புள்ளவுளுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்கணும் – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு (சஞ்சீவி மாமா சிறார் நாவல் அறிமுகம்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

25 ஆண்டுக்கு முந்தைய கதை அதுவும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த நாவல் என்றதும் நம் நினைவுகளில் பல பசுமையான விசயங்கள் முந்திக்கொள்ளும். ஆனால், ஓவ்வொரு காலக் கட்டத்திலும் பசுமையான விசயத்துடன் அக்காலத்திற்கான அவலங்களும் உண்டு.  நினைவுகள் கதைகளாக அதுவும் சிறார் நாவலாக உருமாறும் போது பசுமையான நினைவுகளுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கிடைப்பது இயற்கையே.

இக்கட்டான விசயங்களை நமது பிள்ளைகளுடன் பகிர்வதை தெரிந்தோ தெரியாமலோ தவிர்த்துவிடுவோம் அல்லது பகிரும் போது தடுமாறுவோம். இந்த இடத்தில் தான் கலை வடிவங்கள் பல்வேறு வேலைகளை செய்கிறது. அதற்கு, சமூகத்தில் நிலவும் அழுக்குகளை பல வர்ணங்கள் சாயம் பூசி அழகு பார்க்கவும் தெரியும் அதே நேரம் சாயத்தினை வெளுத்து உண்மையை எடுத்துரைக்கவும் தெரியும்.

“சஞ்சீவி மாமா” சாயத்தினை வெளுத்து வாங்கும் படைப்பு. இன்றும் எத்தனை தொழிநுட்ப வசதிகள் ஏற்பட்ட போதிலும், சாக்கடை அள்ளுவது மனிதராகவே இருக்கிறார், தொடர் விசவாயு மரணங்கள் கூட இந்த சமூகத்தில் எந்தவித மாற்றத்திற்கான விதையை தூவாத நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலம் அள்ளும் ஒருவரின் கதை எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்துகிறது இந்த நாவல். ஆம்! மலம் என்ற வார்த்தையை வாசிக்கவே சற்று நெருடலாக இருக்கும் நமக்கு, அதை தனது கையால் அள்ளும் ஒருவரின் கதை என்பது சற்றே தயக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் இங்கு நமது சமூகத்தில் மலம் அள்ளுபவரின் கதை என்றால், சாதியைப் பற்றியும் அதனால் நிலவிய நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமை பற்றியும் பேசும் புத்தகம் என்றால்? இதையெல்லாம் சிறுவர்களிடம் பேச வேண்டுமா? என்ற கேள்விகளுடன் ஒதுங்கும் மனப்பான்மை தான் நம்மிடம் உண்டு. இப்படி ஒதுங்கிக்கொள்ளும் நாம் தான் மறுப்பக்கம் தொலைகாட்சி வழியாகவும் திரைப்படங்கள் வழியாகவும் வயதிற்கு ஒவ்வாத காட்சிகளை தினமும் நமது சிறார்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறோம். இதற்கு நமக்கு தோதாக “குழந்தைகளுக்கு நல்லது கெட்டது காட்டி வளர்க்கிறோம்” என்ற பதிலையும் தயாராக வைத்திருக்கிறோம். ஆனால், உண்மையில் எது நல்லது? எது கெட்டது?

சமகால சமூக அவலங்களை சிறார் இலக்கியத்தில் நேரடியாக பேசுவது என்பது மிகவும் தேவையான ஒன்று. அது மிகவும் சவாலானதும் கூட. அதுவும் சிறார்களுக்கு சாதிய தீண்டாமை விசயங்களை ஒரு சிறுவனின் பார்வையில் பேசுவது, சிறுவனின் மனதில் எழும் கேள்விகளை கொண்டே கதையை எடுத்துச் செல்வது என்பது மிகப்பெரிய சவாலை முன்நிறுத்தக்கூடியது. அத்தகைய சவால்களையெல்லாம் தாண்டி மிக நேர்த்தியான படைப்பாக வந்துள்ளது இந்தப் புத்தகம்.

கதையின் நாயகன் 6வது பயிலும் சிறுவன். அவன் வசிக்கும் தெருவில், வீடுவீடாக மலம் அள்ள வரும் சஞ்சீவி என்பவரை உறவு முறை வைத்து “மாமா” என்று அழைக்கிறான். அதுவே பெரும் சர்ச்சையான விசயம். ஆனால், சிறுபிள்ளை என்று யாரும் கண்டுக்காமல் விடுகின்றனர். ஆனால், சஞ்சீவி மாமாவுடன் ஆன இவனது நட்பு பல்வேறு சமூக புரிதல்களை ஏற்படுத்துகிறது. சோறு கேட்டு மாலையில் வரும் அவரை தொடாமல் சோறு தருவது, இவர்களில் பாத்திரத்திலிருந்து தண்ணீரை அவர்களது பாத்திரத்தில் படாமல் ஊற்றுவது, தொடாமல் பேசுவது என பல விசயங்கள் கதை ஓட்டத்தில் வருகிறது. குறிப்பாக ஊரில் மழையில்லை என்று சொல்லி சஞ்சீவியின் மகனை செம்புள்ளி கரும்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவரச் செய்வது ஒரு நிமிடம் மெளனத்தை, கோபத்தை, ஆதங்கத்தை, அவமானத்தை உணரச் செய்தது. இவை அனைத்தையும் ஓர் சிறுவனின் எதார்த்தமான பார்வையில் சொல்வது தான் இந்தப் புத்தகத்தின் பலமே. தனது காலைக்கடனை கழிக்க ஒதுக்குப்புறமாக செல்லும் விசயங்களையெல்லாம் நேர்த்தியாக கதையின் வழியே சொல்கிறார். அப்படியே கிணற்று சுற்றி நடக்கும் சாதிய பாகுபாடுகள் என ஒரு கிராமத்தில் நடக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் பதிவு செய்கிறார்.

