பத்து மாத விந்தை பிறப்பு – பெ.தூரன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பத்து மாதம்‌ சுமந்து பெற்றெடுத்த தாய்‌ என்று சாதாரணமாகச்‌ சொல்லுகிறோம்‌. குழந்தையின்‌ பிறப்பைப்‌ பத்து மாத விந்தை என்று சொல்லலாம்‌. கருவுற்றதிலிருந்து மாதங்களைக்‌ கணக்கிட்டால்‌ குழந்தை பிறக்கும்போது மாதங்கள்‌ பத்தாகலாம்‌. உண்மையில்‌ தாயின்‌ உடம்பில்‌ கரு வளர்வது 9 மாதத்திற்குத்தான் ; அதாவது சுமார்‌ 270 நாட்கள்‌ கரு வளர்ந்து உலகில்‌ பிறக்கிறது. ஆனால்‌, எந்த நாளில்‌ குழந்தை பிறக்கும்‌ என்று திட்டமாகச்‌ சொல்ல முடியாது.

ஒன்பது மாத காலமாகச்‌ சுருங்கி நெளியாமல்‌ இருந்த கருப்பை இப்போது அப்படிச்‌ செய்யத்‌ தொடங்குகிறது. அதைச்‌ சுருங்காமல்‌ தடுக்கும்‌ மஞ்சலரி(corpus luteum) போன்ற உருப்புக்களின்‌ சக்தி குறைந்து விட்டது போலும்‌, மேலும்‌ கருப்பையானது சுருங்‌கிக்‌ குழந்தையை வெளியில்‌ தள்ளுவதற்குச்‌ சாதகமாகவும்‌ சில சுரப்பிகள்‌ வேலை செய்திருக்க வேண்டும்‌.

கருப்பையின்‌ சுவர்களிலுள்ள தசை நார்கள்‌ சுருங்கத்‌ தொடங்குகின்றன. வயிற்றிலுள்ள தசை நார்களும்‌ பிறவும்‌ இவற்றிற்கு ஓரளவு உதவி செய்கின்றன. அதனால்‌ குழந்தை யோனியின்‌ வழியாக வெளியே வருகிறது. முதலில்‌ பனிக்குடம்‌ உடைந்து அதிலுள்ள நீர்‌ வெளிப்பழிம்‌, அதனால்‌ பிரசவம்‌ ஓரளவு எளிதாகிறது.

பிரசவ வேதனை என்று சொல்லுகிறோம்‌. குழந்‌தையின்‌ பிரசவத்தின்போது தாய்க்கு வேதனைதான்‌. குழந்தையின்‌ சிரிப்பும்‌, அறிவும்‌, நன்றியும்‌, பக்தியும்தான்‌ பின்னால்‌ அவளுக்கு இவ்வேதனைக்கு ஈடு செய்ய வேண்டும்‌. குழந்தை வெளியில்‌ வருவதற்குள்ளேயே பெரும்பாலும்‌ கருக்குடைக்கும்‌ கருப்‌பைக்கும்‌ உள்ள தொடர்பு அற்றுப்போகும்‌. இதுவும் பனிக்குடமும்‌ குழந்தைக்குப்‌ பின்‌ நஞ்சாக வெளி வந்துவிடுகின்றன.

நஞ்சுக்‌ கொடியின்‌ மூலம்‌ இனிக்‌ குழந்தைக்கு உணவும்‌, பிராண வாயும்‌ செல்ல இயலாது. அதை இனிக்‌ கத்தரித்துவிடலாம்‌. கத்தரித்த இடத்தில்‌ ரத்தம்‌ பெருகாதபடி கட்டிவிட வேண்டும்‌. நாளடைவில்‌ இது வாடிப்‌ பிரிந்துபோகும்‌. இதன்‌ மூலம்‌ உணவு கொண்டதற்கு அறிகுறியாகக்‌ கொப்பூழ் (தொப்புள்)‌ மட்டும்‌ மறையாமல்‌ என்றுமிருக்கிறது.

