வளர விடுக! – பெ.தூரன்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பூங்குழந்தை உலகத்திற்கு, வரும்போது தன்னைத்‌ தானே காப்பாற்றிக் கொள்ளும்‌ சக்தியற்றதாக இருக்‌கிறது. மிருகங்களின்‌ குட்டிகளுக்கு உள்ள ஓரளவு சக்தி கூட இதற்கில்லை. மிருகங்களின்‌ குட்டிகள்‌ பிறந்தவுடன்‌ நடமாடுகின்றன. தாயிடம்‌ பாலருந்தத்‌ தாமே செல்லுகின்றன. ஆனால்‌ மனிதக்‌ குழந்தைக்கு இவை போன்ற திறமைகள்‌ கூட இல்லை.

குழந்தை இவ்வாறு சக்தியற்ற நிலைமையிலிருந்து வளர வேண்டும்‌. சூழ்நிலையை அனுசரித்து வாழக்‌ குழந்தை சிறிது சிறிதாகத்தான்‌ அறிந்து கொள்கின்றது. கண்‌ பார்வை, காது கேட்டல்‌ முதலிய புலனறிவுகளும்‌, உள்ளமும்‌ பிறந்தது முதல்‌ வேகமாக மலர ஆரம்‌பிக்கின்றன. உலகத்திலே தோன்‌றிய குழந்தையின்‌ முதல்‌வேலை உடலிலும்‌. உள்ளத்திலும்‌ வளர்ச்சியடைவது. ஆதலால்‌ இவ்விரு வகைப்பட்ட வளர்ச்சிக்கும்‌ ஏற்ற வசதிகள்‌ இருக்க வேண்டும்‌. உடலும்‌ உள்ளமும்‌ வளர நல்ல சத்துள்ள உணவு, தூய்மையான காற்று, சூரிய ஓளி, தாராளமான நடமாட்‌டம்‌, விளையாட்டு, போதுமான ஓய்வு, தூக்கம்‌ என்ற இவையெல்லாம்‌ அவசியம்‌. இவற்றோடு மற்றொன்றும்‌ மிக முக்கியமாகத்‌ தேவை. அதுதான்‌ அன்பும்‌ அனுதாபமும்‌ உள்ள அமைதியான சூழ்நிலை. இந்தச்‌ சூழ்நிலையில்லாமல்‌ முன்னால்‌ கூறிய மற்றதெல்லாம்‌ இருந்தாலும்‌ குழந்தையின்‌ வளர்ச்சி திருப்திகரமாக நடைபெறாது.

உணவின் முக்கியத்தைப் பற்றி இன்று அதிகம் வற்புறுத்திக் கூற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் இளமைப்‌ பருவத்தில்‌ எவ்வகையான உணவு கொடுக்கப்‌ படுகிறதோ அதைப்‌ பொறுத்துத்தான்‌ அநேகமாகப்‌ பிற்காலத்தில்‌ குழந்தை திடகாத்திரமாகவோ அல்லது பலகீனமாகவோ ஆகின்றது. ஆதலினாலே இவ்விஷயத்தில்‌ எவ்வளவு கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்பது நன்கு தெரிகிறது. உடல்‌ வளர்ச்சிக்கு வேண்டிய பலவகையான சத்துப்‌ பொருள்களும்‌ கலந்த ஆகாரம்‌ ஓவ்வொரு குழந்தைக்கும்‌ கிடைக்கவேண்டும்‌. எதிர்கால மனித சமூகத்தின்‌ பெயரால்‌ அதற்கு இந்த உரிமை இருக்கின்‌றது. குழந்தைப்‌ பருவத்திலே பால்‌ மிக இன்றியமையாத உணவு. அதைப்‌ போன்று உடல்‌ வளர்ச்சிக்கான பலவகைச்‌ சத்துக்களையும்‌ கொண்ட தனி ஆகாரம்‌ வேறொன்றுமில்லை.

