குழந்தைகள் வளர்ச்சி என்பது பல்வேறு பரிமாணங்களை உடையது. பெரும்பாலும் உடல், மூளை, சமூகம், உணர்வுகள் என்பதாக பிரித்துப் பார்க்கலாம். உடல் வளர்ச்சி பெரும்பாலும், கழுத்து நிற்பது, குப்புறுவது, பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி நகர்வது, முட்டியிடுவது, நடப்பது, இவையெல்லாம் அந்தந்த வயதில் சரியாக நடந்தால் சரியான வளர்ச்சி, சில நேரம் கொஞ்சம் தாமதமாகலாம் அல்லது முன்கூட்டியே நடக்கலாம். பார்ப்பது, கேட்பது, கண் கை சேர்ந்து வேலை செய்வது, சமநிலைத்தன்மை, பெரு தசை இயக்கத்திறன், நுண் தசை இயக்கத்திறன், என்பதெல்லாம் உடல் வளர்ச்சி சார்ந்தது.
மூளை வளர்ச்சி என்பது பார்ப்பதை-கேட்பதை சரியாக புரிந்து நடத்தல், மொழி, சிந்தனை, ஞாபகம், புலன்கள் கட்டுப்பாடு, நிர்வாக செயல்பாடு ஆகியவற்றின் வயதிற்குரிய வளர்ச்சி.
சமூக வளர்ச்சி என்பது தன்னை சுற்றியிருப்பவர் தூண்டலுக்கு ஏற்ப நடந்து கொள்ளல், தெரிந்தவரை பார்த்தால் சிரிப்பது, தெரியாதவரை கண்டால் அழுவது, தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கேட்பது, மற்றவர் உணர்வை புரிந்துக் கொள்வது, அதற்கேற்ப நடப்பது, நட்புக் கொள்வது, குடும்பத்தவரிடம் பழகுவது, வெளியாட்களிடம் பழகுவது, சமூக விதிகளை புரிந்து கொண்டு நடப்பது, தன் உணர்வுகளை வெளிப்படுத்துவது. (இவை அனைத்தும் வயதிற்கேற்ற வளர்ச்சி அடையும்.)
உணர்வு வளாச்சி என்பது தன் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது, அழுகை, கோபம், சோகம், தனிமை, பாசம், காதல், ஆர்வம், வெட்கம், பயம், பதட்டம், தோல்வி போன்ற உணர்வுகளை சரியான முறையில் கையாளுவதும் வயதிற்கேற்ற வளார்ச்சி அடைவதும்.
இவையெல்லாம் சரியான வயதிற்கேற்ப இருப்பின் , குறையற்ற வளர்ச்சி எனலாம். இல்லையெனில் அவை குறைபாடுகள்.
குழந்தைகளிடம் ஏற்படும் குறைபாடுகள்: உடல் சார்ந்து, மூளை சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூக செயல்பாடு சார்ந்து சில குறைபாடுகள் ஏற்படக்கூடும். முதலில் ஓ.சி.டி. (obsessive compulsive disorder) என்று மருத்துவ உலகில் சொல்லப்படும் குறைப்பாட்டை பற்றி பார்ப்போம்.
ஓ.சி.டி. (obsessive compulsive disorder) : சில நேரம் மூளையில் உள்ள வேதிப்பொருள் சீரற்றநிலையின் செயல்பாடு காரணமாகவோ, விபத்தின் காரணமாக மூளையில் அடிபட்டாலோ, மரபணு பிரச்னையினாலோ, உணர்வுகள் (பெரும்பாலும் பதட்டம், பயம், )மேலாண்மை குறைவினாலோ, குழந்தைகளிடம் கூட இந்த ஓ.சி.டி எனப்படும் ஆட்டுவிக்கும் எண்ணப்பிறழ்வு அல்லது பெருவிருப்பக் கட்டாய செய்கைபிறழ்வு என்பது காணப்படுகிறது. இந்திய அளவில் , குழந்தைகள், வளரிளம் பருவத்தினரிடையே 0.6% அளவு இருப்பதாகவும் (தேசிய மனநல இயக்கக ஆய்வு ), உலக அளவில் 1-3% இருப்பதாகவும் ஆய்வு சொல்வது கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் இந்த ஒ,சி.டி மனிதரை பீடிக்கும் மனநோய்களில் உலக அளவில் 4-ம் இடத்தை வகிக்கிறது.
