சிகரம்‌ தொட்ட சிந்தனையாளர்‌ டாக்டர்‌ பூவண்ணன்‌! – பி.வெங்கடராமன்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பாலர்‌ இலக்கியத்தை வளர்த்ததில்‌ புதுக்கோட்டைக்குப்‌ பெரும்‌ பங்கு உண்டு. 40-50களில்‌ புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த இதழ்கள்‌ எண்ணிலடங்கா. புதுக்கோட்டை மார்ததாண்டபுரம்‌ தமிழ்‌ நிலைய அதிபர்‌ வெ. சுப. நடேசன்‌ அவர்கள்‌ வெளியிட்ட மாதமிருமுறை இதழ்‌ – ‘பாலர்‌ மலர்‌’ குறிப்பிடத்தக்கதாகும்‌.

1942 முதல்‌ ஏழரை ஆண்டுகள்‌ கண்ணபிரான்‌ அச்சகத்தின்‌ வண்ண அச்சில்‌ தவறாது தொடர்ந்து வெளியான பாலர்‌ மலர்‌ – பாலர்‌ இலக்கியத்தின்‌ மணிக்கொடி காலம்‌ எனலாம்‌. இதன்‌ கெளரவ ஆசிரியராகத்‌ திகழ்ந்த குழந்தைக்‌ கவிஞர்‌ அழ. வள்ளியப்பா அவர்களின்‌ உயரிய தொடர்‌ ஊக்குவிப்பினால்‌ பல குழந்தை எழுத்தாளர்கள்‌ உருவானர்கள்‌. அவர்களில்‌ வே.தா.கோபாலகிருஷ்ணன்‌ எனும்‌ இயற்பெயர்‌ கொண்ட பூவண்ணன்‌ 1949லிருந்து பாலர்‌ மலர்‌, டமாரம்‌, சங்கு ஆகிய புதுக்கோட்டை தமிழ்‌ நிலைய பதிப்புகளில்‌ ஏராளமாக எழுதினார்‌.

குழந்தைப்‌ பதிப்பகம்‌ (பழனியப்பா பிரதர்ஸ்‌) மற்றும்‌ தமிழ்‌ நிலைய வெளியீடுகளுக்குப்‌ பதிப்பாசிரியராகத்‌ திகழ்ந்த குழந்தைக்‌ கவிஞரின்‌ பெருமுயற்சியினால்‌ பூவண்ணனின்‌ பல படைப்புகள்‌ புத்தகங்களாக$வெளிவந்தன. தன்னை ஊக்குவித்த ஆசான்‌ குழந்தைக்‌ கவிஞரையும்‌ வெளியிட்ட புதுக்கோட்டையையும்‌ என்றும்‌ மறவாதவர்‌ பூவண்ணன்‌. அவர்‌ தோற்றுவித்த குழந்தை எழுத்தாளர்‌ சங்கத்தின்‌ பல்வேறு பொறுப்புகளில்‌ திறம்படப்‌ பணியாற்றினார்‌.

குழந்தை எழுத்தாளராக மலர்வதற்குப்‌ பள்ளி நாள்களிலேயே பூவண்ணனுக்கு உறுதுணையாய்‌ நின்றவர்‌ – எழுத்துலகில்‌ அரிய சாதனை புரிவதற்கு உதவியவர்‌ – சக நண்பர்‌ ஜெ. எத்திராஜன்‌. பள்ளி அரங்கில்‌ மேடைப்‌ பேச்சாளராக விளங்கிய இவரை எழுத்தாளராகத்‌ திருப்பியவர்‌ இவர்தான்‌. அறுபத்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்காகப்‌ பூவண்ணன்‌ எழுதிய படைப்புகள்‌ மிக நேர்த்தியான 15 தொகுதிகளாக இவர்‌ வெளிட்டதும்‌ யாரும்‌ செய்யாத அற்புத சாதனை. குழந்தைகளுக்காக மட்டும்‌ சிறுகதை, புதினம்‌, நாடகம்‌, கவிதை, கட்டுரை முதலிய துறைகளில்‌ 100 நூல்கள்‌ எழுதியுள்ளார்‌.

