பள்ளிகளும் பாத பூஜை போன்ற சடங்குகளும் – நளினி

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒவ்வொரு பள்ளியும் தனக்கென சில சடங்கு சம்பிரதாயங்களையோ (அல்லது சில வழிமுறைகளையோ) பின்பற்றுகிறது.நாளை மணியடித்து துவங்குவது, பிரார்த்தனை கூட்டம் நடத்துவது அதில் வாழ்த்து பாடல் பாடுவது, பொன்மொழி, செய்திகள், உறுதிமொழி எடுப்பது பின்னர் வகுப்பு அட்டவணைகள் என்று ஒரு குறிப்பிட்ட நடைமுறைகளையே நாள்தோறும் பின்பற்றுகிறது. அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொதுவான நடைமுறைகள் மட்டுமே பின்பற்றப்படும். இவை தினசரி பள்ளியை வழிநடத்தி செல்ல உதவுகின்றன.

ஒரு நாளுக்கான வழிமுறைகள் தாண்டி சுதந்திர தினம்,குடியரசு தினம், ஆசிரியர் தின விழா, குழந்தைகள் தின விழா, மொழி, இதர பாடங்களுக்கான சங்க விழா என அந்த நாட்களுக்கே உரிய வழிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால் அரசு உதவி பெரும் பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டு தினம், ஆண்டு விழா, என்பதெல்லாம் பொருளாதார நிலையை வைத்து நடத்தப்படும். சில பள்ளிகளில், பள்ளியை உருவாக்கியவர்களின் விழா, மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள் என்றால் அதற்குரிய விழா என வேறு சில விழாக்களும் நடத்தப்படுவது வழக்கம்.

சில நேரங்களில் முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்பாக சில சம்பிரதாயங்கள் நிகழ்த்தப்படும். உதாரணமாக விளையாட்டு போட்டிகளுக்கும் தேர்வுகளுக்கும் செல்லும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், வாழ்த்தும் விதமாகவும் சில சம்பிரதாயங்கள் (சில வழிமுறைகள்) நிகழ்த்தப்படும். பள்ளிகளில் மட்டுமல்ல, குடும்பங்களிலும், ஊர்களிலும், மதம், இனம் சார்ந்த இடங்களிலும் இம்மாதிரி நடைபெறும். உதாரணமாக கல்யாணம், திருவிழா, பண்டிகைகள் இவற்றில் உள்ள சடங்கு முறைகளை கூறலாம். இத்தகைய சடங்குகள் , நம்பிக்கைகள் “பிளாசிபோ எஃபக்ட் (Placebo Effect)” எனப்படும். பிளாசிபோ எஃபக்ட் என்றால் ஒரு தற்கால நம்பிக்கையை கொடுத்து பதட்டத்தை குறைப்பதாகும். ஒரு போலியான நம்பிக்கையை தந்து அதன் வழியே தோல்வியை எதிர்கொள்ள பதட்ட உணர்வுகளை பக்குவப்படுத்துவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அந்நிகழ்வு நிலைமையை தனது கட்டுக்குள் கொண்டு வர முடிவதாக ஒரு மாய உணர்வை தோற்றுவிக்கிறது.

ஆனால், இந்தச் சடங்குகள் நன்றியுணர்வு, போதுமென்ற மனப்பான்மை முதலிய நேர் எண்ணங்களை உருவாக்கும் விதமாகவும், அர்த்தமுடையதாகவும் இருந்தால் மட்டுமே “பிளாசிபோ எஃபக்ட்” எனும் குறுகிய பயனை தருகின்றன. ஆனால் இவை ஒரு போதும் நீண்ட கால பயனை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கோ பங்கேற்பாளர்ப்பகளுக்கோ உடல்ரீதியான பதட்ட எழுச்சியை ஏற்படுத்துவதில் எந்த மாற்றமும் தருவதில்லை. சில நேரங்களில் அதீதமான சடங்குகள் நோய்க்கூறுகளாக மாறிவிடும் அபாயமும் உண்டு. உதாரணமாக Obsessive-compulsive disorder / OCD (ஆட்டுவிக்கும் மனப்பிறழ்வு). சடங்குகள் நோய் நிவாரணியாகாமல் இதுப்போன்று நோய்குறிகளாகவும் மாறிவிடுகிறது.