இந்த நோயால் பாதித்த குழந்தைகள் ஒரே செய்கையை திரும்ப திரும்ப செய்யும் கட்டாயத்திற்கு
ஆளாகின்றனர். உதாரணமாக ஒரே சொல் அல்லது வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்வது, ஒரு பொருளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டே இருப்பது, கதவு வழியாக திரும்ப திரும்ப போய் வருவது, ஒரு பொருளை திரும்ப திரும்ப தொடுவது, திரும்ப திரும்ப தட்டுவது, திரும்ப திரும்ப சுத்தம் செய்வது ஆனாலும் எவ்வளவு தடவை செய்யினும் திருப்தி இல்லாமல் வருத்தமடைவது.
சிறு வயதில் கற்கும் பருவத்தில் சில விஷயங்களை திரும்ப திரும்ப செய்வது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தரும். ஆனால் மகிழ்ச்சியான மற்றோரு விஷயத்தில் அவர்களால் கவனத்தை இயல்பாக திருப்பிக் கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு கவனத்தை திருப்ப முடியாமல் ஒரே செயலை அவர்களே அறியாமல் கட்டாயமாக செய்து கொண்டிருந்தால், மிகுந்த சோகத்துடனோ, பதட்டத்துடனோ காணப்பட்டால் மனநல மருத்துவரை அணுகுவது அவசியமானதாகும். ஏனெனில் இது ஓ.சி.டியின் அறிகுறியாகும். Obsessive Compulsive Disorder-இதன் பெயரே நமக்கு விளக்குவது போல, ஒரு எண்ணம் இவர்களை ஆட்டிப் படைக்கிறது.
உதாரணமாக, தனக்கு நோய் வந்து விடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அதனால் திரும்ப திரும்ப கை கழுவுவது என்ற செய்கைக்கு தனது மூளையினாலேயே கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு “திரும்ப திரும்ப கை கழுவ வேண்டும் ” என்ற பதட்டமான பய உணர்வு குறைவதே இல்லை. அது அவர்களுக்கு தொடர்கதையாக மாறி விடுகிறது. சில குழந்தைகளுக்கு தன் பெற்றோர்களுக்கு ஏதாவது தீங்கு அல்லது ஆபத்து (விபத்து, நோய்) நேர்ந்து விடும் என்ற எண்ணத்தினால் பதட்டம் அல்லது பயம் கொள்கின்றனர். எந்நேரமும் அந்த எண்ணம் அவர்களை ஆட்டி வைப்பதால், பள்ளியில் அல்லது நண்பர்களிடம் கூட அவர்களால் நிதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடிவதில்லை. இந்த மாதிரியான செயல்கள் தானாகவே சில நாட்களில் சரியாகி விட்டால் நல்லது, ஆனால் ஆறு மாத்திற்கு மேலும் இது தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
சில நேரம் வளர்ந்தவர்களில் சிலர் perfectionist என்ற வார்த்தையின் பின் ஒளிந்து கொள்கிறார்கள், தன் பொருளை சீராக அடுக்கி வைப்பது, யாரேனும் கலைத்து விட்டால் பதட்டமோ கோபமோ அடைவது, பொருளின் இடம் மாறிவிட்டாலும் பதட்டம் கொள்வது. இதன் காரணமாக யாருடனும் பழகாமல் இருப்பது. சிலர் தான் அழுக்காக இருக்கிறோம் என்று சொரிந்து சொரிந்து குளித்து உடம்பை புண்ணாக்கியும் இருக்கின்றனர். சில பேருக்கு பாதுகாப்பாக இல்லை என்ற எண்ணம் அதனால் பயம் கொள்வது. அதன் தொடர்ச்சியாக பூட்டை பலமுறை சரிபார்ப்பது, கேஸ் மூடி விட்டோமா என திரும்ப திரும்ப சரிபார்ப்பது, வீட்டைவிட்டு வெளியே வந்து விட்டாலும் அந்த எண்ணம் அவர்களை விடாது. இது ஒரு மாய சக்கரமாக, பதட்டம், பயம், எண்ணம், செய்கை என்று தொடர்ந்து கொண்டேஇருக்கும்.
சில நேரம் ஒரு செயலை முழுவதுமாக செய்ய விரும்பும் கட்டாயத்தை உணர்வது, திரைப்படத்தை பெயர் ஆரம்பத்திலிருந்து வணக்கம் போடுவது வரை பார்த்தால்தான் மனம் திருப்தி அடைதல். பல தடவை கைக்கழுவினால்தான் சுத்தம் என்று உணர்தல்(அதுவும் சிறிது நேரத்திற்கு மட்டுமே உணர்தல்), ஒரு காரியத்தை செய்யும் பொழுது சிறிது இடையூறு நேர்ந்தாலும் பதட்டம் ஏற்படுவது.
