபோல அவன் வீட்டில் கிடக்கிறது. வயதிற்குரிய அவனது தேவையைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் அவனுக்கு அவனது மாமா மூலமாக தற்காலிகமாக ஒரு விடுதலை கிடைக்கிறது.


அல்பேனிய நாட்டில் தேஸ்கா நதியோடும் அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்திருக்கும் கோர்க்கா எனும் குக்கிராமத்திற்கு ஒரு குதிரையில் வந்து சேர்கிறான் பெனி. அதுதான் அவனது மாமாவினுடைய ஊர். மாமா மகன், அவனது நண்பர்கள், அத்தை, பலூன் எனும் பெண் மற்றும் பல உள்ளூர்வாசிகளோடு ஒருமாத காலம் இரண்டறக் கலந்து வாழ்கிறான்.


நகரத்தில் கடைக்குச் சென்று கைப்பிடியளவு நாவல்பழம் வாங்கத் திணறிப்போகும் பெனி கானகத்தின் நடுவே அச்சிறு கிராமத்தில் தானே காட்டில் சுற்றித் திரியவும், கழுதையோடு பாரங்களைச் சுமக்கவும், பெரியவர்களோடு சேர்ந்து வயலில் வேலை பார்க்கவும், நாவல் மரத்திலிருந்து பழங்களை தானே பறித்து உண்ணவும் இன்னமும் பல சாகசங்கள் புரியவும் கற்றுத் தேர்கிறான். எதற்கும் பயப்படுபவனாக, நம்பிக்கையற்றவனாக காட்டிற்குள் நுழையும் அச்சிறுவன் திரும்பிச் செல்லும்போது பலரோடும் உரையாடக் கற்று தனியே அடர்ந்த காட்டிற்குள் இரவு தங்குமளவு தைரியமுடையவனாக உருமாறித் திரும்புகிறான். வெகுவாக சிதைந்து போயிருந்த அவன் மீண்டும் அவனது பள்ளியில் ஆளுமை நிறைந்தவனாக குழப்பமின்றி செயல்பட முடிகிறது.


குழந்தைகள் இயல்பாகவே இயற்கையோடு இணைந்து வாழ விரும்புகிறவர்கள். பெரியவர்களின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட உலகில் அவர்களால் உண்மையாக இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் “வருந்துகிறேன் அம்மா” என்கிற நெகிழ்ச்சியூட்டும் வார்த்தையை மட்டும் போலியாகச் சொல்லி அம்மாவை சமாதானப்படுத்தத் தெரிந்து வைத்திருக்கிறான் நகரத்து பெனி. அவனது அம்மாவிற்கும் அதுவே போதுமானதாக இருக்கிறது. அவனே கிராமத்திற்கு சென்ற பிறகு ” எனக்கு பரிட்சையமில்லாத ஒன்றைப் பற்றி முன்முடிவோடு எதையும் கூற மாட்டேன்” என புதிதாக ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியே கற்றுக் கொள்கிறான்.


தொடர்ச்சியான கண்காணிப்பாலும் எப்போதும் தன்முன்னே வந்து விழும் தடை சொற்களாலும் செயலற்றவனாகிப் போன பெனிக்கு கிராமத்தில் அமையும் கண்காணிப்பற்ற அனுமதி, தடையற்ற சுதந்திரம், மிகையற்ற உரையாடல் ஆகியன அவனது செயல்களுக்கு தைரியத்தை அளிக்கின்றன. கூடவே தன்னை பொறுப்பானவனாகவும் மாற்றிக் கொள்ள தினசரி முயலுகிறான்.


நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்பு அவனை தனியனாக, அவர்களது குடும்பத்தை மட்டுமே உலகமாக அவனுக்கு காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் தோமா மாமாவினுடைய கம்யூனிச வாழ்க்கைமுறை, கூட்டுப்பண்ணை வயல்வெளிகள், கூட்டு உழைப்புக் கருவிகள் ஆகியன அவனை பெரும் சமூகத்தின் அங்கமாக அவனை உணர வைக்கிறது. அதுவே அவனை ஜெர்மானியர்களுக்கு எதிரானவனாக, பாஸிஸ்டுகளுக்கு எதிரானவனாக உணர வைக்கிறது. போரால் சூரையாடப்பட்ட எளியவர்களுக்காக வருந்தச் செய்கிறது. முகமறியா மனிதர்களைக்கூட உறவென எண்ணி உரையாடச் செய்கிறது.


காட்டிற்குள்ளான கிராமத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் பெனிக்கு ஒரு அனுபவமாக மாறுகிறது. நமக்கும்கூடத்தான். கழுதையோடு போராடும்போதும், ஆற்றில் நீச்சல் கற்கும் போதும் என பெனியோடு சேர்ந்து நாமும் போராட வேண்டியதாகிவிடுகிறது. காட்டிற்குள் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களையும் நம் மனது இயல்பாக அங்கு விழும் குறைந்த ஒளி ஊடாகவே பதிவு செய்கிறது. இந்நாவலை படித்து முடிக்கும்வரை ஒருமாத காலம் நாமும் அல்பேனிய காட்டில் இருந்ததைப் போலவே தோன்றுகிறது.


இதை எழுதும்போது ஏன் இதுபோன்ற நாவல்கள் திரைப்படமாவதில்லை. குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்ற ஒன்று நம் குழந்தைகளுக்கு நம் சமூகத்தில் கிடைக்காமலே போவது பெரியவர்கள் இவ்வுலகில் நிறைத்து வைத்திருக்கும் அறிவீனம் என்பதாக நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் இந்நாவலை மையமாகக் கொண்டு அல்பேனிய திரைப்படம் ஒன்று வெளிவந்துள்ளதாக அறிந்தேன். தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டும்

Leave a comment