ஆதிதிராவிடப் பள்ளியில் ஆண்டு விழா – நெ.து.சுந்தரவடிவேலு (கல்வி வரலாறு தொடர் – 3)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி : நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஓர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர்.
“கும்பிடுகிறேன் எசமான்” என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான் நடந்தபடியே கையெடுத்து வணங்கினேன், அவரைப் பார்த்து

“நீர் யார்?” என்று வினவினேன்.

“எசமான், நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்” என்று விடையளித்தார்

“சரி, என்னோடு வாரும். அறைக்குச் சென்றபின் பேசிக்கொள்ளலாம்” என்று ஆணையிட்டபின், நிக்கல்சன் வங்கியின் மாடிக்குச் சென்றேன்.

உடன் வந்த ஆசிரியர், மாடிப்படியண்டை வந்ததும்,

“அய்யா! நான் ஆதிதிராவிடக் கிறுத்தவன்; அய்யா அறைக்குள் வருவது சரியாக இராது. இங்கிருந்தபடியே எசமானிடம் ஒரு சொல் சொல்லிவிட்டுப் போகட்டுங்களா?” என்றார்.

“வழியில் நின்று பேச முடியாது. மேலே போன பிறகுதான் பேசுவேன். நீர் என் பின்னால் வாரும்” என்று சொல்லிவிட்டுப் படியேறினேன்.

என் அறையைத் திறந்து மின்விளக்கைப் போட்டேன். அப்போதும் ஆசிரியர் அறைக்குள் வரத் தயக்கங்காட்டினார்.

நான், கண்டிப்பாகக் கூறியபின், அவர் உள்ளே நுழைந்தார்.

பிறகு, ”நீர் எந்தப் பள்ளியில் வேலை செய்கிறீர்? எதற்காக என்னைத் தேடி வந்தீர்?” என்று கேட்டேன்.

“நான் ஆதிதிராவிட நலப்பள்ளி. ஒன்றில் தொடக்கநிலை தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறேன். பெயர் முத்துசவரி. புதிய எசமான் வந்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். தாங்கள், பெரியார் வழியைப்  பின்பற்றுபவர் என்றும் சொன்னார்கள். தாழ்த்தப்பட்ட எங்களுக்குப் பெரியாரே காவல்; கண்கண்ட தெய்வம். அந்த வழியில் செயல்படும் புதிய ஆய்வாளர் அய்யாவைக் கண்டுவிட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான்” என்று விளக்கம் சொன்னார்.

“எந்த ஊர்ப் பள்ளியில். வேலை செய்கிறீரென்று சொல்ல வில்லையே” என்று அவரை மடக்கினேன்.

“மேலப்புனவாசல் குடியிருப்பில் உள்ள நலப்பள்ளியின் தலைமையாசிரியர் நான்” என்று பதில் கூறினார்.

“அப்படியா? உங்கள் பள்ளியில் போதிய மாணாக்கர் வருகை இல்லை; அதனால் இரண்டாவது ஆசிரியர் தேவையில்லை. அப்பதவியை எடுத்துவிடலாமென்று உங்களுக்கு அறிவிப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறதா” என்று குறுக்குக் கேள்வி கேட்டேன்.

“வந்ததும் வராததுமாக அய்யா இதைக்கூடத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே!” என்று வியப்போடு கூறினார்.

“அதுதான் என் வேலை. அது கிடக்கட்டும். இரண்டாவது ஆசிரியரும் தொடர்ந்து வேலை செய்கிற வகையில், வருகையை அதிகப்படுத்தக் கூடாதா? ” இது, நான் விடுத்த அறைகூவல்.

“அதைப் பற்றிப் பேசலாம் என்றே துணிந்து வந்தேன். அய்யாவே அந்தப் பேச்சை எடுத்துவிட்டீர்கள். பெரியார் தொண்டர் ஒருவர் ஆய்வாளராக வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் ஒரு எண்ணம் உதித்தது. அய்யா கோபித்துக்கொள்ளாமல் இருந்தால் சொல்லுகிறேன்” என்று பணிவான குரலில் கூறினார்.

“சும்மா சொல்லும்” என்றேன்”.

“என் பள்ளி தங்கள் தணிக்கைக்கு உட்பட்டது. தங்களையும் தங்கள் மேலதிகாரி, ஆய்வாளர் அய்யாவையும் எங்கள் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போய், பெற்றோர் கூட்டமும்: பள்ளிக்கூட ஆண்டுவிழாவும் சேர்த்து நடத்தலாம்” என்று தோன்றிற்று.

