“அப்பா! அதபாரு, யானை சிரிக்குது” – தஞ்சாவூர் கவிராயர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது கணியன் பூங்குன்றனாரின் பாடல்வரி என்பது அனைவருக்கும் தெரியும். யாதும் ஊரே! யாவரும் கவிஞர்! என்கிறேன் நான். அது என்ன யாவரும் கவிஞர்? கவிதை எழுதுகிறவர் மட்டுமல்ல எழுதாதவரும் கவிஞர் தான். பாரதி சொல்கிறான் கவிஞன் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்! எப்போதும் களித்திருப்பவன் எத்தனை துன்பங்கள் துரத்தியபோதும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று அதனால் தான் அவனால் பாட முடிந்தது.

குழந்தையெனும் கவி :

குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியோடிருக்கின்றன. அவர்களின் உள்ளத்தில் குதூகலம் தாண்டவமாடுகிறது. எதைப்பார்த்தாலும் அவர்களுக்கு சிரிப்பு வருகிறது. அதனால்தான் அவர்கள் பேசுவதெல்லாம் கவிதையாக இருக்கிறது. மழை பெய்கிறது. ஒரு வீட்டு தோட்டத்திலே ரோஜாப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதைப்பார்த்து விட்டு கலைவாணர் சொல்லுகிறார்: ஆஹா! ரோஜாவிலிருந்து மழை பெயர்வது போல் அல்லவா இருக்கிறது! பக்கத்தில் நின்ற குழந்தை சொன்னது: இல்லை, மழை தான் ரோஜாவாகப் பெய்கிறது! இரண்டு பேரில் யார் உண்மையான கவி?

ஒரு முறை நான் பயணம் செய்த ரயிலில் ஒரு குழந்தை எண்னிடம் கேட்டது.

“மாமா! ரயில் என்ன சாப்பிடும்?”

“இப்படித் தான் சார் – ஏதாவது அட்டுத் தனமாக கேட்டுக்கொண்டே வருகிறாள் !” என்கிறார் அருகிலிருந்த அறிவாளித் தந்தை.

ரயில் என்ன சாப்பிடும்? ஆஹா எத்தனை அழகான கவிதை! மற்றோரு குழந்தை கேட்டது இந்த ரயில் இப்படிப்போகாம செங்குத்தாக நேரா வானத்துக்குப் போனா நல்லா இருக்குமே! என்றது . அங்கே போய் என்ன செய்வாய் என்று கேட்டேன். “தொபுக்கடீர் என்று கீழை குதிப்பேன்” என்றது குழந்தை.

குழந்தைக்கு தான் கவித்துமாக வார்த்தை செல்லுவது தெரியாது. ஒரு உண்மை புலப்படுகிறது. நீங்கள் ஒரு கவிஞர் என்பதை மறந்துவிட்டு எழுதும்போதுதான் அது கவிதையாக இருக்கும். குழந்தை மனதை தொலைத்துவர்கள் கவிஞர்களாக ஒருபோதும் ஆக முடியாது. குமாஸ்தாக்களாகவும், டாக்டர்களாகவும், எஞ்சினியர்களாகவும், கலெக்டர்களாகவும் ஆகலாமே தவிர கவிஞராக முடியாது.

ஒரு கவிஞனாக வேண்டுமெனில் கவிதை எழுதித்தான் தீர வேண்டும் என்று அவசியமில்லை. கவிமனம் இருந்தால் போதும். ஓவியங்களை மனம்போன போக்கில் வெள்ளைத்தாளில் கிறுக்கிக் கொண்டிருந்த குழந்தையை மழையை வரையுமாறு கேட்டுக்கொன்டேன். அது வீட்டை வரைந்தது. மழை எங்கே என்று கேட்டேன். “நாம் வீட்டுக்குள் இருக்கிறோம். மழை வெளியே பெய்கிறது” என்று அலட்சியமாக சொன்னது குழந்தை.

வகுப்பில் பொது விஷயங்களைப் பற்றி ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன கூற முடியுமா? என்று கேட்டார். மாணவர் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். விவசாயம் புறக்கணிக்கப்பட்டது, தொழில் வளர்ச்சி இல்லை என்று மாணவர்கள் சொல்லிக்கொன்டே போனார்கள்.