சமீப காலங்களில், அதுவும் கடந்த 2-3 வருடங்களாக முக்கியமாக தனியார் பள்ளிகளில் பாதபூஜை எனும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இங்கும் அங்குமாக ஒரு சில பள்ளிகளில் நடந்தது தற்போது காட்டுத் தீயாக பரவத் துவங்கியுள்ளது. ஒரு இடத்தில் நடந்ததை பார்த்து அதன் அருகாமையில் உள்ள மற்ற பள்ளிகளும் நிகழ்த்த முன்முயற்சி எடுக்கின்றன. இது எதற்கான சடங்கு என்ற கேள்வியை பள்ளி நிர்வாகத்திற்கு முன்பு வைக்கவே இங்கு ஆட்கள் இல்லாத போதும் எப்படியோ அந்தக் கேள்வியை அவர்கள் முன் வைத்தால். இதுப் போன்ற சடங்குகள் தனி நபர் வெற்றிக்காவும் நன்றி உணர்வை வெளிப்படுத்துவதாகவும் விவரிக்கப்படுகிறது. ஆனால் இச்சடங்குகள் இவர்கள் சொல்லும் இலக்கை நோக்கி செல்ல உறுதுணை புரிகின்றனவா? வெற்றி பெறுகிறவர்கள் சடங்குகளை பின்பற்றுகிறார்கள் என்று ஆய்வு சொல்கிற அதே வேளையில், தோல்வியுறுபவர்களும் அதை பல மடங்கு பின்பற்றுகிறார்கள் என்றும் அதே ஆய்வு சொல்கிறது.

இதனை பின்புலமாக வைத்து நாம் சில உண்மைகளை (கேள்விகள் கேட்பதன் மூலம்) புரிந்து கொள்ள முயல வேண்டும்.

1. கல்வி என்ன வெற்றி தோல்வி விளையாட்டா?
2. பள்ளிகளின் இலக்கு இன்று என்னவாக இருக்கிறது?
3. எல்லோரும் செய்கிறார்கள் நான் செய்யாவிட்டால் தனித்து விடப்படுவேன் என்ற பயமா?
4. நாம் எதை கற்றுத்தர முயல்கிறோம் இந்தப் பாதபூஜை சடங்கில்?

முன்பு குறிப்பிட்ட மாதிரி, இதிலிருந்து என்ன அர்த்தத்தை புரிந்துக்கொள்வார்கள் மாணவர்கள் ? மாதா பிதா குரு தெய்வம் . தெய்வம் தொழுதால் வெற்றி கிடைக்கும் என்பதா? வெற்றி என்று சொல்லப்படுகிற எண்களை (சிலருக்கு 90, சிலருக்கு 99.99) பெறாவிட்டால் என்ன அர்த்தம் பயில்வார்கள் மாணவ மாணவிகள்? தேடுதலை சொல்லித்தராமல் , சடங்குகளின் பின் தன் அறிவை ஒளிந்து கொள்ளச் செய்வது கல்வியா?

உண்மையான கற்றலை தூண்டத் தெரியாத நிர்வாகிகள், சடங்குகளின் பின்னால் சப்பைக்கட்டும் காரணங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்களது இயலாமையை குழந்தைகளின் தோல்வியாக காட்ட முயல்கிறார்கள். “தான் மட்டுமே சரியில்லையோ!” என்ற குற்ற உணர்வை குழந்தைகளை சுமக்க செய்கிறார்கள். அரசியல் காரணங்களால், தன்னை காப்பாற்றி கொள்ளும் முயற்சியில் , கேள்வி கேட்காமல் பணிந்து போவதே சமூகம் என்று சொல்லாமல் சொல்லித் தருகிறார்கள். அதை ஒழுக்கம் என்று புனைகிறார்கள். எல்லாரும் செய்கிறார்களே நானும் செய்யாவிட்டால் தவறு என்று மன உளைச்சலை உருவாக்குகிறார்கள். ஒழுக்கம் கெட்டுவிட்டனர் என்று அவமானம் செய்கின்றனர். நோய்க்கூறுள்ள சமூகமாக மாற்ற சடங்குகளை நுழைக்கிறார்கள். சுயமரியாதையும், “ஏன்?” என்று கேட்கும் கற்றலுணர்வுமே மனித சமூகத்தை அனைவருக்குமான முன்னேற்றம் என்ற இலக்கு நோக்கி பயணிக்க வைக்கும்.

பின் குறிப்பு: நம் பழம்பெருமை என்னாவது, மூதாதையர் செயல்கள் அர்த்தம் உள்ளவை, பெரியவர்களின் வாழ்த்துக்கள் குழந்தைகளை வாழவைக்கும் என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்வீர்கள் என்றால், நல்ல எண்ணங்களை விட வெறும் சம்பிரதாயசெயல்கள் வலிமையானது என்றா ஒப்புக் கொள்கிறீர்கள்?

Leave a comment