இத்தனை சாதிய பேதங்களும் கட்டுப்பாடுகளும் உள்ள ஊரில் பள்ளிக்கூடம் மட்டும் விதிவிலக்காக செயல்பட்டது என்பது தான் வரலாறு. ஆம்! அது தான் தமிழகத்தின் கல்விக்கான வரலாறும். இதை நேரடியாக ஆசிரியர் சொல்லாவிட்டாலும் பள்ளிக்கூட காட்சிகள் அங்கு நிலவிய சமத்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் உணர்த்துகிறது. தமிழகத்தில் பள்ளி என்ற ஒரு அரசு அமைப்பு எப்படி கல்வியில் வழியாக சமத்துவத்தை நிலை நிறுத்தியது என்ற வரலாற்றை கண்டிப்பாக  இதுப் போன்ற இலக்கியங்கள் தான் சொல்ல முடியும். பள்ளி என்பது இங்கு கல்விக்கான இடம் மட்டுடமில்லை, அது சமூகத்தை சீர்திருத்தும் செயல்பாடு என்பது இங்கு முக்கியமான வரலாற்று உண்மையும் கூட.

அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் தான் பல்வேறு சாதியை சேர்ந்த அந்த ஊர் சிறார்களும் பயில்கிறார்கள். அப்பொழுது தன்னுடன் கீழ் சாதியில் உள்ளவன் வீட்டிற்கு பன்றியினை பார்க்க ஆவலுடன் செல்ல அது ஊரில் சாதிய பிரச்சனையாக மாறுகிறது. அப்பொழுது தான் ஒருவர் பெற்றோருக்கு “புள்ளவுளுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்க்கணும்” என்று அறிவுரை சொல்கிறார்.

இந்தப் பிரச்னை முடியும் தருவாயில் அவனது தந்தை வேலைப்பார்க்கும் தொழிற்சாலையில் ஒரு விழா நடக்கிறது. அப்பொழுது சிறுவர்களுக்கான மாறுவேட போட்டியும் நடக்கிறது. மாறுவேடம் என்றதும் உடனே இன்று நமக்கு தோன்றும் அதே பத்து வேடங்கள் தான் கதையில் பெற்றோருக்களுக்கும் தோன்றுகிறது. ஆனால் அந்தச் சிறுவன் மட்டும் “சஞ்சீவி மாமா” வேடத்தை போட விரும்புவதாக சொல்கிறான். வீட்டில் ஒரு பூகம்பமே வெடிக்கிறது. ஆனால், சிறுவன் உறுதியாக நிற்கிறான். இறுதியில் வீட்டில் மட்டுமில்லை போட்டியில் மட்டுமில்லை அந்த ஊரார் மனதிலும் வெல்லுகிறான்.

இதை வாசிக்கும் இன்றைய சிறார்களுக்கு முக்கியமாக சாதிய படிநிலையை நேரடியாக உணராத சிறுவர்களுக்கும் கதையில் வரும் சிறுவனின் எண்ணற்ற கேள்விகள் போலவே கேள்விகள் கண்டிப்பாக வரும். அதற்கான விடைகளை சொல்லும் பொறுப்பு பெரியவர்களாகிய நம்முடையது. ஒரு சிறுவனின் பார்வையில் இந்தக் கதையை அதுவும் சிறுவனின் கேள்விகள் மூலமே எடுத்துச் சென்றது ஆசிரியர் தனது அனுபவத்திலிருந்து இதை எழுதியிருக்கிறார் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. அதற்கு சாட்சியாக இறுதிப் பக்கத்தில் இந்த நாவலின் ஆசிரியர் கொ.மா.கோ.இளங்கோ அவர்கள் அந்த மாறுவேடப் போட்டத்தில் சஞ்சீவி மாமாவாக இருக்கும் புகைப்படம் இருக்கிறது.

குறிப்பு : புத்தகம் : சஞ்சீவி மாமா, வயது: 12+ ,ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ, வெளியீடு: பாரதி பதிப்பகம், விலை-ரூ.90/-

1 Comment

  • சிவா says:

    சிறுவயதில்
    பாண்டிமாமா வந்திருக்காரு! என்று எங்களூர் ஆற்றங்கரையில் சிகைதிருத்தும் மாமாவை வீட்டில் சொன்னது நினைவுக்கு வருகிறது.

Leave a comment