வைரஸ் திரைப்படம் அறிமுகம் (மலையாளம்) – சிவா

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கொரொனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக முடங்கி கிடப்பதால் திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. பார்க்க வேண்டும் என நினைத்து இது வரை பார்க்காமல் விட்ட படங்கள், அல்லது நண்பர்களால் பரிந்துரைத்த படங்கள்/தொடர்கள் என வீட்டோடு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். அமேசான் ப்ரைம் தளத்தில் கிடக்கும் வைரஸ் என்கிற மலையாள மொழி படமும் ரொம்ப நாளாகவே பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதிருக்கும் காலகட்டத்தில் ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் மனதை மேலும் சோர்வடைய செய்ய வேண்டாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் நண்பனொருவன் அழைத்து வைரஸ் திரைப்படத்தைப பாருங்கள், இப்போதைய இக்கட்டான காலகட்டத்திற்கு ஏற்ற படம், நிச்சயமாக உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தாது என கூறியதால் பார்க்க ஆரம்பித்தோம். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. 2018 ஆண்டு கேரளாவில் கொரொனாவைப் போலவே நிப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இது பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டார்கள். அரசாங்க விளம்பரம் போல் அல்லாமல், பிரச்சார நெடி எதுவும் இல்லாமல், மிகைப்படுத்துதல் இல்லாமல் இந்தச் சம்பவத்தை நேர்த்தியான ஒரு திரைப்படமாக உருவாக்கியிருந்தார்கள். திரைப்படம் பார்த்ததும் இந்த சம்பவத்தை பற்றி மேலும் படிக்கத் தொடங்கினேன். அப்போது வந்த செய்திகள், கட்டுரைகள், உலக பொது சுகாதர நிறுவனத்தின் தளம் போன்றவற்றிலிருந்து தகவல்களை சேகரித்து இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.

மே மாதம் 2018 இல் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பாறா மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலோடு ஒரு நபர் அனுமதிக்கப் படுகிறார். வழக்கமான பிரச்சனை என மருந்து மாத்திரைகளுக்குப் பிறகு அவர் வீட்டிற்கு சென்று விடுகிறார். 2 நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கேயே அவர் உயிரிழக்கவும் செய்கிறார். அவருக்கு வயது 22 தான். அடுத்த 10 நாட்களில் அவரது வீட்டில் உள்ள மற்றவர்களும் இதே போல அறிகுறிகளுடன் பாதிக்கப்படுகிறார்கள். இது சாதாரண காய்ச்சல் இல்லை, வேறு எதுவோ ஒன்று என மருத்துவர்களுக்கு ஒரு சந்தேகவம் வருகிறது. அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்த பிறகு அது நிப்பா வைரஸ் தொற்று என்பது உறுதியாகிறது. அரசாங்கத்திற்கு உடனே தகவல் தெரிந்ததும் இதற்கென ஒரு தனி குழு அமைக்கிறார்கள். அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், சுகாதாரத்துறை செயலர், மருத்துவர்கள் குழு என அரசு மற்றும் மருத்துவத் துறை சார்ந்த முக்கியமானவர்கள் அந்தக் குழுவில் இருக்கிறார்கள்.

ஒரு சாதரண வைரஸ் தொற்று, அதுவும் அதிகமான மக்கள் பாதிக்கப்படாத போதும் அரசாங்கத்தின் துரிதமான இந்த நடவடிக்கைக்குக் காரணம் இந்த நிப்பா வைரசின் தீவிரத் தன்மை. இந்த வைரசினால் 100 பேர் பாதிக்கப்பட்டால் அதில் 50 முதல் 75 பேர்கள் வரை உயிரிழக்கலாம். மேலும் இது பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மூலம் பரவக்கூடியது கொரொனா போலவே. எனவே இதை ஆரம்பத்திலேயே மட்டுப்படுத்தாவிட்டால் சில நாட்களுக்குள்ளாகவே மாநிலம் முழுதும் பரவக் கூடிய அபாயம் உள்ளது. இது முதன் முதலாக மலேசியாவில் நிப்பா என்ற இடத்திலிருந்து 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு நிப்பா என்று பெயர். மலேசியாவில் இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. 265 பேருக்கு அங்கு பரவி அதில் 105 பேர் உயிரிழந்தார்கள். இந்த நிப்பா வைரைசிற்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை என்பது இன்னும் கொடுமையான செய்தி. மனிதர்களுக்குள் இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் நன்றாக இருந்தால் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீள முடியும். உலக சுகாதார நிறுவனம் (WHO) மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டிய முக்கியமான வைரஸ்கள்/நோய்கள் பட்டியல் என்று 10 வைரஸ்கள்/நோய்கள் பட்டியல் வைத்துள்ளது. அதில் நிப்பாவும் ஒன்று. (கொரொனா இதில் தற்போது முதல் இடத்தில் உள்ளது). அப்பேற்பட்ட மிகக் கொடுமையான வைரஸ் இந்த நிப்பா.

