பஞ்சு மிட்டாய்க்கு நாம் செய்ய வேண்டியவை – சம்பத் குமார்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஒரு சனிக்கிழமை தினத்தின் மதிய வேளையில் மழலையர் பள்ளியின் பெரிய நுழைவாயிலின் முன்பு அமைதியாக காத்திருக்கின்றனர் சில பெற்றோர்கள். சில நிமிட காத்திருப்புக்குப் பின் அடைபட்ட கதவு திறக்கப்பட வெளியேறுகின்றனர் மழலையர் பள்ளியின் முதலாமாண்டு மாணவர்களாகிய சிறு குழந்தைகள். பள்ளி தொடங்கி இரண்டு பருவங்கள் கடந்தும் இன்னும் சரியாக எழுதவரவில்லை என்கிற காரணத்திற்காக சிறப்பு பயிற்சிவகுப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் இக்குழந்தைகள். விடுமுறை தினத்தில்கூட சமர்த்தாக பள்ளிக்கு சென்று திரும்பும் தன்பிள்ளைகளை உச்சிமுகர்ந்து பூரிப்புடன் அழைத்துச் செல்கின்றனர் பெற்றோர்கள். திரும்பும் வழியில் உள்ள சறுக்குப்பலகையிலோ அங்கு குவிந்திருக்கும் மணற்பரப்பிலோ சில நிமிடங்கள் விளையாட விரும்பிய குழந்தையை ஏதேதோ காரணங்களை கூறியும் அவசியமின்றி அங்கு நிற்பதால் தனக்கு ஏற்படும் நேரவிரயத்தை முகத்தில் காட்டியபடியும் அவசர அவசரமாய் அழைத்துச் செல்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர்கள்.

மேலே விவரிக்கப்பட்ட காட்சிகளைனைத்தும் ஏதோ கற்பனைக்காக எழுதப்பட்டதன்று. கல்விக்கென புதிய புதிய கருத்துருக்கள் தினந்தோறும் எழுதப்படும் வேளையில் சிறிய நகரமொன்றின் பள்ளியில் சாதாரணமாக நடந்தேறிய காட்சிதான். விடுமுறை நாளிலும்கூட குழந்தை பயனுள்ள வகையில் செயல்பட கற்றுக் கொள்வதாக பெரியவர்கள் உணரும் இச்செயலை வாரமெல்லாம் இரண்டுநாள் விடுமுறைக்காக ஏங்கித் தவிக்கும் குழந்தைகள் என்னவாக உணர்வார்கள்? கல்வியின் பொருட்டு குழந்தைகளின் குறைந்தபட்ச விடுமுறைப் பொழுதையும் தட்டிப் பறிக்கும் இத்தகைய போக்குகளை பெரியவர்களுக்கான மனதோடு செயல்படும் எவரும் உணர்வதாகவே தெரியவில்லை.

குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாக உள்ள பெற்றோர்களும் கல்விக்கூட அமைப்புகளுமே குழந்தைகளின் உணர்வுகள் குறித்து அறியாமையில் இருந்துவரும் வேளையில் குழந்தைநல செயல்பாட்டாளர்களும், ஆர்வலர்களும் செய்துவரும் மாற்று செயல்பாடுகள் ஆங்காங்கே சிறியளவிலேனும் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. குழந்தைகளின் சூழலை மேம்படுத்தும் இத்தகையவர்களின் செயலுக்கு வலுவான ஆயுதமாக உதவுவது சிறார் இதழ்களே. அவ்வகையில் பஞ்சுமிட்டாய் எனும் சிறுவர் இதழின் நான்காமாண்டுக் கொண்டாட்டம் பெரும் நம்பிக்கையை நமக்குத் தருவதாக உள்ளது. இணையத்தில் தொடங்கிஅச்சு இதழாக வளர்ந்து நான்கு ஆண்டுகளை கடந்திருக்கும் பஞ்சு மிட்டாயின் செயல்பாடுகள் குழந்தைகளின் இயல்பான போக்கோடு மிகச்சரியாக பொருந்திப் போவதே அதற்கான  காரணமாகும்.

