எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க, நிதி ஒதுக்கிவிட்டே மறைந்தார்.
1968 ஆம் ஆண்டு மே திங்கள் தமிழக முதல் அமைச்சர், அறிஞர் அண்ணா அலுவல் பற்றித் தில்லிக்கு வந்தார். அப்போது நான் தில்லியில் கல்வி அமைச்சகத்தில், இணைக் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
முதியோர் எழுத்தறிவுப் பிரிவு என்னிடம் இருந்தது. “உழவருக்குப் பயன்படும் எழுத்து அறிவு”த்திட்டம் ஒன்று கோப்பிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது. நான் தில்லியில் பொறுப்பு ஏற்றதும், அந்தக் கோப்பின்மேல் தனி அக்கறையும் ஆர்வமும் காட்டினேன். அத்திட்டத்திற்குத் திட்டக்குழு ஒப்புதல் கொடுக்கவேண்டும்; பிறகு நிதித்துறையின் ‘செலவினக் குழு’ இசையவேண்டும். முதல் குழு கட்டை போட்டுக் கொண்டிருந்தது. ஆகவே திட்டம் இரண்டாவது குழுவிற்கு அனுப்பப்படவில்லை. அந்நிலையில்தான், அது என் பொறுப்புக்கு வந்தது.
திட்டக்க்குழுவின் கல்வி ஆலோசகராயிருந்த டாக்டர் ஜோஷி என்பவர் அதற்கு முன், வடமாநிலம் ஒன்றில்- பஞ்சாபில் – கல்வி இயக்குனராக இருந்து அனுபவம் பெற்றவர். அப்போது, சென்னை மாகாணத்தில் விரைந்து பரவிக் கொண்டிருந்த இலவசப் பகல் உணவுத் திட்டம், சீருடை இயக்கம், ஊராரைக் கொண்டு பள்ளிகளைச் சீரமைக்கும் இயக்கம் ஆகியவற்றை நேரில் கண்டு அறிந்து கொண்டவர். அதனால் என்னிடம் பெரிதும் நம்பிக்கையுடையவர்.
எனவே, நானே அவரிடம் வலிய சென்றேன்; “உழவர் எழுத்தறிவுத் திட்டத்தை”ப் பற்றிக் கலந்துரையாடினேன்; அவருக்கிருந்த அய்யங்களுக்கு விளக்கம் கூறினேன். சிறுபணப் பாதுகாப்பு மாற்றங்களோடு, அந்தத் திட்டத்தைப் பரிந்துரைக்க இசைந்தார். சில நாள்களில், திட்டக் குழுவின் ஒப்புதல் வந்தது. பின்னர் “செலவினக் குழு”விற்குச் சென்றேன். அக்குழுக் கூட்டத்திலிருந்த நிதித்துறைச் செயலரும் பிறரும் எனக்குப் புதியவர்கள். அவர்கள், ஏறத்தாழ இரண்டு மணி நேரம் திட்டத்தின் கூறுகளைப் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தார்கள். பல கேள்விகளை எழுப்பினார்கள். அத்தனைக்கும் நானே விடை கொடுக்க நேர்ந்தது. இறுதியில் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அத்திட்டத்தின் சாரம் என்ன?
