சிறகடிக்கும் தூரிகை – அ.ர. ஹபீப் இப்றாஹீம்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நான் இதுவரையிலும் மாறவே இல்லை. இத்தனை பெரிதாக வளர்ந்த பின்பும், இந்த ஆசை எங்கோ ஒரு உயிரணுவுக்குள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கின்றது. அந்த ஆவலின் விளைவாக, ஒரே கதையினைக் கொண்ட இருவேறு நூல்களை இன்னமும் வாங்கிக்கொண்டிருக்கிறேன். சில நேரங்களில், இரண்டையும் அடுத்தடுத்து படித்துவிட்டு, ஒன்றோடு ஒன்றை ஒப்பிடவும் செய்கிறேன். அப்படி என்னதான் ஆசை எனக் கேட்குறீர்களா? இதற்கு மேலும் பொறுக்க வேண்டாம், இதோ சொல்லிவிடுகிறேன்!

ஒரு அழகிய நாளில், ‘குட்டி இளவரன்’ (The Little Prince) என்னும் புகழ்பெற்ற பிரெஞ்சு புதினத்தின் மொழியாக்கத்தை கண்டேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு படங்களை மட்டுமே கொண்ட அந்த நூலை வாங்கியதோடு நில்லாமல், கூடவே இன்னொரு நூலையும் துணைக்கு வாங்கினேன்.

அது ஒன்றும் வேறொரு கதையல்ல…

அதே குட்டி இளவரசன் தான்!

ஏன் இன்னொரு நூல் என்கிறீர்களா?

ஒன்று வளர்ந்த எனக்கு…

மற்றொன்று சிறுவனான எனக்கு…

விளக்கமாகவே சொல்கிறேன்…

இப்போதெல்லாம், ஒரு ஆங்கில செவ்விலக்கிய நூலை, குறிப்பாக குழந்தைகளுக்காக அல்லது குழந்தைகள் குறித்து எழுதப்பட்ட ஒன்றை, அதன் முழு வடிவில் வாசிக்கும் முன்னர், அதே கதையின் சித்திரப் புதினத்தையே (Graphic Novel) கண்கள் தேடியலைகின்றன.

சிறுபிராயம் முதலே, படக்கதை நூல்களின் (Comic Books) மீது உண்டான ஈர்ப்பினால், இத்தகைய கதைகளை காட்சிகளுடன் பார்ப்பதையே என்னுள் இருக்கும் குழந்தை விரும்புகிறது. என் குழந்தையும் அப்படித்தான்! அவளும் சித்திரங்கள் நிறைந்த புத்தகங்களை கண்டால் பெருமகிழ்ச்சி அடைகிறாள். ஒருபடி மேலே போய், அவள் வரையும் சிறு சிறு ஓவியங்களுக்கான (பெரியவர்களின் மதிப்பீட்டில் அவை கிறுக்கல்களாகவும் தெரியலாம்… அவளோ, நானோ அதைப்பற்றி ஒருபோதும் கவலைக்கொள்வதில்லை!) உந்துதலை, அந்த நூல்களில் இருக்கும் சித்திரங்களின் மூலமும் பெறுகிறாள்.

அப்படி அவள் முதன்முதலில் எடுத்த ஒரு முயற்சி குறித்து, நான் கூறத்தான் வேண்டும். ஒரு காய்ந்த நெல்லிக்கனியின் கொட்டைக்கு சிகப்பு வண்ணம் தீட்டி, அதை ஒரு வெண்ணிற காகிதத்தின் மேலே ஒட்டி வைத்து, கீழே ஒரு நீளமான கோடு வரைந்து, ‘இதுதான்… ரெட் பலூன்…’ (The Red Balloon) என கூறினாள். படம் பிடித்து, பஞ்சு மிட்டாய் இதழில் பதிப்பிக்க அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் வரைந்த ஓவியங்கள் யாவும், பயணங்களில் கண்ட இடங்களையும் பொருட்களையும், ஏனைய புத்தகங்களில் இருக்கும் சித்திரங்களையும் உந்துதலாகக் கொண்டவையே!

பெரும்பாலும் தாங்கள் காணும் காட்சிகளின் மாதிரிகளையே, புனைவாகவோ ஓவியமாகவோ தனித்துவமான வேறொரு வடிவில் குழந்தைகள் வெளிப்படுத்துவர் என்னும் ஜான் ஹோல்ட்டின் (John Holt) கூற்றை அவள் உறுதிசெய்துக் கொண்டிருக்கிறாள்.

