ராசுவும் மாயக்குதிரையின் மர்மமும் – நளினி

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உங்களுக்கு ராசுவைத் தெரியுமா? ஏழெட்டு வயதிருக்க கூடும். எப்பொழுதும் ஒரு பட்டை வைத்த கால்சட்டை அணிந்திருப்பான். சில நேரம் சட்டை கூட போட்டிருப்பான். எப்பொழுதும் விளையாட்டுத்தான். கையில் கிடைக்கும் ஒரு குச்சி கூட வண்டியாகிவிடும், குதிரையாகிவிடும், ஒரு தீப்பெட்டி டேங்கர் வண்டியாகிவிடும், சில நேரம் துப்பாக்கியும் ஆகிவிடும்.

அவனுக்கும் கணக்கு பிடிக்காது, கணக்கு வகுப்பு இருந்தால் அன்றைக்கு பள்ளிக்கூடம் போக மாட்டான், அடம் பிடிப்பான். பாசக்காரப் பையன், தன்னுடைய தங்கச்சி பாப்பாவிற்கு எது வேண்டுமென்றாலும் அடித்து பிடித்து கடைக்கு ஓடிப்போய் வாங்கி வருவான். நிறையவே பயப்படுவான், இரவில் தனியாக ஒண்ணுக்கு போகக் கூட பயம்தான். அம்மாவைத்தான் கூப்பிடுவான். ஆனால், ஒரு முறை தங்கச்சி பாப்பாவிற்காக ஆவி நடமாடும் வீட்டிற்கு சென்று கிளி பொம்மை எடுத்து வந்தான். எப்படி தெரியுமா? கருப்பசாமியை எடுத்துக் கொண்டு தைரியமாய் போய் வருவான். நிறைய அடியும் வாங்கிக்கொள்வான். பயந்து போனால் தூணில் பின்னால் ஓளிந்து கொள்வான். பயம் இருந்தாலும் என்ன நடக்கிறது என்று ஆர்வமுடன் பின் தொடர்ந்து போவான், அல்லது எட்டி எட்டி பார்த்து தெரிந்து கொள்வான்.

இன்னும் நிறைய உண்டு ராசுவை பற்றி சொல்ல, இந்த ராசுவை எனக்கு எப்படித் தெரியும் தெரியுமா? அப்பொழுதெல்லாம் மர்ம தேசம் என்றொரு நாடகம் வரும், தொலைக்காட்சியில் தான். வாரா வாரம் ராசுவும் தொலைக்காட்சியில் வருவான். அவன் என்ன பார்க்கிறானோ அதுதான் கதை. ராசுவின் ஊர் பெயர் தோட்டக்கார மங்கலம். அவன் சித்தப்பா பெயர் கட்டையா. அவன் பாட்டி பெரும் ராட்சசி, வட்டிக்கு காசு கொடுப்பவள், அநியாயமாக வட்டி போட்டு, சொத்தையே எழுதி வாங்கி விடுவாள். சிலர் வட்டி கொடுக்க முடியாமல் போனால், அவர்களை சண்டை போட்டு, அடித்து, மானத்தை வாங்கி விடுவாள். துப்பாக்கி கூட வைத்திருப்பாள். ஊரே பயப்படும். ராசுவும் தான். ஆனால் அவன் ஊரில் கருப்பசாமிதான் காவல் தெய்வம், தப்பு செய்தவர்களுக்கு உடனே தண்டனை கொடுக்கும். அந்த சாமி குதிரையில் வரும், அது ஒரு வெள்ளைக் குதிரை, பிடரியும், வாலும், நெருப்பாக எரியும். கருப்பசாமி கையில் வீச்சரிவாள் வைத்திருக்கும், தலைப்பாகை கட்டிக் கொண்டு, வெள்ளை வேட்டி அணிந்து, காலில் சலங்கை கூட போட்டிருக்கும். ஆனால் யாரும் கருப்பசாமியை பார்த்ததில்லை, அந்த வெள்ளை குதிரையைத்தான் பார்த்திருக்கிறார்கள்.