தாய்ப்பாலில்‌ சத்துப்‌ பொருள்கள்‌ எல்லாம்‌ இருப்‌பதுடன்‌ குழந்தைக்கு நோய்‌ வராமல்‌ தடுக்கும்‌ சக்தியும்‌ ஓரளவிற்கு இருக்கின்றது. அதனால் தான்‌, குழந்தைக்கு ஆறு மாதமாகும்‌ வரை தாய்ப்பாலுக்குச்‌ சமானமான உணவு வேறில்லை என்று கூறப்படுகிறது. ஆறு மாதத்‌திற்குமேல்‌ பசும்பாலையும்‌, மற்ற லேசான உணவுகளையும்‌ சிறிது சிறிதாகக்‌ கொடுக்கலாம்‌. ஆனால்‌ ஒன்பது மாதம்‌ வரையிலும்‌ தாய்ப்பால்‌ ஓரு அளவிற்காவது கொடுப்பது அவசியம்‌. அதற்குமேல்‌ வேண்டுவதில்லை. குழந்தை வளர வளரக்‌ காய்‌ கறிகள்‌ பழங்கள்‌ அதன்‌ உணவில்‌ சேரவேண்டும்‌. ஆரஞ்சு, தக்காளி முதலிய பழங்‌களில்‌ நல்ல உணவுச்‌ சத்திருக்கின்றது. அம்மாதிரி ஏற்ற உணவுப்‌ பொருள்களை நாம் ஆராய்ந்து குழந்தைக்குக்‌கொடுக்க வேண்டும்‌. ஆரஞ்சு போன்ற பழங்கள்‌ விலை அதிகமாக இருப்பதால்‌ அவற்றிற்குப்‌ பதிலாகத்‌ தக்காளி போன்ற மலிவானவற்றை நாம்‌ தெரிந்து உபயோகிக்கலாம். உடல் அதன் பூரண வளர்ச்சியடையாமற் போவதற்கும், எலும்பு உறுதி பெரமளிலிருப்பதற்கும், பற்களின் வரிசை கெட்டுப்‌ போவதற்கும்‌. உணவிலுள்ள குறைகளே முக்கிய காரணம்‌ என்பதை நாம்‌ நன்கு ஞாபகத்தில்‌ வைத்‌துக்கொள்ள வேண்டும்‌.

நல்ல உணவைப்‌ போலவே சுத்தமான காற்றும்‌ அவசியம்‌. தாராளமாக ஓடியாடி. விளையாடுவதற்குச்‌ சூரிய ஒளி படும்‌ திறந்த வெளியும்‌: வேண்டும்‌. குழந்தையின்‌ வளர்ச்சி சரிவர நடைபெறுவதற்கு நல்ல காற்று வேண்டுமென்பதை முன்பே நாம்‌ அறிந்திருக்கிறோம்‌. சூரிய ஒளியும்‌ அதைப் போலவே அவசியமென்று இப்பொழுது வைத்தியர்‌கள்‌ கண்டு சொல்லுகிறார்கள்‌. எலும்புகளின்‌ வளர்ச்சிக்‌குச்‌ சுண்ணாம்புச்‌ சத்துக்‌ கலந்த உணவு மட்டும்‌ போதாது. சூரிய ஒளியும்‌ வேண்டுமாம்‌. சூரிய ஒளியானது உணவை உடம்பில்‌ சேர்ப்பதற்கும்‌ உதவி செய்கின்றது. திறந்த வெளியிலே சூரிய கிரணங்கள்‌ உடம்பிலே படும்படி ஓடியாடித்‌ திரிந்து நல்ல காற்றைச்‌ சுவாசிப்பது போலவே உடல்‌ வளர்ச்சிக்கு ஓய்வும்‌ தூக்கமும்‌ அவசியமாகும்‌. குழந்தை பிறந்த முதல்‌ ஆறேழு வாரங்கள்‌ வரை அதன்‌ வளர்ச்சி மிக வேகமாக நடக்கின்றது . அதனால்தான்‌ குழந்தை அந்தக்‌ காலத்தில்‌ தினமும்‌ இருபது மணி நேரத்‌திற்குமேல்‌ தூங்கிக்‌ கொண்டிருக்கிறது. பின்பு வரவரத்‌ தூங்கும்‌ நேரம்‌ குறைய ஆரம்பித்து ஆறாவது மாதத்தில்‌ சுமார்‌ 16, 17 மணியாக ஏகதேசமாக அமைகின்‌றது. மேற்கூறியவற்றை யெல்லாம்‌ நன்கு கவனிக்க மேல்‌ நாடுகளில்‌ பல வசதிகள்‌ ஏற்படுத்தியிருக்கிறார்கள்‌.