கல்லூரி மாணவராக இருந்த போதே ‘கரும்பு’ என்ற சிறுவர்‌ இதழுக்கு ஆசிரியராக இருந்தார்‌. குழந்தைக்‌ கவிஞர்‌ விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளைப்‌ பரிசு, பாரத ஸ்டேட்‌ வங்கிப்‌ பரிசு மூன்றையும்‌ ஒரே ஆண்டில்‌ (1994) பெற்றவர்‌. ‘நரசிம்மவர்மனின்‌ நண்பன்‌’ என்ற இவருடைய சரித்திர நாவல்‌ தமிழக அரசின்‌ பரிசு பெற்றது.

“கல்கியின்‌ வரலாற்று நாவல்கள்‌’ என்ற இவருடைய நூலைச்‌ சிறந்த திறனாய்வு நூலாகத்‌ தமிழ்ப்‌ பலகனக்க்கமகம்‌ தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியுள்ளது. தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ சங்கம்‌ நடத்திய ஓரங்க நாடகப்‌ போட்டியிலும்‌ (1957) பரிசை வென்றவர்‌. இந்தியாவின்‌ தலைசிறந்த குழந்தை எழுத்தர்ளராகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.25,000 பரிசு பெற்ற சிறப்புக்குரிய இந்தியர்‌ இவர்‌ ஒருவரே. சென்னைக்‌ கம்பன்‌ கழகம்‌ வழங்கிய “கம்பன்‌அடிப்பொடி” நினைவுப்‌ பரிசு உள்பட ஏராளமான விருதுகளும்‌ பெற்றவர்‌ டாக்டர்‌ பூவண்ணன்‌.

இந்திய தேசிய சிறுவர்‌ கழகம்‌ அளித்த தலைசிறந்த குழந்தை எழுத்தாளர்‌ விருது’ சிறந்த இலக்கியப்‌ பணிக்காக “ராஜாசர்‌ அண்ணாமலை செட்டியார்‌ விருது” (ஒரு இலட்சம்‌ ரூபாய்‌) பத்மாபினானி பவுண்டேஷன்‌ ‘வாத்சல்யா விருது’ (இலட்ச ரூபாய்‌) இவருக்குப்‌ பெரிதும்‌ பெருமை சேர்ப்பவை. இவர்‌ இலக்கியத்தில்‌ தொடாத துறைகளும்‌ – தொட்டு மணக்காத நிறைகளும்‌ மிச்சம்‌ இல்லை என்றே கூறலாம்‌.

கம்பராமாயணத்‌ தெளிவுரை (9 தொகுதிகள்‌), கந்த புராணம்‌ ஆய்வு, கல்கியின்‌ படைப்புகள்‌ குறித்த ஆய்வு செய்து முனைவர்‌ பட்டம்‌ பெற்றமை தவறாது குறிப்பிடத்‌ தக்கவையாகும்‌.

ஹானர்ஸ்‌ படிப்பு முடித்தபின்‌ சில காலம்‌ எம்‌.ஜி.ஆர்‌. பிக்சர்ஸ்‌ அலுவலகத்தில்‌ அலுவல்‌ பார்த்த பூவண்ணன்‌ விவேகானந்தா கல்லூரியில்‌ வவேலை கிடைத்தவுடன்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களும்‌ ஆர்‌.எம்‌.வீ. அவர்களும்‌ அவரை அகமகிழ வாழ்த்தினர்‌. “இந்திய இலக்கியச்‌ சிற்பிகள்‌” வரிசையில்‌ குழந்தைக்‌ கவிஞர்‌ குறித்து இவர்‌ எழுதிய வரலாற்று நூல்‌ குறிப்பிடத்தக்கதாகும்‌.