“ஹோ ஹோ” என்று அந்த குதிரையில் கருப்பசாமி வரும் முதல் காட்சியும், சத்தமும் மிரள வைக்கும். ஒரு நாள் அந்த ராட்சசி பாட்டியை கருப்பசாமி கொன்று விடும். பாட்டி வைத்திருந்த நகை, வீடு நிலம், அடகுபத்திரம் எல்லாம் எங்கே இருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. அதை தேடி கண்டுபிடிப்பதுதான் இந்த கதை மர்ம தேசம்(விடாது கருப்பு) . இப்பொழுது கூட யூ டியூபில் பார்க்கலாம். பார்க்கலாமா?

இப்படியாகத்தான் போன மாதம் நானும், கோகுலும் ராகுலும், மர்ம தேசம் பார்க்க உட்கார்ந்தோம். ராசு மிகவும் cute என்றான் ராகுல் (எனது மகன் வயது 11). நாடகத்தை அன்று-இன்று என பிரித்திருப்பார்கள். “அன்று” என்று வரும்போதெல்லாம் ராசுவின் கதையாக இருக்கும். “இன்று” என்று வரும்போதெல்லாம், டாக்டர் ரீனா என்பவரை சுற்றி கதை ஓடும். ராசுவின் உலகம் எனது சிறுவயது உலகமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் எங்களின் பொம்மைகளை நாங்களே செய்து கொள்வோம். களிமண் இருந்தால் போதும் அம்மி, தோசைக்கல், அடுப்பு, இட்லி குண்டான் எல்லாம் நாங்களே செய்து கொள்வோம். காலையில் ஆரம்பித்தால், மதியம் வெயிலில் காய வைத்து, சாயங்காலம் வரை விளையாடிக் கொள்ளலாம். உதிரி மண், தண்ணீருடன் கலந்த மண், இலைகள், எல்லாம் உணவாக பரிமாறப்படும். சில நேரம், சோஃபா, வீடு, டேபில் லேம்ப், என்றெல்லாம் கூட வீடு மாடர்னாகி விடும், களிமண் கொண்டு. தீப்பெட்டி கொண்டு துப்பாக்கி, உடைந்த பிளேடு இருந்தால் வாயில் வாத்தியம், ராசு எங்களின் குழந்தை பருவத்தை அப்படியே கொண்டு வந்திருந்தான்.

எல்லோருக்கும் தனித்துவமான குழந்தைப்பருவம் கொண்டிருந்தோம். ஆற்றங்கரையில் வசிப்பவருக்கு, ரோட்டோரம் வசிப்பவருக்கு, மலைப்பகுதியில் வசிப்பவருக்கு, காடுகளூடே வசிப்பவருக்கு, ஒவ்வொருவருக்கு தனித்தனி குழந்தைப்பருவ அனுபவங்கள் உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி திண்பண்டங்கள் உண்டு. கமர்கட்டாயிருக்கட்டும், முறுக்காக இருக்கட்டும், கடையில் அண்ணாச்சி கொடுக்கும் உடைத்தக்கடலை வெல்லமாக இருக்கட்டும். வீட்டில் செய்த அதிரசமாகவோ, பாட்டி கடையில் கிடைக்கும் எதுவாகவோ, அந்தந்த ஊருக்கு தனித்தனி அனுபவம் இருந்தது. சொல்லவும் கேட்கவும் தனித்தனி கதைகள் இருந்தது. அதையெல்லாம் இந்த சீரியல் அப்படியே பிரதிபலித்திருந்தது. ராகுலும் கோகுலும் (எனது மகன்கள் வயது 11/13 – இன்றைய தலைமுறை சிறுவர்கள்) சாப்பிடும் கிண்டர் ஜாயோ, டெய்ரி மில்கோ, ஓரியோவோ, அதேதான் எல்லா ஊரிலும் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். இவர்கள் பார்க்கும் ஸ்பைடர்மேனோ, ட்மேனோ, ஃப்ரோசனோ, பெப்பா பிக்கோ, அவெஞ்சர்ஸோ, போகிமானோ, அதையேதான் எல்லா குழந்தைகளும் பார்க்கிறார்கள். மாசாவோ, பெப்சியோ, அதையேதான் எல்லா ஊரிலும் விற்பனை செய்கிறார்கள், தனக்கென்று தனித்துவம் இல்லாத குழந்தை பருவத்தை தான் நாம் நமக்கான இளம் தலைமுறையினருக்கு தர முடிகிறது.

