பேச்சும் பாட்டும் – பெ.தூரன்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒவ்வொரு குழந்தையும்‌ நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக்‌ குறையில்லாமல்‌ வகித்து, மனித சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்கு அதன்‌ கடமையைப்‌ பூரணமாகச்‌ செய்யவேண்டுமானால்‌ அதன்‌ திறமைகள்‌ அனைத்தும்‌ மலரும்படியாக வளரவேண்டும்‌. அப்படி வளர்ந்தால்தான்‌ அக்குழந்தையால்‌ உலகத்திற்கு நன்மை உண்டு. அதை வெற்றிகரமாகச்‌ செய்வதற்கு அத்தியாவசியமாக வேண்டுவது ஓன்று. அதாவது அன்பும்‌ ஆதரவும்‌ உள்ள சூழ்நிலையில் குழந்தை சுதந்திரமாக வளர வேண்டும்‌.

ஒரு அழகான மெல்லிய பூச்செடி நன்கு வளர்வதற்கு நிலத்தை வேண்டியவாறு பண்படுத்தி மற்‌ற செளகரியங்களையும்‌ செய்துவிட்டால்‌ ௮து தானாகவே வளர்ந்து அதன்‌ எழிலும்‌ நறுமணமுமாகிய பயனை உலகத்திற்குத்‌ தருகின்‌றது. அதுபோலவேதான்‌ பூங்‌குழந்தையும்‌ அதன்‌ பூரண வளர்ச்சிக்கு அன்பு வேண்டும்‌, அனுதாபம்‌ வேண்டும்‌. அவற்றைவிட முக்கியமாகச்‌ சுயேச்சை வேண்டும்‌. பெற்றோருக்குக்‌ குழந்தையிடம்‌ இயல்பாகவே அன்‌பிருக்கன்றது. அந்த அன்பினால்‌ அவர்கள்‌ குழந்தையை நன்கு வளர்க்க ஆசைப்படுகின்றார்கள்‌. அது உலகத்தில்‌ தலைசிறந்து விளங்கவேண்டுமென்று திட்டங்கள்‌ வகுக்‌கிறார்கள்‌. ஆனால்‌ அவர்களுடைய ஆசையையும்‌ திட்டங்‌களையும்விட அவர்கள்‌ வாழும்‌ வாழ்க்கையமைப்பே குழந்தையின்‌ வளர்ச்சிக்கு மிக முக்கியமானது அவர்கள்‌ குழந்தையிடம்‌ நடந்துகொள்ளும்‌ வகையும்‌ மிக முக்கியமானது. ஏனெனில்‌ திட்டங்களையும்‌ விதிகளையும்‌ விட இவைதான்‌ குழக்தையின்‌ உள்ளத்திலே அதிகமாகப்‌ பதிகின்‌றன. வீட்டுவாசலிலே பிச்சைக்காரியைக்‌ கண்டதும்‌ பாட்டி. அவளை வாயில்‌ வந்தபடி வைகிறாள்‌. குழந்தை அதைக்‌ கவனித்துக்‌ கொண்டே. இருக்கிறது. அம்மாளுக்கு வேலைக்காரியின்மேல்‌ அதிருப்தி. அதனால்‌ என்ன என்‌னவோ பேசி விடுகிறாள்‌. குழந்தை பக்கத்தில்‌ நின்று அதையும்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறது. கணவனுக்கும்‌ மனைவிக்கும்‌ மனத்தாங்கல்‌ ஏற்பட்டுவிடுகிறது, பேச்சும்‌ வளர்ந்து விடுகிறது. தாங்கள்‌ நன்கு வளர்க்கவேண்‌டுமென்று திட்டம்‌ வகுத்த குழந்தை அருகில்‌ இருப்பதைக்‌ கூட அவர்கள்‌ பொருட்படுத்துவதில்லை. பிறகு குழந்தை தான்‌ கேட்டவற்றையே திருப்பிப் பேசினால்‌ அதன்மேல்‌ குற்றம்‌ கூறி என்ன செய்வது? அப்படியெல்லாம்‌ பேசாதே என்று அதட்டி அதன்‌ வாக்குச்‌ சுதந்‌திரத்தைப்‌ பறிமுதல்‌ செய்து என்ன பயன்பெற முடியும்‌? பெற்‌றோரும்‌ வீட்டில்‌ உள்ள மற்றவர்களுந்தானே அதற்கு உதாரணம்‌? அவர்களைப்‌ பார்த்துத்தானே குழந்தை பழக வேண்டும்‌?