“பெரிய ஆய்வாளரும் தங்கமானவர். நீங்கள் இருவரும் வந்து பேசினாலாவது எங்கள் மக்களுக்குக் கண் திறக்கக்கூடும்.”

“நான் வரவேண்டியது கடமை. பெரிய ஆய்வாளர் திரு டி.எஸ்.கல்யாணகந்தரம் (பிள்ளை) கூட உங்கள் முன்னேற்றத்தில் நாட்டமுள்ளவர். அதனால் அவரையும் எப்படியாவது அழைத்துக் கொண்டு போகலாம். நாங்கள் இருவர் வருவது மட்டும் போதும்” என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆதிதிராவிடர்களின் நண்பர்கள்  “அப்பக்கத்துப் பொதுமக்களுக்குப் பிடித்த பெரிய மனிதர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும். அவர்களுக்கு  முக்கியப்பங்கு கொடுத்துப் பேசவைத்தல் நல்லது.

“அப்படிச் செய்யமுடியுமா? ஊர் வம்பு பேசாமல், பேசவேண்டியதைப் பேசக்கூடியவர்கள் தெரிந்தால் சொல்லும் ” என்றேன். தங்கள் பேச்சுக்குக் குறுக்கே சொல்ல மாட்டேன். ”

“திரு. சுயம்பிரகாசம் என்று ஒரு வக்கீல் அய்யா இருக்கிறார். அவரும் இப்பக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவர்.

அவர் முக்குலத்தோராயினும் ஆதிதிராவிடர்களைத் தாழ்ந்தவர்களாக நடத்துவதில்லை. மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினராய் இருந்து எங்கள் முன்னேற்றதிற்கான திட்டங்களை ஆதரித்தவர்; நன்றாகப் பேசுவார்.

”அய்யாவுக்குச் சரியென்று பட்டால் அவரை ஆண்டுவிழாவுக்கு அழைத்துப் பார்க்கிறேன்” என்றார்.

“திரு. சுயம்பிரகாசத்தைப் பற்றி எனக்குக் கேள்வி உண்டு. நேரடித்தொடர்பு கிடையாது. உங்களைத் தாழ்ந்தவராகக் கருதாதவரை நீங்கள் நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவரைக் கூப்பிடுவது நல்லது. உங்களுக்கு அவரை நன்றாகத் தெரியுமா? நீங்களே அவரிடம் ஒப்புதல் பெற்றுவிடுவீர்களா?’! என்று கருத்தும் கேள்வியுமாகக் கூறினேன்.

“வக்கீல் அய்யாவுக்கு மிக வேண்டியவர்கள் எனக்குத் தெரியும்.அவர்கள் வழியாக முயல்கிறேன்” என்றார் முத்துசவரி. “நல்லது. இன்னொரு பெரியவரைச் சொல்லும் ” என்றேன்.

“அய்யா! கரந்தட்டாங்குடியில் இன்னொரு வக்கீல் அய்யா இருக்கிறார். அவர் அய்யா உமாமகேசுவரம்பிள்ளைக்கு உறவினர். அவரும் எங்கள் மக்களுக்கு உதவியானவர்” என்று .முத்துசவரி சொல்லிக்கொண்டு இருக்கையிலே, அவர் பேச்சில் குறுக்கிட்டேன்.

”பல மாவட்ட ஆட்சிக்குழுக்களில் செயலாளர் பதவியில் இருந்துவரும் புகழ்பெற்ற வக்கீல் திரு. வேதாசலம் அவர்களையா குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேள்வி தொடுத்தேன்.

“அவரேதான் எசமான், அவரை அய்யாவுக்குத் தெரியுமா? அவரை அழைக்கலாமா?” என்று ஆவலுடன் கேட்டார் ஆசிரியர் முத்துசவரி.

“அவரேதான். அவரைப் பற்றியும் கேள்வியே ஒழிய அவரோடு நேரடி நட்புக் இடையாது. அவர் சமுதாயத்தின் கீழ்ப் படிகளில் உள்ளவர்கள்பால் பரிவு கொண்டவர் என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவரையும் அழைத்துக்கொண்டு போகமுடிந்தால் பிரமாதமாக இருக்கும்” என்றேன்.

“அய்யா உத்தரவு கொடுத்தபடி ஏற்பாடு செய்துவிட்டு வந்து தகவல் கொடுக்கிறேன். அய்யா எப்போது வரமுடியுமென்று, இரண்டொரு நாள்களைக் குறிப்பிடுங்கள். அந்நாள்களை அவர்கள் இடம் கூறி அழைக்கிறேன்” என்றார் தலைமை ஆசிரியர்.