வெவ்வேறு வடிவங்களிலும், அளவிலும், தன்மையிலும், ஓவியங்களை தாங்கி வெளிவரும் ஆங்கில சிறார் கதை நூல்களை, நாம் மூன்று பெரும் பிரிவுகளாக காணலாம்:

1) சிறு பிள்ளைகளுக்கான சித்திர நூல்கள் (Picture Books)

2) படக்கதை நூல்கள் (Comic Books)

3) சித்திரப் புதினங்கள் (Graphic Novels)

இவற்றுள், முதலாம் நிலையில் உள்ள சிறு குழந்தைகளுக்கான வெளியீடுகளில், எழுத்துகள் மிக குறைவாகவோ அல்லது முற்றிலும் எழுத்துகளே இல்லாத படிகளாகவோ கிடைக்கின்றன. இரண்டாம் பிரிவில் இருக்கும் நூல்கள் துணுக்குகளாக உருவாக்கப்பட்ட சிறு சிறு கட்டங்களுக்குள், தொடர் ஓவியங்களையும் கூடவே எழுத்துகளையும் கொண்டவை. இவ்விரண்டு வடிவங்களும் தமிழ் சிறார் இலக்கிய துறைக்கு பழக்கமான விடயங்கள்தான்; குறிப்பாக, முதல் வடிவத்தையொட்டி நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும், தமிழ் படக்கதை நூல்கள் அன்றிலிருந்து இன்றுவரை சாகச வீரர்களையே பெரும்பாலும் காட்சிப்படுத்துகின்றன.

இவற்றை கடந்து, மூன்றாம் நிலையிலுள்ள சித்திரப் புதினங்கள் குறித்தே, கூடுதலாக நான் பேசிட விரும்புகிறேன்.குட்டி இளவரசனில் துவங்கிய எனது ‘ஒற்றை கதை… இரட்டை வடிவம்’ என்னும் ஆசை, அதைப்போன்றுள்ள இன்ன பிற புனைவுகளையும் தேடிடச் செய்தது.

சில வேளைகளில், நான் ஏற்கனவே வாசித்த புனைவுகளின் சித்திர வடிவத்தை பார்த்ததும், ‘மூல வடிவத்தை போன்று, சுருக்க வடிவம் சிறப்பாக இல்லையே… இன்னும் நன்றாக அமைந்திருக்கலாமே!’ என தோன்றுவது உண்டு; எடுத்துக்காட்டாக, ரஸவாதியை (Alchemist) சொல்லலாம்.

பவ்லோ கொய்லோவின் (Paulo Coelho) மூல ஆக்கம் அத்தனை அருமையாக இருக்கும். கதைமாந்தர்கள் யதார்த்தமாக உதிர்க்கும் வாக்கியங்கள் கூட சிறப்பானதாக இருக்கும். ஏனோ, முழு வடிவத்தை முதலில் படித்த எனக்கு, நூலாசிரியரின் ஒப்புதலோடு வெளிவந்த சித்திரப் புதினம் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆக, சித்திர வடிவங்கள் ஒருபோதும் முழு வடிவத்திற்கு மாற்றாகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அப்படி இருக்க வேண்டிய தேவையும் அவற்றிற்கு இல்லை என்பதே இன்னும் தெளிவுமிக்க புரிதலாக இருக்க முடியும்.

அதற்கு பின்னான நாட்களில், சுருக்கமான சித்திரப் புதினத்தை முதலில் படித்து, அதன் பின்னர் எழுத்து மட்டுமே கொண்டிருக்கும் முழு புதினத்தை வாசிக்க துவங்கினேன். இத்தகைய வரிசை-முறையை தேர்வுசெய்வது, புத்தக வாசிப்பின் மீது ஈர்ப்பில்லாதவர்களுக்கும், வாசிப்பதில் சிரமம் இருப்பவர்களுக்கும், புதிய வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு பெரிய அளவிலான புனைக்கதைகளை (சிறார் செவ்விலக்கியங்களையும் சேர்த்து…) முதன்முறையாக அறிமுகம் செய்வதிலும் கூட, இவ்வடிவம் பெரிதும் துணையாக உள்ளது. அதற்கு என் மகளே சாட்சி…

ஆயிஷாவிற்கும்(எனது மகள்) இதே யுக்தியை கையாண்டேன். நல்ல பல செவ்விலக்கியங்களை சித்திரப் புதினங்களாக அவளிடம் கையளித்தேன். ஒரே ஒருமுறை மட்டும் நான் கதை சொல்லிமுடித்த பின்னர், இன்னும் எழுத்துக்கூட்டி வாசிக்க தெரியாத அக்குழந்தை, சித்திரங்கள் நிறைந்த – ஒன்றும் புரியாத அந்த ஆங்கில – நூலை முன்னும் பின்னுமாக திருப்பி, வெறுமனே படங்களை மட்டுமே பார்த்து, ஒவ்வொரு காட்சியாக அவளுக்கே உரிய பாணியில் முழு கதையையும் விளக்கினாள்.