குழந்தையை அடிக்கடி பரிக்ஷித்துப்‌ பார்க்கவும்‌, அதற்கு அவசியமான உணவு முதலியவற்றைப்‌ பற்றிக்‌ கூறவும்‌ நிபுணர்களை ஆங்காங்கு நியமித்திருக்கிறார்கள்‌. ரஷியா போன்ற மேல்நாடுகளிலேயே குழந்தை கருவிலிருக்கும்போதே அதன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளைப் பெற சௌகரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் குழந்தைகளை வளர்ப்பதற்கென்றே ஸ்தாபனங்கள்‌ இருக்கின்‌றன. அவைகளில்‌ மேல்‌ மாடியிலே திறந்த வெளியிலே சூரிய ஓளி மிகுதியாகக்‌ கிடைக்காத காலத்தில்‌, செயற்கையாகப்‌ பல கரணங்களை உண்டாக்கி அவற்றில்‌ குழந்தைகளை இருக்கச்‌ செய்கிறார்கள்‌. நம் நாட்டிலே சூரிய ஓளிக்குப்‌ பஞ்சமே இல்லை. குழந்தைகளை வளர்க்க ஏற்ற ஆல சனைகளைக்‌ கூறும்‌ ஸ்தாபனங்கள்‌ தான்‌ குறை. நாடு முழுவதும்‌ மருத்துவச்‌ சாலைகளும்‌, குழந்தை வளர்ப்பு முறைகளை எடுத்துக்‌ கூறும்‌ ஸ்தாபனங்களும்‌ ஏற்பட்டால்‌ இன்று இந்காட்டிலே மிகப்‌ பெரியதாக இருக்கும்‌ குழந்தை மரணம்‌ என்ற பரிதாபகரமான நிலைமை மாறிவிடும்‌.

உணவு, உறக்கம்‌, உபாதைகளைக்‌ தீர்த்தல்‌ முதலியவற்றில்‌ ஒழுங்காகப்‌ பழக்கம்‌ ஏற்பட்டுவிட்டால்‌ அது வளர்ச்சிக்குப்‌ பெரிதும்‌ உதவியாக இருக்கும்‌. குறிப்பிட்ட காலத்தில்‌ தூங்கி ஓய்வுபெறச்‌ செய்தல்‌, இயற்கை உபாதைகளைத்‌ தீர்த்துக்‌ கொள்ளுதல்‌ என்பவை நல்ல பழக்கங்கள்‌. இப்பழக்கங்கள்‌ பிடிபட்டு விட்டால்‌ பல நன்மைகள்‌ உண்டு. ஆகையால்‌ இவற்றை உண்டு பண்ணுவதில்‌ பெற்றோர்கள்‌ சிரத்தையெடுத்துக்கொள்ள வேண்டும்‌. இந்தச்‌ சந்தர்ப்பத்தில்‌ ஒரு விஷயத்தினைப்‌ பற்‌றி எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்‌. சில பெற்றோர்கள்‌ தங்கள்‌ செளகரியத்திற்கென்றே இப்படிப்பட்ட பழக்கங்களை உண்டாக்குகிறார்கள்‌. குறிப்பிட்ட காலத்தில்‌ உணவை ஓர்‌ அளவோடு கொடுப்பதையோ, மலஜல உபாதைகளைப்‌ போக்குவதையோ ஒரு பிடிவாதமாக வைத்துக்கொண்டு அவற்றிற்கெனக்‌ குறிப்பிட்ட காலக்‌கிரமத்தையே கவனிப்பது சரியல்ல. காலக்கிரமமும்‌, பழக்கமும்‌ குழந்தையின்‌ வளர்ச்சிக்கு உதவுவதற்காகவே ஓழிய, மணியாகிவிட்டது உணவு உட்கொண்டே தீரவேண்டும்‌அதுவும்‌ இவ்வளவு பாலையோ வேறு உணவையோ சாப்பிட்டே ஆகவேண்டும்‌ என்று கட்டாயப்படுத்த அல்ல.