அவர்‌ தொகுத்த “தமிழில்‌ குழந்தை இலக்கிய வரலாறு” மிகச்‌ சிறந்த ஆவணம்‌. இதனை மணிவாசகர்‌ பதிப்பக அதிபர்‌ திரு. மெய்யப்பனார்‌ அவர்கள்‌ வெளியிட்டார்‌.

பல்கலைக்கழகமோ – வேறு அமைப்புகளோ பல நிபுணர்களைக்‌ கலந்து ஆற்றவேண்டிய இப்பெரும்‌ பணியை தனிநபராக இந்த வரலாற்றைத்‌ திறம்படப்‌ படைத்துள்ளது பாராட்டிற்குரிய முயற்சி. ஒருவரின்‌ வாழும்‌ காலத்திலேயே அவரைப்‌ பற்றி வரலாறு வெளியாவது என்பது எளிதல்ல.

ஜெ. எத்திராஜன்‌ எழுதிய ‘வரலாறு படைத்தவர்‌ வரலாறு”, பின்னலூர்‌ விவேகானந்தன்‌ எழுதிய “இந்தப்‌ பூவில்‌ எத்தனை வண்ணங்கள்‌’ பெரிதும்‌ குறிப்பிடத்தக்கவை.

டாக்டர்‌ பூவண்ணனின்‌ நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ 24.02.2013 அன்று சென்னையில்‌ இலக்கியச்‌ சாரல்‌ நிறுவனர்‌ கவிமாமணி இளையவன்‌ ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில்‌ இளையவன்‌ தயாரித்தலித்த நினைவுச்‌ சிறப்பிதழ்‌ பூவண்ணன்‌ அவர்களின்‌ இலக்கியச்‌ சாதனையைப்‌ படம்பிடித்துக்‌ காட்டியது. இவ்விழாவில்‌ இலக்கிய வீதி இனியவன்‌, புதுகைத்தென்றல்‌ ஆசிரியர்‌ புதுகை மு. தருமராசன்‌, எழுத்தாளர்கள்‌ ஜே.எம்‌. சாலி, சாருகேசி, சின்னஞ்சிறு கோபு, மாயூரன்‌ ஆகியோரின்‌ நெகிழ்ச்சி மிகுந்த உரையைக்‌ கேட்டு கோவையிலிருந்து வந்த பூவண்ணன்‌ குடும்பத்தார்‌ கண்ணீர்‌ மல்கியது நெஞ்சைத்‌ தொட்டது.

இலக்கிய வீதி இனியவன்‌ பேசுகையில்‌ பூவண்ணனும்‌, துணைவியார்‌ வத்சலா அவர்களும்‌ இனிதே இலக்கியப்‌ பங்களிப்பு செய்துள்ளவர்கள்‌. கம்பன்‌ கழகம்‌ சார்பில்‌ ‘இலக்கிய இணையர்‌’ விருது அளிக்கத்‌ திட்டமிட்டிருந்தோம்‌ எனக்‌ கூறினார்‌.

பூவண்ணன்‌ அவர்களின்‌ படைப்புகள்‌ அனைத்தும்‌ போற்றத்‌ தக்கவை. அவரது படைப்புகள்‌ நாட்டுடைமை ஆக்கப்பட்டால்‌ அவரது எழுத்துகளும்‌ கருத்துகளும்‌ பல்லாயிரம்‌ வாசகர்களுக்குப்‌ பரவலாக சென்றடைய பெரும்‌ வாய்ப்பாக அமையும்‌.

குறிப்பு: ஒரு பி. ஆர். ஓ வின் இலக்கிய டைரி – பி.வெங்கடராமன் அவர்களின் புத்தகத்தில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் பூவண்ணன் அவர்களின் நினைவு தினத்தில் அவரது நினைவாக கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்.

Leave a comment