ஓவா – எட்டு வயது சிறுமி. அவளுக்கு அவளது கொள்ளு
உன்னிடம் இரண்டு விஷயம் சொல்லப்போகிறேன் ஓவா!முதலாவது.. ஓர் உண்மையை சொல்கிறேன்..உனக்கு அந்தப் பறவைகள் தெரியுமல்லவா..உன் அப்பா பின்னே துரத்தி ஓடுவானே அந்தப் பறவைகள் ..அவை சொர்கத்துக்கு பறப்பவை அல்ல..அவை கோடைக்காலத்தில் வந்து மழைக்காலத்தில் திரும்பும் பறவைகள்..இரண்டாவது.. உன் அப்பாவை பற்றியது .. ஓவாஅவர்கள் என்ன சொன்னாலும்அவர்கள் என்ன ஆணையிட்டாலும்அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும்உன் அப்பா நல்லவர்..அதை மட்டும் நினைவில் வை !உன் அப்பா நல்லவர் !
ஓவாக்கு தனது அப்பா ஏன் மற்றவர்கள் போல் இல்லை என்ற கேள்விக்கு பாட்டி சொன்ன பதில் தான் உண்மையானது என்று நம்பினாள். “உன் அப்பாவுக்கு உன் வயசு தான் ஆகுது” என்று பாட்டி சொன்னதை நினைத்து நினைத்து அவள் மகிழ்ந்தாள். ஓவாவின் தந்தை மீமோ சிறப்பு மனிதர். எதார்த்த வாழ்வில், மனைவியை இழந்தாலும் தனது இருப்பை மகள் & பாட்டியின் துணையோடு வாழ்ந்து வருபவர். அம்மாவைப் பற்றி கேட்கும்போதெல்லாம் அவள் தேவைதையாக மாறி சொர்க்கத்தில் இருப்பதாகவே இருவரும் நம்பினர். ஓவாவின் மகிழ்ச்சி தான் மீமோவுக்கு வாழ்வு.
மீமோ சில சந்தர்ப்ப சூழலால் அந்த நாட்டின் பெரிய இராணுவ அதிகாரியின் மகளின் இறப்புக்கு காரணம் என்று குற்றச் சாட்டப்படுகிறார். அந்த நாட்டின் இராணுவ அதிகாரம் அவனுக்கு வழங்கப்படும் தண்டனை வழியே தங்களது அதிகாரத்தின் பலத்தை நிரூபிக்க நினைக்கிறது. அதனால் எந்தவித மனித நேய நடவடிக்கைகளுக்கும் இடம்கொடுக்காமல் அனைத்து வேலைகளையும் செய்கிறது.
வயதான பாட்டி – சிறுபிள்ளை அவர்களால் அரசை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தப் போராட்டம் தான் இந்தத் திரைப்படம். உண்மையில் கண்ணீர் சிந்தாமல் இந்தத் திரைப்படத்தை பார்ப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு காட்சியிலும் மனதை கலங்கடித்துவிடுவார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மனிதத்தை தட்டி எடுக்கும் ஒரு புனிதம் தான் இந்தத் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.
“மரண தண்டனை” குறித்து இங்கு பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அது அதிகாரத்தின் கோரப் பிடியில் எப்படியெல்லாம் ஓர் அப்பாவியை நசுக்கி தனது இருப்பிடித்ததை தக்க வைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்தப் படம் நல்ல உதாரணம். சிறப்பு மனிதர் (ஆட்டிசம்). நமது ஊரில் ஆட்டிசம் பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படாத நிலையில் அவர்களது உலகை நமக்கு இந்தத் திரைப்படம் காட்டுகிறது. உலகில் அன்பை நேசிக்கும் ஓர் உயிர், தன்னை அடித்த சக கைதியை கொலை செய்ய ஒருவன் வரும்போது அந்த கத்தியை தனது கையால் பிடித்து .. “இது தப்பு ..இது தப்பு…இப்படி செய்றது தப்பு” என்று தனது உடலில் அந்தக் கத்தி குத்தை வாங்கிய அந்த உள்ளம்… அதை அப்பட்டமாக காட்சிப் படித்தி நம் முன்னே பல கேள்விகளை எழுப்புகிறது. அன்பு அதன் வடிவம் என்ன என்ற சிலவற்றை வரையறுத்தால் இதுப் போன்ற மனிதர்களின் வாழ்விலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
இது ஒரு கொரியன் படத்தின் ரீமேக். துருக்கிய மொழி திரைப்படம், ஆதலால் இஸ்லாமிய சூழலையும் பேசுகிறது. இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களையும், சிறையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு இறைவன் மன்னிப்பு தந்து அதன் வழியே சொர்க்கத்தில் எப்படியாவது இடம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தையும் நிறைய இடங்களில் காட்சிபடுத்தி , இறுதியில் அதற்கான காரணத்தையும் உணர்த்தியிருப்பது அழகு.
சிறையின் எண் – 7, அங்கு நடக்கும் அதிசயம் தான் இதன் திரைக்கதை. அப்படி என்ன அதிசியங்கள் அங்கு நடந்திட முடியும்? மனிதமும் அன்பும் தவிர இவ்வுலகில் வேறு அதிசயம் உண்டா? அந்த அதிசயம் தான் அங்கும் நடந்தது. இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அவரும் அந்த அதிசயத்தை தானே விரும்புவார். அந்த அதிசயத்தை நடத்தி காட்டியவர்கள் தான் ஓவாவும் மீமோவும்.
கலை தனது வேலையை பல்வேறு இடங்களில் மிக நேர்த்தியாக செய்கிறது. அதில் இந்தத் திரைப்படத்திற்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. இந்தத் திரைப்படத்தில் கண்ணீர் சிந்தும் தருணங்கள் நிறைய உண்டு ஆனால் அவை வாழ்வை ரசிக்க வைக்கும் தருணமாக கண்டிப்பாக இருக்கும். ஓர் நிதானமான நாளில் இந்தத் திரைப்படத்தை குடும்பத்துடன் அவசியம் பார்க்கவும். “லிங்கோ லிங்கோ” – “பாட்டில்ஸ்” என்ற அவர்களது விளையாட்டின் வார்த்தைகள் உங்கள் வீட்டிலும் ஒலிக்கும்.