பஞ்சு மிட்டாய் நான்கு வருடங்கள் (பஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்து) – ராஜேஸ்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சில சமயங்களில் வாழ்வில் கடினமான விசயங்களை எல்லாம் மிக எளிமையான விசயங்கள் என்று நம்பிக் விடுகிறோம். ஒரு தனிப்பட்ட அனுபவம் ஏற்பட்ட பின்பு தான் நம் பார்வை மாறுகிறது. அப்படி நான் மிகவும் எளிமையான விசயமாக நினைத்துக் கொண்டிருந்தது குழந்தைகளுக்கு கதை சொல்வது.

என் மகனுக்கு கதை சொல்ல ஆரம்பித்த பொழுது அது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாகவே இருந்தது. இன்றைய நகர்ப்புற வாழ்வின் சிக்கல்களில், குடும்பத்துடன் நேரத்தை கழிப்பது என்பது சவாலாக இருக்கிறது. கதைகள் மகனுடன் உரையாடுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கி தருவதை கண்டுபிடித்தேன். அப்படித்தான் இரவுகளில், பயணங்களில், விடுமுறைகளில் கதை சொல்ல ஆரம்பித்தேன். அம்புலி மாமா, கோகுலம், துளிர், சிறுவர் மலர், ராணி காமிஸ் என நான் சிறுவயதில் படித்து என் மனதில் ஆழ பதிந்த கதைகளை சொல்லி கொண்டிருதேன். மெல்ல மெல்ல, தெரிந்த கதைகள் எல்லாமே சொல்லி முடிந்த பிறகு கதை வறட்சி ஏற்பட்டது. இந்த மாதிரியான காலகட்டத்தில்தான் நாவல்களை சொல்ல ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன், மலைக்கள்ளன், பிறகு சாண்டில்யனின் சில சில நாவல்கள், புதியதாக வேள்பாரி இப்படியாக போய்க் கொண்டிருந்தது ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நாவல்களும் தீர்த்து போயின.

இதே காலக்கட்டத்தில்தான் பஞ்சுமிட்டாய் குழு கதை சொல்லல் நிகழ்வுகளில் சேர்ந்துக் கொண்டேன். வீட்டில் மகனுக்கு சொன்ன அதே பழைய கதைகளை மறுபடியும் அங்கு சொன்னதுண்டு. சில நிகழ்வுகளுக்கு பிறகு சொந்தமாக கதைகளை உருவாக்கி செல்லும் மனநிலை தானாக ஏற்பட்டது. அப்பொழுது எனது கதைகளை கவனித்து கொண்டிருந்த பிரபு கேட்டார் “ஏன் எல்லா கதைகளும் ஒரு நீதி போதனையில் சென்று முடிகிறது” என்று. அப்போதுதான் நானும் அதை கவனித்தேன். கவிதைகளை எழுதிப் பழக்கம் இருக்கிறது எனக்கு. ஒவ்வொரு கவிதையும் தனக்கான அர்த்தத்தை அவரவர் மனதில் அவரவருடைய வாழ்வில் இருந்து எழுதிக் கொள்கிறது என்பதை நம்புபவன் நான். அதுவே குழந்தை கதைகளுக்கும் பொருந்துவதை கண்டு கொண்டேன். எனது கதையின் உள்ளடக்கமும் கருத்தும் வளர் சிதை மாற்றம் அடைந்து கொண்டிருந்த அதே வேளையில், நிகழ்வுகளிற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த குழந்தைகளிடமும்(என் மகன் உட்பட) நேர்மறை மாற்றங்கள் தென்பட்டன. அவர்களின் மேடை கூச்சம் அகன்று, கற்பனைத் திறனும், கதை சொல்லும் பாங்கும் முன்னேற்றமடைவதை கண்டேன்.