குழந்தையை அப்படி. முற்றிலும்‌ ஓரு கால நியதிக்கு அடிமையாக்கிவிடக்கூடாது. இன்று வயிறு ஒரு மாதிரியாக. இருந்தால்‌ அதற்கேற்றவாறு காலத்தையோ, உணவின்‌ அளவையோ மாற்றத்தான்‌ வேண்டும்‌. இம்‌ மாதிரி சந்தர்ப்பங்களில்‌ கால அட்டவணையை விடத்‌தாயின்‌ இயல்புணர்ச்சியே தகுந்த வழிகாட்டியாகும்‌. பொதுவாக மேலே சொன்ன பழக்கங்களை இளமையிலேயே உண்டாக்குதல்‌ நல்லதென்பதை மனத்தில்‌ வைத்துக்கொண்டு குழந்தையின்‌ உடல்‌ நிலை மன நிலைகளையும்‌ அனுசரித்து நடக்கவேண்டும்‌.

இனி உள்ள வளர்ச்சியைப்‌ பற்றிச்‌ சிறிது கவனிப்‌போம்‌. உடல்‌ வளர்ச்சியையும்‌, உள்ள வளர்ச்சியையும்‌ தனித்தனி சம்பந்தமில்லாதவையாகக்‌ கருதக்கூடாது. இரண்டிற்கும்‌ சம்பந்தமிருக்கிறது. உடல்நிலை உள்ளத்‌தையும்‌, உள்ள நிலைமை உடலையும்‌ பாதிக்கின்றன. ஆனால்‌ செளகரியத்திற்காக உள்ளத்தைத்‌ தனியாகப்‌ பிரித்து கோக்கும்போது, அதன்‌ வளர்ச்சியைச்‌ சில விஷயங்கள்‌ முக்கியமாகப்‌ பாதிக்கின்றன என்பது தெரிகின்றது. பெற்றோர்களின்‌ வாழ்க்கைக்கும்‌ குழந்தையின்‌ உள்ள வளர்ச்சிக்கும்‌ நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. வீடு குழந்தையின்‌ உலகம்‌. அங்குதான்‌ அது வாழ்க்‌கைக்கு வேண்டிய பாடங்களை முதலில்‌ கற்றுக்‌ கொள்‌கிறது; அதன்‌ உடலும்‌ உள்ளமும்‌ வளர்ச்சியடைகின்‌றன; அதன்‌ உணர்ச்சி, தன்மையெல்லாம்‌ மலர்கின்றன. ஆதலால்‌ குழந்தையின்‌ பூரண வளர்ச்சிக்கு வீடு ஆதி காரணமாகின்றது. அதாவது பெற்றோரையும்‌, அவர்‌களுடைய வாழ்க்கையையுமே குழந்தையின்‌ வளர்ச்சி முக்கியமான அடிப்படையாக கொண்டிருக்கின்றது.