உலகத்திற்கு வந்ததும்‌ குழந்தைக்கு எத்‌தனையோ புதிய வேலைகள்‌ ஏற்படுகின்றன. பாவம்‌, அந்தப்‌ பூங்குஞ்சு இப்பொழுது தானே தனக்கு வேண்டிய பிராணவாயுவைச்‌ சேகரித்துக்கொள்ள வேண்டும்‌. தனது உணவைத்‌ தானே சீரணித்துக்‌ கொள்ளவேண்டும்‌. தனது உடம்பின்‌ வெப்பத்தை யும்‌, குளிர்ச்சியையும்‌ தானே அளவு படுத்திக்‌ கொள்ளவேண்டும்‌. இப்படி எத்தனையோ செயல்கள்‌.

சுவாசப்‌ பையும்‌, சீரணக்‌ கருவிகளும்‌ வேலை செய்யத்‌ தொடங்குகின்றன. குழந்தை பிறந்ததும்‌ அழுகின்றதல்லவா ? இந்த அழுகைக்குக்‌ காரணம்‌ முதலில்‌ வெளிவிடுகின்ற மூச்சுத்தான்‌. மூச்சு வெளி வரும்‌ ஒலியே அழுகையாகக்‌ கேட்கிறது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திற்கெல்லாம்‌ சிறுநீர்ப்‌ பையில்‌ சேர்ந்திருந்த மூத்திரம்‌ வெளிப்‌படுகிறது. சென்ற ஆறு மாதங்களாகக்‌ கருவின்‌ குடலில்‌ சேர்ந்துகொண்டிருந்த கரும்‌ பச்சையான கழிவுப்‌ பொருளும்‌ வெளிவந்துவிடுகிறது.

குழந்தையில்‌ தலையிலுள்ள எலும்புகள்‌ நன்றாகப்‌ பொருந்தாமல்‌ இருக்கின்றன. பிரசவத்திற்கு இது ஒரு வகையில்‌ பெரிய உதவி. குழந்தையின்‌ தலையைத்‌ தொட்டுப்‌ பார்த்தால்‌ ஆறு மென்மையான பாகங்கள்‌ தென்படும்‌. அங்கெல்லாம்‌ இனிமேல்தான்‌ எலும்பு வளர்ந்து கூட வேண்டும்‌, பிறக்கும்போதே குழந்தையின்‌ எல்லா உறுப்‌புக்களும்‌ முழு வளர்ச்சியடைந்திருப்பதில்லை. அவை செய்யவேண்டிய கடமைகளும்‌ உடனே முழு வேகத்தோடு தொடங்குவதுமில்லை, காலப்‌ போக்கிலே இவையெல்லாம்‌ ஏற்படவேண்டும்‌.

ஒன்பது மாத காலமாகத்‌ தனது ரத்தத்திலிருந்து உணவும்‌, பிராணவாயுவும்‌ அளித்து வளர்த்த தாய்‌ குழந்தை பிறந்த பிறகும்‌ அதற்குப்‌ பால்‌ கொடுத்து வளர்க்கிறாள்‌. தாய்‌ செய்யும்‌ நன்றிக்கு இணை கூறுவது கடினம்‌. அவளை முன்னறி தெய்வமாகக்‌ கூறுவது எவ்வளவு பொருத்தம்‌ என்பதை இதுவரை அறிந்துகொண்ட உண்மைகளால்‌ நன்கு உணரலாம்‌.

குறிப்பு : பெ.தூரன் அவர்களின் பல புத்தகங்கள் குழந்தை பிறப்பு & வளர்ப்பு பற்றிய அறிவியல் மற்றும் உளவியலை பேசுகிறது.  அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிரும் நோக்கத்தில் அவற்றை நமது இணையத்தில் பகிர்கிறோம். இந்தப் பதிவு கருவில் வளர்ந்த குழந்தை என்ற புத்தகத்தில் உள்ளது. 1950-60 களில் வெளியான புத்தகம்.

Leave a comment