முதல் ஆண்டில், மூன்று இந்திய மாநிலங்களில் ஒவ்வோர் மாவட்டத்தைக் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை தீவிர சாகுபடி திட்டத்தின் கீழ்வரும் மாவட்டமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அறுபது சிற்றூர்களில், உழவர் எழுத்தறிவு மையங்களைத் தொடங்கி நடத்த வேண்டும். மையத்திற்கு இருபது பேர்களாவது இருக்க வேண்டும். பாட காலம் ஆறு திங்கள். அக்காலத்தின் இறுதியில், முதிய மாணவர்கள் எழுத்தறிவு பெற்றார்களா என்று பார்க்க வேண்டும். பெற்றிருந்தால் அதற்கான சான்றிதழ் வழங்கிவிட்டு, அதே மையங்களில் புதியவர்களைச் சேர்த்து, கற்றுத் தரவேண்டும். ஒராண்டின் இறுதியில் மைய அரசு அமைக்கும் குழுவொன்று, முதியோர் எழுத்தறிவுக் திட்ட நடைமுறையை ஆய்ந்து பார்க்கும். மதிப்பீடு நிறைவாயிருந்தால், அடுத்த ஆண்டில் அத்திட்டம் முப்பது மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
ஐந்தாண்டுகளில் நூறு மாவட்டங்களில் உழவர் எழுத்தறிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த கேள்வி, முதலில் எந்த மூன்று மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்பதாகும். அப்போதைய இந்தியக் கல்வி அமைச்சகச் செயலாளர் திரு. பிரேம்கிருபாலிடம் நேரில் சென்றேன். தமிழ்நாட்டிற்கு ஒரு மாவட்டத்தை ஒதுக்கும்படி ஆலோசனை கூறினேன். அவரும் என்னிடம் நிறைய நம்பிக்கை உடையவர். எனவே, ஒப்புக் கொண்டார். அன்றையத் தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டமும் கோவை மாவட்டமும் தீவிர சாகுபடித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. அவ்விரண்டில் எதைப் பரிந்துரைப்பாய் என்று கிருபால் கேட்டார். அதைத் தமிழக அரசின் முடிவுக்கு விடுவது நல்லது என்றேன். அதையும் தட்டாமல் ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டை “உழவர் எழுத்து அறிவு” இயக்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கு இசையவேண்டுகிறோம். “அதோடு எந்த மாவட்டத்தில் அதைச் செயல்படுத்தலாம் என்பதை மாநில அரசே முடிவுசெய்து தெரிவிக்க வேண்டுகிறோம். உழவர் எழுத்தறிவு இட்டத்திற்கு ஆகும் முழுச் செலவையும் அய்ந்தாண்டு காலத்திற்கு, இந்திய அரசே ஏற்றுக் கொள்ளும்” இப்படியொரு கடிதத்தைத் தமிழக அரசுக்கு அனுப்பினோம்.
சென்னை மாகாண நிர்வாகம் திறமைக்குப் பெயர் பெற்றது. அதே போன்று திட்டங்களை, கோப்புகளை அழுத்தி வைப்பதற்கும் நெடுங்காலமாகப் புகழ்பெற்றது. அதை மெய்ப்பிக்கும் கோர அழுத்தங்களை, பின்னர் தக்க இடங்களில் விவரமாகக் குறிப்பிடுவேன்.
உழவர் எழுத்தறிவு திட்டம் பற்றி இந்திய அரசு எழுதிய கடிதத்திற்குச் சென்னையிலிருந்து பல மாதங்களாகப் பதில் இல்லை; நினைவுக் கடிதங்களும் தரக்கத்தைக் கலைக்கவில்லை.
அண்ணாவின் அழைப்பு
அந்நிலையில்தான் முதல் அமைச்சர் அண்ணாதுரை தில்லிக்கு வந்தார். இந்தச் செய்தி நாளிதழ்களில் வெளியாயின. உடனே, திரு. பிரேம்கிருபாவிடம் சென்றேன். முதல் அமைச்சரைக் கண்டு அந்தத் திட்டம் பற்றி, இசைவுபெற உரிமை கொடுக்கும்படி வேண்டினேன். அவர் மகிழ்ச்சியோடு அளித்தார். முதல் அமைச்சர் அண்ணாதுரை அவர்களைத் தில்லி, தமிழக இல்லத்தில் கண்டேன். தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழெட்டுப் பேர்கள் இருக்கும்போதே, என்னோடு பேசினார். எதற்காக வந்தேன், என்பதை நான் கூறியதும், தமது செயலாளர் திரு. சொக்கலிங்கத்தைக் கூப்பிட்டார். நாளை நாம் ஊர் இரும்பியதும், “உழவர் எழுத்தறிவு திட்டத்திற்கான ஒப்புதலை, தந்தி மூலம் தில்லிக்குத் தெரிவிக்க வேண்டும். நான் சொன்னேன் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள், தயக்கம் வேண்டாம்” என்றார்.
என் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை. மகழ்ச்சி வெள்ளம் ஆளை அடித்துக்கொண்டு போகுமென்பது தெரியவில்லை. அடுத்தநொடி நான் எதிர்பாராத பெரியதொரு திருப்பம் ஏற்பட்டது. முதல் அமைச்சர் அண்ணாதுரை என்னைப் பார்த்து,
“நீங்கள் கேட்பதற்கு நான் இசைகிறேன். நான் கேட்பதற்சூ நீங்கள் தடை சொல்லாமல் இசையுங்கள். நீங்களே, சென்னை மாநிலத்திற்குத் திரும்பி வந்து உழவர் எழுத்தறிவுத் திட்டத்தைச் செயல்படுத்துங்கள். இந்திய அரசின் திட்டமோ, ஒரு மாவட்டத்தில் வெள்ளோட்டம் பார்க்கும் சுருக்கமான நடவடிக்கை. நான் நினைத்துக் கொண்டிருப்பது பெரிய திட்டம், அதை நிறைவேற்றி வைக்க நீங்கள் சென்னைக்கு வாருங்கள். எனக்கு, என் கட்சிக்கு வாக்களித்தவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் தற்குறிகள்; அவர்கள் அனைவரும் நம்மவர்கள்: கை நாட்டுகள் என்கிற இழிவை நாமே குத்தகை எடுத்துக் கொண்டுள்ளோம்.
“என் கட்சிக்கு வாக்களித்த அவர்களை மறுபடியும் கண்டு வாக்களிக்கும்படி கோருவதற்குமுன், அவர்கள் அனைவருக்கும் எழுத்தறிவாவது கொடுத்து விடவேண்டும். அப்போதுதான் நான் அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்குக் காமராசர் கொடுத்த கல்வி வாய்ப்பை அப்படியே காப்பாற்றி இருப்பதோடு, உங்களுக்கும் எழுத்தறிவு கொடுத்து விட்டே என்று உற்சாகத்தோடும் உரிமையோடும் பேசலாம். பொதுமக்கள் நீங்கள் சொன்னால் கேட்பார்கள். தமிழ்நாட்டில் எழுத்தறிவு இயக்கத்தை நடத்த வந்துவிடுங்கள்” என்று அழைத்தார்.
மாட்டேனென்பேனா? இந்திய அரசின் அய்ந்து அழைப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு ஆறாம் முறை, அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் சாக்ளாவே நேரில் அழைத்ததால், தாட்சண்யப்பட்டு அங்குச் சென்றேன். அவர் சல திங்களில் அயல்துறை அமைச்சராகிவிட்டார். அவர் இல்லாதபோது எனக்கு அப்பணியில் பற்று அற்று விட்டது. அறிஞர் அண்ணா, எவரை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று அறிந்தவர். என்னைக் கல்வித் தொண்டிற்கே பயன்படுத்துவார் என்பது தெரியும்.
எனவே, முதல் அமைச்சரின் அழைப்பை நொடியில் ஏற்றேன்.
“அய்யா! தங்கள் அரசு, என்னைத் திருப்பி அனுப்பும்படி எழுதப்போகிறதா? அல்லது நானே என் பழைய பதவிக்குத் திரும்பிப் போகிறேனென்று எழுதிக் கொடுத்து விடவா? ” என்று நடைமுறை விளக்கம் கேட்டேன்.
நாங்கள் எழுதலாம். அப்படிச் செய்தால், இந்திய அரசோடு ஒத்துழையாமைக் கடைப்பிடிக்கிறோம் என்று நினைத்துவிடக் கூடாதென்று யோசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, “இன்னும் மூன்று தங்களில் என் ஈராண்டுப் பதவிக்காலம் முடிகிறது. அவ்வேளை, நான் சென்னைப் பதவிக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்றேன்
மறுநாள் உழவர் எழுத்தறிவுத் திட்டத்திற்குத் தந்தி வழியாகத் தமிழக அரசின் இசைவு வந்தது. நான் ஒப்புக்கொண்டபடி, சில திங்களில் சென்னைப் பதவிக்குத் திரும்பினேன். என்னைத் தலைமைக் கல்வி ஆலோசகராகவும் கூடுதல் செயலாளராகவும் நியமித்த, முதல் அமைச்சர் அண்ணாதுரை அய்ந்நூறு எழுத்தறிவு மையங்களைத் தொடங்க நிதி ஒதுக்கினார்; அது நடைமுறையாவதற்கு மூன் மறைந்து விட்டார். ஆயினும், அய்ந்நூறு எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்பட்டன. அவை நன்கு செயல்பட்டன. எதிர்பார்த்ததைவிட நல்ல தேர்ச்சி இடைத்தது.
குறிப்பு : 1960களில் நடந்தது
(தொடரும் …)