பெற்றோர் தமது வாழ்க்கையையும் குழந்தையிடம் நடந்து கொள்ளும் வகையையும் சரியானபடி அமைத்துக் கொள்வது அவசியமாகும். குழந்தையிடம்‌ பெற்றோர்கள்‌ அன்பு செலுத்துகிறார்‌கள்‌. குழந்தையின்‌ வளர்ச்சிக்கு அன்பு பிரதானம்‌ என்‌றாலும்‌ அதிலும்‌ ஒரு வரையறை இருக்க வேண்டும்‌. கண்‌மூடித்தனமாகக்‌ காண்பிக்கும்‌ அதிக அன்பினாலும்‌, பாது காப்பினாலும்‌ குழக்தையின்‌ சுய நம்பிக்கை, சுய முயற்சி முதலிய தன்மைகள்‌ வளராமல்‌ போன்‌கின்றன; குழந்தை வயது வந்த காலத்திலும்‌ எதற்கும்‌ பிறரை எதிர்பார்த்து நிற்கவே முயல்கின்றது; உலகத்தில்‌ எல்லோரும்‌ பெற்றோரைப்போல அன்போடும்‌ ஆதரவோடும்‌ இருப்பார்களென எண்ணி ஏமாற்றமடைகின்றது.

அதே சமயத்தில்‌ அன்பு குறைவாக உள்ள இடத்‌திலும்‌ குழந்தையின்‌ வளர்ச்சி பாதிக்கப்படுகின்‌றது. சில பெற்றோர்களுக்கு இயல்பாக அன்பிருந்தாலும்‌ அதைக்‌ குழந்தைக்கு ஓரளவுகூடக்‌ காண்பிக்கக்கூடாது என்று எண்ணிக்‌ குழந்தையிடம்‌ கண்டிப்பாக நடந்து கொள்வார்‌கள்‌. அப்படி நடப்பதுதான்‌ குழந்தையைச்‌ சரியான முறையில்‌ வளர்ப்பதாகும்‌ என்பது அவர்கள்‌ நினைப்பு. மேலும்‌ வாழ்க்கையில்‌ குழந்தை சிறந்து விளங்கவேண்டும்‌ என்ற ஆசையால்‌ அதனிடம்‌ காணப்படும்‌ குறைகளையே எடுத்துக்‌ காட்டுவதும்‌, மற்ற குழந்தைகளோடு ஓப்பு நோக்க அதைத்‌ தாழ்த்‌திப்‌ பேசுவதும்‌, குற்றத்திற்காகக்‌கடுமையான தண்டனை விதிப்பதும்‌ ஒரு சிலருடைய பழக்கமாக இருக்கின்றன. இவையெல்லாம்‌ குழந்தைக்குப்‌ பாதகமாகவே முடியும்‌. ஆதலால்‌ பெற்றோர்கள்‌ தமது நடத்தையை நன்கு ஆராய்ந்து, குழந்தையிடம்‌ அளவாக அன்பு செலுத்த முயல வேண்டும்‌. குழந்தை எதற்கெடுத்தாலும்‌ தம்மையே

எதிர்பார்த்திருப்பதைக்‌ கண்டு பெற்றோருக்குத்‌ தம்மை யறியாமலே ஒரு திருப்தி ஏற்படுவதுண்டு. அதைப்‌போக்கிக்‌ கொண்டு குழந்தை தானாகவே தனக்கு வேண்டிய சிறு சிறு காரியங்களைச்‌ செய்துகொள்ள உற்சாகமளிக்க வேண்டும்‌. அப்படிச்‌ செய்தால்தான்‌ குழந்தை தன்னம்‌பிக்கை பெற்று வாழ்க்கையில்‌ வெற்றிபெற முடியும்‌. சில பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தை விரைவில்‌ ஏதாவது ஒரு துறையில்‌ மிகச்‌ சிறந்து விளங்கவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்‌. அந்த ஆசையால்‌ அவர்கள்‌ குழந்தையை அதன்‌ இயல்புக்கும்‌, சக்திக்கும்‌, உள்ள வளர்ச்சிக்கும்‌ அப்பாற்பட்ட காரியங்களைச்‌ செய்யத்‌ தூண்டுகிறார்கள்‌. அப்படிச்‌ செய்ய முயன்று குழந்தை தளர்ச்சியடைகின்றது. தனது முயற்சி கைகூடாமற்‌ போவதால்‌ தாழ்மை உணர்ச்சியும்‌ பெறுகின்‌றது. அதனால்‌ பீற்காலத்தில்கூட அக்காரியத்தில்‌ வெற்றி பெறாமல்‌ போக நேரிடும்‌.