குழந்தைகளிடம் இயல்பாக வளரும் மொழிசார் கற்றலையும், கற்பனையின் வழியிலான படைப்பாற்றலையும் , விளையாட்டின் வழி அவர்களடையும் கூட்டு சமூக வாழ்க்கையையும் வேலைவாய்ப்புக்கான குறுக்குவழியாக உணரப்படும் கல்விமுறை திசைமாற்றமடையச் செய்கிறது. இயந்திரதனமான எழுத்துபணிகளும், பொருளற்ற வாசிப்பு பயிற்சியும் அவர்களின் சிந்தனைத்திறனை சோர்வடையச் செய்கிறது. ஆகவே அவர்கள் தப்பிக்க வழியில்லாத பாதையை மன அழுத்தத்திலேயே கடக்க வேண்டியதாகிவிடுகிறது. குழந்தைகளின் உணர்வுகளை நன்குணர்ந்து செயல்படும் பஞ்சு மிட்டாய் ஆசிரியர் குழு தனது இதழுக்கென தேர்வு செய்யும் அனைத்து படைப்புகளுமே குழந்தைகளின் விருப்பங்களை நிறைவுசெய்வதாக அமைகிறது. இதழின் வடிவமைப்பு, இடம்பெறும் ஓவியங்கள் என அனைத்துமே இவ்விதழை தனக்கானது என குழந்தைகள் உணரும்படியாக அமைகிறது.

கதைகளில் நீதிக்கருத்து அவசியமற்றது என பஞ்சு மிட்டாய் கருதினாலும் கூட குழந்தைகள் அறம் சார்ந்த வாழ்வையே விரும்புகிறார்கள் என்பதை அவர்களின் படைப்புகளின் வழியாகவே பஞ்சு மிட்டாய் இதழ் நமக்கு உணர்த்துகிறது. நாய், நாயின் மகிழ்ச்சி, பிசாசு போன்றவை அப்படியானதாகவே அமைகிறது.

அறிவியல் பக்கம், புதிர் விளையாட்டு போன்றன கல்வியை அவர்களாகவே கற்றுக் கொள்ளும் இடத்திற்கு நகர்த்திச் செல்கிறது. எனது மகனுக்கு ஆரம்பத்தில் பிடித்தமான பகுதியாகவும் தானே செய்ய முற்பட்டதும் புதிர் விளையாட்டு பகுதியே. அதுபோலவே பஞ்சு மிட்டாய் இதழே அவனாகவே வாசிக்கத் துவங்கிய இதழும் ஆகும். குடுகுடு ராசா விளையாட்டு எனது குழந்தைகளுக்கானது என்றால் எலி பூனை விளையாட்டு எனது பள்ளி குழந்தைகளுக்கானது. அவ்வளவு மகிழ்ச்சியாக தங்களை மீட்டுக் கொள்ள இவ்விளையாட்டு அவர்களுக்கு உதவியது. நீள்கதைகள், பாடல்கள், சுட்டி கேள்விகள் என பாராட்டிப் பேச இன்னும் எவ்வளவோ உள்ளன.

இதழின் பணி கடந்து பஞ்சு மிட்டாய் இணையத்தில் வெளியாகும் கட்டுரைகள் கல்வி குறித்தும், குழந்தைகள் குறித்தும் பல்வேறு வகைகளில் சிந்திக்க உதவுகிறது. புதிய கல்விக் கொள்கை வெளியான போதும், பாட புத்தக மாற்றங்களின் போதும் பஞ்சு மிட்டாய் இணையதளம் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் நாம் எப்போதும் நினைவுகூறத் தக்கது. இப்படி எல்லா வகையிலும் சிறப்புற செயல்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்சு மிட்டாய் இதழுக்கு நாம் பாராட்டுகளைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இவ்விதழையும் இதழின் கனவுகளையும் ஒவ்வொரு குழந்தைகளின் இல்லங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பெரும் பொறுப்பு நம்மனைவருக்கும் உண்டு என்பது மட்டுமே இந்நேரத்தில் நம் நினைவில் நிறுத்த வேண்டியது. அவ்வகையில் சந்தா வளர்ச்சி, சிறார் நிகழ்வு ஒருங்கினைப்பு என எவ்வகையிலாவது என்னை இணைத்துக் கொண்டு செயல்பட முயல்வேன்.

சிறப்பான ஆசிரியர் குழுவிற்கு எனது அன்பும் வாழ்த்துகளும். நன்றி.

Leave a comment