ராசுவிற்கு நிறைய கேள்விகள் இருக்கும், போலிஸ் நல்லவரா?, திருடன் நல்லவரா? என்று. ஏனெனில் ஒருமுறை திருடன் ராசுவை கடத்திக் கொண்டு போயிருப்பான். ஆனால் அவனுக்கு சோளம் சுட்டு தருவான், அருவியில் குளிக்க வைப்பான், நிறைய விளையாட்டுக்கள் சொல்லி தருவான். ராசுவிற்கு இன்னொரு கேள்வியும் உண்டு சாதின்னா என்ன என்று? அம்மா ஒரு பதில் சொல்வாள், சித்தப்பா ஒரு பதில் சொல்வான். அவன் காக்கா கடி கடித்து கடலை உருண்டையை பகிர்ந்து கொள்ளும் செல்லி, அவர்கள் சொல்லி சொல்லி விளையாட்டு தோழியாயிருந்து இப்பொழுது வேறு சாதிக்கார பெண்ணாய் இருப்பாள். ராசுவிற்கு சாமி பற்றியும் கேள்வி உண்டு. பேய் பற்றியும் கேள்வி உண்டு. ஆளாலுக்கு சொல்லும் பதிலை வைத்து அவன் ஒரு நம்பிக்கையை உருவாக்கி கொள்வான். இதை அழகாக சொல்லியிருக்கும் இந்த சீரியல்.

இப்படி குழந்தைகளின் நம்பிக்கையை, அவர்களின் கேள்வியை, அவர்களின் பார்வையை, நேர்த்தியாக சொல்வதற்கு எவ்வளவு மெத்தனப் பட்டிருப்பார்கள் கவிதாலயா குழுவினர் என்பது இன்னமும் பெருமையான ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தைகளை கருத்தில் கொள்ளாத சீரியல் காலத்தில் இருக்கிறோம் என்று அவ்வப்பொழுது மண்டைக்குள் அலாரம் அடிக்கிறது. வெகுஜன ஊடகங்கள் காண்பிக்கும் சீரியல்கள், இப்படியெல்லாம் இப்பொழுதுள்ள தலைமுறையின் பிரச்னைகளையோ, குழந்தைகளின் உலகத்தையோ முன்னிறுத்தி பார்க்கிறதா என்பதெல்லாம் பெரும் கேள்விக் குறியாகியிருக்கிறது. ஹீரோ வில்லன், ஹீரோயின் என்றெல்லாம் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளையே காண்பிப்பது, அதிரடி வசனங்கள்(Punch dialogue) பேச வைப்பது, வளர்ந்தவர்களுக்கே காதல் அறிவுரையும், காதல் tips கூற வைப்பது. என்று விஷம் கலந்த கதாபாத்திரங்களாகவே படைப்பது, இதையெல்லாம் நாம் புரிந்து கொள்கிறோமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

சீரியல்களோடு, காமிக்ஸ்களும் போட்டி போடுகிறது. சோட்டா பீம் ரொம்ப வருஷம் கழித்து இப்பொழுதுதான் பள்ளிக்கே செல்கிறான், காலா எப்போதும் ஜோக்கர்தான். ரோல் நம்பர் 21 கிருஷ்ணாவிற்கு பாவம் படிப்பென்றாலே கஷ்டம்தான், ஆர்ய நகரம் ராஜூவிற்கு, ஆர்யர்களை காப்பதே பெரும் வேலை. இப்படி தவறான படிப்பினைகளும், தவறான கருத்துகளும் உடைய role modelகளைத்தான் நாம் கொடுக்கப் போகிறோமா நம் குழந்தைகளுக்கு ஒரு உளவியலாளராக நான் அறிந்தது, குழந்தைகள் சுற்றுப்புறத்தில் பார்க்கும் ஒவ்வொரு விஷயமும், கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும், உணரும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் ஆளுமையை வடித்தெடுக்கிறது. நம்மால் எவ்வளவு இயல்பான உரையாடலை முன்னெடுக்க கூடிய சுற்றுப்புறத்தை கொடுக்க முடிகிறதோ அவ்வளவு மன வலிமையான, நற்பண்புகளோடு குழந்தைகள் வளர முடியும். ஆளுமையை வளர்த்து கொள்ள முடியும்.