இம்மாதிரி சந்தர்ப்பங்களில்‌ நமது கடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிரச்‌ சிறுவர்களை அவ்வாறு பேசக்‌ கூடாது என்று தடுப்பதால்‌ யாதொரு நன்மையுமில்லை. பெரியவர்களைப்போல நான்‌ ஏன்‌ பேசக்கூடாது என்ற ஐயமும்‌ குழப்பமுந்தான்‌ குழந்தை உள்ளத்தில்‌ ஏற்படும்‌.

குழந்தை பூமியிற்‌ பிறந்தவுடன்‌ அழுகிறது. இது உண்மையில்‌ அழுகையல்ல. காற்று சுவாசப்‌ பையில்‌ புகுந்து வெளிவருவதால்‌ ஆரம்ப காலத்தில்‌ உண்டாகும்‌ சப்தமே அமுகையாகக்‌ சருதப்படுகின்றது. பின்பு அழுகையே குழந்தைக்கு ஏற்படும்‌ பசி, தாகம்‌, வலி, துன்பம்‌ முதலிய உணர்ச்சிகளைத்‌ தெரிவிக்கும்‌ வாக்காக அமைந்து விடுகிறது. ஆகவே குழந்தை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்‌ வாக்குச்‌ சுதந்‌திரத்துடன்தான்‌ பிறக்கிறது. அதைக்‌ கட்டுப்படுத்த முயலாமலிருப்பது தான்‌ குழந்தையின்‌ மலர்ச்சிக்கு உதவி செய்ததாகும்‌. வாக்குச்‌ சுதந்திரத்தை இழிந்த முறையில்‌ கையாளாமல்‌ பார்த்துக்‌ கொள்வதற்கு நமது உதாரணமும்‌, நாம்‌ அமைத்‌துக்‌ கொடுக்கும்‌ சூழ்நிலையுமே சரியான வழிகளாகும்‌.

குழந்தையின்‌ உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு வேண்‌டிய சந்தர்ப்பமில்லாமல்‌ அவைகளை அடங்கிக்‌ கிடக்‌கும்படி செய்வதால்‌ மறை உள்ளத்திலே (Unconcious Mind) பல குழப்பங்கள்‌ ஏற்பட்டுப்‌ பிற்காலத்திலே அவை வெவ்வேறு துறைகளில்‌ விரும்பத்தகாத முறைகளில்‌ வெளியாவதற்குக்‌ காரணமாகின்றன. சிறுவர்களின்‌ வளர்ச்சியிலே அவர்கள்‌ உள்ளத்தில்‌ எழுந்து குமுறும்‌ உணர்ச்சிகளைத்‌ தாராளமாக யாராவது ஒருவரிடமாவது வெளியிடும்‌ சுதந்திரமும்‌ நம்பிக்கையும்‌ பெற்றிருக்க வேண்டும்‌. ௮ப்‌பொழுது அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளைக்‌ கூறவும்‌ அவர்கள்‌ உள்ளத்தைத்‌ திடப்படுத்தி உயரச்‌ செய்யவும்‌ வழி கடைக்கும்‌. சிறுவனுக்குத்‌ தன்‌ பேச்சிலேயே நம்பிக்கை குறைந்து பிறகு எதற்கெடுத்தாலும்‌ பிறருடைய திருத்தத்தையே எதிர்பார்க்க ஆரம்பிப்பான்‌. இது கடைசியில்‌ திக்கித்‌ திக்கிக்ப்‌ பேசும்‌ பழக்கமாய்‌ முடியும்‌.

ராமசாமி என்ற பள்ளிச்‌ சிறுவனுக்கு ஏழு வயதிருக்‌கும்‌, அவனை “அச்சமில்லை ௮ச்சமில்லை” என்ற பாரதியார்‌ பாட்டை யார்‌ பாடச்‌ சொல்லிக்‌ கேட்டாலும்‌ உற்சாகத்‌ தோடும்‌ அபிநயங்களோடும்‌ பாடுவான்‌. அவனுடைய அபிநயத்தை அபிவிருத்தி செய்ய விரும்பிய சிலர்‌ அவன்‌ பாடும்போது இடையிடையே தடை செய்து வந்ததால்‌ இப்பொழுது அவன்‌ திக்குவாயனாய்‌ விட்டான்‌. இரண்டு வார்த்தை சேர்த்துப்‌ பேசவும்‌ சிரமப்‌படுதிறான்.