ஒரு அயல்மொழி கதையைகூட சித்திரங்களின் உதவிகொண்டு குழந்தைகளுக்கு இலகுவாக கடத்திட இயலும் என்பதை புரிந்துக்கொண்டேன். சில சித்திரப் புதினங்களை நான் படித்த பின்பு, அதன் முழு வடிவத்தை வாசிக்கும் தருவாயில், கதையின் ஒரு முக்கியமான நிகழ்வை அல்லது திருப்புமுனையை, சித்திரங்களின் துணைகொண்டு சுருக்கமானச் சொற்களால் அழகாக (சித்திரப் புதினத்தில்) காட்சிப்படுத்தியிருப்பதை கண்டு, நான் வியந்த தருணங்களும் உண்டு.

சிறார் எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சிறு குழந்தை என்பதால், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அந்த பாணியை கண்டு, நான் அவ்வப்போது சிலாகிப்பதும் நடந்துள்ளது. உண்மையில், சித்திரப் புதின ஓவியர்களும் ஆசிரியர்களும் தனித் திறமை வாய்ந்தவர்கள்தான். ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் பொறுப்புணர்வுக்கு ஈடான உழைப்பு அவர்களுக்கும் தேவைப்படுகிறது. மூல ஆக்கத்தின் பொருளையோ அல்லது கதையின் ஓட்டத்தையோ திசைமாற்றிவிடாமல், தெளிவாக ஆனால் சுருக்கமாக கதையினை கூறிடல் வேண்டும்.

இளநிலை பட்டப் படிப்பின்போது, நூறு பக்க ஆய்வுநூலை எனது ஆசிரியை கொடுத்து, வெறும் 250 சொற்களுள் ஆய்வின் சாரத்தை எழுதிட பயிற்றுவித்தார் (Abstract Writing). தேர்ந்தெடுத்த முக்கிய சொற்களை மட்டுமே அதில் எழுதிட வேண்டும். சித்திரப் புதினங்களில் இருக்கும் இரத்தினச் சுருக்கமான வரிகளை காண்கையில், அந்த கல்லூரி கால நினைவு வராமல் இருக்குமா?

சில அயல்மொழி சிறார் திரைப்படங்களின் கதைகளும் தகவல்களும் கூட, சித்திரங்கள் நிறைந்த வண்ண நூல்களாக வெளிவருகின்றன. ஒரே ஒருமுறை திரையரங்கில் கண்ட போன்யோவையும் (Ponyo), டம்போவையும் (Dumbo), டொடோரோவையும் (My Neighbour Totoro), புத்தகங்களின் வழியே, தனக்கு தோணும் போதெல்லாம் கண்டு மகிழ்கிறாள் மகள்.

பொதுவாக, தமிழ் பேசும் குழந்தைகளின் உலகில், இலக்கிய ஆர்வம் வெகுவாக குன்றிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறார் இலக்கியத் துறையின் ஆக சிறந்த காலமாக கருதப்படும் ஐம்பது-அறுபதுகளை ஒப்பிட்டு, தற்போதுள்ள வீழ்ச்சி குறித்து பல ஆளுமைகளும் எழுதுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி, கையடக்க கருவிகளின் மீதான மோகம், சிறார் வார / மாத இதழ்களின் வீழ்ச்சி என பல்வேறு இதர காரணிகளையும், பண்புக்கூறுகளையும் பரிணாமங்களையும் விளங்கிக்கொள்ளும் நாம், ஓவியங்களின் போதாமை குறித்து மிகுதியாக பேசுவதில்லை.

மீண்டும் அத்தகைய பொற்காலத்தை கட்டமைக்க வேண்டுமெனில், எழுத்துக்கும் எழுத்தாளரும் அளிக்கும் முக்கியத்துவத்தை, ஓவியத்திற்கும் ஓவியருக்கும் சேர்த்து கொடுத்தல் காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஆண்டுதோறும் எத்தனையோ சிறார் புதினங்கள் தமிழில் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. பலவற்றிலும், ஓவியங்கள் வரையப்பட்டே உள்ளன. எனினும், அவை எத்தனை குழந்தைகளின் மனங்களை கொள்ளைக்கொண்டுள்ளது?

குழந்தைகளுக்காக எழுதப்படுபவை அவர்களின் நெருக்கத்தை பெறாததற்கு பல்வேறு காரணிகள் இருப்பினும், அதிமுக்கிய ஒன்றாக அமைவது ஓவியங்களின் போதாமையே!

இந்த ஒற்றை வாக்கியத்தை மையப்பொருளாகக் கொண்டு, இப்பதிவை நான் முடித்திருக்கலாம்.