“விழாநாளை விருந்தினர்களே முடிவு செய்யட்டும். அவர்கள் வரும் நாளில் நாங்களும் வந்து விடுகிறோம். ஆனால் பெரிய ஆய்வாளருக்கு முன்னதாகத் தெரிவித்து அழைக்க வேண்டும்”‘ என்று முத்துசவரிக்குச் சொல்லியனுப்பினேன்.

முத்துசவரி, திருவாளர்கள் கல்யாணசுந்தரம், சுயம்பிரகாசம் வேதாசலம் ஆகியோரிடம் விழாவுக்கான நாளும் இசைவும் பெற்று வந்தார்.

மேலப்புனவாசல் நலப்பள்ளியின் ஆண்டு விழாவும் பெற்றோர் சங்கக் கூட்டமும் சிறப்பாக நடந்தன. எதிர்பார்த்ததைவிட நல்ல கூட்டம்.

மேலப்புனல்வாசல், இருவையாறுக்கு வடமேற்கே சில கல்தொலைவில் இருக்கிறது. திரு. சுயம்பிரகாசம் எங்களைக் காரில் அழைத்துக் கொண்டு போனார். ஊர்க்கோடியில் தாரை தப்பட்டைகளோரடு, மக்கள் குழுமியிருந்தார்கள். அந்தப் பண்டைய இசைகள் முழங்க, நாங்கள் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போகப்பட்டோம். தேர்தல் காலங்களில், வாக்குச் சீட்டுகளை நாடிச் செல்வோர் கூட, அக்காலத்தில் ஆதிதிராவிடக் குடியிருப்பிற்குள் சென்று சிறிது நேரம் தங்குவது அரிது.

ஆனால் நாங்களோ குடியிருப்பில் மூன்று மணி நேரத்துக்குமேல் தங்கி இருந்தோம். அங்குள்ளோரை எட்டி நிற்க விடவில்லை. சூழ்ந்து உட்கார, நெருங்கி உட்காரச் செய்தோம். நாங்களும் விலகி, ‘மடி’யாக உட்காரவோ, நடக்கவோ இல்லை. ஊர்வலத்தில் வந்த சிறுவர்களை உற்சாகமாகத் தட்டிக்கொடுத்ததும் உண்டு. இத்தகைய ‘அக்கிரமத்தை’ சாதாரண மனிதர்கள் கூட்டத்தில் செய்திருக்க முடியாது. செய்திருந்தால் அவர்களுக்கு அடிஉதை இடைப்பதைவிட, குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கே அதிகத் தண்டனை கிடைத்திருக்கும்.

கரந்தை, தமிழ்ச் சங்கத்தின் உயிராக விளங்கிய உமாமகேசுவரன் பிள்ளையோ அவரோடு உறவுடைய – தோழமை உடையவர்களோ செய்தால், மற்றவர்கள் முணுமுணுக்க மட்டுமே முடியும்; அதைத் தடுக்க முடியாது.

அன்று வேங்கைகளாக விளங்கிய சுயம்பிரகாசம், வேதாசலம், மற்றோர் அப்பக்கப் பெரியவர் ஆகியவர்களோடு நாங்கள் சென்று, தங்கி, பேசிவிட்டு வந்ததால், குடியிருப்புக் குடிசைகள் தீக்கிரையாகாமல் தப்பின. அம்மக்களும் அடி உதைக்கு ஆளாகவில்லை.

நாங்கள் அனைவருமே, அவர்களுக்கு நெருக்கமானவர்கள் போல் நடந்தது, புனவாசல் குடியிருப்பு மக்களின் பரிவை எங்கள்பால் திருப்பிற்று. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம்’ என்று முழங்கச் சொன்னபோது, ஆர்வத்தோடு முழங்கினார்கள்.

குறிப்பு : 1940-50களில் நடந்தது

முந்தைய பதிவுகள்

(தொடரும் …)

இத்தொடர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நினைவு அலைகள் புத்தகத்திலிருந்து கல்வி சார்ந்த பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்தது. இந்தப் புத்தகம் நாட்டுடமையாக்கப்பட்டது. கல்வி சார்ந்த (சுதந்திரத்திற்கு பின்பான) வரலாற்றை அறியும் நோக்கத்தில் பதிவு செய்கிறோம்.

Leave a comment