வாக்குச்‌ சுதந்திரத்தின்‌ அவசியத்தையும்‌ பயனையும்‌ குழந்தைகளின்‌ கேள்விகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்‌. குழந்தை சதா கேள்வி கேட்கும்‌. ஒரு குழந்தையின்‌ கேள்விகளைப்‌ பாருங்கள்‌. உதாரணத்துக்காக அவற்றைச் சொல்லுகிறேன்‌. ரேடியோவில்‌ பேச்சுக்‌ குரல்‌ கேட்கிறது. குழந்தை  கேட்கிறது:
“அப்பா, யார்‌ பேசறது?”

“ரேடியோ அண்ணா பேசுகிறார்”

“எங்கே அவரைக்‌ காணோமே?”அவர்‌ சென்னையில்‌ இருக்‌கிறார்.

“இந்தப்‌ பெட்டிக்குள்ளா இருக்கிறார்‌?”

“இல்லை சென்னயிலே தூரத்திலேஇருக்கிறார்”

குழந்தைக்கு இது ஒன்றும்‌ விளங்கவில்லை. மறுபடியும்‌ கேட்‌கிறது.

“அங்‌கிருந்து பேசினா இங்கே எப்படிக்‌ கேட்‌கும்‌?”

இப்படிக்‌ கேள்விகள்‌ வளர்ந்து கொண்டே போகும்‌. சில கேள்விகளுக்குப்‌ பதில்‌ சொல்வது வெகு சிரமம்‌. சிலவற்றிற்கு நமக்கே பதில்‌ தெரியாது. அதனால்‌ கேள்வியே கேட்கக்‌ கூடாதென்று குழந்தையை அதட்டி. மிரட்டி அடக்கிவிடலாமா? கூடவே கூடாது. குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு அவை பெரிய சாதனம்‌. அதனால்‌ கேள்வி கேட்பதை நாம்‌ ஆதரிக்க வேண்டும்‌; கேள்விக்குச்‌ சுலபமான பதிலும்‌ பொறுமையோடு சொல்ல வேண்டும்‌. தெரியாதவற்றைத்‌ தெரிந்து சொல்ல வேண்டும்‌. குழந்தைக்கு விளங்கும்படி.யான பாஷையில்‌ பதில்‌ அமைய வேண்டும்‌. கேள்வி கேட்பதைத்‌ தடுத்தால்‌ குழந்தையின்‌ அறிவு வளராது, உள்ளம்‌ விரிவடையாது, ஆராய்ச்சி மனப்பான்மையும்‌ தேய்ந்து போகும்‌.

கதை கேட்பதிலே, பாட்டுக்‌ கேட்பதிலே சிறுவர்‌களுக்கு நிரம்ப ஆசை. அதைப்‌ போலவே கேட்டவற்‌றைத்‌ திருப்பிச்‌ சொல்வதிலும்‌ ஆசையுண்டு. வயதிற்‌கேற்ற கதைகளையும்‌ பாட்டுக்களையும்‌ சொன்னால்‌ அவற்றை அவர்கள்‌ உடனே பிடித்துக்கொள்வார்கள்‌.

கதைகளைத்‌ திருப்பிச்‌ சொல்வதாலும்‌ பாட்டுக்களைப் ‌பாடுவதாலும்‌ குழந்தையின்‌ வாக்கு வன்மை அதிகரிக்‌கின்றது. “நிலா நிலா வா! வா!, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!” என்பன போன்ற பாடல்களைக்‌ குழக்தைகள்‌ பாடி மகிழ்‌கின்றார்கள்‌. குழந்தைப்‌ பாடல்களும்‌, சுலபமான கதை தழுவிய பாடல்களும்‌, அபிநயப் பாடல்களும்‌, சிறு சிறு கதைகளும்‌ குழந்தைகளுக்கு நிறைய வேண்டும்‌.

