(பெண் விடுதலை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள் குறித்து ஊருக்கு உபதேசம் செய்யும் வாய்ச்சொல் வீரர்கள் சொந்த வாழ்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து தன்ராஜ் குடும்பதினர் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேச்சு பெண்களின் மாதவிடாய் பற்றித் திரும்பியது.)
கீர்த்தி: அம்மா போனவாரம் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் பற்றி சயின்ஸ் மாஸ்டர் கிளாஸ் எடுத்திட்டு இருந்தப்போ பெண்களுக்கு மாதவிடாய் ஏன் வருதுன்னு விளக்கத் தொடங்கியதும் சில பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசி சிரிக்க ஆரம்பிச்சாங்க . சார் அவங்களக் கூப்பிட்டு இதெல்லாம் நீங்க கண்டிப்பா அறிவியல்பூர்வமா தெரிஞ்சுக்கணும்னு தான் பாடபுத்தகத்துல குடுத்திருக்காங்க. இதுல சிரிக்க என்ன இருக்குனு திட்டினார். பிறகு பீரியட்ஸ் ஏன் வருது?, அதுக்கு என்னென்ன ஹார்மோன்கள் காரணம் ? குழந்தை உருவாவது எப்படி?என்பதையெல்லாம் ஸ்மார்ட் போர்டுல வீடியோ போட்டு ரொம்ப நல்லா தெளிவா விளக்கினார் .
சுதாகர்: பரவாயில்லையே! உங்க சார் ரொம்ப நல்லவர். எங்க சார் இந்தப் பாடமெல்லாம் நீங்களே படிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டார்.
தன்ராஜ்: சில ஆசிரியர்கள் இப்படிதான் தப்பு பண்றாங்க. இதையெல்லாம் ஆசிரியர்கள் அறிவியல்பூர்வமா சொல்லித்தரலன்னா பசங்க ஆர்வக்கோளாறுல தவறான தகவல்களை நண்பர்கள் மூலமோ அல்லது இணையதளங்கள் மூலமோ தெரிஞ்சிக்குவாங்க.. அது மோசமான பின்விளைவுகளைத் தரும்.
சுதாகர்: அம்மா , பீரியட்ஸின் போது வரும் இரத்தம் சுத்தமானதாம்மா?
ராணி: ஆமாப்பா, அதிலென்ன சந்தேகம்?
சுதாகர்: அப்ப அதை இரத்தம் தேவைபடுறவங்களுக்கு ஏத்த முடியுமா?
கீர்த்தி: அடப்பாவி! (சிரிக்கிறாள்)
ராணி: கீர்த்தி,அவனுக்குப் புரியாததால தான் அவன் கேக்குறான். மத்தவங்க கேள்வி கேட்கும்போது நாம சிரிச்சா அப்புறம் கேள்வி கேக்குறதையே நிறுத்திடுவாங்க.
கீர்த்தி: சாரிம்மா.
ராணி: சுதாகர்,வயசுக்கு வந்த பெண்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை சினைக்குழாய்க்கு வரும். இது ஆணின் விந்தோடு சேர்ந்தால்தான் கருப்பையில் குழந்தையா உருவாகும். கருவுறுதல் நடக்கலைனா கருமுட்டை கருப்பையின் உட்பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரியம் என்ற உள்ளுறையோடு சேர்ந்து கருப்பை வாய் வழியே வெளியே வந்துவிடும். இப்படி இரத்தம் வர்ரதைத்தான் பீரியட்ஸ்னு சொல்றோம். இந்த இரத்தம் சுத்தமானதா இருந்தாலும் கருமுட்டை, எண்டோமெட்றியம் எல்லாம் சேர்ந்து வர்ரதால் அதை தானம் செய்ய முடியாது, புரியுதா?
கீர்த்தி: அம்மா எனக்கொரு சந்தேகம், அது சுத்தமான இரத்தம்னா அதை ஏன் தீட்டுன்னு சொல்றாங்க?
ராணி: ஒருவேளை பழையகாலத்துல பீரியட்ஸ் டைம்ல பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும்னு நினச்சு தனியா உட்கார வெச்சிருக்கலாம் ; அது பின்னாடி தொட்டா தீட்டுனு மூடநம்பிக்கையா மாறியிருக்கலாம். நான் சின்னப்பொண்ணா இருந்தப்போ அந்த மூணு நாளும் தீட்டுன்னு கொல்லப்பக்கத்துல தனியா உட்கார வெச்சிடுவாங்க. அப்பல்லாம் ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். எங்க பாட்டி இருந்தவரை ரொம்ப கண்டிப்போட கடைபிடிக்க வெச்சாங்க . அவங்க இறந்த பிறகு அதையெல்லாம் விட்டுட்டோம். இப்ப பெண்கள் ஸ்கூல், காலேஜ், வேலைனு மட்டுமில்லாமல் விண்வெளிக்கெல்லாம் போறாங்க . பெரும்பாலான வீடுகள்ள இந்த் மூடப் பழக்கங்களையெல்லாம் விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.
தன்ரா: நம்மைப்போலவே மத்தவங்களும் மாறி இருப்பாங்கன்னு நீ நினைக்குற, ஆனா இன்னைக்கும் மாதவிடாய் காலத்துல பெண்களைத் தனியே ஒதுக்கி வெக்குற பழமைவாத கிராமங்கள் உண்டு. குஜராத்துல ஒரு கல்லூரி விடுதியிலேயே பெண்களை அந்த மூன்று நாட்கள் தனியா ஒரு அறைல தான் தங்க வைப்பாங்கலாம் . அவங்க மத்தவங்களை தொடக்கூடாது, தொட்டா தீட்டுன்னு ஒதுக்குறாங்கன்னு சமூக வலைத்தளங்களில் பரபரப்பா பேசப்பட்டது.
ராஜா: இந்த நவீன உலகத்துல இப்படியெல்லாமா இருக்காங்க? அதுவும் ஒரு கல்லூரியில இப்படி நடந்துக்குராங்கன்னா மகா கேவலம்.
கீர்த்தி: அப்ப இந்த மாதிரி ஆளுங்கதான் முள்கரண்டியில நரமாமிசம் சாப்பிடுறவங்க , சரியா தாத்தா?
தன்ராஜ்: ஆமா, மாதவிலக்கு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய தனித்துவமான அடையாளம். அதனால பெண்களும் மாதவிலக்கு குறித்து வெட்கப்படவோ,வருத்தப்படவோ தேவையில்லை.மத்தவங்களும் பெண்களை அந்த நாட்கள்ள தீட்டுனு ஒதுக்குறதோ , தனிமைப்படுத்துறதோ கூடாது.. அது அவங்களோட அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும் . அது சரியானதும் இல்ல, நாகரீகமானவங்க் செய்யக் கூடியதுமில்ல.
– பிரியசகி
குறிப்பு : இந்து தமிழ் திசை வெற்றிக்கொடியில், “அறம் செய்யப் பழகு” தொடரில் வெளியான கட்டுரை