நான்கு & பத்துக் கட்டத் தாயம் (பாரம்பரிய விளையாட்டு அறிமுகம் பகுதி : 02) – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சென்ற பதிவில் சதுர வடிவில் உள்ள தாய விளையாட்டில் பொதுவாக அறியப்படும் “எட்டுக் கட்டத் தாயம்” பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அதேப் போன்று உள்ள “நான்கு கட்டத் தாயம்” மற்றும் “பத்துக் கட்டத் தாயம்” பற்றி பார்க்கப் போகிறோம். கூடவே சோழிகள் கொண்டு விளையாடும் முறையையும் பார்க்கப் போகிறோம். தாயம் பொதுவாக சூதாட்ட விளையாட்டாகவும் இருந்ததால் சில வீடுகளில் பெரியவர்கள் அதனை விளையாடக் கூடாது என்று கருதினர். அதேப் போன்று பொழுது மறைந்ததும் விளையாடக் கூடாது என்றெல்லாம் சொல்லிவிடுவர். ஆனால் அப்பொழுது ஏகப்பட்ட விளையாட்டுகள் சிறுவர் மத்தியில் இருந்ததால் இதெல்லாம் பெரிதாக கருதவில்லை. ஒரு தகவலுக்காக மட்டுமே இதுப்போன்று நினைவுகளை பகிர்கிறேன். சென்ற பதிவில் பார்த்த அதே விளையாட்டு முறைதான் இந்த பிரிவுகளுக்கும். கட்டத்தில் மட்டுமே மாற்றங்கள்.

நான்கு கட்டத் தாயம்:

நீளத்திலும் அகலத்திலும் ஆறு கோடுகள் வரைந்து கட்டத்தினை அமைக்க வேண்டும். நடுவில் உள்ள பழ கட்டத்தினை தவிர்த்து நான்கு கட்டங்கள் இருப்பதால் இது நான்கு கட்டத் தாயம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இதில் கட்டங்கள் குறைவாக இருப்பதால் ஆரம்ப நிலையில் இந்த தாயத்தினை விளையாட வைக்கலாம். சிறிய வயது சிறார்களுக்கு எளிமையாக புரிந்துக்கொள்ள ஏற்றதாக இருக்கும்.

பத்துக் கட்டத் தாயம்:

நீளத்திலும் அகலத்திலும் பத்து கோடுகள் கொண்டு அமைக்கப் படுவதால் பத்துக் கட்டத் தாயம் என்று அழைக்கப்படுகிறது. எட்டுக் கட்டத் தாயத்தின் வளர்ச்சி பத்துக் கட்ட தாயம் எனலாம். இதை விளையாட நீண்ட நேரம் தேவைப்படலாம். இதில் ஒவ்வொருவருக்கும் எட்டுக் காய்களை கொண்டு  ஆடும் பழக்கமும் உண்டு.

சோழிகள் வைத்து விளையாடும் முறை:

சோழிகள் இல்லாதப் பட்சத்தில், புளியங்கொட்டையை எடுத்து அதை ஒருபக்கம் தேய்த்துக் கொள்ள வேண்டும். தமிழர் நாட்டு விளையாட்டுகள் என்ற புத்தகத்தில்  கொடுக்கப்பட்ட சோழி முறையை இங்கு பகிர்கிறேன். தாயக்கட்டையில் 1,2,3,4,5,6,12 என்ற எண்கள் வரும். ஆனால் சோழி முறையில் இதுவரை பார்த்த ஒவ்வொரு ஆட்டத்திற்கும் சோழிகளியின் எண்ணிக்கை கொண்டு வேறுபடும். அதை நாம் நமக்கேற்ப விளையாட்டுகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நான்கு கட்டத் தாயம்: நான்கு சோழிகள் கொண்டு விளையாட வேண்டும். இதில் 1,2,3,4,8 எண்கள் மட்டுமே வரும்.

  • மூன்று காய்கள் கவிழ்ந்திருந்து ஒன்று திரும்பி இருந்தால் : தாயம்
  • இரண்டு காய்கள் கவிழ்ந்திருந்து இரண்டு திரும்பி இருந்தால் : 2
  • ஒன்று கவிழ்ந்திருந்து மூன்று திரும்பி இருந்தால் : 3
  • நான்கு காய்கள் திரும்பி இருந்தால் : 4
  • நான்கு காய்கள் கவிழ்ந்திருந்தால் : 8

இதில் 1,4,8 எண் வந்தால் மீண்டும் ஆட வாய்ப்புண்டு.

எட்டுக்கட்டத் தாயம்: ஆறு சோழிகள் கொண்டு விளையாட வேண்டும். இதில் 1,2,3,4,5,6,12 எண்கள் வரும். திரும்பி இருக்கும் காய்களை கொண்டு எண்களை முடிவு செய்துக்கொள்ள வேண்டும். ஆறு காய்களும்  கவிழ்ந்திருந்தால் அதை 12ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 1,5,6,12 எண் வந்தால் மீண்டும் ஆட வாய்ப்புண்டு. இது தாய்க்கட்டை எங்களோடு ஒத்துப்போகும்.

பத்துக் கட்டத் தாயம்: எட்டு சோழிகள் கொண்டு விளையாட வேண்டும். இதில் 1,2,3,4,5,6,7,8,16 எண்கள் வரும். திரும்பி இருக்கும் காய்களை கொண்டு எண்களை முடிவு செய்துக்கொள்ள வேண்டும். எட்டு காய்களும்  கவிழ்ந்திருந்தால் அதை 16ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 1,5,6,7,8,16 எண் வந்தால் மீண்டும் ஆட வாய்ப்புண்டு. இது தாய்க்கட்டை எங்களோடு ஒத்துப்போகும்.

முந்தைய பதிவு : எட்டுக் கட்டத் தாயம் 

Leave a comment