எனினும், சிறார் இலக்கியத்தில் ஓவியங்களில் பங்கு குறித்தும், அவற்றின் வடிவங்கள் குறித்தும், எனது எண்ண ஓட்டங்கங்களை முழுமையாக வெளிப்படுத்த எண்ணினேன்.

புகழ்பெற்ற ‘ஆலிஸின் விந்தையுலக சாகசங்கள்’ (Alice’s Adventures in Wonderland) கதையின் துவக்க காட்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு ஆற்றங்கரையில் அக்காவுடன் ஆலீஸ் அமர்ந்திருப்பாள். ஒரு தடித்த நூலை அக்கா தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்க, சோர்வாக உணரும் ஆலிஸோ, “எப்படி சித்திரங்களே இல்லாத இந்த நூலை படிக்க முடிகிறதோ?!” என தனக்குத்தானே பேசிக்கொள்வாள்.

1865-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புனைவே, சித்திரங்களின் மகிமையை தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளது. நாம் தான் இன்றுவரை கவனிக்காமல் இருக்கின்றோம். கதைக்கரு, களம், கதைமாந்தர்கள், உரையாடல்கள் என ஒரு புனைவின் உடற்கூறுகள் பலவற்றையும், குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ள ஓவியங்கள் இன்றியமையாதவை!

தொழில்நுட்ப வளர்ச்சிபெற்ற இன்றைய காலத்தில், குழந்தைகளையும் கையடக்க கருவிகளையும் பிரிப்பதற்கு, பெற்றோர்களில் பலரும் மிகுந்த சிரமப்படுகின்றனர். இயங்கு-சித்திரப் படங்களால் (Cartoon / Animation) ஈர்க்கப்பட்ட ஒரு குழந்தையை, சித்திரங்கள் நிறைந்த ஒரு நூலினால் எளிதில் மீட்க இயலும்.

அவர்களின் திரை நேரத்தை (Screen Time) வெகுவாக குறைத்து, கண்களை பாதுகாக்க இத்தகைய நூல்கள் பேருதவி புரியும். பல்வேறு உலக புகழ்பெற்ற புனைக்கதைகள் தற்போது சுருக்கமான வடிவில் தமிழில் கிடைக்கின்றன. துவக்கமாக, அத்தகைய சுருக்க வடிவங்களிலாவது ஓவியங்களுக்கான சரியான இடத்தை நாம் வழங்க முன்வர வேண்டும். அத்தகைய புனைக்கதைகளின் சித்திரப் புதின வடிவத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். கூடவே, புதிதாக எழுதப்படும் நவீன புதினங்களையும், சித்திர வடிவங்களில் உருவாக்கலாம்.

ஒரு நவீன புதினத்தை முழுக்க முழுக்க சித்திர வடிவில் பதிப்பிக்க சிரமம் இருக்குமெனில், குறைந்தது அக்கதையின் சில முக்கிய பகுதிகளையாவது சித்திர வடிவில் தந்து, ஒரு புதுமையான கலப்பு பதிப்பாக வெளியிட முயற்சிகளை மேற்கொள்ளலாம். வாழ்நாள் வாசகர்களை உருவாக்குவதற்கு, சிறார் நூல்களின் ஓவியங்களின் தூண்டுதல் முக்கியமானதாகவே உள்ளது. இன்றைய வாசகர்களும் எழுத்தாளர்களும், பெரும்பாலும் நேற்றைய படக்கதை நூல்களின் விசிறிகளாகவே இருந்திருப்பர். அவற்றில் இருந்த ஓவியங்களும் எழுத்துகளும் ஒன்றை மற்றொன்று வலுப்படுத்தி, அன்றைய குழந்தைகளின் மனதில் கதையினை அழகுற காட்சிப்படுத்தின.

இந்த ஒற்றை கருத்தை மட்டும் மனதில் கொண்டாலும் கூட, இன்று வெளிவரும் தமிழ் சிறார் கதைநூல்களுள், ஓவியங்களுக்கான இடம் எத்தகையதாக இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். சிறார் இலக்கிய விருதுகளில், ஓவியர்களுக்கென தனி பிரிவுகள் உருவாக்கி, அவர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளில், நாம் கனவு காணும் அந்த பொற்காலத்தை உறுதியாக கண்டடைந்துவிடுவோம்!

நன்றி,

அ.ர.ஹபீப் இப்றாஹீம்
habi2ibu@gmail.com

1 Comment

  • பிரபு says:

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.
    நமது பிள்ளைகளை டெக்னாலஜியிலிருந்து பாதுகாக்க புத்தகங்கங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று என்று புரிந்துகொண்டேன்.
    நன்றி

Leave a comment