குழந்தைகளுக்கு இள வயதிலேயே, பதட்டம், பயம் நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உணர்வு மேலாண்மையை சொல்லிக் கொடுப்பது நன்று. ஏனெனில், சிறு வயதில் பயம், பதட்டம் நிறைய இருப்பவர்கள் பெரியவர்களானதும் ஒ.சி.டி. நோய்க்கு ஆட்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
இதற்கு நாம் முதலில் பதட்டம் பயம் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்(acceptance). அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. இளைப்பாறுதல், மூச்சுப் பயிற்சிகளை (relaxation,breathing techniques) போன்றவற்றை சொல்லிக் கொடுக்கலாம். கவலைகளை வெளிப்படையாக சொல்வதற்கு நேரம் ஒதுக்கி கவனத்துடன் கேட்க வேண்டும், இப்படி நேர்ந்தால் என்ன செய்வது, அப்படி நேர்ந்தால் என்ன செய்வது என்ற கவலைகளை இப்பொழுது அப்படி நடக்கிறதா? என்று கவனிக்க சொல்லி கொடுக்க வேண்டும். (what if to what is) எதிர்மறையான எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டு நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் யோசிக்க அவர்களுக்கு உதவ வேண்டும் (positive thoughts). இல்லாதவற்றை பற்றி கவலைப்படும் குழந்தைகளிடம், இருப்பவற்றை போற்ற நன்றியுணர்வுடன் இருக்க பயிற்சி தரவேண்டும் (count the blessings, feel good about yourselves).
இயல்பாகவே ஓ.சி.டி இருக்கும் குழந்தைகளுக்கு, அல்லது உணர்வு சார்ந்த பிறழ்வு இருக்கும் குழந்தைகளுக்கு, கற்றல் குறைபாடு (learning disability), கவனக்குறைவு மிகை இயக்கப் பிறழ்வு ( ஏ.டி.எச்.டி) , மன அழுத்தம் (depression) , சேர்ந்தும் காணப்படும். அதனால் ஒட்டு மொத்த பார்வையுடன் குழந்தையை அணுக வேண்டும். (குறிப்பு : பெயர்கள் எல்லாம் பிரச்னைகளின் தனித் தன்மையை புரிந்து கொள்ள மட்டுமே, அதனால் மிகவும் கவலை கொள்ள வேண்டாம்). பெரியவர்களுக்கு, மருந்துகள், செய்கை எண்ணம் சிகிச்சை, (cognitive behavioral therapy), பதட்ட மேலாண்மை பயிற்சிகள், இளைப்பாறுதல் பயிற்சிகள், போன்ற கூட்டு சிகிச்சைகள் பலனளிக்கின்றன. அதுபோலவே, குழந்தைகளுக்கும் .
மிகவும் முக்கியமாக நாம் பின்பற்ற வேண்டியது, குழந்தைகளிடம் நிறைய உரையாடவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு வெளியுலக சவால்கள் நிறைய ( வம்பிழுப்பவர்கள், கேலி செய்பவர்கள், குறை சொல்பவர்கள், மட்டம் தட்டுபவர்கள், தேர்வுகள், மதிப்பெண்கள்….) உள்ளன. அதுகுறித்து மிகவும் பயமும் பதட்டமும் இயல்பாகவே அவர்களுக்கு உள்ளது. இயற்கையான இந்த உணர்வு நமது பாதுகாப்பிற்காக அளிக்கப்பட்ட கொடை, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சுதான், அதனால் நேர்மறையான எண்ணங்கள் (positive thinking), இளைப்பாறுதல் பயிற்சிகள், இருப்பவற்றை போற்றுதல், தன்னை மதித்தல் (self esteem), முயற்சி செய்தல், தோல்வி கண்டு துவண்டு விடாமல் இருப்பது(face the failure), துணிந்து நிற்றல் (face the fear), தன் கருத்தை துணிந்து சொல் (assertive communication) போன்றவைகளை பின்பற்ற நாமும் முன்மாதிரியாக இருந்து சொல்லித்தரலாம். வேண்டுமெனில் தகுந்த மனநல மருத்துவரின் உதவியை நாடலாம்.
நன்றி,
நளினி (குழந்தைகள் உளவியல் ஆலோசகர்)