இன்னும்‌ சில பெற்றோர்கள்‌ தங்களுக்குப்‌ பிடித்தமான ஓரு துறையில்‌ குழந்தை சிறப்படைய வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்‌. குழந்தையின்‌ இயல்பாக திறமையை அவர்கள்‌ கவணீப்பதில்லை. உதாரணமாக ஒரு சிறுவனுக்கு வைத்தியத்‌ துறையில்‌ இயல்பாகவே திறமை இருக்கலாம்‌. அத்துறையில்‌ முன்னேற்றமடைய அவனுக்கு ஊக்கமனித்தால்‌ அவன் அதில்‌ சிறந்து விளங்குவான்‌. அப்படிச்‌ செய்யாமல்‌ அவனை ஓரு மூதல்தர சங்கீதவித்வானாக்க வேண்டுமென்று விரும்பினால். அதில்‌ வெற்றி கிடைக்காமல்‌ போவதோடு, அவனுக்கு இயல்பாயமைத் துள்ள திறமையை விரிவடையர்‌ செய்வதற்கும்‌ சந்தர்ப்ப மில்லாமற்‌ போய்விடும்‌. ஆதலின்‌ இவற்றையெல்லாம்‌ நன்கு கவனித்துச்‌ சிறுவர்களை அவர்களுடைய இயல்பின்‌ படி வளர நாம் உதவ வேண்டும்‌. பொதுவாகத்‌ தொகுத்துக்‌ கூறுமிடத்து சிறுவர்கள்‌ தங்களுடைய திறமைகளெல்லாம்‌ பூரண மலர்ச்சிபெற்று வளர்வதற்கு அன்பும்‌ ஆதரவும்‌ முக்கியம்‌. இந்த அன்பும்‌ ஆதரவும்‌ எல்லை கடந்திருக்குமானால்‌ அவையே குழந்தையின்‌ வளர்ச்சிக்குப்‌ பாதகமாகின்‌றன. அப்படிப்‌ போகாமல்‌குழந்தைகளுக்குத்‌ தமதிஷ்டம்போல நடமாடவும்‌, எண்ணவும்‌, எண்ணங்களை வெளியிடவும்‌ சுதந்‌திரமிருக்க வேண்டும்‌.

பெற்றோர்கள்‌ தங்கள்‌ வாழ்க்கையை நல்ல முறையில்‌ அமைத்துக்‌ கொண்டால்‌ அதுவே குழந்தைக்குச்‌ சிறந்த எடுத்துக்காட்டாஒி விடுகிறது. அப்போது குழந்தையின்‌ சுயேச்சையைக்‌ கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும்‌ அநேகமாக ஏற்படாது.

குறிப்பு: இந்தக் கட்டுரை பெ.தூரன் அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வாசிக்க இங்கே சுடக்கவும். அச்சில் : குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் வெளியீடு : இயல்வாகை, விலை: 75/- குழந்தை உளவியலும் மனித மனமும் (உளவியல் நூல்களின் தொகுப்பு), பெ. தூரன், சந்தியா பதிப்பகம். விலை: 250/-

Leave a comment