பகல் உணவு திட்டத்தின் தொடக்க புள்ளி – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு (பகல் உணவு திட்டம் வரலாறு – பதிவு 01)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

“பகல் உணவு திட்டம்” –  தற்போது பல்வேறு விவாதங்களை இணையத்தில் உருவாக்கியுள்ளது. இஸ்கான் என்ற அமைப்பு உள்ளே நுழைவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது, அதுவும் குறிப்பாக வெங்காயம் பூண்டு ஆகியவற்றை  உபயோகிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை குறித்து நிறைய விவாதிக்கப்பட்டது. நல்லது யார் செய்தால் என்ன? என்ற வாதத்தை கொண்டே எதிர் கேள்விகள் அனைத்தும் சத்தமில்லாமல் மறைக்கப்படுகிறது.

சரி, அது ஒரு பக்கம் இருக்க நமது வரலாற்றை கொஞ்சம் நாம் திரும்பி நிதானமாக பார்க்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளதாக உணர்கிறேன். அந்த தேடலின் சிலவற்றை கட்டுரை வழியாக பகிரவும் விரும்புகிறேன். 2020ல் நாம் இருக்கிறோம், கிட்டத்தட்ட 100 ஆண்டு அனுபவம் பள்ளி உண்வு திட்டத்தில் தமிழகத்திற்கு உள்ளது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆம்! நாம் பகல் உணவு திட்டத்தின் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

“கல்வி” – இது தான் தமிழகத்தின் அரசியலை வடிவமைத்ததில் முங்கிய பங்காற்றியுள்ளது என்று சொல்லலாம். 1900 துவக்கத்தில் தமிழகத்தின் அரசியல் , ஏன் இந்தியாவின் அரசியலும் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்பதை வரலாற்றின் பக்கங்கள் நமக்கு நினைவூட்டுகிறது. அப்படி ஒரு மாற்றம் தாம் சென்னை மாகாணத்தில் துவங்கப்பட்ட “தென்னிந்திய நலவுரிமை சங்கம்” (South Indian People’s Association Ltd). 1916 மத்தியில் அனைவருக்குமான உரிமைகளைப் பேசிடவும், சமமில்லாத தன்மையை எதிர்த்திடவும் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது இந்தச் சங்கம். (அவர்கள் தொடங்கிய ஆங்கில பத்திரிகையின் பெயர் “Justice”. பின்னாளில்  அதுவே சங்கத்தின் பெயராக மக்களால் அறியப்பட்டது. இனி சங்கத்தின் பெயரை கட்டுரையில் நீதிக்கட்சி என்றே குறிப்பிடுவோம்). பின்னர் அவர்களுக்கான கொள்கைகளை உருவாக்கி அதனை 20,டிசம்பர் 1916 அன்று வெளியிட்டது. கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமைகளையின் அவசியத்தைப் பற்றி தரவுகளுடன் எடுத்துச் சொல்லி அதற்கு “பிரிட்டிஷ் ஆட்சி” தொடர்வதின் அவசியத்தையும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில் கல்வி குறித்து பொதுமக்கள் செய்ய வேண்டியதை இவ்வாறு சொல்லியிருந்தது,

முதல் வேலையாக, சிறுவர் சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்க வைக்க வேண்டும். பல இடங்களில் சங்கங்களை தோற்றுவித்து, பிராமணர் அல்லாதாருக்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக் கூறி, அதிகமானவர்களை படிக்க செய்ய வேண்டும். நிதி திரட்டி, ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

கல்வித் துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம், அரசியல் முன்னேற்றம் முதலியவற்றுக்கும் நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். அதற்கான பல பத்திரிகைகளைத் தொடங்கி, சங்கங்களும் ஆங்காங்கே அமைக்க வேண்டும். உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.”  

இந்தக் கருத்துக்களை இவர்கள் மேலோட்டமாக வெளிப்படுத்திடவில்லை . தக்க தரவுகளோடு விளக்கி இருந்தார்கள். அந்த தரவுகளோடு பார்த்தால் தான் அதிலுள்ள அரசியல் நமக்கும் புரியும். அந்த  நோக்கத்தில் தரவுகளை இங்கு பகிர்கிறோம்,குறிப்பு : மேலும் விரிவான புள்ளிவிவரங்கள் தனியே இணைக்கப்பட்டுள்ளது.

கல்வியும், வேலைவாய்ப்பும் ஏன் அனைவருக்கும் சமமானதாக இல்லை? என்ற கேள்வியே சங்கமாக உருமாறி இருக்கிறது என்று சொல்லலாம். 