ஒரு மாணவன் சொன்னதைக் கேட்டு வகுப்பே நகைத்தது. “நாட்டில் பொம்மை உற்பத்தி குறைந்துவிட்டது, அதான் காரணம்” என்றான சிறுவன். ஆசிரியர் மாணவனை நெருங்கி தட்டிக் கொடுத்தார், நீ சொன்னதில் உள்ள உண்மை இவர்களுக்குப் புரியவில்லை. புரியும்படி நான் சொல்கிறேன். நீ உட்கார என்றார். பிறகு மாணவர்களை நோக்கி பொம்மைக்களுக்கான தேவை குறைந்துவிட்டது என்றால் என்ன பொருள் ? குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பதில்லை. பொம்மைக்கு பதிலாக இப்போது கைப்பேசிகள் உள்ளன. இது குழந்தைகளின் கற்பனை திறனை மழுங்கடித்துவிட்டது. இதனால் தான் திறமையான மனிதர்கள் உருவாவதில்லை.

ஆனந்தாயி என்றொரு கவிஞர்

எங்கள் வீட்டில்  ஆனந்தாயி  என்ற பெயரில் ஒரு வேலைக்கார பாட்டி இருந்தார். வீடு கட்டும்போது சித்தாளாக வந்து எங்கள் குடும்பத்தில் ஒரு  உறவினராக மாறி எங்களுடன் தங்கிவிட்டார். பக்கத்து வீடுகளிலும் வீட்டு வேலைகளை பார்த்தார் பாட்டி. அதிகாலை மசூதியிலிருந்து பாங்கு சத்தம் கேட்டால் “அல்லா கூவிடிச்சு” என்று சொல்லிவிட்டு வேறு வீட்டு வேலைக்கு ஓடுவார் கிராமத்தில் அதிகாலை சேவல் கூவும். பட்டணத்தில் ஏது  சேவல் ? பங்கின் அழைப்பினை சேவலின் கூவலாக்கிவிட்டார் ஆனந்தாயி.

ஆனந்தாயிடமிருந்து இப்படி கவித்துவம் வெளிப்பட்ட சந்தர்ப்பங்கள் அனேகம் உண்டு. ஆனந்தாயி  கவிஞர் என்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை.

 கடக்க முடியாத கவிஞர்கள்

கவியரங்கில் கவிதைவாசிக்கிற கவிஞர்களை விடவும் கிராமத்தில் ஒப்பாரி வைக்கிற பெண்களின் கற்பனைத்திறன் உயர்வானது என்பது என் அபிப்பிராயம். இன்று கவிஞர்கள் என்று அறியப்பட்டவர்களையும் நீங்கள் எளிதாக கடந்துவிடலாம். ஆனால் சாதாரண மனிதர்கள் – கவிதைக்கு எதிர்மறையாக  குணம் கொண்டவர்கள் என்று நீங்கள் கருத்துபவர்களின் கவித்துவம் உங்களக் கட்டிப்போட்டுவிடும். அரசியல் அறிஞர் இராஜாஜி ஏதாவது கவிதை புத்தகம் எழுதி இருக்கிறாரா என்று தெரியவில்லை. மூதறிஞர் இராஜாஜி என்று தான் சொல்கிறோம். முதுபெரும் கவிஞர்    இராஜாஜி  என்று சொல்வது கிடையாது. ஆனால் அவர் எழுதிய குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல்வரிகள் ஒலிக்காத இடமே இல்லை. இந்தப்பாடல் கடவுளையே கேலிசெய்வது போல் வழிபடுகிறது. விரக்தியை வெற்றியாக மாற்ரர் படைத்தவனுக்குப் பாட்டாக சமர்ப்பிக்கிறது.

