தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் யானைகள் மறுவாழ்வு முகாமை துவக்கி வைக்க சென்ற போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு சொன்னது நிறைய விமர்சனங்களையையும் உரையாடல்களையும் உருவாக்கியது. இந்தச் சூழலில் அந்தச் சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் பின்னர் அமைச்சர் சந்தித்து விளக்கம் கொடுத்த பிறகு புகார் வாபஸ் வாங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
மாணவன் கொடுத்த புகார் இணையத்திலும் பரவியது, அதனை இங்கு ஆவணமாக்கும் நோக்கில் பதிவு செய்கிறோம். மாணவர் அளித்த புகார் ..
அனுப்புனர்,
பெறுநர் ..
பொருள் :
நான் கார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை பெயர் பொம்மன்(லேட்) கடந்த 8 வருடங்களுக்கு முன்பே உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். எனது அம்மா காளி அவர்கள் கூலி வேலைக்குச் சென்று என்னையும் எனது சகோதிரிகளையும் கவனித்து வருகிறார். நான் ஆதிவாசி பெட்டைக்குரும்பர் இனத்தைச் சார்ந்தவன். எனது பெரியப்பா காளன் அவர்களது நினைவு நாளையொட்டி குடும்பத்தினருடன் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதால் இன்று 6.2.2020 பள்ளிக்குச் செல்லவில்லை.
எங்கள் கிராமத்தில் 5.2.2020 புதன் கிழமையன்று நாளை வியாழக்கிழமை (6.2.2020) காலை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க நிகழ்வு நடைபெறுவதால் அனைவரும் செல்வோம் என்று பேசிக்கொண்டிருந்தாரக்ள். அதன்படி 6.2.2020 இன்று காலை 10மணியளவில் யானை முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக வனத்துறை அமைச்சர் திரு C.சீனிவாசன் அவர்களும், நீலகிரி மாவட்ட ஆட்சியரும் அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் வந்தனர். அப்போது கோவில் முன்பாக கூட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த என்னைப் பார்த்து அமைச்சர் திரு C.சீனிவாசன் அவர்கள் “டேய் வாடா, வாடா இங்கே வாடா” என்று கூப்பிட்டும் கையசைத்தும் அவர் “காலில் உள்ள செருப்பை கழட்டுடா” என்று என்னிடம் கூறினார். அப்போது கார்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் கிருமாறன்(வயது 13) என்னுடன் அமைச்சர் அருகில் வந்தான்.
நான் அமைச்சர் சொல்கிறார் என்பதாலும், உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் இருப்பதாலும் பயந்து கொண்டு அவரது செருப்பை பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் முன்பாக அமைச்சர் அவர்களின் செருப்பை நான் கழட்டி விட்டேன். அப்போது அருகில் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் இருந்தனர். நான் அமைச்சரின் செருப்பை கழட்டிவிடுவதை அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு கூடியிருந்த அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அமைச்சர் உள்ளிட்ட அங்கிருந்த அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அனைவரின் முன்பும் என்னை அழைத்து இவ்வாறு செய்ய சொன்ன செயலை நினைத்து பயத்துடன் பெரும் வேதனை அடைந்தேன். எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் உடனடிச் செய்தியாக நான் செருப்பை கழற்றிவிட்ட நிகழ்வு ஒளிப்பரப்பானதை அறிந்ததால் பெரும் அவமானத்திற்கு உள்ளானேன்.
இந்நிலையில் நான், பயந்து நிலையிலும் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்ற அச்சத்திலும் அழுது கொண்டே வீட்டில் இருந்தேன். பின்னர் எனது பெற்றோரும், ஆதிவாசி முன்னேற்ற சங்கத்தினரும் எனக்கு ஆறுதல் கூறி , என்னை தைரியப்படுத்தி எனக்கு ஆதரவளித்தால், நான் புகார் கொடுக்க மனரீதியாக தயாரானேன்.
எனவே மேற்படி தமிழ்நாடு C.சீனிவாசன் அவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு ,
C.B கேத்தன்
நாள் : 6.2.2020
மசினகுடி