“வீட்டினுள் ஆட ஏதாவது விளையாட்டு இருந்தால் சொல்லுங்க” என்று பெற்றோர்கள் பலர் கேட்டிருந்தனர். அதன் அடைப்படையில் சில விளையாட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம். வீட்டினுள் குடும்பமாக விளையாடும் ஆட்டங்களை ஒரு தொடராக அறிமுகம் செய்யும் முயற்சி. அதில் முதலாவதாக “தாயம்” விளையாட்டை அறிமுகம் செய்யும் பதிவு இது. தாயம் பலருக்கும் தெரிந்த விளையாட்டு தான் என்ற போதும், ஒரு தொகுப்பாக அதன் மற்ற மாதிரிகளையும் எடுத்து வரும் எண்ணத்தில் இதனைப் பகிர்கிறோம்.நமது பாரம்பரிய விளையாட்டுகளில் சிறப்பு என எனக்கு அடிக்கடி தோன்றுவது அதன் பொருளாதார தேவை என எதுவும் பெரிதாக இல்லாமல் இருப்பதே. எளிதாக விளையாட்டுப் பொருட்களை நாம் செய்துவிட முடியும். தற்போதைய கொரோனா சூழலில் வீட்டினுள் இருக்கும் அனைவருக்கும் இதனை மிக எளிதாக புரிந்துக்கொண்டு விளையாட முடியும். “தாயம்” எனது சிறுவயதில் உச்சி வையில் காலத்தில் மதியப் பொழுது முழுக்க விளையாடி இருக்கிறோம். வீட்டுக் கொல்லையில் மர நிழலில் தாயக்கட்டத்தை நாமக்கட்டிக் கொண்டு வரைந்து, காய்களுக்காக புளியங்கொட்டை, ஈருக்குச்சி, கல் என எதையோ ஒன்றினை தேடிப் பிடித்து ஆட்டத்தை ஆரம்பிப்போம். எங்களுது அதிகபட்ச தேவை தாயக்கட்டை மட்டுமே. அதுவும் இல்லையென்றால் புளியங்கொட்டைகளை வைத்து நாங்களே தாயக்கட்டையை செய்துக்கொள்வோம்.
தாயக்கட்டையில் பல வகைகள் உண்டு, அதில் “எட்டுக் கட்டத் தாயம்” என்ற வகையை தான் தற்போது பார்க்கப் போகிறோம். கீழே அதற்கான படம் கொடுக்கப்பட்டுள்ளது.
எட்டுக் கோடுகளின் உதவியால் (நீளத்திலும் அகலத்திலும்) கட்டங்கள் வரையப்படுவதால் எட்டுக்கட்ட தாயமெனப் பெயர் பெற்றது எனலாம். கட்டங்களின் எண்கள் ஏழு தான் என்றாலும் கோட்டினைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
விளையாடும் நபர்கள் : 2-4 பேர் வரை ஆடலாம்
தேவையான பொருட்கள் :
- தாயக்கட்டை (தாயக்கட்டை இல்லாத பட்சத்தில் dice, புளியங்கொட்டை , சோழிகள் வைத்து ஆடலாம்),
- தாயக்கட்டம் (தரையிலோ அல்லது ஒரு அட்டையிலோ இதனை வரைந்துக் கொள்ளலாம்)
ஆடுபவர்களுக்கு தலா ஐந்து காய்கள்
குறிப்புகள் : (படத்துடன் காண்க)
மலை கட்டம்:
- குறியிட்ட கட்டங்கள் மலை என்று அழைக்கப்படும்
- அதில் வெளிக் கட்டத்தில் உள்ள மலைகள் வழியே (அவரவர் பக்கத்தின் உள்ள மலைகள்) துவையும் மலைகள். அது தான் அவரவர் ஆட்டத்தை துவங்கும் இடம்.
- நடுவில் உள்ளது பழமேறும் மலை, அங்கு அனைத்து காய்களையும் எடுத்துச் செல்வது தான் ஆட்டத்தின் நோக்கம்.
தாயக்கட்டை:
- தாயக்கட்டையை உருட்டினால் 1,2,3,,4,5,6,12 என்ற எண்கள் கிடைக்கும் (இரண்டு கட்டைகளிலும் 0 வந்தால் அது 12 என்போம்)
- 1 என்ற எண் வந்தால் அது தாயம் என்று பொருள்
- 1 போட்டால் தான் காயை உள்ளே வைத்து ஆட்டத்தை துவங்க முடியும்.