மாநில அரசாங்கத்தின் குழு வேலையில் இறங்கியதும் முதலில் அவர்கள் செய்தது தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ள நபர்களைக் கண்டறிவது. முதலில் இறந்த நபரின் வீட்டு உறுப்பினர்கள், அவர்களது நண்பர்கள் என அனைவரையும் கண்கானிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள். இது நடந்து கொண்டிருக்கும் போது நிப்பாவுக்கென அரசு மருத்துவமனைகளில் தனி பகுதி அமைக்கிறார்கள். ஏற்கனவே ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டதால், மருத்துவ பணியாளர்களுக்குத் தேவையான கையுறை, முகக்கவசம், தொற்று தடுப்பு அங்கி என வரவழைத்து அதை பணியாளர்களுக்கு கொடுக்கிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் ஊர்களை முழுதுமாக அடைக்கிறார்கள். இதன் மூலம் வைரஸ் கேரளத்தின் மற்ற நகரங்களுக்கு பரப்புவதைத் தடுக்க முடிகிறது. பழந்தின்னி வவ்வால்களால் வருகிறது என முதலில் சந்தேகம் இருந்ததால் (சில நாட்கள் கழித்து இது உறுதி செய்யப்படுகிறது), பாதிக்கப்பட்ட ஊர்களில் பழங்களை யாரும் விற்கவோ வாங்கவே வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த வைரசிற்கு எதிராக இப்படியாக பல்முனைப் போர்களை தொடுக்கிறது அரசாங்கம். இன்று கொரொனா பாதிப்பை மட்டுப்படுத்தியதில் உலகிற்கே வழிகாட்டியாக தென் கொரியா இருக்கிறது. அதற்கு காரணம் அவர்களும் இதே போல பலமுனைகளில் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியதால் தான்.

இப்படி எல்லா நடவடிக்கைகள் எடுத்த பின்னும், அரசாங்கத்தின் அப்போதைய கவலை நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 19 பேரும் முதலில் நோய் தொற்றினால் இறந்து போன நபருடன் எவ்வழியிலாவது நேரடித் தொடர்பு கொண்டவராக இருக்க வேண்டும் என நிரூப்பிப்பது. இது ஏன் முக்கியம் என்றால், அவ்வாறு நிரூபிக்கப்பட்டுவிட்டால் இந்த தொற்று மக்களிடத்தில் இன்னும் முழுமையாகப் பரவவில்லை என நம்பிக்கை கொள்ளலாம். இதன் மூலமாக இந்த 19 பேர் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களை தனிமைப் படுத்துவதன் மூலம் இந்த நோய் தொற்றை தடுக்கலாம் என்பதே. இதற்கு நடுவில் மத்திய அரசு அதிகாரிகள் சிலர் இது தீவிரவாத செயலாக இருக்கலாம், அதனால் அந்த கோணத்திலும் இதை விசாரியுங்கள் என்று மாநில அரசு அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதாக திரைப்படத்தில் காட்டி இருந்தார்கள். இது புனைவாகவே இருக்கக் கூடும் என்று சில மாதங்களுக்கு முன்னால் படத்தை பார்த்திருந்தால் நம்பி இருப்பேன். ஆனால் கொரொனா தாக்குதலில் வெளி வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் படிக்கையில், இது போன்ற அழுத்தம் உணமையில் வந்திருந்தாலும் ஆச்சரியப்படுத்துவற்கில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் மாநில அரசு அதிகாரிகள் அவர்களின் அழுத்தத்திற்கு ஒப்பாமல், பாதிக்கப்பட்ட 19 பேரும் நோய் தொற்றிய முதல் நபரிடமிருந்தே வைரஸ் தொற்றைப் பெற்றிருக்கிறார்கள் என நிறுவ பெரும் முயற்சி செய்வதாக திரைப்படத்தில் காண்பித்திருந்தார்கள்.

அரசாங்கத்தின் தொடர் முயற்சி மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பால் இறுதியாக நிப்பா தொற்று மட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட 19 பேரில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். தன்னலம் கருதாது பணியாற்றி நிப்பா தாக்குதலால் இறந்து போன செவிலியர் லினி அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள். லினி அவர்களின் நினைவாக ஒரு விருது ஒன்றை கேரளாவில் நிறுவி ஒவ்வொரு வருடமும் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களை கௌரவிக்கிறார்கள். மேலும் இரவு பகம் பாராமல் உழைத்த அனைத்து அரசு மற்றும் மருத்துவ பணியாளர்களை கேரள அரசு கவுரவித்தது. கேரளா நிப்பாவிலிருந்து மீண்ட கதையை உலக சுகாதார நிறுவனமும் பெரிதும் பாராட்டியது.

நமது சமகாலத்தில், நமது கண் முன் நடந்தேறிய இந்த மாபெரும் வெற்றியோடு வைரஸ் படம் நிறைவு பெறுகிறது. நமது மனமும் நெகிழ்ந்து விடுகிறது. அரசாங்கம் நினைத்தால் ஒரு பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. மற்ற நாடுகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் நம்மிடமே நம்மை காத்துக் கொள்வதற்கான அறிவும் வலிமையும் இருக்கிறது. நிப்பாவிலிருந்து நாம் கற்ற பாடத்தை கொரொனாவிற்கு செயல்படுத்தினால் நிச்சயமாக இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் வெளி வந்து விடலாம். அந்த நம்பிக்கையை நம்முள் ஆழமாக விதைத்திருக்கிறது இந்த வைரஸ் திரைப்படம். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

2 Comments

Leave a comment