சிறையில் பூத்த கவிதை

ரோசா லக்சம்பர்க் என்ற போலாந்து நாட்டுப் பெண்மணி ஒரு கம்யூனிஸ்ட் போராளி. ஜெர்மனியின் சித்திரவதை முகாமில் அவரப்பட்ட துன்பம் பயங்கரமானது. துயரமே வாழ்வாகி முடிந்தபோதும் அவர் தோழிக்கு எழுதிய கடிதங்களில் புறச் சூழலால் இம்மியளவும் கலங்கிவிடாத அவரது கவியுள்ளம் புலப்படுகிறது. சிறைச் சுவரின் மேலிருக்கும் சிறிய துவாரத்தின் வலி தென்படும் துண்டு வானமும் அதில் அவ்வப்போது பறந்து மறையும் ஒரு பறவையும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி தருகிறது.

வண்டுகளின் ரீங்காரமும், காவலாளியின் முரட்டு சப்பாத்துக்கள் பாதையின் கூழாங்கற்களை நசுக்கியப்படி செல்லும்போது எழுதும் சார்க்,சார்க் என்ற ஓசையுமே அவருக்கு கிளர்ச்சியூட்டுகிறது. இத்தனைக்கும் அவர் ஒரு கவிஞர் இல்லை. அவர் கடிதம் ஒன்றில் இப்படிக்கு குறிப்பிடுகிறார். “நான் இறந்ததற்குப்பிறகு என் கல்லறையில் க்வீ, க்வீ என்ற இரண்டு சொற்களை மட்டும் புரியுங்கள். இப்படித்தான் ஈரான் பறவை கூப்பிடுகிறது.

காலத்தின் வாசனை :

காலத்தின் வாசனை யார் மீது எல்லாம் வீசுகிறதோ அவர்கள் எல்லாம் கவிஞர்கள் தான். புதுமைப்பித்தன் கதையில் வரும் தகப்பனார் குழந்தைக்கு ஆரஞ்சுப்பழம் வாங்கிக் கொடுப்பார். அது அந்தப் பலத்தை மூக்கில் வைத்து தேய்த்துவிட்டு “ஆகா! என்ன வாசனை !” என்று சொல்லும் . அதுபோலத்தான் வாழ்க்கை காலாமிய ஒரு பெரிய ஆரஞ்சுப் பலத்தை நம் கொடுத்திருக்கிறது. அதை ரசிப்பதும் புசிப்பதும் அவரவர் பாட்டு.

வாழ்க்கையானாலும், ஆரஞ்சுப் பலமானாலும் அதை உடனே சாப்பிட்டுவிட்டது துடிப்பது மனித சுபாவம். என் நண்பர் ஒருவர் ரோஜாப்பூவைப் பார்த்துவிட்டால் அதை இதழ் இதழாக பிய்த்து தின்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அப்புறம்தான் ஆகா என்ன வாசனை என்பார். வாழைப்பழத்திற் உரித்துச் சாப்பிடும் என்று சொல்லி ஒரு நவகவி புன்னகைக்கிறார்.

ரசனையின் வளங்களுக்கும்,வெளிப்பாடுகளும் நாம் லேபிள் ஒட்டிவிடுவோம். ரசனை ஒரு பட்டியல் நேசத்துக்கு ஒரு பட்டியல். இப்படி எல்லாவற்றையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடுவது மனித இயல்பாக இருக்கிறது. இதுவே வாழ்வின் மீது சலிப்புக்கொள்ளவும் வைக்கிறது. வேறுவிதமான ருசிபேதங்களை வக்கிரத்தன்மை என்று ஒதுக்கிவிடுவதும் இயற்கைக்கு முரணான ஒன்றாகும். மல்லிகை,முல்லை,ரோஜா போன்ற பூக்களின் வாசனையும் நறுமணத் தைலங்கலில் ஊதுபத்திகள் புகை சுருள்களும் மட்டுமே வாசனை என்று சொல்லி பழகிவிட்டோம். கற்பூர வாசனை கழுதைக்குத் தெரியுமா என்று பழமொழிகள் வேறு. கழுதைக்கு என்னென்ன வாசனைகள் தெரியும் நமக்கு தெரியுமா?