இந்தச் சூழலில் தான் 1920ல் “இரட்டை ஆட்சி”(Dyarchy) முறையை அறிமுகம் செய்கிறது ஆங்கிலேய அரசு. அரசுப் பொறுப்புகளை இரண்டாக பிரித்து ஒருபகுதி அதிகாரிகள் & நியமனம் செய்யப்படுவோரிடத்திலும். மற்றதை மக்கள் பிரதிநிதிகளிடத்திலும் வழங்கும் ஆட்சி முறை. மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதிலும் ஓட்டுப்போடும் உரிமைகளில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது (குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை). காந்தியின் ஒத்துழையாமை கொள்கையால் காங்கிரஸ் உறுப்பினர் பலரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இருந்தும் சுயேட்சையாகவும், அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் மூலமாகவும் பலத்த போட்டி இருந்தது. இருந்தும் 30 நவம்பர் 1920 அன்று நடைப்பெற்ற தேர்தலில் 98 இடங்களில் 63 இடங்கள் பிடித்து வெற்றிபெற்றது நீதிக்கட்சி. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருப்பதால் பிட்டி தியாகராயர் முதல்வர் பதவிக்கு சுப்பராயலுவை பரிந்துரைக்க அவரே முதல்வரானார்.

சென்னை மாநாகராட்சியில் தலைவராக பிட்டி தியாகராயர் அவர்களே இருந்தார். அப்பொழுது தான் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சிப் பள்ளியில் முதன் முதலாக உணவு திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கி வைத்தார் (சென்னை மாநகர சபையின் ஒப்புதலுடன் காலை உணவு வழங்கட்டது). (குறிப்பு: காலை உணவு திட்டத்தை செப்டம்பர் 1920  கொண்டு வந்தார் என்ற தகவலும் கிடைக்கிறது, ஆனால் தேர்தல் நடந்தது 1920 இறுதியில். அதற்கு முன்னரும் அவர் சென்னை மாநாகராட்சி உறுப்பினராக இருந்திருக்கலாம்).  பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்திருப்பதற்கு காரணம் குடும்பங்களில் நிலவும் ஏழ்மையே என்றும் அதனை கடக்க காலை உணவு திட்டம் கண்டிப்பாக உதவும் என்று முழுமனதாக நம்பினார். அவரது நம்பிக்கை கை கூடியது, மாணாக்கரின்  எண்ணிக்கை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள சேத்துப்பட்டு & மீர்சாஹிப்பேட் பகுதியிலுள்ள பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் ஐந்து பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. மாணவர்களின் வருகையில் நல்ல மாற்றம் தெரிந்தது. ஆயிரம்விளக்கு பள்ளியில் 1920 களில் வெறும் 165 மாணவர்களே இருந்த  நிலையில், இத்திட்டம் வந்த பிறகு இந்த ஐந்து பள்ளிகளிலும் கூட்டாக 1922-1923களில் 811 எண்ணிக்கையிலும் 1924-1925களில் 1671 மாணவர்கள் என்று வருகை அதிகரித்தது. 

இதற்கான செலவுத் தொகை வருடத்திற்கு 7000 ரூபாயாக இருந்தது.  உணவுக்காக அதிக செலவாதாக சொல்லி ஆங்கிலேய அரசு இத்திட்டத்தை கைவிட வலியுறித்தது. ஆதலால் 1925 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இத்திட்டம் நிறுத்தப்பட்டது.  அதன் விளைவு மாணாக்கரின் வருகை 40% குறைந்தது. 1924-25களில் அந்த ஐந்து பள்ளிகளில் 1181ஆக வளர்ந்த மாணாவர்களின் எண்ணிக்கை உடனே 1100ஆக குறைந்தது.

இப்படி துவங்கி ஐந்து ஆண்டு காலத்திலே இத்திட்டம் நிறுத்தப்பட்டது என்று எண்ண வேண்டாம். 1925 இறுதியில் இதில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அது எப்படி தெரியுமா? அடுத்த பதிவில்…

குறிப்புகள் / இணைப்புகள்:

  1. திராவிட இயக்க வரலாறு – ஆர்.முத்துக்குமார்
  2. The justice party a historical study 1916 1937 – Rajaraman, P
  3. விக்கிபீடியா: நீதிக்_கட்சி, பிட்டி தியாகராயர், சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920
  4. மேலும் சில புள்ளிவிபரங்கள்.

 

Leave a comment