- புதிய காயை அல்லது வெட்டுப்பட்ட காயை உள்ளே கொண்டு வர 1 போட வேண்டும்.
- ஆட்டத்தின் வெளியே காய் இருந்து தாயம் போட்டால், வெளியிலுருக்கும் காயை தான் உள்ளே கொண்டு வர வேண்டும்.
- 1,5,6,12 விழுந்தால் ஆடுபவருக்கு இன்னொரு முறை விளையாட வாய்ப்பு உண்டு. இதற்கு மறுஆட்டம் என்று பெயர்.
- மற்றவர் காயை வெட்டினாலும் மறுஆட்டம் உண்டு.
காய் வெட்டுதல் :
- மற்றவர் காய்களை வெட்டுதல் இந்த ஆட்டத்தில் முக்கியமானது. ஒருவர் காய் இருக்கும் கட்டத்தில் மற்றவர் காய் வைக்க நேர்ந்தால் அதற்கு வெட்டுதல் என்று பெயர். அந்த வெட்டுப்பட்ட காய் ஆட்டத்தை விட்டு வெளியே சென்றுவிடும்.
- மலையில் இருக்கும் காய்களை வெட்ட முடியாது
- மற்றவர் காயை வெட்டினால் மட்டுமே நம்மால் உள் வட்டத்திற்கு செல்ல முடியும், இல்லையெனில் வெளியிலே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
வேறு சில விதிகள் :
- நால்வர் விளையாடும் போது கட்சி ( team game) அமைத்தும் விளையாடலாம்.
- ஒரே கட்டத்தில் (மலைகள் இல்லாத கட்டங்கள்) எதிராளியின் ஒன்றுக்கு மேற்பட்ட காய் இருந்தால், அதனை மொத்தமாக வெட்டலாம்
- எதிராளியின் காயினை வெட்டியப் பிறகு , தாயம் அல்லாமல் ஐந்து போட்டாலும் வெளியே இருக்கும் காயை ஆட்டத்தில் கொண்டு வரலாம்
- இதுப் போன்ற விதிகள் விளையாடுபவர்களுக்கு ஏற்ப முதலிலே முடிவு செய்துக்கொள்ளலாம்.
குறைந்தது இரண்டு பேர் இதனை விளையாட முடியும். தாயம் போட்டு அவரவர் ஆட்டத்தை துவங்க வேண்டும். அவரவர் பக்கத்தில் இருக்கும் மலையிலிருந்து ஆட்டத்தை துவங்க வேண்டும். இதற்கு துவைதல் என்று பெயர், அதனால் தான் அந்த மலைகள் துவைதல் மலை என்று அழைக்கப்படுகிறது. தாய்க்கட்டையில் விழும் எண்களுக்கு ஏற்ப வலது பக்கம் அவரவர் நகர்த்தி விளையாட வேண்டும். வெளிக்கட்டங்களை சுற்றும் போது மற்றவர் காயினை வெட்ட வேண்டும். வெட்டினால் மட்டுமே உள் கட்டத்திற்கு செல்ல முடியும். எப்படி உள் கட்டத்திற்கு செல்வது என்பதை படத்தில் உள்ளது. மலையில் இருக்கும் காயினை வெட்ட முடியாது.வெட்டிய பிறகு உள் கட்டத்தில் பயணித்து பழ மலைக்கு அனைத்து காயினையும் எடுத்துச் செல்வதே ஆட்டத்தின் நோக்கம்.
குறிப்பு :
நண்பர்களும் இந்த தொடர் பதிவுகளில் பங்கு பெறலாம். உங்களுக்கு தெரிந்த வீட்டினுள் விளையாடும் ஆட்டங்களை எங்களுடன் பகிருங்கள். கொரோனா சூழலில் வீட்டினுள் அடைந்துக் கிடக்கும் இந்த வேளையில் இதுப் போன்ற விளையாட்டுகள் குடும்ப சூழலில் ஓர் ஆரோக்கியமான நல் உணர்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். அடைந்துக் கிடப்பதை நினைத்து யோசித்து வருத்தப்படுவதை விட அந்த சூழலை நமக்கு சாதகமாக மாற்றுவோம் வாருங்கள்.