மற்ற ஜீவராசிகள் எல்லாம் உணர்கிற சப்தங்களையும், வாசனையையும் மனிதனால் உணர முடியாது என்று அறிவியல் கூறுகிறது. அப்பாவின் மரணத்தருவாயில் அவருடைய முதுகில் ஒரு காகிதம்போல் ஒட்டியிருந்த சின்னஞ்சிறு எறும்புக்கு கூட்டத்தை வழித்துப் போட்டேன். ஓ இந்த எறும்பு வந்துட்டா ? அவ்வளவுதான். எண்ணி ஏழு நாளில் இருக்க மாட்டேன். இதுபேரு சாவு எறும்புடா. சாவின் வாசனை தெரிஞ்சிட்டு எங்கிருந்தாலும் வந்திடும். நான் செத்ததும் காணாமல் போய்விடும் என்று சொன்னார். சாவு வாசனை ! சாவு எறும்பு ! மறக்கவே முடியாது. கவித்துவமான சொல்லாடல் மரணம் வரை மலர்கிறது.

நண்பர் ஒருவர் மாவு அரைத்தபிறகும் மாவு மிஷின் கடையில் உட்கார்ந்திருப்பார். மிளகாய் அரைக்கும்போது வெளிப்படும் சுகந்தம் இருக்கிறதே அதை அனுபவித்துப்பார்த்தால் தான் தெரியும் என்பார். அகிலன் தன கதை ஒன்றில் குழந்தையின் தலையில் மாம்பழ வாசனை அடித்தது என்று எழுதியிருப்பார் . கவிதைமனம் இருந்தால் ஒழிய இப்படி எழுத வராது.

மகிழ்ச்சியும் சிரிப்பும் :

எப்போதும் மகிச்சியோடிருப்பவன் எப்போதும் களித்திருப்பவன் கவிஞன் என்று பாரதி சொன்னாலும் மகிழ்ச்சி வேறு என்று சிரிப்பு வேறு என்று புரிந்துக்கொள்ள வேண்டும். சிரிக்காத தெரிந்த ஒரே ஜீவராசி மனதின் என்கிறார்கள். இதில் ஒரு நகை முரண் இருக்கிறது. விலங்குகளுக்கு சிரிக்கத்தெரியாது என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். வண்டலூர் உயிரியல் பூங்கா போயிருந்தேன். ஒரு குழந்தை திடீரென்று கத்தியது. அப்பா அதபாரு யானை சிரிக்குது அப்பா என்றான். நானும் கவனித்தேன் யானை சிரிப்பதுபோல் தான் இருந்தது. பல்லைக்காட்டினால் சிரிப்பு கிடையாது. விலங்குகளுக்கு சிரிக்காத தெரியாது என்பதால் அவை மகிழ்ச்சியாக இல்லை என்று ஆகிவிடாது.

நாய்களின் மகிழ்ச்சி

என்னைவிடவும் எங்கள் தெருவில் உள்ள நாய்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. அவை கட்டற்ற சுதந்திரத்துடன் நடமாடுவதை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது. வேலைக்குப் போகவேண்டும், வீடு கட்டட வேண்டும் , காருக்கு தவணை கட்ட வேண்டும் என்றெல்லாம் கவலைகள் இல்லை.அரசியல் கோமாளிகள் ,ஆன்மிக வேடதாரிகள், சமூகக் கழிசடைகள், குறித்தெல்லாம் அவரிடம் எவ்வித கபமும்,எரிச்சலும் புகாரும் இல்லை. இவர்கள் எல்லோரையும் தங்களை ஒருவராக ஏற்றக்கொண்டு சந்தோசமாக இருக்கின்றன. நடுரோட்டில் காதல் புரிகின்றன. மகிழ்ச்சியோடு இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியம். ஒன்றே ஒன்று மட்டும் அவைகள் செய்வதில்லை  – அவைகள் சிரிப்பதில்லை.

மனிதனோ மிருகமோ கவித்துவம் என்பது ஒருவித மனநிலை. பரவசத்தன்மை அதனால் தான் சொல்கிறேன்.

யாதும் ஊரே! யாவரும் கவிஞர்!

நன்றி : காக்கைச் சிறகினிலே ஜனவரி இதழ்.

Leave a comment