இன்னும்‌ ஒரு முக்கிய விஷயம்‌. சிறுவர்களுக்குத்‌ தங்கள்‌ எண்ணங்களைத்‌ தாராளமாக வெளியிட உரிமை இருக்க வேண்டும்‌. குழந்தையின்‌ மழலையைக்‌ கேட்டுப்‌ பெரியவர்கள்‌ ஆனந்திக்கிறார்கள்‌. ஆனால்‌ ஏதாவது ஒரு விஷயத்தைப்‌ பற்றிச்‌ சிறுவன்‌ பேச வாயெடுத்தால்‌ அது அதிகப்‌ பிரசங்‌கித்தனம்‌ என்று கருதப்படுகிறது. சிறுவனுக்கு அதில்‌ பிரவேசிக்க அருகதையில்லையென்பது பொதுவான தீர்மானம்‌. பள்ளிகளிலும்‌ இந்தத்‌ தீர்மானந் தான்‌ வெகுவாக அரசு செலுத்துகின்றது. பேச்செல்லாம்‌ உபாத்தியாயாின்‌ ஏகபோக உரிமை. சிறுவன்‌ அதைக்‌ கேட்டுக்‌ கொண்டிருக்க வேண்டியதுதான்‌. அவனுக்கும்‌ தனது குழந்தை உள்ளத்தின்‌ உணர்ச்சியின்படி அபிப்‌பிராயம்‌ உண்டென்பதைச்‌ சாதாரணமாக அனைவரும்‌ மறந்துவிடுறோம்‌. அவன்‌ அதை எவ்வாறு நோக்குகிறான்‌, அவனுக்கு அவ்விஷயம்‌ பற்றிய எண்ணம்‌ யாது என்பனவற்றை நாம்‌ அறியுமாறு வெளியிட அவனுக்குச்‌ சந்தர்ப்பம்‌ அளிக்க வேண்டும்‌.

பேச்சுச்‌ சுதந்திரம்‌ கொடுத்தால்‌ சிறுவர்கள்‌ அடங்கியிருக்கமாட்டார்கள்‌ என்ற பய உணர்ச்சியே இன்று மேலோங்கி நிற்கின்றது. ஆனால்‌ அந்தப்‌ பயத்திற்கு ஆதாரமே இல்லை. புது முறையிலே நடைபெறும்‌ பள்ளிகளில்‌ சிறுவர்களுக்குத்‌ தம்‌ எண்ணங்களை வெளியிடும்‌ உரிமை கொடுக்கிறார்கள்‌. அதனால்‌ அவர்கள்‌ கட்டுப்‌பாட்டை மீறி நடப்பதாகக்‌ காணோம்‌.

சிறுவர்கள்‌ கூறுவதெல்லாம்‌ சரியாக இருக்குமென்று நான்‌ சொல்ல வரவில்லை. தவறுகள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ பேச்சுரிமை கொடுப்பதாலேயே நாம்‌ எளிதில்‌ அத்தவறுகளை அறிந்துகொள்ள முடியும்‌. பின்பு அவற்றைக்‌ களையவும்‌ வழி தேடலாம்‌. வாக்குச்‌ சுதந்திரமே இல்லாத இடத்‌தில்‌, வீட்டிலும்‌ சரி, பள்ளியிலும்‌ சரி, இந்தச்‌ சந்தர்ப்பம்‌ வாய்ப்பதரிது. சிறுவனும்‌ ஆழ்ந்து சிந்தித்து முடிவான எண்ணங்களை வெளியிடப்‌ பழகிக்கொள்ள இயலாது. பிற்காலத்தில்‌ அவனுக்கு வாழ்க்கையில்‌ இடைக்கவிருக்கும்‌ வாக்குச்‌ சுதந்திரத்தை அவன்‌ சரியானபடி உபயோகிக்க வேண்டுமானால்‌ சிறு வயது முதற்கொண்டே அதில்‌ பயிற்சி பெற வேண்டும்‌.

குறிப்பு: இந்தக் கட்டுரை பெ.தூரன் அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வாசிக்க இங்கே சுடக்கவும். அச்சில் : குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் வெளியீடு : இயல்வாகை, விலை: 75/- குழந்தை உளவியலும் மனித மனமும் (உளவியல் நூல்களின் தொகுப்பு), பெ. தூரன், சந்தியா பதிப்பகம். விலை: 250/-

Leave a comment