மர்ம தேசம் ராசு,எல்லாவற்றிற்கும் பயப்படும் ராஜேந்திரன், தானே கருப்பு என நம்பி குற்றத்திற்கு தண்டனை வழங்கும் கருப்பு, என பிரிந்த ஆளுமைகளாக மன நோயாளி ஆவது, சமூகத்திற்கு நம் குழந்தைகளின் ஆளுமைகளை வளர்ப்பதில் எவ்வளவு பொறுப்புள்ளது என்பதை தெள்ளத்தெளிவான அக்கறையுடன் சொல்லும் மர்ம தேசம் இப்பொழுது என் குழந்தைகளுக்கும் பிடித்தமான சீரியல். அது மாதிரி நீங்கள் ஏதேனும் சீரியல் சொல்லுங்களேன் குழந்தைகளுக்கு காண்பிக்கலாம்.

பின்குறிப்பு: மர்ம தேசம் சீரியலில் எழுத்தாளர் இந்திரா மற்றும் டாக்டர் ரீனா தான் எங்களுக்கு ரோல்மாடல், ஜீன்ஸ் பேண்டும், ஜிப்பாவும் போட்டுக் கொண்டு, ( எங்களுடைய ட்ரெஸ் கோடு ரொம்ப நாளைக்கு அதுதான்) எதற்கும் பயப்படாமல், மூட நம்பிக்கையை எதிர்த்து பேசுபவள். ஊரே எதிர்த்த போதும், தனியாக உண்மையை வெளிக்கொணர முனைபவள், தன்னை பலாத்காரம் செய்த போதும், அவனையே திருமணம் செய்து கொள்ள முயலாமல், (எப்பொழுதும் திரைப்பட கதைகள் சொல்லும் முட்டாள்தனமான தார்மீகம்), அதை விபத்தாக கருதி கடக்க முயல்பவள். இன்றக்கு அதே தேவதர்ஷினி அவர்கள் காமெடியனாக அறியப்பட்டாலும், அவர்களே நிறைய பேருக்கு அன்றைக்கு ரோல் மாடல் கேரக்டராக இருந்தார்கள். இத்தகைய காரக்டர்ஸ் எல்லாம் இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களின் தனி முத்திரை என்றாலும், வெகு ஜனத்திற்கு இத்தகைய கருத்துகளை கொண்டு சேர்க்கும் அக்கறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பேச்சி கிழவி, ராசுவின் பாட்டி அந்த ஊரையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார், தனது மகன்களையோ, மகளையோ கூட மதிக்க மாட்டார். மருமகளை மரியாதையின்றி நடத்துவார். பணம் இருந்தால் போதும் எல்லோரும் தன்னுடைய பேச்சை கேட்பார்கள் என்று எல்லோரையும் கேவலமாக நடத்துவார். எந்த நியாயத்திற்கும் அடங்காமல், கொலை பாதகம் கூட செய்வார், அதை மறைக்க, போலீஸிற்கு லஞ்சம் கொடுத்து தன் கட்டிற்குள் வைத்திருப்பார். இத்தகைய எதிர்த்து பேச முடியாமல் பயத்துடன் கூடிய சூழலில் வளர்ந்தது கூட ராசு பின்னாளில் மனநோயாளியாய் மாற காரணமாயிருக்க கூடும். வீட்டுச் சூழலுக்கே இப்படி என்றால், நாட்டை ஆள்பவர்கள் நடந்து கொள்ளும் நியாயமற்ற சூழல், சுற்றி நடக்கும் கலவரங்கள், ஊடகங்கள் முன் வைக்கும் ஆபாச கேளிக்கைகள், சமூக வலைதளங்கள் முன்வைக்கும் குழப்பமான சூழல்கள், குழந்தைகளை முன்வைத்து தயாரிக்கப்படும் விளம்பரங்கள், இப்படி அத்தனை சவால்களுக்கும் மத்தியில் வளர முயலும் நம் குழந்தைகளுடன் உரையாட, அவர்களை புரிந்து கொள்ள, சரியாக வழிநடத்த தயாரயிருக்கிறோமா நாம்?

நன்றி,
நளினி,
குழந்தைகள் உளவியல் ஆலோசகர்.

2 Comments

Leave a comment