பிரபு, கதைகளுடன் விளையாட்டுகளையும் பாடல்களையும் நிகழ்வுகளில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். கணீர் குரலுடன், சந்தத்துடன் இனிமையான தமிழ் பாடல்களை தேசிங்கு ஐயா நிகழ்வுகளில் பாடுகையில் குழந்தைகள் மிகவும் ரசித்தனர். குழந்தைகைளின் ஆர்வம் என்னை பாடல்கள் எழுத தூண்டியது. அவற்றை நிகழ்வுகளில் பாட ஆரம்பித்த பொழுது பாடல்களிளும் குழந்தை கதைகளிற்கு குறைவில்லாத சிக்கல்கள் இருப்பதை கண்டு கொண்டேன். பாடல்கள் குழந்தைகள் எளிதாக செய்கைகளுடன் திரும்பிப் பாடும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு புரியும் வகையிலும் இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தும் சிதறக் கூடாது. எழுதி முடித்த பாடல் பாதி நிரம்பிய கோப்பை போல. குழந்தைகளின் முன் பாடும் பொழுது தான் அந்த கோப்பை நிரம்புகிறது. எந்தெந்த வார்த்தைகள் குழந்தைகளுக்கு பாட கடினமாக இருக்கின்றன, எந்த பகுதிகளை அவர்கள் ரசிக்கிறார்கள், எந்த வார்த்தைகள் செய்கையுடன் ஆட வசதியாயிருக்கிறது… இவற்றை எல்லாம் நிகழ்ச்சியில் கண்டுகொண்டு பாடலை செப்பனிட்ட பிறகே அது முழுமை அடைகிறது.

ஒரு பாடோலோ கதையோ குழந்தைகளின் உலகில் எதை பேசலாம் எப்படி பேசலாம் என்பதை அணுகுவதில் பிரபுவின் சிந்தனை திறன் அலாதியானது. பஞ்சுமிட்டாய் குழுவில் பிரபு, அருண், ஜெயக்குமார் மற்றும் அனைவரும் இத்தகைய விஷயங்களை விவாதிப்பதும் தொடர்ந்து புத்தகங்களை பற்றி பேசுவதும் உண்டு. இவ்வாறான விவாத களத்தில் விளைந்த என் பாடல்களின் பேசுபொருள் தற்கால விசயங்களை எடுத்தாள்வதில் எந்த ஆச்சர்யமுமில்லை. பாடல்களில் அம்மா இட்லி வைக்கும் போது அப்பா பேப்பர் படிக்காமல் சமையலில் உதவி செய்கிறார், அம்மாவின் ஜீன்ஸ் பேண்ட்டும் பட்டுப் புடவையும் கட்டி புரண்டு சண்டை போடுகிறது. ஒரு ஆண் குழந்தை பிங்க் நிற பொம்மை பிடித்தம் என்கிறது.

இவ்வாறு பாடல்களும் கதைகளும் விளையாட்டுகளும் என கொண்டாட்டமாய் செல்லும் பஞ்சுமிட்டாயின் இந்த நான்கு வருட பயணம் பல குழந்தைகளிடமும் மனிதர்களிடமும் நிகழ்த்திய ரசாயன மாற்றங்கள் ஏராளம். ஒரு குழந்தையின் முன் சொல்லப்படும் சொல்லும் நடத்தப்படும் செயலும் ஆழமான மாற்றங்களை உருவாக்க வல்லது. ஒரு விதையை போன்றது அது. ஒரு பெரு மரத்திற்கான சாத்தியங்கள் அதில் உள்ளது. குழந்தைகளின் உலகத்தில் இயங்குபவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டுய கூடுதல் பொறுப்பு உள்ளது. ஒரு கயிற்றின் மேல் நடப்பவரின் கவனம் தேவைப்படுகிறது. கவனம் குழந்தைகள் மேலானது என்பதால் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவைப்படுகிறது. பஞ்சுமிட்டாய் தனித்து நிற்பது இங்கு தான். இந்த கவனத்தை குழுவிலிருந்து வெளி வரும் பாடல்கள், கதைகள், விளையாட்டுக்கள், புத்தகங்கள் என்று எங்கும் பார்க்கலாம். இவற்றை நீங்களும் உணர வேண்டுமெனில் பஞ்சுமிட்டாயுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் . வாருங்கள் பயணிக்கலாம்.

1 Comment

  • செ.ரமேஷ்குமார். says:

    தங்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கது.
    குழந்தைகளோடு பயணிப்பது ஒரு வரம்.
    வாழ்த்துகள்.

Leave a comment